மகளிர்

வாய்ஸ் மெயில் விவசாயிகள்

மொபைல் போன் நம் கையில் இருந்தால் குறைந்தபட்சம் என்ன செய்வோம்? தோழிகளோடு மணிக்கணக்காக அரட்டை, வாட்ஸ்அப் மெசேஜ், ஃபேஸ்புக், யூ டியூப்பில் படம் பார்ப்பது என தேவை யற்றவற்றிற்கு பயன்படுத்துவோம்... ஆனால், படிப்பறிவில்லாத கிராமத்து விவசாயப் பெண்கள்  அதை  ஆக்கபூர்வமாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்தையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் அது ஆச்சரிய செய்திதானே!

தேனி மாவட்ட ஆடு வளர்க்கும் விவசாயிகளின் உற்பத்தியாளர் கம்பெனி என்ற பெயரில் சுமார் 1200 பெண் விவசாயிகள், ஒவ்வொரு வரும் தங்கள் பங்குத்தொகையாக ரூ.1000 முதலீடு செய்து உருவாக்கி யுள்ள இந்நிறுவனத்தை தேனி மாவட்ட ஆட்சியாளர் வெங்கடாசலம் துவக்கி வைத்து அதன் உறுப்பினர்களுக்கு பங்குச் சான்றிதழை வழங்கியிருக்கிறார்.

தங்களை வாய்ஸ் மெயில் கோட் ஃபார்மர்ஸ்  என்று பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் கம்பெனியின் டைரக்டர்கள் பதவியிலிருக்கும் பெரிய ஜக்கம்மாள், வளர்மதி மற்றும் பாப்பாத்தியம்மாள் ஆகிய மூவரும், பெண்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த நாங்கள் ஆடுகள் வளர்ப்பு விவசாயம் செய்வதற்கும் இன்று இந்த கம்பெனி உருவாவதற்கும் முதுகெலும்பாக இருந்தவர் இவர்தான் என்று விடியல் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கே.காமராஜ் அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, ராசிங்கபுரத்தில் உள்ள பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு 1986இல் விடிவெள்ளி என்ற பெயரில் சிறு அமைப்பாக உருவாக்கினோம். பெண்கள் முன்னேற்றம், விவசாய செயல்பாடுகள் போன்றவற்றை மய்யமாக வைத்து எங்கள் அமைப்பு செயல் பட்டு வந்தது. 1996ல் கிராமத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களையும் எங்கள் அமைப்பில் சேர்த்தோம். 2000ஆம் வருடம் மே மாதத்தில் பஞ்சாயத்து கூட்ட மைப்புகளை ஒன்றிணைத்து 5 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய நிறுவனமாக விடியல் உருவானது.

தொடக்கத்தில் இதர தொழில்களில் ஈடுபட்டு வந்த சுய உதவிக்குழு பெண்களை, விவசாயத்தை நோக்கி திசை திருப்ப எண்ணினோம். அதற்கான முன்னேற்பாடாக தமிழ்நாடு கால்நடைப்  பல்கலைக்கழகம், கோவை  விவசாய பல்கலைக்கழகம், மாவட்ட கால்நடை மற்றும் விவசாய அலுவலகம்  மூலம் தகவல்கள் பெற்றோம். தொடர்ந்து எங்கள் முயற்சிகளின் விளைவாக.
2007ஆம் ஆண்டு முதல் ஆடு வளர்ப்பு, பால் மாடு வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது என்று விடியல் நிறுவனம் உருவான நினைவுகளை நம்மிடம் காமராஜ் பகிர்ந்து கொண்டார்.

பதினோரு வயதிலேயே துப்பாக்கி பிடித்த வர்ஷா

திறமையும் கவனமும் கைகோத்த புள்ளியில்  வென்றிருக்கிறார் துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்ஷா. பதினோரு வயதில் துப்பாக்கியைப் பிடித்த வர்ஷா, கடந்த எட்டு ஆண்டுகளில் தேசிய, தென்னிந்திய, தமிழக அளவிலான போட்டிகளில் 35 தங்கம், 25 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் வர்ஷா, சமீபத்தில் மதுரை ரைபிள் கிளப்பில் நடந்த தென்னிந்தியத் துப்பாக்கி சுடும் பேட்டிகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருடன் ஓர் உரையாடலில். கூறியதாவது:

துப்பாக்கி சுடுதலில் ஆர்வம்....

மதுரை ரைபிள் கிளப்பில் என் அப்பா உறுப்பினராக இருந்தார். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவருடன் கிளப்புக்குச் சென்றேன். துப்பாக்கி என்னை மிகவும் ஈர்த்தது. என் ஆர்வத்தைப் பார்த்து, என்னை அங்கே உறுப்பினராகச் சேர்த்துவிட்டார் அப்பா.

ஒரு மாதப் பயிற்சியிலேயே சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன். உடனே என் அப்பா, தன் ஆர்வத்தை நிறுத்திக்கொண்டு, என்னைத் தீவிரமாகப் பயிற்சியில் ஈடு பட வைத்தார். அன்று முதல் இன்றுவரை இந்தியா முழு வதும் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு என் னை அழைத்துச் செல்கிறார்.

ஏராளமான பதக்கங் களைக் வாங்கிக் குவித்ததால், ஆறு பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணியில் இடம் பிடித்துவிட்டேன். விரைவில் இந்தியா சார்பில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் களம் இறங்கவிருக்கிறேன்.

சாம்பியன் ஆஃப் சாம்பியன்

துப்பாக்கி சுடும் போட்டியில், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் பெறுவது மிகவும் கடினம். ஆண்களும் பெண்களும் கலந்துகொள்வார்கள். இந்தப் போட்டியில் துப்பாக்கி சுடுவோரின் கவனத்தைச் சிதறடிக்கப் பார்வை யாளர்கள், சத்தம் பேட்டுத் தொந்தரவு செய்வார்கள். எது நடந்தாலும் கவனம் சிதறாமல் இலக்கை நோக்கிச் சுட வேண்டும். நான் பங்கேற்றதில் சிறந்த போட்டியாக இதை நினைக்கிறேன்.

நிறையப் பேர் பங்கேற்பதில்லை

இங்கே சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பெரிய குறை. வெளிநாடுகளில் இருக்கும் எலெக்ட்ரானிக் மைதானங்களில் ஸ்கோர் போர்டு மானிட்டர்கள் அருகி லேயே இருக்கும். தமிழக மைதானங்களில் ஸ்கோரைப் பார்க்கச் சில நிமிடங்கள் ஆகின்றன. அதனால் இலக்கைச் சுடுவதில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதுதான் இந்தப் போட்டியில் அடிப்படை பிரச்சினை.

சர்வதேசத் தரத்தில் பயிற்சியாளர்களும் இல்லை. சர்வதேசத் தரத்தில் ஒரு துப்பாக்கி வாங்க இரண்டு லட்சம் முதல் மூன்றரை லட்சம்வரை ஆகும். தோட்டா தரத்தைப் பொறுத்து 20, 35 ரூபாய் இருக்கும். ஒரு நாளைக்குப் பயிற்சி செய்ய 60 தோட்டாக்கள் தேவைப்படும். சர்வதேச அளவில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே ஸ்பான்ஸர் கிடைக்கும்.

அதுவரை நாம் சொந்த செலவிலேயே போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனக்காகச் சொத்துகளை விற்று செலவு செய்கிறார் அப்பா.

ஒலிம்பிக் பேட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்வதே என் லட்சியம். அந்த இலக்கை நோக்கிப் பயிற்சி செய்கிறேன் என்கிறார்.

தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகிறோம்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அந்த அலுவலகம் முழுவதும் தமிழால் ததும்பி வழிகிறது. மொழிக்காகவும் இன உணர்வுக்காகவும் பேராட, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி இசைமொழி ஓர் அமைப்பைத் தொடங்கி, செயல்படுத்திவருகிறார்.

தேநீரா, குளம்பியா என்று தேமதுரத் தமிழில் உபசரித்த இசைமொழி, தமிழ் ஆர்வமுள்ள 11 பெண்கள் இணைந்து, தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கினேம். தற்போது 64 உறுப்பினர்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லோருக்கும் தமிழ்ப் பெயர் சூட்டினோம். அனைவரையும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்கிறார்.

நம் அடையாளத்தை ஏன் பிறமொழியில் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கையெழுத்தையும் பெயரையும் தமிழில் மாற்ற விரும்புகிறவர்களுக்கு உதவி யும் செய்துவருகிறது இந்த அமைப்பு.

களத்தில் இறங்கிச் செயலாற்றுவதற்காகவே தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின்போது, ஒருமாதம் முழுவதும் சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே சென்று கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினோம். நகரத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளின் பெயர்கள் மாற்றப் பட்டன.

தற்போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து வரு கின்றனர்.  மீண்டும் இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம் என்பவர், கோயில்களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, இணையத்திலும் நேரடியாகவும் ஒரு கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி யிருக்கிறார். தமிழில்தான் வழிபாடு, தேவைப்பட்டால் பிறமொழி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார் இசைமொழி.

வண்டி எண் மாற்றம்

வாரா வாரம் உறுப்பினர்களை ஒன்று திரட்டி சமூகப் பிரச்சினைகளை விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக் கைகளை ஆலேசிக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வண்டி களின் எண்களைத் தமிழ்ப்படுத்தும் வேலைகளைச் செய்துவருகிறார்கள். இதுவரை 3500-க் கும் மேற்பட்ட வண்டிகளின் எண்களைத் தமிழில் மாற்றியி ருக்கிறார்கள். இதற்காகச் சென்னையில் முகாம்கள் நடத்திவருகிறார்கள்.

தமிழர் வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், நான்கு தொகுதிகளாகத் தமிழர் வரலாற்றைத் தொகுத்திருக்கிறார்கள். வரலாற்றை எளிமைப்படுத்தி, படங்களுடன் வெளியிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும் நடத்தி வருகிறார்கள்.

தமிழர் கலை

தமிழர் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், தமிழிசைப் பயிற்சியை அய்ந்து மய்யங்களில் இலவசமாக வழங்கி வருகிறார்கள். 250 மாணவர்களுக்கு நம் வரலாறு என்ற தலைப்பில் பாடத்திட்டம் அமைத்து, பயிற்சி வழங்கியி ருக்கிறார்கள். துரித உணவுகளை எதிர்த்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

திருவள்ளுவருக்கு மாலையிட்டு, பொங்கல் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில், குடும்பத்துடன் கொண்டாடிவருகிறோம். இந்த அமைப்பில் உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தினர் பெயர்களைத் தமிழில் மாற்றியதுடன், குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியும் வழங்கி வருகின்றனர்.

தொன்மையான தமிழ் மொழி ஏன் அழிகிறது என்ற கேள்விக்குப் பதிலாகத் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் தொடங்கப்பட்டதுதான் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி. பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. வரலாறு தெரியாத எந்த இனமும் வெற்றிபெற முடியாது.

அதனால் தமிழர் என்ற உணர்வைத் தட்டி எழுப்ப முயற்சி செய்கிறேம் என்ற இசைமொழியின் குரலில் மாற்றத்துக்கான தேடல் அழுத்தமாக ஒலிக்கிறது.

பெண்ணே உனக்காக!

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு பொருட்கள் மீது மஞ்சள் வெளிச்சம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் மட்டும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த பாதுகாப்புப் பொருட்கள், நம் நாட்டிலும் பெரிய அளவில் இப்போது சந்தைப் படுத்தப்பட்டு வருகின்றன.

மிக சமீபத்திய வரவு, ‘ஸ்டன் கன்!’ இது சாதாரண துப்பாக்கி அல்ல. மின்னணு துப்பாக்கி, டார்ச் லைட், பின், லிப்ஸ்டிக், பர்ஸ் போன்ற வடி வங்களில் கிடைக்கிறது. விலை, 500 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. இது, 10 ஆயிரம் முதல், 1 லட்சம் வோல்ட் மின்சாரம் வரை தாங்கக்கூடியது. ரீசார்ஜ் செய்து கொள்ளக் கூடிய வசதியுடன் கிடைக்கிறது. ‘ஆன்லைன்’ வர்த்தக சேவை மய்யங்களில், இப்போது கிடைக்கும் இந்த, ‘ஸ்டன் கன்’ சில மாநிலங்களில், உரிமம் பெற்றால் தான் பயன்படுத்த முடியும் என்கிற அளவில் சந்தைப் படுத்தப்பட்டுள்ளது.

அன்பையும் உறவுகளையும்
சம்பாதித்துக் கொடுத்த செவிலியர் பணி!

“இது தாய்மைக்கு நிகரான பணி. இந்தத் துறைக்கு வரும்போதே அதை உணர்ந்திருந்தேன். அந்த புரிதலின் காரணமாக சிகிச்சைக்கு வருகிறவர்களை நோயாளிகளாக மட்டுமே பார்த்ததில்லை. அவர் களுடைய உறவினர்களில் ஒருத்தியாக அக்கறையுடனே கவனித்திருக் கிறேன். கவனிக்க யாருமற்றவர்களாக இருந்தாலும் இரவு முழுக்க அவர்களுடன் நானும் விழித்திருந்து, அவர்களின் வலியை உணர்ந் திருக்கிறேன்சொல்லும்போதே சிலாகிக்கிறார் சேலம் அரசு மருத்துவ மனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரியும் பிளாசம்.

செவிலியர் பணியில் தான் கடந்து வந்த 35 ஆண்டு காலத்தில் பல்வேறு அனுபவங்கள் கொட்டிக் கிடக்கிறது. எனது சொந்த ஊர் அரூர். அப்பா எரிக் ஜான்சன் பொதுப்பணித்துறையில் பணியாற்றினார். 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். என்னுடன் சேர்ந்து 6 பேர். சிறுவயதில் பெரிய கனவுகள் எதுவும் இல்லை. ஒருமுறை அப்பா விபத்தில் காயம் பட்டார். அவர் அதிலிருந்து மீளும் வரை அத்தனை உதவிகளையும் உடனிருந்து செய்தேன். அப்போதுதான் எதிர்காலத்தில் செவிலியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சியை முடித்த உடன் வேலை. வேலையில் சேர்ந்த உடன் திருமணம் என வாழ்க்கை பரபரப்பானது. கணவர் ஹென்றி பிரேம் குமாருக்கு தறி பிசினஸ். இரண்டு மகன்கள். காஞ்சிபுரம், அரூர், தர்மபுரி, சென்னை என குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டு விட்டு பல ஊர்களுக்கு வேலைக்காக பயணித்தேன். இப்போது சேலத்தில் செவிலியர் மேற் பார்வையாளர் பணியில் தொடர்கிறேன் எனும் பிளாசத்தின் வயது 65. இந்த வயதிலும் தொடர்கிறது அதே சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சிறு குழந்தைகள் போலத்தான் உணர்ந்தோம். சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, மருந்து சாப்பிட வைத்து.. அவர்கள் சொல்லும் கதைகள் கேட்டு, சிகிச் சை முடிந்து வெளியில் செல்லும்போது நன்றிப் பெருக்கில் வழியும் கண்ணீர் துளிகளுக்கு ஈடு இணை இல்லை. அப்போது நமக்குள் ஏற்படும் தாய்மை உணர்வு அனைத்திலும் உன்னதமானது. எந்தப் பணி யில் நான் சேர்ந்திருந்தாலும் இத்தனை உறவுகளும், உணர்வுப் பூர்வ மான அன்பும் எனக்கு கிடைத்திருக்காது. என் காலம் உள்ளவரை ஒரு செவிலியராக உதவ வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார் இவர்.

ஆஸ்திரேலியாவில் சாதித்த உப்மா

நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ் வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம் பெற்று விடுகிறது தேநீர்.

தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டு மல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்தி வருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயா ராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ஆர்ட் ஆஃப் சாய் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற் பனையும் செய்து வருகிறார். இந்தியக் கலாச் சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப் போதும் ஒன்று கூட விரும்புவார்கள். இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங் களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது.

ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் அய்டியா பிறந்தது என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார்.  பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை களில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்தி ருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்குரைஞராகத் தன் பணியைத் தொட ரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தா தான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கெண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் சாய்வாலி (பெண் டீ விற்பனை யாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்து வருகிறார்.

அருமையான மணமும் சுவையும் ஆஸ்தி ரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார்.  விருதைப் பெற்ற உப்மா, ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தனர்.

இதுவே சரியான நேரம் என்று தேயிலை விற் பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, தேயிலை மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னு டைய குறிக் கோள் என்று சொல்லியிருக்கிறார்.

Banner
Banner