மகளிர்

தன்னம்பிக்கையின் உச்சம்

வாழ்க்கை முழுவதும் இனி முடக்கம்தான் என மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க் கையில் அதிகபட்சம் என்ன செய்துவிடமுடியும்? இல்லை... என்னால் முடியும் என தீர்க்கமாய் முடிவு செய்து, ஒரு புயலாய் அசுர வேகத்தில் சுற்றிச் சுழன்று, முடியாது என்ற வார்த்தை வாழ்வில் கிடையாது என  அசாதாரண மாய் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத் திருக்கிறார் தீபா மாலிக்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக்கில் சக்கர  நாற்காலியில் அமர்ந்த வாறே 4.61 மீட்டர் தூரம் குண்டை வீசியெறிந்து  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் தீபா மாலிக்.  இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை  படைத்துள்ளார் தீபா என ஒற்றை வரியில் தீபாவின் வாழ்க்கையை வெறும் வெற்றிக்கான வாழ்க்கையாக மட்டும்  அடக்கிவிட முடியாது.

அதற்கும் மேலாக, தன்னம்பிக்கையின் உச்சம் தீபா. அவருடைய போராட்ட வாழ்க்கையை அறிய நேரும் எவருக்கும் மூச்சு முட்டும். அரியானா மாநிலத்தை சேர்ந்த 42 வயது தீபா மாலிக் ராணுவ அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தற்போது டில்லியில் வசித்து வரும் இவர் சிறுவயது முதல் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர். ஆனாலும், எட்டு வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுவதில் விருப்பம்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுகொண்டிருந்தாலும் தன்னுடைய 26ஆவது வயதில் முழுமையான இழப்பை அவர் சந்திக்க நேர்ந்தது. முதுகுத்தண்டு பிரச்சினையின் உச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்படி  செய்யாவிட்டால் உயிரிழக்க நேரிடும். அப்படியே செய்தாலும் முன்பு போல இயங்க முடி யாது, சக்கர நாற்காலியில்தான் செல்ல வேண்டி யிருக்கும். அதாவது, முடக்குவாதமா அல்லது மரணமா என இரண்டு வழிகள் என் முன்னே.

நான் முடக்கு வாதத்தை ஏற்றுக்கொண்டேன் என்கிறார் தீபா.  முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தபோது, இடுப்புக் குக் கீழே உடல் உறுப்புகள்  செயல் இழந்தன. அதை சரி செய்வதற்கு 31 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இடுப்புக்கும், தொடைக்கும் இடையே  மட்டும் 183 தையல்கள் போடப்பட்டன. இவ்வளவு இன்னல்களை சந்தித்த போதிலும் அவரால் பழைய நிலைக்குத்  திரும்ப முடியவில்லை.. மனிதர்களை முடக்கிப் போடுகிற நிலைமையை சவாலாக எதிர்கொண்டிருக்கிறார் அவர்.

குழந்தைப் பருவத்திலிருந்து கற்பதைப்போல, உட்காருவது, எழுவது, குளிப்பது, உடை மாற்றுவது என    அனைத்தையும் நான் முதலில் இருந்து கற்றேன் என்கிற தீபா குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்,  தீபாவைப் போல தன்னம் பிக்கை மிக்க நபரை, தான் பார்த்ததில்லை என் கிறார்.

ராணுவ வீரரான கணவர் துணையுடன் தன்னுடைய விளையாட்டு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நீச்சலில் அசத்திய இவர் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். இமயமலையில் பிரத்யேக ரேஸ் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது என ஆரம்பித்தது. ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என மாற்றுத்திறனாளி களுக்கான எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம் பித்தார்.

2006ஆம் ஆண்டு குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார். 2010ம் ஆண்டு பாரா ஏசியன் விளையாட்டுகளில் கலந்துகொண் டார். 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக் கிறார். மத்திய அரசின் அர்ஜூனா விருதும் பெற் றுள்ளார். 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனா லும், சோர்ந்துவிடவில்லை. ரியோ டி ஜெனிரோ வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதோ வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கிறார்.

சாதனைப் பெண்கள் குறித்து எழுதும் கூகுள்

ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று பெருமையாகக் கூறப்படுகிறது. இந்த வாக்கி யத்தை உருவாக்கியவர் ஓர் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஆதிகாலம் தொட்டு நாகரிக உருவாக்கம், பொருள்சார் பண்பாடு, போராட்டங்கள், கலை, அறி வியல், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்போ அவர்களது பெயர்களோ பெரும்பாலும் நினைவு கூரப்படுவதேயில்லை.

இந்திய வரலாறில் பெண்களின் பங் களிப்பை நினைவுகூரும் வண்ணம், கூகு ளின் கலை மற்றும் கலாச்சார இணையதளம், பெண்ணியப் பதிப்பகமான ஜூபான் புக்ஸ், அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியன் ஸ்டடீஸ், பெங்களூரு மியூசியம் ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி, கொல்கத்தா அருங்காட்சியகம், ரெக்தா அறக்கட்டளை உள்ளிட்ட 26 அமைப்பு களுடன் இணைந்து, சொல்லப்படாத இந்தியப் பெண் ஆளுமைகளின் கதை களை அழகிய வண்ணச் சித்திரங்களுடன் கூறும் முயற்சியை எடுத்துள்ளது. அவர் களைப் பற்றிய வீடியோக்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

சூஃபி துறவிகளின் வரலாற்றை எழுதிய ஜஹானாரா (ஷாஜகானின் மகள்), முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே, பெண்ணிய எழுத்தாளர் தாராபாய் ஷிண் டே என இதுவரை 1800-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வீடி யோக்கள் இத்தளத்தில் தொகுக்கப்பட் டுள் ளன.

வரலாறில் இந்தியப் பெண்கள் ஏற் படுத்திய தாக்கத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிதான் இந்தத் திட்டம். நம் கலாச்சார வளத்தை இளம் தலைமுறையினர் அனை வரும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தளத்தில் கிடைக்கச் செய்யும் டிஜிட் டல் முயற்சி இது என்கிறார் கூகுள் கல்ச்சுரல் இன்ஸ்டிட்யூட்டின் ஆபரேஷன்ஸ் ஹெட் லூயிசெல்லா மஸ்ஸா.

இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் பற்றிய புகைப்படங்களுடனான அறிமுகம், வாசிப்பவர் யாருக்கும் பெரிய வியப்பையும், இந்த இணையத்தளத்திற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் சொல்லக்கூடியது. ஆனந்திபாய் ஜோஷி முதல் சாருசிதா சக்கரவர்த்திவரை இரண்டு நூற்றாண்டு களைச் சேர்ந்த இந்தியப் பெண் விஞ்ஞானி களைப் பற்றி அறியும்போது, எத்தனையோ பின்னடைவுகளுக்குப் பிறகும் சாதனைகள் செய்யும் இந்தியப் பெண்களின் பயணச் சித்திரம் துலங்கும்.

1945இல் பிஎச்டி முடித்து, விஞ்ஞானி சி.வி.ராமனோடு பணியாற்றி கதிரியக்கம், ஓசோன் படிவம் மற்றும் வளிமண்டல மின்னூட்டத் துறைகளில் பங்களிப்பு செய்த சென்னையைச் சேர்ந்த அன்னா மணியும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறார். ஏதாவது ஒரு சூழலில் மனம் சோர்ந்திருக்கும் வேளையில், தன்னம்பிக்கை குறைந்திருக் கும் நிலையில் ஒவ்வொரு பெண்ணும் ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறு வதற்கான இணையதளம் இது.

இணையதளத்தைப் பார்க்க:http://bit.ly/2g7HLpw

ஊரை விட்டு ஒதுக்கப்பட்டவர் ஊருக்கே வழிகாட்டியானார்

நாமக்கல்லில் உள்ள அந்த அலுவலகத்தில் திரளான பெண்கள் விவரங்களைப் பெற்றுக்கெண்டிருந்தனர். எச்அய்வி பாசிட்டிவ் நபர்களில் ஏஆர்டி கூட்டு சிகிச் சைக்கான தேதிகள், ஆலோசனை வழங்க வேண்டிய வர்களின் பட்டியல் அவர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன.

டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து ஆலோ சனையில் இருந்தார் கவுசல்யா. இவர், 19 ஆண்டுகளுக்கு முன் எச்அய்வி பாசிட்டிவ் நபர் என்று கண்டறியப்பட்டவர். தற்பேது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, எச்அய்வி பாசிட்டிவ் நபர்களைச் சந்தித்து நம்பிக் கையை விதைத்து, ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பத்து களப் பணியாளர்களுடன் எச்அய்வி தொற்று டையோர் கூட்டமைப்பை நடத்திவருகிறார்.

வாழ்க்கையில் சில நேரங்களில் யாருக்கும் நிகழாத ஒன்று, நமக்கு மட்டும் ஏன் நடக்குது என்ற கேள்வி எழும். பதில் தெரியாத அந்தக் கேள்வியைப் புன்னகையுடன் கடந்துவிட்டு, விதியை நோகாமல் நம்மைப் போன்ற வர்களைத் தோற்றத் தொடங்கினால், பயணம் இனிதாகும். அதைத்தான் நான் செய்கிறேன் என்று தெளிவாகத் தொடங்குகிறார் கவுசல்யா.

நாமக்கல் அருகே தெத்துக்காடு கிராமத்தைச் சேர்ந் தவர் கவுசல்யா. 1985ஆம் ஆண்டு காக்காவேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுந்தரத்துடன் திருமணம் நடந்தது. மகள், மகனுடன் அழகாகக் கடந்தது வாழ்க்கை. 1995ஆம் ஆண்டு லாரி ஓட்டுநர்களிடையே எய்ட்ஸ் நோய் இருக்கலாம் என்ற செய்தி பரவியது. வட இந்தியாவுக்குச் சரக்கை ஏற்றிச் சென்ற கணவர், உடனே திரும்பினார்.

சேலத்தில் குடும்ப மருத்துவரிடம் பரிசேதனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட, வாழ்க்கையே இருண்டுபோனது போல உணர்ந்தார் கவுசல்யா. விரக்தியின் விளிம்பில் தற்கொலை என்னும் தவறான முடிவை நேக்கிச் சென்றிருக்கிறார்.

எய்ட்ஸ், எச்அய்வி கிருமி குறித்து எந்த விழிப்புணர்வும் எனக்கு அப்பேது இல்லை. இந்த வியாதியால் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டேன். இந்த ஊர், உலகம் நம்மை எப்படி நடத்துமோன்னு பயந்தேன்.

நாமளும் தற்கொலை செய்துக்கலாம்னு என் வீட்டுக்காரர்கிட்டே சொன்னேன். குழந்தைகளைத் தவிக்க விட்டுட்டுப் பேகக் கூடாதுன்னு சொல்லி எனக்கு ஆறுதல் சொன்னார் என்று சொல்லும் கௌசல்யா, அத்தனை துயரிலும் தன்னைத் தேற்றிய கணவரை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

கேரள மருத்துவரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட வைத்தார். தன் கணவருக்கு வந்திருக்கும் நோய் குறித்து யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவ மனைக்குச் சென்றபோது, கவுசல்யாவையும் பரிசோதனை செய்து கெள்ளச் சென்னார்கள். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கவுசல்யாவுக்கும் எச்அய்வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.

அவ்ளோ நாளா எங்களை மதிச்ச சனங்க, எய்ட்ஸ்னு தெரிஞ்சதும் எங்களை ஒதுக்கிவச்சிட்டாங்க. என் வீட்டுக் காரரோட உடலை அடக்கம் செய்யறதுக்குக்கூட யாரும் உதவிக்கு வரலை என்று வருத்தத் தோடு சொல்கிறார் கவுசல்யா.

சேமிப்பு அனைத்தையும் கணவரின் சிகிச்சைக்காகச் செலவிட்டு மிகவும் சோர்ந்துபோனவர், ஒரு போலி சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, மிகவும் கஷ்டப்பட்டார். எச்அய்வி தொற்றுடையோருக்கு வரும் சந்தர்ப்பவாத நோய்களான அழுகையும் பயமும் ஒன்றரை ஆண்டுகள் இவரைத் துரத்தியிருக்கின்றன. ஆனால் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் கவுசல்யாவைக் காப்பாற்றியது.

தமிழ்நாடு நெட்வொர்க் ஆஃப் பாசிட்டிவ் பீப்பிள் என்ற அமைப்பின் தலைவர் ராமபாண்டியன் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்டு, தெளிவு பெற்றார் கவுசல்யா. சத்தான உணவையும் சரியான மருந்தையும் உட் கொண்டால், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்ப தையும் அறிந்துகொண்டார். அன்றிலிருந்து இன்று வரை கடுகளவும் சிகிச்சை முறையில் பிசகவில்லை. தன் அனுபவங்களையே மற்றவர்களைத் தேற்றுவதற்கான மருந்தாகப் பயன்படுத்திவருகிறார். தனது குழுவினரோடு சேர்ந்து சுமார் இரண்டாயிரம் பேரைச் சந்தித்து நம்பிக் கையும் ஊக்கமும் அளித்திருக்கிறார்.

தேவைப்பட்ட நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல் நான் பட்ட துன்பத்தை யாரும் அனுபவிக்கக் கூடாது. ஒரு வரின் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக விழிப்புணர்வு தேவைப் படுகிறது. என் வாழ்க்கை புதிர் போட்ட போது, அதற்கான விடையாக இந்தப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். இன்னும் நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்று உற்சாகமாக விடைகொடுக்கிறார் கவுசல்யா.

இந்திய வீராங்கனையின்
சர்வதேச அடையாளம்

சர்வதேச மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான சர்வதேச நடுவராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த மனோன்மணி கமலநாதன். இந்தச் சிறப்பைப் பெறும் முதல் இந்தியப் பெண் இவர் தான்.

கோவையில் தனியார் கல்வி நிறுவனத்தில் உடற்கல்வி இயக்கு நராகப் பணிபுரியும் மனோன்மணி, கடந்த 16 ஆண்டுகளாகப் பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகச் செயல்பட்டுவருகிறார். டெல்லியில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் நடுவராக இருந்தார்.

2011இல் அமெரிக்காவின் சாக்ரமென்ட்டோ நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர் தடகளப் போட்டியில் நடுவராகப் பங்கேற்றார். 2015இல் பிரான்ஸ் லியோன் நகரிலும், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பர்த் நகரிலும் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டிகளில் தொழில்நுட்ப நடுவராகப் பணியாற்றியுள்ளார். இந்தியா சார்பில் பங்கேற்ற நடுவர்களில் இவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மூத்தோர் தடகள சம்மேளனத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராக இருந்த என்னை, சர்வதேச மூத்தோர் தடகள சம்மேளனம், 2011இல் சர்வதேச நடுவராக நியமித்தது. அதில் சிறப்பாகச் செயல்பட்டதால், தொடர்ந்து நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்கிறார் மனோன்மணி.

இவரது குடும்பம் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டது. இவருடைய அம்மாவும் மகளும் தடகள வீராங்கனைகள். குடும்பமும் பள்ளி நிர்வாகமும் அளிக்கும் ஒத்துழைப்பால், பல்வேறு நாடுகளுக்கும் சென்று, நடுவர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டுவருகிறார். நடுவராக மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

நம் நாட்டில் 70 வயதானவர்கள் மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அதேசமயம், வெளிநாடுகளில் 85, 90 வயதானவர்கள் கூடச் சிறப்பாக விளையாடுகிறார்கள். அந்த நாடுகளின் உணவுப் பழக்கம், பயிற்சி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருப்பதால், அவர்களால் பிரகாசிக்க முடிகிறது.

இந்தியாவில் சிறந்த பெண் நடுவர்கள் இருந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை.

செலவு அதிகமாகும் என்பதும் ஒரு காரணம். வெளிநாடுகளில் உள்ள விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் உயர் தரம் கொண்டவையாக இருக்கின்றன. மனோன்மணி அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்றபோது உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சர்வதேச மூத்தோர் தடகள சம்மேளனம் செய்து கொடுத்திருக்கிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை மிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். விளையாட்டில் உள்ள அரசியல் காரணமாகப் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மட்டுமின்றி, வீரர்கள் பலரும் வேலைவாய்ப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

வேலை கிடைத்துவிட்டால், பெரும்பாலானோர் சாதனைக்கு முயற்சி செய்வதில்லை. தற்போது விளையாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் பத்து ஆண்டுகளில் விளையாட்டில் மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ வாய்ப்புள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்ய வேண்டுமென்பதே என் லட்சியம் என்கிறார் மனோன்மணி.

தமிழ் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து வரும் சுபாஷினி

ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு, நாணயம், படுகை, பாறை ஓவியம் போன்றவற்றில், காலம் ஒரு வடிவத்தில் உயிரோடு உறைந்திருக்கும். அவற்றை மீண்டும் உயிர்க்கச் செய்கிறவர் சிலரே. அதுவும், வயதானவர்கள் மட்டுமே, இது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு, நம் முன்னோர்கள் குறித்த ஆர்வமில்லை எனவும்;

தொல்லியல் சார்ந்த செயல் பாடுகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும், குற்றச்சாட்டுகள் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை எல்லாம் உடைத்தெறியும் வண்ணம், நிறைய இளைஞர்கள் தொல்லியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவர், சுபாஷிணி கனகசுந்தரம்.

ஓலைச்சுவடி, பழங்கால புத்தகங்களை மின்னாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சுபாஷிணி, மலேசி யாவில் பிறந்து, தற்போது, ஜெர்மனியில் வசித்து வருகிறார். அங்குள்ள கணினி நிறுவனமான, எச்.பி.,யின் தொழில்நுட்ப பிரிவில், உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்; தமிழ்க் கல்வி கழகத்தின் அய்ரோப்பிய பொறுப்பாளர்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணை செயலர் என, பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. இவர் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:

கணிப்பொறி துறையிலிருக்கும் உங்களுக்கு, தொல் லியல் தொடர்பான செயல்பாடுகளில், எப்படி கவனம் திரும்பியது? இரண்டும் நேர் எதிர் துருவங்களில் இருக்கிறதே?

நான், எஸ்லிங்கன் பல்கலைக் கழகத்தில், முதுநிலை இயந்திரவியல் படிப்பதற்கு தான் ஜெர்மனி வந்தேன். படிப்பு தொடர்பாக, ஒரு நாள், அருகில் உள்ள அருங்காட்சியகம் செல்ல நேரிட்டது. அதை பார்த்தவுடன், பெரும் பிரம்மிப்பு ஏற்பட்டது. அவர்கள், அந்நாட்டு ஆவணங்களை முறையாக பாதுகாப்பதும், அதற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும், என்னை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, தொல்லியல் பக்கம் என் கவனம் திரும்பியது; அதன் உள்ளே போக போக, ‘நம் முன்னோரின் ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும்...’ என்ற எண்ணம்  ஏற்பட்டது; அதற்கு, தேடுதல் முக்கியமாகப்பட்டது. அப்போது துவங்கிய தேடல், இன்று வரை தொடர்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, டென்மார்க், ஜெர்மன், ஏதென்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ஓலைச்சுவடிகளை தேடி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும், எனக்கு கிடைக்கும் விடுமுறையில், முக்கால்வாசி பங்கு இந்தியாவில் பயன் படுத்துகிறேன். இதை, கடந்த, 14 ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறேன்.

எந்தெந்த வகைகளில் மின்னாக்கப் பணிகளை முன் னெடுக்கிறீர்கள்? அதன் மூலம் என்னென்ன ஆவணப் படுத்தி உள்ளீர்கள்?
மின்னாக்க பணிகளை, அய்ந்து வகைகளில் செயல் படுத்தி வருகிறோம். வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது, இணையதளம் அமைப்பது, ஸ்கேன் எடுப்பது, ‘யூ டியூப்’பில் பதிவேற்றுவது உள்ளிட்ட வழிகளில் பணிகள் மேற்கொள்கிறோம். 2010ல், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தோடு இணைந்து, ஓலைச்சுவடி தேடுதல் வேட்டை நடத்தி, 96 ஆயிரம் ஓலைச்சுவடிகளை மக்களிடமிருந்து பெற்று, 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்தோம்.

அதற்கு உறுதுணையாக இருந்தவர், அப்போதைய துணைவேந்தர், ம.ராஜேந்திரன். இந்திய அரசு, ‘டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா’ என்ற பெயரில், இந்திய புத்தகங்களை மின்னாக்கம் செய்தபோது, 100க்கும் மேற்பட்ட, பழைய தமிழ் புத்தகங்களை மின்னாக்கம் செய்திருக்கிறோம். மரபு விக்கி என்ற பெயரில் இணையதளத்தை நடத்தி வருகிறோம். இதில், 2,500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன.

விக்கிபீடியாவில் எழுதிய கட்டுரைகளை அன்றாடம் மாற்றம் செய்ய முடியும். ஆனால், இங்குள்ள கட்டுரைகள், ஒருபோதும் மாற்றப்படாது. எதிர்காலம், இணையத்தில் இணையும் என்பதால், அதை மின்னாக்கம் செய்தால் மட்டுமே, எதிர்கால தலைமுறையினருக்கு ஆவணமாக இருக்கும். இல்லை என்றால், நம்காலத்திலேயே அழியும் அபாயம் இருக்கிறது.

கடந்த காலங்களில், தமிழகம் வந்த போது எவற்றை எல்லாம் ஆவணப்படுத்தினீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே வருவேன். அதற்கான அடிப்படை தரவுகளை முன் கூட்டியே தயாரித்துக் கொள்வேன். அதன் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அறியவே, கள ஆய்வுக்கு செல்வேன். அங்கு கிடைப்பவற்றை ஆவணமாக்குவேன்.

ஈரோடு, திண்டிவனம், விழுப் புரம், செஞ்சி, மதுரை, சிவகாசி, சிறீவில்லிபுத்துர், கும்பகோணம், திருச்சி, திருவண்ணாமலை, ஆரணி, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அருகில் இருந்த கிராமங்களுக்கு சென்று பார்த்தபோது, தொல்லியல் சிறப்பு மிகுந்த இடங்கள் மிகவும் வேதனை அளிப்பது போல் இருந்தது; அவற்றை வீடியோவில் ஆவணமாக எடுத் திருக்கிறேன். வாரம் ஒரு வீடியோ வீதம், 190 வாரங்கள், யூ டியூப்பில் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டிருக்கிறோம்.

மேற்கு நாடுகள், தங்கள் நாட்டின் வரலாற்றை அதன் ஆவணங்களை எப்படி பாதுகாக்கின்றன?

நம்மோடு ஒப்பிடவே முடியாத அளவுக்கு மிகுந்த சிரத்தையுடன் பாதுகாக்கின்றனர். தங்கள் முன்னோரின் ஆவணங்களை சேர்த்து வைத்த செல்வங்களாக கருது கின்றனர். அருங்காட்சியகங்களில் உள்ள ஓலைச்சுவடிகள், வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்டு, அதற்கென்று வைத் துள்ள பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும். ஆவணங்களை கொடுப்பதற்கும் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

நம்மைப் பற்றி முழுமையாக தெரிந்த பின் தான், அதை கொடுப்பர்; அதை வீட்டுக்கு எடுத்து போக முடியாது. அவற்றை தங்களின் அரிய பொருளாக பாதுகாக்கின்றனர். செக் நாட்டின் தலைநகரான பிராக் நகரில் மட்டும், 311 அருங்காட்சியகங்கள் உள்ளன. ஒரு நகரத்தில் மட்டும் இவ்வளவு, அருங்காட்சியகங்கள் என்றால், நாடு முழுக்க எவ்வளவு அருங்காட்சியகங்கள் இருக்கும் என, கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், நமக்கு ஆவணங்கள் குறித்த விழிப்புணர்வே இல்லை. அதற்கு நம்மிடம் இருக்கும் பொறுப்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு பெண்ணாக, இந்த சேவையில் என்னென்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள்?

நான் வெளிநாட்டில் வசிப்பதால், எந்த பிரச்னையு மில்லை. இங்கு எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; பெண்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது. ஏதென்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் போது, தனி ஆளாகத் தான் சென்றேன்; எந்த பிரச்னையும் இல்லை; இருக்கப் போவதுமில்லை. எனக்கு இருக்கும் ஒரே பிரச்னை, நேர பிரச்னை தான். அதையும் ராணுவ கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைத்து வருகிறேன்.

மற்றபடி, தமிழகத்துக்கு வரும் போது, எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் தான், வருவேன். இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்கவே செய்கின்றன.

தற்போது என்ன பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

டேனிஸியர்கள், 17ஆம் நுற்றாண்டு, கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு தமிழகம் வந்த போது, மொழி புரியாமல் தடுமாறினர். அதில் ஒருவரான சீகன்பால்க், இரண்டு ஆண்டுகள் தமிழ் படித்தார். அவருடைய ஓலைச் சுவடிகள், ‘டென்மார்க்கில் உள்ள, ராயல் லைப்ரரி ஆப் கோபன் ஹேகனிலும், ஜெர்மன் நாட்டின் ஹால நகரில் பிரங்கன்’ கல்வி நிறுவனத்திலும் உள்ளன.

ஏறக்குறைய, 3,000 சுவடிகள், இரு பங்குகளாக உள்ளன. இவற்றில், டென்மார்க்கில் உள்ள சுவடிகளில், 1,200 சுவடி களை மின்னாக்கம் செய்துள்ளேன்.

இனி மீதமுள்ளவற்றை மின்னாக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். வெகு விரைவில், அனைத்தையும் மின்னாக்கம் செய்து விடுவேன்.

அளப்பரிய முடியாத சேவையாக, நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க, இவர் செய்யும் பணியை பாராட்டுவோம்.

Banner
Banner