மகளிர்

பிரபல எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா, இந்திய வரலாற்றில் மூன்று பெண்கள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று மதிப்பிடுகிறார். அவர்களில் மூன்றாவது நபர், 19 - 20ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கைகுஸ்ரா ஜஹான். இவர் பேகம்ஸ் ஆஃப் போபால் என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர். பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் சர்க்கார் அம்மா என்று அழைக்கப்பட்டார்.

சிறிய வயதில் பெரிய பதவி

போபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் - முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான். 1867இல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருடைய வயது 9. அவருக்கு ஆட்சிப் பொறுப் பாளராக பாட்டி சிகந்தர் பேகம் செயல்பட்டார். சிகந்தர் பேகத்தின் மறைவுக்குப் பிறகு கைகுஸ்ராவின் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தாயின் இறப்புக்குப் பிறகு கைகுஸ்ரா ஆட்சிக்கு வந்தார்.

கல்விக்கு முன்னுரிமை

தனது பாட்டி, தாயைப் போல தன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கைகுஸ்ரா ஜஹான் மேற்கொண்டார். போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918இல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.

அரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார். அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.

மேம்பட்ட சுகாதாரம்

இதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள் வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந் தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.

கைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக் கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

நிகரற்ற நிர்வாகம்

கல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922இல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகிய வற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்த லையும் நடத்தியுள்ளார்.

1914இல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911இல் லண்டனில் நடைபெற்ற பிரிட் டன் அரசர் அய்ந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

மூவரசிகளின் ஆட்சி

1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார்.

1926இல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார். பேகம்ஸ் ஆஃப் போபால் என்றழைக்கப்படும் பாட்டி, அம்மா, மகள் கைகுஸ்ரா ஜஹானின் ஆட்சிக் காலத்தில் அனைத்து மதப் பண்பாட்டைச் சேர்ந்தவர் களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

கைகுஸ்ரா ஜஹானின் அரண்மனையான சதார் மன்ஸி லில்தான் போபால் மாநகராட்சி தற்போது செயல் பட்டு வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோடிகளில் கொடிகட்டும் தேன்மொழி

பள்ளிப் படிப்பை முடித்ததுமே திருமணம் செய்து வைக்கப்பட்ட தேன்மொழி, இன்று பல கோடிகள் புரளும் ஏற்றுமதித் தொழிலில் முத்திரை பதித்துவருகிறார்!
மதுரை செல்லூரில் பிறந்த இவர், பெண் குழந்தை பிறந்தாலே செலவு என்ற பொதுவான நம்பிக்கையிலிருந்து தப்பவில்லை. அடுத்தடுத்து அய்ந்தும் பெண்களாகப் பிறந் ததில் தேன்மொழியின் அப்பா தனக்குப் பொறுப்பு கூடிப் போனதாக உணர்ந்தார். அதனால் நல்ல வரன் கிடைத்ததுமே பள்ளிப் படிப்பை முடித்திருந்த தேன்மொழியின் திருணத்தை நடத்திவைத்தார். ஆனால் தேன்மொழிக்கோ நிறைய நிறைய படிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும், தன்னை நான்கு பேர் வந்து பேட்டி எடுக்க வேண்டும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன.

அதில் ஒன்றைக்கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. தன் தங்கைகள் நான்கு பேரும் கல்லூரியில் படித்தபோது அவரது எண்ணம் இன்னும் தீவிரமானது. கணவர், குழந்தை என்று நாட்கள் நகர்ந்தாலும் குடும்பத்துக்குத் தன்னால் ஆன பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற விருப்பத்தை கணவரிடம் சொன்னார். அவரும் தேன்மொழியைப் புரிந்துகொண்டு ஊக்குவித்தார். அதுதான் தேன்மொழியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளி.

2005ஆம் ஆண்டு மதுரையில் மத்திய அரசு நடத்திய வீட்டில் இருந்தே ஏற்றுமதியாளர் (எக்ஸ்பேர்ட் ஃப்ரம் ஹேம்) கருத்தரங்கில் தேன்மொழி பங்கேற்றார். அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தாக்கத்தால், ஒரு ஏற்றுமதியாள ராகச் சாதிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.

ஒருகாலத்தில் ஆடைத் தொழிலுக்குப் பெயர் போன செல்லூரில் பிறந்து வளர்ந்தால் இந்தத் தொழிலைத் துணிச் சலுடன் தேர்ந்தெடுத்தேன். கணினி பயிற்சி பெற்றேன். எப்போதும் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இருக்கும் என்பதால் அதன் அடிப்படையிலேயே என் தேர்வு இருந்தது. வீட்டு வாசல், வரவேற்பு அறைகளில் பயன்படும் தரை விரிப்புக்கான ஆர்டர் கிடைத்தது என்று சொல்லும் தேன்மொழி இதற்கான போதிய பயிற்சி இல்லாததால், ஈரோடு சென்று தயாரிப்பு முறையைக் கற்றுக் கொண்டேன்.
முதலில் 30 ஆயிரம் ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆர்டர் கிடைத்தது. நான் அனுப்பிய வண்ணத் தரைவிரிப்புகள் திருப்தியாக இருந்ததால், அடுத்து 5 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர் வந்தது. தொழில் மீது நம்பிக்கை பிறந்தது. தொழிலில் தீவிரம் காட்டினேன். வெளிநாடுகளுக்குச் சென்று தொழில், சந்தைபடுத்தல் நுணுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் தேன்மொழி, படிப் படியாகத் தன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டார் .

இந்தியாவின் முதல் முன்மாதிரி கிராமம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி. கோயிலும் கோயில் சார்ந்த குடிகளும் நிறைந்தது. குன்றக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கையில் குடையும் இன்னொரு கையில் புத்தகப் பையுமாக வலம்வரும்

லலிதா அம்மாள், 82 வயதிலும் பாதம் தேய சமூக சேவையாற்றி வருகிறார்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கவும், பெண்கள் அறியாமையிலிருந்து விடுபடவும் வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூகப் பணியாளரான லலிதா அம்மாளைத் தெரியாதவர்கள் அந்தப் பகுதியில் குறைவு. இந்தச் சேவையைச் செய்வதற்காக 1985ஆம் ஆண்டு அப்போதைய குன்றக்குடி அடிகளார் ஆதீன மடம் சார்பில் லலிதா அம்மாளைச் சமூகப் பணியாளராக நியமித்தார்.

சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைத்து கருதப்படும் குலத்திலிருந்து சேரிக்குச் சென்றவர் லலிதா. குழந்தைகள் கல்வி பெறவேண்டிய அவசியத்தைப் பெற்றோரிடம் எடுத்துரைத்து, பள்ளியில் சேர்த்துவிடும் பணியை அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுவருகிறார். பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் அனைத்துத் திட்டங்களும் சென்றுசேர இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். திருமண உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை, முதியோர்களுக்கு உதவித் தொகை, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி என்று அரசாங்க உதவிகள் அனைத்தும் கிடைத்திட உதவி புரிந்துவருகிறார்.

தினந்தோறும் அரசுப் பள்ளி, ஊட்டச்சத்து மய்யம், சத்துணவுக் கூடம், அரசு மருத்துவமனை என்று ஒவ்வோர் இடத்துக்கும் நடந்தே செல்கிறார். வகுப்புக்கு வராத மாணவர்களைக் கணக்கெடுக்கிறார். காரணம் அறிய அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். உடல் நலம் சரியில்லாத குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கிறார். கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கிய மகப்பேறுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அயராது உழைத்துவருகிறார்.

அய்ம்பது வயதில் சமூகப் பணியாளராக மாறி, 32 ஆண்டுகளாகச் சிறிதும் சோர்வின்றி உழைத்துவரும் லலிதா அம்மாளை, மக்கள் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் கொண்டாடுகிறார்கள். தள்ளாத வயதிலும் தளராத உற்சாகத்துடன் நடைபோடுகிறார் லலிதா அம்மாள்.  

எதுவுமே வீண் இல்லை!

எதையுமே மூன்றாவது கோணத்தில் இருந்து அணுகுவது தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டும் என்று நம்புகிறார் சங்கவி. சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவியான இவர், தன்னைக் கவர்ந்த கலையையும் தன் அடையாளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

படிப்புக்கு இடையில் கிடைக்கிற நேரத்தைத் தன் கலையார்வத்துக்கான தளமாகக் கச்சிதமாகப் பயன்படுத்து கிறார் சங்கவி. கைவினைக் கலையைப் பொழுது போக்காகச் செய்வதைவிட உணர்வு பூர்வமாக ஒன்றிப்போய் செய்யும் போது அதன் விளைவு கற்பனைக்கு எட்டாத அழகுடன் மிளிரும் என்று சொல்லும் சங்கவி, எளிய பொருட்களையும் கலையழகு சொட்டும் படைப்பாக்கி விடுகிறார்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகம். காலேஜ் வந்ததும் கைவினைப் பொருட்கள், பொம்மைகள் மீது என்னோட கவனம் திரும்பியது. பத்திரிகைகளில் கைவினைப் பொருட்களின் படங்களைப் பார்க்கும் போது, நாமும் செய்யலாமேன்னு தோணுச்சு. அப்படி செய்ய ஆரம்பிச்சு, பிறகு இண்டர் நெட் டைப் பார்த்து என்னை மேம்படுத்திக் கிட்டேன்.

கொஞ்சம் நேரமும் பொறுமையும் இருந்தா எல்லோராலும் இதைக் கத்துக்க முடியும் என்று சொல்லும் சங்கவி, காகிதத் தில் செய்யும் க்வில்லிங் கிராஃப்ட்டை எந்த விதமான கருவியும் இல்லாமல் செய்கிறார்.

தான் செய்கிறவற்றை உறவினர்களுக் கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுப் பதில் மகிழ்ச்சியடையும் இவர், வேண்டாம் என்று தூக்கியெறிகிற பொருட்களில் ஒளிந் திருக்கிற கலையழகை நாம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார். பயனில்லை என்று வீசிவிடுகிற பொருட்களை வைத்தும் கலைப் பொருட்களைச் செய்யலாம். இப்படிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதால் குப்பைகளின் அளவு கணிசமாகக் குறையும் என்று சமூக அக்கறையுடன் சொல்லுகிறார் சங்கவி.   


நீதித்துறையில் பெண்கள்

கல்வித்துறையில் அதிக சதவிகிதம் படித்தவர்கள் கொண்ட மாநிலம் கேரளா. அதிலும், அதிகம் பெண்கள் படித்த மாநிலமாக வரலாறு படைத்த கேரளாவில் தற்போது இன்னொரு சாதனையும் நிகழ்ந்துள்ளது. கேரள நீதித்துறை வரலாற்றிலே முதன் முறையாக கேரள உயர் நீதிமன்றம் 4 பெண்களை அமர்வு நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளது.

1959ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக கேரளத்தைச் சேர்ந்த அனு சாண்டி என்ற பெண்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்ல முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். பாத்திமா பீவிதான் அவர். இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவிலும் முதல் பெண் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற பெருமை இவருக்குண்டு.

அதிலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருந்தும் நீதிமன்ற துறையில் உயர்ந்த பதவி வகித்ததும் இவர் மட்டும் தான். இவர்கள் வரிசையில் பி.வி. ஆஷா, அனு சிவராமன், மேரி ஜோசப், வி.சிர்சி ஆகிய நால்வரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி உள்ளனர். திருச்சூர் விமலா காலேஜில் பட்டப்படிப்பும், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர் பி.வி.ஆஷா.

1983இல் அரசியலமைப்பு மற்றும் சிவில் சட்ட நிபுணராக பதிவு செய்தார்.பிறகு தன் வழக்குரைஞர் வாழ்க்கையை எர்ணாகுளத்தில் தொடங்கினார். தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகி உள்ளார். அனு சிவராமன் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். செயின்ட் தெரசா காலேஜில் பட்டப்படிப்பும், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் பயின்றவர் இவர். 10 ஆண்டுகளாக கொச்சி மாநகராட்சிக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர், மூத்த அரசாங்க வக்கீலாகவும் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேரி ஜோசப்பும் அனு சிவராமனுடன் சேர்த்து கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மகாராஜா அரசு சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர். 1983இல் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நிபுணராக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக ஆவதற்கு முன்னர் அரசாங்க வழக்குரைஞராகப் பணியாற்றி உள்ளார். வி.சிர்சி திருவனந்தபுரத்தின் பிரதான மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாகப் பணியாற்றியவர். அட்டிங்கல் கொலை வழக்கின் தீர்ப்பின் போது மக்களால் பாராட்டப் பெற்றவர்.

முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியான பாத்திமா பீவி, உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் நியமனம் பற்றிக் கூறுகையில், இது வரவேற்கத்தக்க ஒன்று. கோகலே சட்ட அமைச்ச ராக இருந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்றங்களில் பெண்களை நியமிக்கும் பணியில் முதன்முதலாக செயல்பட்டார். அப்போது நான் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உச்ச நீதிமன்றமும் அரசாங்கமும் இணைந்து மேலும் பல பெண் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

கால்பந்து எனும் போராட்டக் கருவி!

கால்பந்து விளையாட்டைப் பெண் உரிமைகளைப் பெறுவதற்கான கருவி யாகக் கருதுகிறேன் என்கிறார் கலிதா போபெல்.

ஆப்கானிஸ்தானில் முதல் பெண்கள் கால்பந்து அணியைத் தோற் றுவித்தவர்களில் ஒருவராகவும் ஆப்கா னிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி யின் முன்னாள் தலைவராகவும் இருந் தவர். அய்ந்து ஆண்டுகளாக அரசியல் தஞ்சம் பெற்று, டென்மார்க்கில் வசித்து வருகிறார். ஹம்மெல் என்ற தொண்டு நிறுவனத்தில் உலகம் முழுவதும் இரு பாலினத்துக்கும் பள்ளி கால் பந்து அணிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்களின் நிலை மிகவும் மோசமானது. ஒருகாலத்தில் சுதந்திரமாகக் கல்வி கற்ற பெண்கள், கடந்த 30 ஆண்டுகளில் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். கல்வி, வேலை, விளையாட்டு எல்லாமே ஆண்களுக்கான விஷயங்களாகப் பார்க் கப்பட்டன. இதனால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாக்கப்பட்டனர்.

பெண்கள் தங்கள் உரிமை களை மீட்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் கால்பந்து விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கலிதா.

ஆர்வத்தைத் தூண்டிய கட்டுப்பாடுகள்

அது 2004-ஆம் ஆண்டு. பதினாறு வயது கலிதா வுக்குத் தன் சகோதரனின் கால்பந்து விளையாட்டைப் பார்த்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. விளையாட்டுகளில் பெண்கள் பங் கேற்கத் தடை இருந்த காலகட்டம். கால்பந்து மைதானங்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றும் இடங்களாக இருந்தன.

கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதை மீறும் எண்ணம் அழுத்தமாகப் பதிந்தது. ஓர் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் கலிதா. பள்ளியில் தன்னைப் போல ஆர்வம் கொண்ட பெண்களை ஒருங்கிணைத்தார். பெரிய சுவர்களுக்குப் பின்னால் கால்பந்து விளையாடினார்.

ஒரு கட்டத்தில் பெண்கள் விளையாடுவது வெளியே தெரியவந்தது. குப்பைகளையும் கற்களை யும் விளையாடும் பெண்கள் மீது வீசினார்கள். வசை மாரிகளைப் பொழிந்தார்கள். ஆனாலும் பெண்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை. வெவ்வேறு இடங் களுக்குச் சென்று விளையாட்டைத் தொடர்ந்தனர்.

2007-ஆம் ஆண்டு கலிதாவும் அவரது சகாக் களும் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் முதல் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கினார்கள். ஆனாலும் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஹெலி காப்டர் இறங்கும் தளத்துக்குச் சென்று பாதுகாப்பாக விளையாடினர். 3 முறை ஹெலிகாப்டர் தளத்தின் வாயிலில் தாலிபான்கள் வெடி குண்டு களை வெடிக்கச் செய்தனர்.

அப்பொழுதுதான் கால்பந்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், பெண்கள் உரிமைகளைப் பெறுவ தற்கான கருவியாக நினைத்தார் கலிதா. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு தைரியமாக வெளியே வர ஆரம்பித்தனர். பெண்கள் கால் பந்தாட்ட அணிகள் உருவாகின. அதே அளவுக் குக் கலிதாவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. கலிதா மட்டுமின்றி, அவரது குடும்பமும் கொலை மிரட்டல் களுக்கு உள்ளானது.

பெண்களுக்குப் புதிய சீருடை

ஆப்கானிஸ்தானில் வசிக்க இயலாது என்ற நிலை வந்தபோது, நாட்டை விட்டு வெளியேறி, டென்மார்க் கில் அடைக்கலம் புகுந்தார் கலிதா. அங்கிருந்து கொண்டே தன் நாட்டில் பெண்களுக்கான உரிமை களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அவர் வேலை செய்து வரும் ஹம்மெல் தொண்டு நிறுவனம் விளையாட்டு வீரர் களுக்கான சீருடைகளை வடிவமைத்துக் கொடுக் கிறது. அந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணிக்கான புதிய சீருடையை உருவாக்கியிருக்கிறார் கலிதா. தலையில் ஹிஜாப், கைகளுக்கு உறைகள், கால்களுக்கு லெகிங்ஸ் என்று முழுக்க மூடப்பட்ட சீருடை இது.

ஹிஜாப் அணிந்து ஆடும்போது திடீரென்று கண்களை மறைக்கும். கீழே விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும்போது அந்தச் சீருடை மிகுந்த புழுக்கத்தைக் கொடுக்கும். இந்தப் புதிய சீருடை ஆப்கானிஸ்தானின் கலாசாரத் தையும் பிரதிபலிக்கிறது, வீராங்கனைகளுக்கு வசதி யாகவும் இருக்கிறது. இனிமேலாவது பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்க வேண்டும். குடும் பத்தை விட்டு, நாட்டை விட்டுத் தனியாக இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால் என்னைப் போல உரிமை கேட்டுக் குரல் கொடுத்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆப்கனைச் சேர்ந்த பல விளையாட்டு வீராங்கனைகள் அய்ரோப் பிய நாடுகளில் வசிக்கிறார்கள். எங்கள் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பும் பெண்கள் உரிமைகளும் மதிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப் பொழுது தாய் நாடு திரும்புவேன். என் நாட்டுக்காகப் பெண்கள் அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப் பதுதான் என் லட்சியம்.

தான் ஒரு பெண் என்பதையும் எங்கள் நாட்டுக் கொடிக்குக் கீழ் அணி வகுப்பதையும் ஆப்கன் பெண்கள் பெருமையாக நினைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்கிறார் கலிதா.

பெங்களூருவில் விந்தியா என்கிற பி.பி.ஓ. நிறுவனத்தை நடத்தி வருகிறார் பவித்ரா. ஒரு சிலர் வியாபாரத்தில் சாதிப் பார்கள், சிலர் சமூக சேவையில் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், இவரோ தனது நிறுவனத்தில் சமூக சேவையை இணைத்துவிட்டதோடு வியாபாரத்திலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 600 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகள் என்பதுதான் பெரிய விஷயம்.

முதலில் 10 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளித்தவர் இப்போது 100 சதவிகித பணியிடங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கே அளித்து நிரப்பியுள்ளார்.  அவர்களுக்கு வேலைவாய்ப்போடு உணவு, தங்குமிடம் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிறவசதி களையும் செய்து வருகிறார்.

அது மட்டுமின்றி இயல்பு வாழ்க்கை நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இப்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பலரின் கனவுகள் நனவாகி உள்ளன. அவர்களால் தங்கள் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடிகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப் படும் மிகப்பெரிய நிறுவனம் இது.

தனது 22 வயதில் இதைத் தொடங்கும்போது தெரிந்தவர் களிடமிருந்து வாழ்த்துவதற்கு கைகள் நீண்டதே தவிர உதவப் பெரிதாக யாரும் முன்வரவில்லை. இப்போது உதவி களோடு விருதுகளும் சேர்ந்து குவிகின்றன. இவரது கண வரும் இவரோடு இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Banner
Banner