மகளிர்

விருது பெற்ற நிர்மல் சந்தேல்

2016 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்திருந்தது. சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களுக்கான போட்டி அது.     எனப்படும் அந்த விருதுக்கு ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் மொத்தம் 25 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதன் பிறகு இணையதளத்தில் அரசு நடத்திய மக்கள் ஓட்டெடுப்பில் 12 பேர் மட்டும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்.

இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கணவனை இழந்தபின் வாய்ப்பு கெட்டவர் என்கிற பழியோடு மாமியார் வீட்டின் ஒரு மூலையில் முடங்கி கிடந்தார் 23 வயது நிர்மல் சந்தேல். அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து  எனும் தொண்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்குதான் இருண்டு கிடந்த அவர் வாழ்வில் வெளிச்சம் பிறந்தது.

தனியாக இருக்கும் பெண்களுக்கு தொழில் செய்ய உதவும் நிறுவனமாக இருந்த அங்கு பல விதவைப்பெண்கள், ஏழ்மையில் வாடும் பெண்கள், தனித்து விடப்பட்ட பெண்களை சந்தித்தார். அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார்.
கணவனை இழந்தவர்களும், பிரிந்தவர்களும் பெரும்பாலும்  வருமானமின்றி  பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்தச் சமூகத்தோடும் வாழ்க் கையோடும் போராடுவதை உணர்ந்தார்.

அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வர நினைத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்ற அவர்  ஓர் இயக்கத்தை நிறு வினார்.

120 பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த இயக்கத்தில் இப்போது கிட்டதட்ட 15,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தனித்து வாழும் பெண்களின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதில் இருந்து அவர்களை தொழில் முனைவோராக்குவது வரை பல செயல்களில் ஈடுபட்டு இமாச்சலத்தில் வசிக்கும் பல பெண்களின் தலைவிதியை மாற்றி வருகிறார்.

இவருடைய இயக்கத்தின் மூலம் பல பெண்கள் பயன்பெற்று தற்போது நல்ல நிலைமையில் இருக் கின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் சிங்கிள் உமன் பாத யாத்திரா என்கிற பெயரில் நடைபயணத்தை 2008ல் இவர் தொடங்கியபோது வயதான பெண்கள் பலரும்  உடன் கலந்து கொண்டனர். உலகம் அப்போது இவரை கவனிக்க ஆரம்பித்தது.

இப்போது இந்தியா முழுவதிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட இவருக்கு உதவிகள் குவிகின்றன. இப்போது இந்தியாவில் தனிப் பெண்களின் தலைமை எனக் கூறத்தக்க வகையில் தனித்துவம் பெற்றுவிட்டார்.  

பெண்கள் கல்வியுடன், ஒரு கைத்தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்

பெண்கள் கல்வியுடன் ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும்  என கூறுகிறார் தேநீர்க்கடை நடத்து சுலோச்சனா .

இல்லற வாழ்வில் ஒருவருக் கொருவர் அன்பாகவும் அனு சரணையாகவும் இருந்து, மேடு பள்ளங்களை எளிதில் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும்போது, கணவனை இழந்தால் எந்தப் பெண்ணும் நிலைகுலைந்துதான் போவார். ஆனாலும் தொடர்ந்து வாழ்க்கை என்ற படகைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்ட சுலோச்சனா, தன் தன்னம்பிக்கையால் இன்னல்களைக் கடந்து, தலைநிமிர்ந்திருக்கிறார். சிதம்பரம் கீழவீதியில் அவர் நடத்திவரும் சுஜாதா தேநீர்க் கடையில், தேநீரை ஆற்றியபடியே பேச ஆரம்பித்தார் சுலோச்சனா.

என் கணவர் நடத்தி வந்த பெட்டிக்கடை இது. திடீரென்று அவர் நோயில் விழுந்தார். கணவர், குழந்தைகள், வியாபாரம் என்று எல்லாவற்றையும் நானே தனி ஆளாக நின்று கவனித்துக்கொள்ள வேண்டிய கடுமையான சூழல் வந்தது. கணவர் குணமாகிவிடுவார் என்ற தைரியத்தில் எல்லாவற்றையும் சமாளித்தேன். ஒருநாள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். எத்தனை நாள் இப்படி உட்கார்ந்திருக்க முடியும்? குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்? என்று பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

இன்னொரு பக்கம் கடன்காரர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, வியாபாரத்தைக் கவனிக்க முடிவெடுத்தேன். பெட்டிக்கடையுடன் தேநீர்க் கடையையும் வைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று திட்டமிட்டேன். அனுபவத்தின் மூலமே வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டேன் என்றபடி மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் சுலோச்சனா.

அதிகாலை 4 மணிக்குக் கடைக்கு வந்துவிடுகிறார். டீ மாஸ்டர் இல்லையென்றால் தானே அந்த வேலையையும் சேர்த்துக் கவனித்துக்கொள்கிறார். மதியம் உணவு இடைவேளையில் சிறிது ஓய்வு கிடைக்கும். வியாபாரம் முடித்து வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணி ஆகிவிடும். நாள் முழுவதும் வேலை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் குடும்பம் நடத்துவதற்குப் போதுமான வருமானமும் இந்தத் தொழிலில் கிடைக்கிறது என்கிறார் சுலோச்சனா.

கணவரை இழந்த பெண்கள் மன ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் மிகவும் மன உளைச்சல் அடைகிறார்கள். பெண்கள் கல்வியுடன் ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரை அண்டியிருக்காமல், நாமே நம் வாழ்க்கையை நடத்த முடியும். என் நிலைமையைப் புரிந்துகொண்ட மகளும் மகனும் பொறுப்புடன் இருக்கிறார்கள். மகன் சென்னையில் வேலை செய்கிறான். மகள் இன்ஜினீயரிங் படிக்கிறாள்.

என் கணவர் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் நிறைவேற்றிவருகிறேன் என்பதை நினைக்கும் போது நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுது என்கிறார் கடின உழைப்பாளர் சுலோச்சனா.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டி

டாக்டரின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளியானவர் இன்று அதே மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சின்னத் தவறு ஒருவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது. அபிலாஷாவின் வாழ்க்கையும் அப்படித்தான். சின்ன வயதில் டாக்டர் செய்த  தவறினால் அவர் அதனை வாழ்நாள் முழுக்க அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் அவர் எதிர்கொண்ட அவமானங்களும், அழுகைகளும் அதிகம்.

அதையெல்லாம் தாண்டி இன்று அபிலாஷா சாதித்திருக்கிறார். ஆம். தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாய்ஸ் ஆஃப் த அன் ஹெர்ட் என்ற அமைப்பை தன் அக்கா அஸ்வினி மற்றும் நண்பர் விவேக் உதவியுடன் உருவாக்கி அதன் மூலம் பலருக்கு புதிய வழியை காட்டிவருகிறார். நான் முழுமையான தமிழ்ப் பொண்ணு. அப்பா, சீனாவுல இருக்கிற பிரபல பர்ஃயூம் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அம்மா, இல்லத்தரசி...

அப்போது எனக்கு ஒரு வயசு. நாங்க மும்பைல இருந்தோம். திடீர்னு  நொடிப்பு மாதிரி வந்தது. அப்பாவும் அம்மாவும் உடனடியா என்னை மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போனாங்க. அங்க எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அதிக சக்தியுள்ள மருந்தை கொடுத்துட்டார். என் உடம்பு சரியாச்சு.  மருந்தோட விளைவால என் வலது காது சுத்தமா கேட்காம போயிடுச்சு. இடது காது சுமாரா கேட்கும். மத்த குழந்தைகள் மாதிரி என்னால கேட்க முடியாம போனதால பேசற திறனும் போயிட்டுச்சு. அதாவது, நான் பேசவே மறந்துட்டேன்.

இதுக்கு பிறகு நாங்க அய்தராபாத்துக்கு மாற்றல் ஆகி வந்தோம். ஒரு பள்ளில என்னை சேர்த்தாங்க. அங்க சேர்ந்த பிறகுதான் என் பிரச்சினை என்னன்னே அப்பா அம்மாவுக்கு தெரிய வந்தது. உடனே பதறிப் போய் என்னை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அந்த டாக்டர்தான் ஊசியோட பின்விளைவால எனக்கு இப்படி ஆகியிருக்குனு சொன்னாரு. அப்ப எனக்கு நாலு வயசு. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை. அப்பா, அம்மா, அக்கா எல்லாம் ஏன் அழறாங்க? தெரியல. சும்மா அவங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன்.

ஒரு ஆண்டு கழிச்சு நாங்க சென்னைக்கு வந்தோம். காது கேட்கும் திறனுக்கான சிகிச்சை ஒருபக்கம் நடந்துகிட்டே இருந்தது. மறுபக்கம் என்னை பள்ளில சேர்க்க பெற்றோர் முயற்சி செஞ்சாங்க. ஒருவழியா கடைசில ஒரு பள்ளில எனக்கு சீட்டு கிடைச்சது... என்று தன் பால் யத்தை அசைபோட்ட அபிலாஷா, இதன் பிறகு பல இன்னல்களை சந்தித்திருக்கிறார்.

முதல்ல அந்தப் பள்ளில என்னை அவங்க சேர்த்துக்கலை. அப்பாவும் அம்மாவும் கெஞ்சி கேட்டுகிட்டதால போனா போகுதுன்னு சேர்த்தாங்க. ஆனா, என்னை மாற்றுத் திறனாளியாதான் நடத்துனாங்க என் காதுல இருந்த காது கேட்கிற கருவியை சக மாணவர்கள் வித்தியாசமா பார்த்தாங்க. கிண்டல் செஞ்சாங்க. என் மேல கல் எறிவாங்க. ஹியரிங் எய்டுல தண்ணீர் ஊத்து வாங்க. நான் பேசறதை கிண்டல் செய்வாங்க... மாணவர்கள்தான் இப்படீன்னா...

ஆசிரியர்களும் இதே மாதிரி நடந்துகிட்டாங்க. இதெல்லாம் என்னை ரொம்ப காயப்படுத்திச்சு. நாலு வயசு பொண்ணுக்கு எப்படி இருக்கும்னு நீங்களே நினைச்சுப் பாருங்க. வீட்ல சொன்னா அப்பா, அம்மா கஷ்டப்படுவாங்க. அதனால எனக்குள்ளயே பூட்டி வைச்சேன். ஒருவழியா வேற பள்ளில என்னை சேர்த்தாங்க. ஆனாலும் பள்ளிக்கு போகவே எனக்கு பயமா இருந்தது.

பழைய பள்ளி கொடுத்த அனுபவம்தான் காரணம். ஆனா, முதல் நாள் பள்ளிக்கு போனப்ப யாரும் என்னை வித்தியாசமா பார்க்கலை. காது கேட்கற கருவியை பார்த்து கிண்டல் செய்யலை. ஆசிரியர்களும் என்னை அள்ளி அணைச்சு கிட்டாங்க. உண்மையை சொல்லணும்னா எனக்குள்ள தன்னம்பிக்கை வந்தது அப்பதான். படிக்கிற ஆசையும் கொழுந்துவிட்டு எரிந்தது. என் அம்மாவும் அக்காவும்தான் எனக்கு குரு. ஒவ்வொரு சொல்லா என்னை உச்சரிக்க வைச்சது அவங்கதான். படிப்படியா நான் முன்னேற ஆரம்பிச்சேன்... முகத்தில் பெருமை பொங்க சொல்கிறார் அபிலாஷா. அதற்கு காரணமும் இருக்கிறது. படிப்பைத் தவிர பரதம், ஓவியம் வரைதல், அபாகஸ்... என சகலகலாவல்லியாக இப்போது அவர் இருக்கிறார்.

பரதம் எனக்கு பிடிச்ச கலை. ஆனா, இசையை உணர்ந்து என்னால நடனமாட முடியுமான்னு கவலை. மத்தவங்க நடனம் ஆடறப்ப தரைல ஏற்படுகிற அதிர்வை வைச்சுதான் நான் உணர்வேன். இதையே இசையா மாத்திதான் நான் பரதம் கத்துகிட்டேன். இதேமாதிரிதான் அபாகஸ். பத்து லெவலையும் முடிச்சதும் வாய்விட்டு அழுதேன். குறைபாடுள்ள எந்தப் பெண்ணும் பத்து லெவலையும் முடிச்சதில்லை. நான்தான் முதல் ஆள்.

இந்த நேரத்துலதான் என்னால இப்படி சாதிக்க முடியறப்ப என்னைப் போலவே பாதிக்கப்பட்ட மத்தவங்களும் நிச்சயம் சாதிப்பாங்க. அதுக்கு ஊன்றுகோலா நாம ஏன் இருக்கக் கூடாதுன்னு தோணிச்சு. இந்த எண்ணத்தோட விளைவுதான் "வாய்ஸ் ஆஃப் த அன்ஹெர்ட்" அமைப்பு... என்ற அபிலாஷா, அது குறித்து விவரிக்கத் தொடங்கினார். ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் இதை ஆரம்பிச்சோம். எங்ககிட்ட நிறைய திட்டம் இருக்கு.

ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடி முதல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தணும். பலருக்கு இந்த குறைபாடு பத்தியே தெரியலை. ஒரு சிலருக்கு காது கேட்காது. ஆனா, பேச முடியும். இவங்களுக்கு தேவை ஸ்பீச் தெரபி. பிறவியிலேயே கேட்க முடியாம போனவங்களை குணப்படுத்த முடியும்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா, விபத்துனால இடைல கேட்கும் திறனை இழந்த வங்களுக்கு மறுபடியும் அதை பெற்றுத் தர முடியும். இதுக்கு முதல்ல பாதிக்கப்பட்டவங்க குறித்து தெரியணும். அதனால முதல்ல சமூக வலைத் தளத்துல எங்க அமைப்பு பத்தின செய்திகளை வெளியிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நிறைய பேர் உதவ முன்வந்தாங்க.

வசதி இல்லாதவங்களுக்கு முடிந்த உதவிகளை செய்யறோம். குறிப்பா பெற்றோர்களுக்கும் கூட பிறந்தவங்களுக்கும் கவுன்சிலிங் தர்றோம். ஏன்னா, இவங்க பின்பலமா இருந்தாதான் அந்த குழந்தையால சாதிக்க முடியும். கூடிய சீக்கிரத்துல எங்க மாணவர்களை வைச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தப் போறோம். குறை உள்ளவங்கன்னு நீங்க ஒதுக்கின பிள்ளைகளுக்குள்ள எவ்வளவு திறமைகள் இருக்கு பாருங்கனு காட்டப் போறோம். இந்த நிகழ்ச்சி வழியா கிடைக்கிற நிதியை வைச்சு வசதி குறைவான பிள்ளைகளுக்கு ஸ்பீச் தெரபியும், ஹியரிங் எய்டும் வாங்கித் தரப் போறோம். நகரத்துல ஓரளவு கால் பதிச்ச பிறகு கிராமங்கள் நோக்கி செல்லப் போறோம்... கண்களில் கனவு மின்ன சொல்லும் அபிலாஷா, இப்போது பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

பயணமும் சட்டமும் பாதுகாப்பைத் தருகிறதா?

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா(வயது 23). பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி எர்ணாகுளம்சோரனூர் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில், அவர் மட்டும் தனியாக பயணித்தார். வள்ளத்தோள் நகர் சோரனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது கோவிந்தசாமி என்பவர் சவுமியா இருந்த பெட்டிக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவை, ரயில் மெதுவாக சென்று கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரயிலில் இருந்து கீழே தள்ளி அவரும் கீழே குதித்து படு காயங்களுடன் தண்டவாளத்தில் அடிபட்டுக் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமற்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார். பின் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றார். படுகாயம் அடைந்த சவுமியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு போராடி பின் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள் மற்றும் 143 கேள்விகளுடன் கோவிந்தசாமி மீது கொலை, பாலியல் வன் புணர்வு, வழிப்பறி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவிந்தசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து கோவிந்தசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கின் திருப்பமாக தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை 7 ஆண்டுகால சிறைத்தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு சவுமியா பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கிஉள்ளது என்று தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்தத் தீர்ப்பு திறந்த நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் நம்மிடையே இருந்தாலும், பொதுவெளிகளில் எவ்வித பயமுமின்றி பெண் களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 7 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவான தண்டனை. இது குற்றம் செய்வதில் உள்ள பயம் நீங்கி மேலும் குற்றங்கள் தொடர வழிவகுக்காதா என்ற அய்யத்தோடு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவை கூறியதாவது: குற்றத்திற்கான தண்டனை என்பது நேரில் கண்ணால் பார்த்த சாட்சியங்களை கொண்டே வரையறுக்கப் படுகிறது.

மேலும் தண் டனைகளை கடுமையாக்குவதன் மூலம் இதுவரை எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன. எனவே இந்தப் பிரச்னையை உளவியல் சிக்கலாக நினைத்து உளவியல் ரீதியாக அணுகுவதே சிறந்தது. அதற்கான வழி முறைகளை கண்டறிந்து களைவதே சிறந்த வழியாக இருக்கும் என்றார். ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜய குமாரிடம் பேசியபோது, பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாது காப்புக்காக 1322 என்ற புதிய புகார் எண் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த எண்ணை பயன்படுத்தலாம்.

ஒரு பெண் பயணி இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்போது, அடுத்த 4 விநாடிகளில் இந்த அழைப்பு எங்கிருந்து வந்ததோ அந்த மாநிலத்தின் தலைநகருக்கும், மாவட்டத் தலைநகருக்கும் அழைப்பு சேரும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டி ருக்கிறது. எல்லா மொழிகளிலும் உதவி கிடைக்கக்கூடிய வகை யில் இந்தத் திட்டம் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ்ப் பயணி ஒருவர் டெல்லியில் சென்று, இந்த எண்ணை தொடர்பு கொள்ளுகையில், மொழி புரிதல் பிரச்னை ஏற்பட்டால், அடுத்த 5 நொடிகளில் தமிழ் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் விரைவாக நடக்கும். பிரச்னையிலிருந்து பெண்கள் மீள நல்ல வழிவகையாகவும் அமையும்  என்றார்.

மேலும் ஆபத்து காலங்களில் போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) சேவையை பயன்படுத்தி ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் ஆகியோரை தொடர்பு கொள்ள முறையே 9003161710, 9962500500 ஆகிய எண்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆபத்துகால அவசர உதவி எண்கள் தாங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. தனியாக பயணம் செய்யும் பெண்கள், தங்களின் பயணத்திற்கு முன்பு தங்களின் பயணம் குறித்த விழிப்புணர்வோடு தங்களின் பாதுகாப்பிற்காக இந்த எண்களையும் தங்களின் கைபேசியில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் விஜயகுமார்.

தென்னிந்திய பெண்மணி தயாரிக்கும் புற்றுநோய்களுக்கான மருந்து!

முப்பத்தைந்து வயதில் பத்மசிறீ, 51 வயதில் பத்மபூஷன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்,   மன்றத்தின் உறுப்பினர், பயோடெக் நிறுவனத்தின் நிறுவனர்... இப்படி பல முகங்களைக் கொண் டவர் கிரண் மஜூம்தார் ஷா. பைகான் பயோகெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக மருத் துவத் துறையில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துள்ள இவர், நீரிழிவு நோய், கொழுப்பு சம்பந்தமான நோய் மற்றும் புற்றுநோய்களுக்கு இவரது ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் மருந்துகள் இன்றும் மருத்துவத் துறையில் பிரபலம்.  சொந்த ஊர் பெங்களூரு. படித்து, வளர்ந்த தெல்லாம் அங்குதான்.

பெங்களூருவில் உள்ள மது நிறுவனம் ஒன்றில் அப்பா வேலை பார்த்து வந்தார். மதுவை தயாரிக்கும் பணி அவருடையது. இரண்டு சகோதரர்களுடன் பிறந்ததால் என்னை தேவதை போல் சீராட்டி வளர்த்தார்கள். சிறுவயதிலேயே விடாமுயற்சி என்னிடம் உண்டு. என்றாலும் கொஞ்சம் பயந்த சுபாவம். மது தீமையானது என்பதை புரிந்து கொள்ளும் வயதுக்கு நான் வந்ததும் அப்பா மீது வருத்தம் வந்தது. எல்லா குழந்தைகளையும் போல் எனக்கும் அப்பாதான் ரோல் மாடல். அப்படியிருக்கையில் அவர் தவறான தொழிலை செய்கிறாரோ என்ற எண்ணம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருநாள் அப்பாவிடம் இதுகுறித்து கேட்டேன். மது நிறுவனத்தில் வேலை செய்வதாலேயே தவறானவன் என்று அர்த்தமில்லை. எல்லா தொழில்களையும் போல் அதுவும் ஒரு தொழில்... என்று புரிய வைத்தார்... தனது பால்யகாலத்தை நினைவு கூர்ந்த கிரண், மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பியதாக சொல்கிறார். மருத்துவராக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், அதற்கான மதிப்பெண்ணை நான் பெறாததால் அரசு ஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைக்கவில்லை.

தனியார் கல்லூரியில் சேர்க்கும்படி அப்பாவிடம் கெஞ்சினேன். அதிகம் செலவாகும் என்று மறுத்துவிட்டார். சரி மருத்துவம்தான் படிக்க முடியவில்லை... உயிரியலாவது படிக்கலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தேன். 1973இல் பட்டம் வாங்கினேன். இதனைத் தொடர்ந்து ஜெனிடிக் துறையில் டாக்டரேட் வாங்கலாம் என்று தீர்மானித்தேன். ஆனால், அப்பா நான் ப்ரூவிங்  சார்ந்து படிக்க வேண்டும் என்றார். ஏனெனில் இந்தியாவில் முதல் ப்ரூவிங் மாஸ்டர் அவர்தான். எனவே தனது வாரிசுகளில் ஒருவராவது அந்தத் துறைக்கு வர வேண்டுமென்று விரும்பினார்.

அப்பாவின் கனவை நிறைவேற்ற ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில்    ப்ரூவிங் குறித்து படித்தேன். முதுகலை பட்டம் வாங்கினேன். எனது வகுப்பில் நான் மட்டும்தான் பெண். மற்றவர்கள் அனைவரும் ஆண்கள். இந்த சூழலே என்னை சுயமரியாதை கொண்டவளாக மாற்றியது. தன்னம்பிக்கையையும் ஆழமாக விதைத்தது. ஆண்கள் ஆதிக்கம் செய்யும் துறையில் ஒரு பெண்ணாக நானும் சாதிக்கிறேன் என்ற விவரமே எனக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது... என்று சொல்லும் கிரண், தன் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்திருக்கிறார்.

படித்து விட்டு இந்தியா திரும்பியதும் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை.  ஆண்களுக்கான துறை இது... என்று சொல்லி என்னை அலட்சியப்படுத்தினார்கள். இது தன்மானத்தை சீண்டியது. வென்று காட்ட முடிவு செய்தேன்.

நிச்சயம் பெண் என்ற ஒரே காரணத் துக்காக இந்தியாவில் உள்ள மது நிறுவனத்தில் வேலை தர மாட்டார்கள். எனவே அது சார்ந்த துறையில் கால் பதிக்க முடிவு செய்தேன். அதன் வெளிப்பாடுதான் பைகான் பயோகெமிக்கல்ஸ். அய்ரிஷ் நாட்டை சேர்ந்த நொதி  தயாரிப்பாளருடன் கூட்டு சேர்ந்தேன். அங்கிருந்து நொதிகளை வாங்கி இந்திய மது நிறுவனங்களுக்கு சப்ளை செய்ய முடிவு செய்தேன். இதற்காகவே சொந்தமாக நிறுவனம் தொடங்கினேன். பணிபுரிய பல அறிவியல் ஆய்வாளர்கள் தேவைப்பட்டார்கள்.

என் வீட்டு கார் கேரேஜ், நிறுவனமாக மாறியது. அப்போது எனக்கு வயது 25தான். கையில் சிறிதளவே பணம் இருந்தது. இதனால் படித்த பட்டதாரிகள் என்னிடம் பணிபுரிய தயங்கினார்கள். இது குறித்து நான் கவலைப்படவில்லை. நிறுவனத்தை வளர்ப்பதில் அக்கறை செலுத்தினேன். ஆனால், ஒவ்வொரு படியை ஏறும்போதும் ஏராளமான தடங்கல்களை சந்திக்க நேரிட்டது.

மூலப்பொருட்களை ஒரு பெண்ணிடம் கொடுப்பதா என்று தயங்கினார்கள். இதை சரி செய்து நிமிர்வதற்குள் அடுத்த சிக்கல். இப்படி ஒவ்வொன்றையும் எதிர்கொண்டு வென்றேன்... என்று சொல்லும் கிரணின் வாழ்க்கை இதன் பிறகு ஜெட் வேகத்தில் மாறியிருக்கிறது. நொதிகளை இறக்குமதி மட்டுமே செய்து வந்தவர், ஒரு கட்டத்துக்குபின் அதனை தானே தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். நிறுவனமும் பயோ--பார்மக்யூட்டிகல் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.

பெங்களூரு புறநகரில் 20 ஏக்கரில் இதற்கான ஆய்வுக்கூடத்தை அமைத்தார். வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று இவருடன் கைகோர்க்க முன் வந்தது. அவர்களுடன் இணைந்து நீரிழிவு நோய் மற்றும் ரத்தத்தில் கொழுப்பை குறைக்கக் கூடிய மருந்துகளை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார். வெற்றி கிடைத்தது. போதாதா? தானே அந்த மருந்தைத் தயாரித்தார்.

அமெரிக்காவில் இருக்கும் ஃபுட் அண்ட் டிரக் நிர்வாகம் இவரது மருந்துக்கு அங்கீகாரம் வழங்கி தயாரிக்க ஒப்புதல் அளித்தது. இதன் பிறகு இவரது நிறுவனம் இனகலப்பு முறையில் இன்சுலின் தயாரித்தது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக இனக்கலப்பு முறையில் இன்சுலின் மருந்தினை தயாரித்த பெருமையும் இவரது நிறுவனத்துக்குக் கிடைத்தது.

அடுத்த கட்டமாக புற்றுநோய்க்கான மருந்தை தயாரித்து கிரண் முத்திரை பதித்தார். இப்போது இன்சுலினுக்கு சமமான மாத்திரையை தயாரிக்கும் முயற்சியில் கிரண் ஈடுபட்டு வருகிறார்.ஆசியாவின் மிகப் பெரிய பயோடெக்னாலஜி நிறுவனத்தை அமைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. இப்போது என்னிடம் அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பெண்கள்! பூரிப்புடன் சொல்கிறார் கிரண் மஜூம்தார் ஷா.

Banner
Banner