
லண்டன், ஜூலை. 15- சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்கு பின்பு மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளார். அந்த தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரசால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு அய்ம்பது பேருக்கு பலனிக்கிறது. இந்த அய்ம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒன்றரை வயது குழந்தை முதல் அய்ந்து வயது சிறுவர் வரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப் பேருக்கு நோய் தீர்ந்து விட்டது. இருபது வகையான மருந்துகளை கொடுத்து சோதித்ததில் இந்த தடுப்பு மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. இதற்காக பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர். இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.