
பூமியைச் சுற்றி அமைந்த விண்வெளியில் தூசு, கடுகு அல்லது மிளகு அளவிலான எண்ணற்ற கற்கள், நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சுப் பழ அளவிலான கற்கள் என பல வகையான கற்கள் எங்கிருந்தோ வந்து ஏதோ ஒரு திசை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில எப்போதாவது பூமியின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கிப் பாய்வது உண்டு. கற்கள் சில, காற்று மண்டலத்தில் நுழைந்தால் மேலும் மேலும் வேகத்தில் இறங்கும். அப்போது அவை காற்றை மேலும் அதிக அளவில் அழுத்தும் போது கடுமை யான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். இதன் விளை வாக அக்கற்கள் தீப்பிழம்பாகி ஒளி வீசியபடி கீழ் நோக்கிப் பாயும்.அத்துணுக்கு முற்றிலுமாக அழிந்து பொடியாக உதிர்ந்து விடும். இதைத் தான் நாம் நட்சத்திரம் விழுகிறது என்கிறோம்.
நட்சத்திரங்கள் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவை. அதே சமயம் சூரியனை விடப் பல மடங்கு பெரியவை. அவை பூமியில் வந்து விழ என்றுமே வாய்ப்பில்லை. ஒரு நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அந்த நட்சத்திரம் பூமியை வந்து அடைவதற்கு முன்னரே பூமி பொசுங்கி அழிந்து போய் விடும். ஆகவே அடுத்த தடவை வானில் நீங்கள் ஒளிக்கீற்றைக் கண்டால் அது ஒரு சிறிய கல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்த்த்துடன் வெடிக்கும். அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலைகளால் கட்டடங்கள் அதிரும். அத்துடன் ஒளிக்கீற்று பெரிய அளவில் இருக்கும். அந்த பெரிய கல் பல சமயங்களிலும் துண்டு துண்டுகளாகக் கீழே விழுவது உண்டு. அவை சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன். இப்படியாக பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல் அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட ஏதோ களேபரத்தின் விளைவாகப் பல கிலோ மீட்டர் நீள அகலம் கொண்ட மலை அளவிலான பிரம்மாண்டமான பாறைகள் பூமி, சந்திரன், புதன், செவ்வாய், வெள்ளி முதலான கோள்களைத் தாக்கின. இதன் விளைவாக வட்ட வடிவிலான பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றின. சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவற்றில் இப்பள்ளங்களை இன்றும் காணலாம். பூமியில் ஏற்பட்ட பள்ளங்கள் மழை, காற்று, தாவர வள்ர்ச்சி ஆகியவை காரணமாக இருந்த இடம் தெரியாமல் போயின.