
செயற்கைக்கோள் இல்லையேல் டிவி ஒளிபரப்பே சாத்தியமில்லை. டிவி சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை சிக்னல்கள் வடிவில் உயரே உள்ள செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றன. செயற்கைக்கோள் அவற்றை வாங்கி கீழ் நோக்கி அனுப்பும் போது எல்லா இடங்களுக்கும் அந்த சிக்னல்கள் (நிகழ்ச்சிகள் ) கிடைக்கின்றன.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கிண்ண வடிவ ஆண் டெனாக்கள் மூலம் இந்த சிக்னல்களைப் பெற்றுப் பிறகு வீடுகளுக்கு கேபிள் மூலம் டிவி நிகழ்ச்சிகள் அளிக்கின்றனர். இப்போதெல்லாம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் வீட்டு மாடிகளில் சிறிய கிண்ண வடிவ ஆண்டெனாக்களைப் பொருத்தி உங்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும்படி செய்கின்றன. சென்னையில் எங்காவது வீட்டு மாடியில் நிறுவப்பட்டுள்ள கிண்ண வடிவ ஆண்டெனாவை கவனித்துப் பாருங்கள். அது வானில் தென் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். அபூர்வமாக ஒரிரு ஆண்டெனாக்கள் தென்மேற்கு திசையை நோக்கி இருக்கலாம். இந்த ஆண்டெனாக்கள் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே அமைந்துள்ள செயற்கைக்கோளைப் பார்த்தபடி அமைந்திருக்கும். அந்த ஆண்டெனா சிறிது கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பி விடக்கூடாது. இது செயற்கைக்கோளுக்கும் பொருந்தும்.
ஆண்டெனா நகராதபடி உறுதியாக ஆணி அடித்து முடுக்கி விட முடியும். செயற்கைக்கோள் அப்படி அல்ல. எந்த செயற்கைக்கோளானாலும் ஓயாமல் பூமியை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வானில் எந்த செயற்கைக் கோளும் நிலையாக ஓரிடத்தில் நிற்க முடியாது. அது பூமியைச் சுற்றுகின்ற வேகம் குறைந்தாலும் இறுதியில் பூமியில் விழுந்து விடும். அப்படியிருக்கும்போது செயற்கைக் கோள் வானில் எப்படி நிலையாக இருக்க முடியும்?
நம்மைப் பொறுத்த வரையில் அது நிலையாக இருக்கும்படி செய்ய முடியும். பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக 23 மணி 56 நிமிஷம், நான்கு வினாடி ஆகிறது. பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக இதே நேரத்தை எடுத்துக் கொண்டால் சென்னைக்கு மேலே வானில் குறிப்பிட்ட இடத்தில் தெரிகிற செயற்கைக்கோள் என்றும் சென்னைக்கு மேலே அதே இடத்தில் தெரிந்து கொண்டிருக்கும்.
செயற்கைக்கோள் இப்படி ஏன் நிலையாக இருக்க வேண்டும்? கீழே உள்ள தொலைக்காட்சி நிலையம் அனுப்பு கின்ற சிக்னல் நேர் கோட்டில் செல்லும். செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும் சிக்னல் செயற்கைக்கோளை சென்றடையாது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கும். இவ்விதமாக வானில் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே நிலையாக இருக்கின்ற செயற்கைக்கோள்களுக்கு Geostationary Satellite என்று பெயர். இவை பூமிக்கு இணையாக பூமியைச் சுற்றுவதால் தமிழில் இவற்றை இணைசுற்று செயற்கைக் கோள்கள் என்று கூறலாம்.
பூமியை சுற்றுகின்ற எந்த செயற்கைக்கோள் ஆனாலும் அது இயற்கை விதிகளுக்கு ஏற்ப செயல்படுகின்றது. பூமியை சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகின்ற செயற்கைக் கோள் பூமியை ஒரு தடவை சுற்ற சுமார் 90 நிமிஷம் எடுத்துக் கொள்ளும். செயற்கைகோள் இருக்கின்ற உயரம் அதிகரிக்க அதிகரிக்க அது (கெப்ளர் கூறிய விதியின்படி) மேலும் மேலும் மெதுவாக பூமியைச் சுற்றும். உதாரணமாக 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்தியாவுக்கு மேலே 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இப்படியான பல இணைசுற்று செயற்கைக் கோள்கள் உள்ளன. இந்தியாவின் உபயோகத்துக்கென மேலும் பல இணைசுற்று செயற்கைக்கோள்களை செலுத்தத் திட்டம் உள்ளது. இவற்றில் இன்சாட் 3, ஜிசாட் 6, ஜிசாட் 7, ஜிசாட் 9, ஜிசாட் 10 முதலான செயற்கைக்கோள்கள் அடங்கும்.
இந்தியா இப்படி எடை மிக்க செயற்கைக்கோள்களை அடிக்கடி செலுத்த வேண்டியுள்ளது ஏன் என்று கேட்கலாம். இந்தியா ஒரு பெரிய நாடு. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. டிவி ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் சேகரிப்பு என பல பணிகளுக்கும் நாம் செயற்கைக் கோள்களை நம்பி இருக்கிறோம். உள்ளபடி தமிழில் மட்டும் பல டிவி சேனல்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழி களையும் கணக்கில் கொண்டால் பல நூறு டிவி சேனல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லாமே இணைசுற்று செயற்கைக்கோள்களை நம்பி நிற்பவை. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி பூமியைச் சுற்றி பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே மொத்தம் சுமார் 401 இணைசுற்று செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் வானில் அமெரிக்க செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தான் அதிகம்.