பிரிட்டனைச் சேர்ந்த சர்ரே பல்கலைக்கழகம், அண்மையில், ரிமூவ் டெப்ரிஸ் என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இது, பூமியைச் சுற்றி தாழ்வாக சுழன்று வரும் விண்வெளி குப்பையை, வலை வீசிப் பிடிக்கும் துப்புரவுப் பணியை, வெற்றிகரமாக செய்திருக்கிறது.
பல நாடுகள், விண்வெளியில் செயற்கைக் கோள்களை, 60 ஆண்டுகளாக ஏவி வருகின்றன. இக்கோள்களுக்கு சில ஆண்டுகளே ஆயுள். பின், அவை பூமிக்கு மேலே உலோகக் குப்பை கழிவுகளாக சுற்றி வருகின்றன.
இக்குப்பை, புதிய செயற்கைக்கோள்களுடன் மோதி செயலிழக்கச் செய்யும் ஆபத்து நேரக்கூடும் என்பதால், விண்வெளிக் குப்பையை அகற்ற, பல வழிகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.
அதில் ஒன்றைத் தான் சர்ரே பல்கலைக்கழகம், தற்போது வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒரு கையளவு சிறிய செயற்கைக்கோளை, ரிமூவ் டெப்ரிஸ் கோள் வலைவீசிப் பிடித்துள்ளது. அடுத்தகட்டமாக, அதை பூமியை நோக்கி தள்ளிவிட, அது புவியீர்ப்பு விசைக்கு ஆட்பட்டு, அதிவேகமாக காற்று மண்டலத்தில் நுழைய, எரிந்து துகள்களாகிவிடும். இந்த முறையில், கணிசமான விண்வெளிக் குப்பையை அகற்றலாம் என, சர்ரே விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.