அய்போனில் உள்ள சில வசதிகளை வைத்து, ரத்த அழுத்தத்தை அளக்க, ஒரு செயலியை உருவாக்கி யுள்ளனர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
இது, ஏன் வேறு யாருக்கும் தோன்றவில்லை எனக் கேட்கத் தோன்றும் கண்டுபிடிப்பு. ரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் களுக்கு, இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.
அய்போனில், ‘3டி டச்‘ என்ற வசதி, ‘அய்போன் 6’ மாடலிலிருந்து கிடைத்து வருகிறது.
இதையும், ‘செல்பி கேமரா’வையும் வைத்து, இந்த செயலி ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளக்கிறது.
தொடுதிரையில் பாதியும், செல்பி கேமரா மீது பாதியும் படும்படி சுட்டுவிரலை வைத்தால், விரலுக்கு வரும் ரத்த நாடித் துடிப்பை கேமரா அளக்கிறது; தொடுதிரையும் நாடித் துடிப்பை அளக்கிறது.
இந்த இரண்டு அளவைகளையும், செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கணித்து, ரத்த அழுத்தத்தை அய்போன் உரிமையாளருக்கு உடனே காட்டி விடுகிறது.
தற்போது வெள்ளோட்டத்திலிருக்கும் செயலியை, மிச்சிகன் விஞ்ஞானிகள் விரைவில் அய்போன் பயனாளி களுக்கு அளிப்பர். ஆண்ட்ராய்டு பயனாளி களுக்கான செயலி, பின்னர் வெளியிடப்படும்.