எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முப்பரிமாண அச்சுஇயந்திரங்களை குட்டியாக மேஜை மேல் வைத்துப் பார்த்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘டைடோமிக்‘  உருவாக்கியுள்ள, 3டி பிரின்டரைப் பார்த்தால் அசந்துவிடுவர். சரியாக, 9 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட டைடோமிக், ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொள்கிறது.

எதற்கு இத்தனை பெரிய, 3டி பிரின்டர்? இது பல வகை உலோ கங்கள், அலோகங்களைக் கொண்டு புதிய பொருட்களை உருவாக்குவதற்கென்றே படைக்கப்பட்டது என்கின்றனர், டைடோமிக் அதிகாரிகள்.

இதற்கு முன்பே, உலோகத்தால் புதிய பொருட்களை வடிவமைக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் வந்துவிட்டனவே? ஆம், இருந்தாலும், இது கைனடிக் பியூசன் முறையில் உலோகத் துகளை படலம் படலமாக அடுக்குவதன் மூலம், முப்பரிமாணத்தில் உலோகப் பொருளை தயாரிக்கிறது. 40.5 கன சென்டிமீட்டர் அளவுக்கு உள்ள பெரிய பொருட்களை இந்த இயந்திரத்தில் வைத்து தயாரிக்க முடியும்.

இதனால் இது தான், இன்றைய தேதிக்கு உலகின் மிகப் பெரிய உலோக, 3டி பிரின்டர் என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

டைடோமிக், மணிக்கு, 45 கிலோ வரை உலோகத் துகள்களை ஒன்றன்மேல் ஒன்றாக ‘டெபாசிட்’ செய்யும் வேகம் கொண்டது. உலோக முப்பரிமாண அச்சு இயந்திரங்களிலேயே இதுதான் மிகவும் வேகமானது, பெரியது என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

வயிறுக்கும் மூளைக்கும் நேரடித் தொடர்பு!

வயிறு என்பது இரண் டாவது மூளை என்பர். பசி, போதிய அளவு உண்டுவிட்ட திருப்தி, போன்ற உணர்வுகளை, வயிற்றிலிருந்து நேரடியாக மூளைக்கு கொண்டு செல்லும் நரப்பு அமைப்பு இருப்பதை, விஞ்ஞானிகள் பல காலமாக அறிவர். இருந்தாலும், புதிய வற்றை கற்றுக்கொள்வது, நினைவாற்றல் போன்றவற்றுக்கும், வயிற் றுக்கும், மூளைக்கும் உள்ள தகவல் தொடர்புக்கும் ஏதேனும் உறவு உண்டா என, அமெரிக்காவின் தென் கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

எலிகளின் வயிற்றிலிருந்து மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்புகளில், 80 சதவீதத்தை தடுத்து நிறுத்தி சோதித்தனர் விஞ்ஞானிகள். இதனால், எலிகளால் உணவு எங்கே கிடைக்கிறது, என்பது போன்ற இடம் சார்ந்த தகவல்களை, நினைவில் கொள்ள முடியாமல் போனது பரிசோதனையில் தெரியவந்தது. ஆதி மனிதர்கள் உணவு தேடி அலைந்தபோது, எங்கே நல்ல உணவு கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளவும், மீண்டும் அந்த இடத்தை தேடி அறியவும், ‘வயிறு-மூளை’ நேரடி தொடர்பு உதவியிருக்கலாம் என, ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பனி உருகுவதால் உயரும் கடல் மட்டம்!

பூமி சூடேற்றத்தால் துருவங்களில் பனிப் பாறைகள் உருகுகின்றன என்பது, பள்ளிச் சிறார்களுக்குக் கூடத் தெரியும். ஆனால், எந்த அளவுக்கு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன? அண்மையில் சர்வதேச அளவில், 40 அமைப்புகளைச் சேர்ந்த, 84 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள், கவலை தரும் புள்ளி விவரங்களை தந்துள்ளன.

‘பனிப் பாறை எடைச் சமநிலை குறித்த விரிவான ஒப்பாய்வு’ என்ற அந்த ஆய்வின்படி, அன்டார்டி காவில் தற்போது ஆண்டுக்கு, 159 பில்லியன் டன்கள் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன.

இதன்படி உறைந்த கண்டமான அன்டார்டிகா விலிருந்து கடந்த, 25 ஆண்டுகளில் மட்டும், 2.7 ட்ரில்லியன் டன் பனிப் பாறைகள் உருகி கடலில் கலந்துள்ளன. இதனால், உலக அளவில் கடலின் மட்டம், 7.6 மில்லி மீட்டர் உயர்ந்திருக்கிறது.

உலகெங்குமிருந்து, 24 செயற்கைக்கோள்கள், துருவப் பகுதிகளை தொடர்ந்து எடுத்த புகைப் படங்கள், விஞ்ஞானிகள் குழு நேரடியாக துருவப் பகுதிகளில் செய்த கள ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

பனிப் பாறை உருகி கடலில் கலக்கும் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர் களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

கூகுளின் புதிய, ‘குவான்டம்‘ சில்லு!

‘மூர்’ விதிப்படி , சிலிக்கன் சில்லுகளின் கணித் திறனுக்கான எல்லை நெருங்கி விட்டது. அடுத்து அந்த எல்லைகளை தகர்க்க குவான்டம் சில்லுகள் உதவக்கூடும் என, பல காலமாக பேசி வந்தனர் கணினி வல்லுனர்கள்.

பேச்சோடு நிற்காமல், அய்.பி.எம்., இன்டெல் போன்றவை, குவான்டம் சில்லுகளை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தின. இவை வர்த்தக ரீதியில் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லை. என்றாலும், குவான்டம் சில்லு சாத்தியம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அண்மையில கூகுள், ‘பிரிஸ்டில்கோன்’ என்ற குவான்டம் சில்லினை சோதனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கிறது.

சிலிக்கன் சில்லுகள் தகவல்களை, 0 மற்றும், 1 ஆகிய நிலைகளை வைத்தே குறிக்கின்றன. இதை ‘பிட்’ என்பர். ஆனால் குவான்டம் சில்லுகளில் ‘கியூபிட்’ முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, 00, 01, 10, 11 ஆகிய நான்கு குறியீடுகள் இருக்கும்.

இதனால், இந்த சில்லுகள் தகவல்களை அலசி அதிவிரைவில் விடை சொல்லும் திறன் படைத் தவையாக இருக்கின்றன.

இன்று உலகின் முன்னணி அதிதிறன் கணினி களைவிட இவை வேகமும், தகவல் அலசும் திறனும் கொண்டவை. பிரிஸ்டில் கோன் சில்லின் தகவல் அலசும் திறன், 72 கியூபிட்.

ஜனவரியில் இன்டெல் உருவாக்கிய ‘டேங்கில் லேக்‘ என்ற குவான்டம் சில்லின் திறன், 49 கியூபிட்கள்தான். சந்தைக்கு வரும் முன்பே குவான்டம் சில்லுப் பந்தயம் துவங்கி விட்டது.

போகுமிடமெல்லாம்

தானே நகர்ந்து வரும் சூட்கேஸ்!

கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்!

அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் நம்பிக்கை கொண்டது ஓவிஸ்.

படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம். ஓவிஸ் தானாக உடன் வரும்போது, யாரும் எதிரே வந்து மோதாமல், கவனமாக அதுவே நகர்ந்து செல்லும்.

ஓவிசைவிட்டு உரிமையாளர், 2 மீட்டர் தொலைவைத் தாண்டிப் போனால், இதன் செயலி, உரிமையாளர் மணிக்கட்டில் கட்டியிருக்கும் கருவிக்கு செய்தி அனுப்பும். அட, இதில் துணிமணி, பணம், மடிக்கணினி போன்றவற்றையும் திணித்துக்கொள்ளலாம். விலை: 55 ஆயிரம் ரூபாய். சூட்கேசுடன் குடித்தனம் நடத்தும் சர்வதேச பயணியருக்கு இது உற்ற துணை!

பூமி சுற்றும் வேகம் குறைகிறதா?

இன்று ஒரு நாளின் கால அளவு, 24 மணி நேரம். ஆனால், பல ஆயிரம் உயிர்கள் பல்கிப் பெருகாத ஆதி காலத்தில் அப்படி இல்லை என்கின்றனர், ஸ்டீபன் மேயர்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு.  இந்தக் குழுவினர், ‘புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்’ இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, 140 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் ஒரு நாளின் கால அளவு வெறும், 18 மணி, 41 நிமிடங்களாகத்தான் இருந்தது.

பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாளின் நீளம் என்பது, ஒரு நொடியில், 74 பகுதி அளவுக்கு கூடிக்கொண்டே வந்துள்ளது. அப்படியே கூடிக்கொண்டும் இருக்கிறது. ஏனெனில் பூமி சுழலும் வேகம், மெதுவாக, ஆனால் உறுதியாக குறைந்து வருகிறது.

விண்ணியலில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கருத்துகள் மற்றும் புவி வேதியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த கணக்கைப் போட்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ள இன்னொரு ஆச்சரியம் நிலாவைப் பற்றியது.

பூமியைச் சுற்றிவரும் ஒரே துணைக்கோளான சந்திரன், கடந்த, 140 கோடி ஆண்டுகளில், பூமியிலிருந்து, 44 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு விலகிப் போயிருக்கிறது. இந்த விலகல், மேலும் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner