எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சுவீடன் நாட்டு அரசு ஒரு முடி வுடன் தான் இருக்கிறது! வரும், 2030 ஆம் ஆண்டுக்குள், பெட்ரோலிய வாகனங்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மாசு இல்லாத பல புதிய தொழில் நுட்பங்களை சுவீடன் பரிசோதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சாலைகளில் மின் தண்ட வாளங்களை பதித்து, கார், பேருந்து போன்றவற்றுக்கு அதன் மூலம் மின்சாரம் வினியோகிக்கும் திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கத் துவங்கியுள்ளது. ‘இ ரோட் ஆர்லாண்டா’ என்ற அந்தத் திட்டத்தின்படி, 2 கி.மீ.,க்கு, சாலையின் நடுவே உலோகத்தாலான ஒற்றை தண்டவாளம் பதிப்பிக்கப்படுகிறது.

இந்த தண்டவாளத்தை கடக்கும் மின் வாகனங்களின் அடிப் பகுதியில் உள்ள கம்பி போன்ற அமைப்பு கீழே இறங்கி, தண்ட வாளத்தை தொடும்போது, வாகனங்களின் மின்கலனில் மின்னேற்றம் நடக்கும். இரண்டு ஆண்டுகள் சோதனைக்குப் பின், இந்த வசதியில் இருக்கும் நன்மை, தீமைகளை அலசி, சுவீடனின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டத் தை விரிவாக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

எது எப்படியோ, மின் வாகனங்களுக்குத் தான் இனி எதிர்காலம் என்று ஆகிவிட்டதால், அந்த வாகனங்களுக்கு போகிற போக்கிலேயே மின்னேற்றம் செய்யும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பலமான செயற்கை தசை

மின்சாரம் பாய்ச்சினால் அதிக எடையை தூக்கும் திறன் கொண்ட செயற்கை தசைகளை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

அமெரிக்காவின், இல்லி னாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை தசைகள், அவற்றின் எடையை விட, 12 ஆயிரம் மடங்கு அதிக எடையை தூக்கும் வலுவை பெற்றுள்ளன.
கார்பன் இழைகளையும், பி.டி.எம்.எஸ்., எனப்படும், ‘பாலிடை மெதைல்சிலாக்சேன்’ என்ற ரப்பரையும் கலந்த சுருள்களாக செயற்கை தசையை அவர்கள் உருவாக்கிஉள்ளனர்.

இந்த சுருள்களின் ஒரு முனையில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை பாய்ச்சினால், இழைகள் விரிவடைந்து அவற்றின் நீளம் குறைகிறது. இந்த சுருக்கத்தால், மறு முனையில் இணைக்கப்பட்டுள்ள எடையை அவை மேலே தூக்குகின்றன. இதுவரை உருவாக்கப்பட்ட செயற்கை தசைகளிலேயே, இல்லினாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கார்பன்- பி.டி.எம்.எஸ்., இழைகளால் ஆன தசையே மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என, ‘ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் அண்டு ஸ்ட்ரக்சர்ஸ்’ ஆய்விதழ் தெரிவித்து உள்ளது.  மனிதர்களுக்கான செயற்கை கைகள், கால்களிலும், ‘ரோபோ’க்களின் கை -கால்களை இயக்கும் ‘ஆக்சுவேட்டர்’களைப் போல இத்தகைய செயற்கை தசை களை பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மறு சுழற்சிக்கு சிறிய தொழிற்சாலை

உலகெங்கும் ஆண்டுக்கு, 150 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகின்றன. அதே அளவுக்கு பழைய மொபைல் போன்களும் குப்பைக்குப் போகின்றன.

இதோடு பழைய மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று பல்லாயிரம் டன் மின்னணு குப்பை சேர்ந்து, மண்ணுக்கும், காற்றுக்கும் நச்சுத் தன்மையை உண்டாக்குகின்றன.

இந்த மின்னணு குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்வது நல்ல தீர்வு. ஆனால், மின்னணு குப்பை கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்து, பயனுள்ள பொருட்களாக ஆக்க உயர் தொழில்நுட்பமும், நிறைய ஆட்களும், ஏக்கர் கணக்கில் இட வசதியும், முதலீடும் தேவை.

இந்த தடைகளை களைந்து, எளிய தீர்வை உருவாக்கி இருக்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆஸ்திரேலிய பேராசிரியரான வீணா சஹஜ்வாலா.

இவரும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினரும், மின்னணு குப்பை கழிவுகள் சேரும் இடத்திலேயே வைத்து இயக்கக்கூடிய சிறிய மறுசுழற்சி தொழிற்சாலையை உருவாக்கியுள்ளனர்.

‘ஸ்மார்ட்’ மினி மறுசுழற்சித் தொழிற்சாலை, ‘அசெம்பிளி லைன்’ பாணியில் இயங்குகிறது.

ஒரு பக்கம் மின்னணு குப்பை கழிவுகளை உள்ளே அனுப்பினால், அவற்றை ஒரு இயந்திரம் உடைத்து பிரித்து அனுப்ப, அடுத்த கட்டத்தில் ஒரு ரோபோ கரமும், கேமராவும், பொருட்களை பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், அலோகம் என வேகமாக பிரித்து அனுப்புகிறது.

அடுத்து, ஒரு கணினி மூலம் இயங்கும் எரிகலன், செம்பு, அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் என, அந்தந்த பொருட்களுக்கு தேவையான உயர் வெப்பத்தை செலுத்தி உருக்கி, அனுப்புகிறது.

பிளாஸ்டிக் போன்றவற்றை பிரித்து, முப்பரிமாண இயந்திரங்களில் புதிய பொருட்களை உருவாக்கத் தேவையான பிளாஸ்டிக் இழைகளாக மாற்ற முடியும்.

உலகம் மற்றும் அலோகங்கள் குளிகை வடிவில் குளிர்வித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பலாம். இத்தனையையும் செய்யும் அந்த மினி தொழிற்சாலைக்கு தேவையான இடம் வெறும், 50 சதுர மீட்டர் தான்!

குறட்டையை குறைக்கும் காதணி கருவி!

ஆழ்ந்த துக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ, ‘ஸ்லீப் இயர் பட்’ என்ற காதில் அணியும், ‘இயர் போன்’ கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

இதை அணிந்துகொண்டால், குறட்டை சத்தம் கேட்க ஆரம்பித்ததும், மெல்லிய ஒலியையும், அதிர்வையும் அந்தக் கருவி உண்டாக்கும்.

உடனே, குறட்டை விடுபவர் விழித்து, அவர் படுத்திருக்கும் தோரணை, தலையை வைத்திருக்கும் கோணம் போன்றவற்றை மாற்றிக் கொண்டு தூங்க உதவும்.

மேலும், இந்தக் கருவி எழுப்பும் ஒலியால், மூச்சுக் குழாயை சுற்றி உள்ள தொண்டை தசைகள் சுருங்கி விரிந்து கொடுப்பதால், குறட்டை விடுபவரால் இயல்பாக சுவாசிக்கவும் முடியும்.

ஸ்லீப் இயர் பட் எழுப்பும் ஒலி, அதை அணிந் திருப்பவரைத் தவிர, அருகில் படுத்து உறங்கு பவருக்கு கேட்காது. இயர் பட்டின் ஒலி மற்றும் அதிர்வுகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை, ஒரு மொபைல் செயலி மூலம் திருத்திக் கொள்ளலாம்.

மேலும், ஒரு இரவில் எத்தனை முறை அவர் குறட்டை விட்டார் என்பதையும் மொபைல் செயலி பதிவு செய்யும்.

குறட்டை விடுபவர் இப்படி தன் குறட்டைப் பழக்கத்தை கண்காணிக்க ஆரம்பிக்கும்போது, குறட்டையின் அளவு குறையவும், ஏன் குறட்டை விடும் பழக்கமே கூட நிற்க வாய்ப்புள்ளதாக, ஸ்லீப் இயர் பட்டின் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இதன் விலை, 6,500 ரூபாய். இந்த கருவிக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளது என்பதை அறிய, விரைவில், ‘இன்டிகோகோ’ இணையதளத்தில் அறி முகப்படுத்த உள்ளனர் இதன் தயாரிப்பாளர்கள்.

வெடித்து விரட்டும் அதிசய எறும்புகள்!

எறும்புகள் கூட்டமாக செயல்படக்கூடியவை என்பதும், கூட்டத்தின் நலனுக்காக பல தியாகங் களை செய்யக்கூடியவை என்பதும் தெரிந்தது தான்.

ஆனால், தெற்காசிய நாடுகளில் சில வகை எறும்புகள், தங்கள் கூட்டம் எதிரிக்கு இரையாகாமல் தடுக்க, தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்கின்றன என்பது, பூச்சியியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆனால், 1935க்குப் பின், இத்தகைய எறும்புகள் இருப்பதற்கான ஆதாரமே கிடைக்கவில்லை.

எனவே, 2016 வாக்கில், ஆஸ்திரியா, தாய்லாந்து, போர்னியோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்கிழக்காசிய காடுகளில் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது, எதிரிகளிடமிருந்து தங்கள் புற்றிலிருக்கும் சக எறும்புகளைக் காக்க, சில எறும்புகள் தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்வது உண்மை தான் என, அவர்கள் கண்டறிந்தனர்.

அத்தகைய எறும்பினங்களை மேலும் ஆராய்ந்தபோது, வெடித்துச் சிதறும் எறும்புகளின் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் விஷம் அல்லது விரும்பத்தகாத தன்மை, எதிரிகளை புற்றுக்குள் வரவிடாமல் விரட்டியடிப்பது தெரிய வந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner