எழுத்துரு அளவு Larger Font Smaller Font


எந்த உணவகத்தில் சாப்பிட்டு வந்தீர்கள்?’’ என்று கேட்டால், “”விண்வெளியில் உள்ள உணவகத்தில்’’ என பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். ஆம். விண்வெளியில் 2022-ஆம் ஆண்டு சொகுசு உணவகத்தை திறக்கிறது அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற தனியார் நிறுவனம்.

இதற்கு “அயூரா விண்வெளி ஹோட்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 200 மைல் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சொகுசு உணவகம் கொண்ட ராக்கெட் 2012ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

“”இரண்டு பேர் தங்கும் சொகுசு அறை கொண்ட இந்த உணவகத்துக்குச் செல்ல மொத்தம் 12 நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக 3 மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக ஒரு குழுவில் 6 பேர் அனுப்பப்படுவார்கள். விண்வெளி வீரர்கள் இரண்டு பேரும் குழுவில் இருப்பார்கள்.

இந்த பயணத்துக்கான முன்பதிவை ஓரியன் ஸ்பான் நிறுவனம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணமாக ரூ. 55 கோடியும், முன்பதிவுக் கட்டணமாக ரூ. 5 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்தபடியே, இதுவரை கண்டிராத பூமியின் அழகைக் கண்டு ரசிக்கவும், இந்த விண்வெளி அனுபவத்தைக் கொண்டு ஆய்வில் ஈடுபடவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்.

புவிவட்டத்தில் 90 நிமிடங்களில் ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும் இந்த உணவகத்தில் இருந்து ஏராளமான சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காணலாம்.
இந்த உணவகத்தின் பரப்பளவு 43.5 அடி நீளமும், 14.1 அடி அகலமும் கொண்டதாகும். வருங்காலங்களில் இந்த உணவகத்தின் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விண்வெளியின் சுற்றுப்புறத்தைக் காண, வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் அமைக்கப்படுகின்றன.

கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றாலும் முன்பதிவாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். இந்தப் பயணத்தை பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம் என்று ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 வயதில் விஞ்ஞானி சிறுவன் கண்டுபிடித்த உடல் பாதுகாப்பு கருவி

பார்கின்சன் என்றழைக்கப்படும் நடுக்க வாதம் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய். இந்நோய் வந்தால் மூட்டு விரைப்பு, உடலில் நடுக்கம் ஏற்படும். மனம் நினைத்தபடி உடல் செயல்படாது. நரம்பியல் மின் கடத்தியாகச் செயல்படும் டோ போமைன் என்ற வேதிப்பொருளின் அளவு மூளை யில் குறைந்தால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. இதனால் உடலின் இயக்கம் மெதுவாகிவிடுகிறது. உலக அளவில் 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக வெளியே எங்கும் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் திரும்பி வரும்வரை அவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை அவர்கள் எங்கிருந்தாலும் பிறர் உடனே தெரிந்து கொள்ள ஒரு கருவியை இந்திய - அமெரிக்க சிறுவன் ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான். இப்போது அந்தச் சிறுவனுக்கு 18 வயது. பெயர் உத்கர்ஸ் தாண்டன்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உத்கர்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் அறிவியல் கண்காட்சியில் தனது கண்டு பிடிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். உடனே அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அவர் ஓர் இளம் தொழில் முனைவோர்.

1996 இல் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி ஒலிம்பிக் விளக்கை ஏற்றுவதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் உத்கர்ஸ். முகமது அலியின் கை அந்த விளக்கை ஏற்றும்போது நடுங்கிக் கொண்டிருந்தது. இது ஏன்? என்ற கேள்வி மனதைக் குடைய அவருடைய தந்தையிடம் கேட்டிருக்கிறார். அவரோ அதைப் போன்று பார்கின்சனால் பாதிக்கப்பட்ட நடிகர் மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உத்கர்ஸின் மூளை அப்போதே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. பார்கின்சன் நோய் என்றால் என்ன? அவற்றின் அறிகுறிகள் எவை? என்பதைப் பற்றி சொந்த முனைப்பில் இணையதளங்களின் மூலம் நிறைய தெரிந்து கொண்டார். அதற்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான்  மோதிர வடிவிலான கருவி.

இந்த கருவி ஒரு சிறிய கணினியைப் போன்றது. இதை பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அணிந்து கொண்டவுடன் அந்த நோயால் உடலில் ஏற்படும் பல்வேறு அசைவுகளை இந்தக் கருவி அளக்க ஆரம்பித்துவிடும். பின்னர் அவற்றைத் தரவுகளாக மாற்றிவிடும். அந்தத் தரவுகள் பார்கின்சன் நோயாளியின் மருத்துவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அனுப்பப்பட்டுவிடும். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு, நோய்க்குரிய சிகிச்சையை, கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், அவற்றின் அளவுகள் எல்லாவற்றையும் தீர்மானிப்பார். நோயாளிகளும் தங்களுடைய செல்போனில் ஒவ்வொரு நாளும் கருவி பதிந்து வைத்திருக்கிற தகவல்களைப் பார்த்து நோயின் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

சாதாரணமாக, மாதத்துக்கு ஒருமுறையோ, மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ மருத்துவரை பார்கின்சன் நோயாளிகள் பார்க்க வருவார்கள். அப்படியே வந்தாலும் 30 நிமிடங்கள் மட்டுமே அவருடைய உடலின் இயக்கங்கள் மருத்துவரால் கவனிக்கப்படும். அந்த 30 நிமிடங்களின் தகவல்களை வைத்து நோயின் தன்மையை, மருத்துவத்தை, மருந்துகளின் அளவைத் தீர்மானிக்கும் முறை இதற்கு முன்பு இருந்தது. இதனால், நோயாளியின் உடலில் பார்கின்சன் நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக மருத்துவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. உத்கர்ஸின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சூரியனுக்கு அருகே உங்கள் பெயர்!

சுட்டெரிக்கும் சூரியனைக் கண்டு நாம் விலகி நின்றாலும், நமது பெயர் சூரியனுக்கு அருகே பத்திரமாக செல்ல இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், உங்கள் பெயரை சூரியன் அருகே கொண்டு செல்ல நாசா வாய்ப்பளித்துள்ளது.

விண்வெளியை ஆய்வு செய்து வரும் நாசா முதல் முறையாக வெப்பத்தைக் கக்கும் சூரியன் அருகே சென்று ஆய்வு நடத்த உள்ளது. இதற்காக பார்க்கர் சோலார் செயற்கைக்கோளை விரைவில் அனுப்பவுள்ளது.

காரின் அளவில் உள்ள இந்த செயற்கைக்கோள், சூரியக் கதிர்களில் இருந்து வெப்பமும், சக்தியும் எப்படி பூமிக்கு சுட்டெரிக்கும் கதிர்களாக வருகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளது.

இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளாக சூரியன் குறித்து மனிதர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது. பார்க்கர் சோலார் செயற்கைக்கோள் 43,000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க 4.5 அங்குல தடிமத்தில் கார்பன் தகடு மூலம் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் பெயர்கள் அடங்கிய சிப்பை வைத்து அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பெயர்களை நாசா சேகரித்து வருகிறது.

ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி தேதியாக நாசா நிர்ணயித்துள்ளது. உங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்றால் ::http://go.nasa.gov/HotTicket
என்ற நாசாவின் இணையதள முகவரிக்கு சென்று பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களுக்கு அவரவர் பெயர் பதிக்கப்பட்ட டிக்கெட்டையும் நாசா வழங்குகிறது.

பிறகென்ன சூரியனுக்கு உங்கள் பெயரை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டியதுதானே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner