எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அடுத்த சில ஆண்டுகளில் தரைப் போக்குவரத்தில் நெரிசல் காணப்படுவதைப் போல பறக்கும் ட்ரோன்களால் வானத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். தலையைத் தூக்கிப் பார்த்தால் அங்கும் இங்கும் ட்ரோன்கள் பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல துறைகளில் அவை தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, சரக்குப் போக்குவரத்துத் துறையில் இவை சேவையை விரைவுபடுத்தி நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடி டெலிவரிக்கு மனிதர்களைவிட ட்ரோன்கள் வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இப்படி நம்மை அசத்த விருக்கும் ட்ரோன்கள் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம்.

ஆளில்லா விமானங்கள்

ட்ரோன் என்றால் ஆளில்லாத சிறிய விமானம் என்று பொருள். ட்ரோன்களில் பல ரகங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் இவை ராணுவச் செயல்பாட்டிலும் உளவுப் பணிகளிலும்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. ஆனால், இன்றைக்கு அந்த வகை ட்ரோன்கள் தனிப் பிரிவாகிவிட்டன. சிவிலியன் ட்ரோன்கள் எனப்படும் அன்றாடப் பணிகளுக்கான ட்ரோன்களில்தான் இப்போது பரவலாகக் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆள் இல்லாத வான் வாகனம் என இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. மென்பொருள், செயலி மூலம் இவற்றை இயக்கலாம். ட்ரோன்கள் பேட்டரி மூலம் இயங்குகின்றன.
அடிப்படையில் இவை இரண்டு வகைப்படும். நிலையான இறக்கைகள் கொண்ட விமான ரகம், சுழலும் இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் ரகம். சுழலும் சக்கர வகையில் நான்கு சக்கரங்கள், ஆறு சக்கரங்கள், எட்டுச் சக்கரங்கள் கொண்ட காப்டர்கள் உள்ளன. பெரும்பாலும் சிவிலியன் பயன்பாட்டில் இந்த வகை காப்டர் ட்ரோன்களைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றின் தலைப் பகுதியில் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். அவை தரும் வேகத்தில் இவை பயணிக்கும். மென்பொருளைக்கொண்டு பறக்கும் திசை உள்ளிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். எந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும், எங்கே செல்ல வேண்டும் எனும் கட்டளைகளைச் செயலி மூலம் பிறப்பிக்கலாம்.

புதுமைச் சாதனம்

ட்ரோன்களால் பறக்க முடியும், அவற்றை இயக்குவதும் எளிது. எனவே, இவற்றின் கைகளில் பொருட்களைக் கொடுத்து புரோகிராம் செய்தால், குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத் திரும்பி வந்துவிடும் எனும் கருத்து மிகப் பெரிய ஆர்வத்தைக் கிளறிவிட்டது. ஆனால், நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டுவருமா எனும் சந்தேகம் இருந்ததால் பரிசோதனை முறையில் கையாண்டு பார்க்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்று மாக நடைபெற்ற பரிசோதனைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ட்ரோன் டெலிவரி எனும் கருத்தாக்கம் நிலை பெறத் தொடங்கியது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்தான் பரிசோதனை முறையில் முதல் ட்ரோன் டெலிவரி 2013இல் வெற்றிகரமாக அரங்கேறியது. பிளர்ட்டே எனும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம், ஜூக்கல் எனும் புத்தக வாடகை சேவை நிறுவனத்துடன் இணைந்து, இணையம் மூலம் புத்தகம் ஆர்டர் செய்பவர்களுக்கு ட்ரோன் மூலம் அனுப்பிவைத்தது. அதன் பிறகு, இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவுசெய்து கொண்டு, ட்ரோன் சார்ந்த முயற்சிகளில் பெரிய அளவில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு அமேசானை முந்திக்கொண்டு வர்த்தக நோக்கிலான ட்ரோன் டெலிவரி பரிசோதனையில் இந்நிறுவனம் ஈடுபட்டது. இந்தப் பரிசோதனையின்போது மருத்துவப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து உணவகத்தில், மருத்துவ சேவையில் என ட்ரோன்களின் பயன்பாடு கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. சரக்குப் போக்குவரத்து மட்டுமல்ல விவசாயம், அகழாய்வு, பேரிடர் கால மீட்புப் பணிகள், ஏரியல் போட்டோகிராபி என இன்னும் பல துறைகளில் ட்ரோன்களுக்கான வெள்ளோட்டம் தொடங்கியிருக்கிறது.

எச்சரிக்கும் ஆபத்துகள்

இப்படி ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்து வந்தாலும் சவால்களும் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. டெலிவரிக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தும்போது கட்டுப்பாடு, பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கின்றன. ட்ரோன்கள் அந்தரங்க உரிமையை மீறும் ஊடுருவலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. தலைக்கு மேல் பறக்கும் ட்ரோன்கள் ஆபத்தாகவும் அமையலாம். எனவே, ட்ரோன் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு, உரிமம் பெறுதல் போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. உளவு பார்க்கும் நோக்கில் எதிரிகளால் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் எனும் அச்சமும் இருக்கிறது. ட்ரோன் துப்பாக்கி போன்ற வில்லங்க சங்கதிகளும் உலாவர ஆரம்பித்திருக்கின்றன.
இந்தச் சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே, நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாகக் கிடைத்திருக்கும் ட்ரோன்களை மனித குலத்தின் நலனுக்காக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும்.

காற்றிலிருந்து நீர் எடுக்கும் ‘யாழ்’

வறண்ட பாலை நிலங்களில், காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை நீராக்கும் சில தொழில்நுட்பங்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நுண்ணிய கம்பி வலையை, ஒரு சட்டத்தில் மாட்டி, காற்றில் வைத்து விடுவதும் அதில் ஒன்று.

காற்று அந்த வலையின் வழியே செல்லும் காற்றின் ஈரப்பதம், நெருக்கமான கம்பிகளில் சிறுகச் சிறுக சேர்ந்து, நீர் திவலைகளாக மாறும். நீர் திவலை பெரிதாகும்போது, புவியீர்ப்பு விசை கீழ் நோக்கி இழுக்க, திவலைகள் திரண்டு உருண்டு, கீழே உள்ள நீர்க்கலனில் சேகரிக்கப்படும்.

இந்த எளிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறு மாற்றத்தை செய்தால், இன்னும் சிறப்பாக நீரை சேகரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.

கலிபோர்னிய கடற்கரை பகுதியில், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் செகோயா மரங்களைப் பார்த்து, இக்கண்டு பிடிப்பை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கம்பி வலையில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கம்பிகளில், குறுக்காக செல்லும் கம்பி களை நீக்கி, நெடுக்காக இருக்கும் கம்பிகளை, மேலும் நெருக்கமாக வைத்த போது, நீர் வேகமாக கீழே ஓடி சேகரமானது.

இந்த புதிய முறை, ‘யாழ்’ எனப்படும் பண்டைய இசைக் கருவியைப் போல இருக்கிறது.

ஆய்வகத்தில், யாழ் கம்பி சட்டத்தை வைத்து சோதித்ததில், நீர் கூடுதலாக, விரைவாக காற்றிலிருந்து சேகரிக்க முடிந்த தாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பாலை நிலப் பகுதிகளில், இந்த தொழில்நுட்பத்தை சோதிக்க இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

காற்றை சுத்தம் செய்யும் டயர்!

நகர்ப்புற காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை வாகனங்களே. அதே வாகனங்களால், காற்று மாசு பாட்டை குறைக்க உதவ முடிந்தால் எப்படி இருக்கும்?

ஜெனீவாவில் அண்மையில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், டயர் தயாரிப்பாளரான, ‘குட்இயர்’ ஒரு புதுமையை அறிமுகப்படுத்தியது.

‘ஆக்சிஜன்’ என்ற புதுமையான அந்த சக்கரத்தின் சுவர்களில், பாசிகள் வளர்கின்றன.

டயர் தரையை தொடும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இடைவெளிகள் வழியாக, ஈரப்பதம் டயருக்குள் வர, அதை வைத்து பாசி வளர்கிறது.

இந்தப் பாசி, காற்றிலுள்ள, கார்பன் - டை - ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடும்.

மேலும், அது பச்சையம் தயாரிக்கும் போது நிகழும் வேதி வினை மூலம், சிறிதளவு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.

பாரிஸ் போன்ற நகரில் ஓடும் எல்லா வாகனங்களும், ஆக்சிஜன் டயர்களை மாட்டியபடி ஓடினால், ஆண்டுக்கு, 4,000 டன் அளவுக்கு, பாரிசின் காற்றிலுள்ள கரியமில வாயுவை, மறுசுழற்சி செய்ய முடியும் என்கிறது குட்இயர்.

ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிதளவு மின்சாரம், வாகனத்தில் உள்ள உணரிகள், சில விளக்குகள், தகவல் அறிவிக்கும் மின் பலகை போன்றவற்றை இயக்கவும், பயன்படுத்தவும் முடியும்.

இப்போதைக்கு, வெகு சில ஆக்சிஜன் டயர்களை மட்டுமே, குட்இயர் தயாரித்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, அது சந்தைக்கு வரும். சாலையில் ஓடும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner