எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாட்டுக் கறி என்றாலே சர்ச்சைதான். சில ஆண்டு களாக, மாட்டிறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கும் சோதனைகள் வெற்றி கண்டுள்ளன. அத்தகைய ஆய்வக இறைச்சிக்கும், அசல் மாட்டிறைச்சிக்கும் சுவையில் அதிக வித்தியாசம் இல்லை. எனவே, விரைவில் அத்தகைய இறைச்சியை பெருமளவில் தயாரிக்கும் முயற்சி, அமெரிக்காவில் துவங்கியிருக்கிறது.

உடனே அந்நாட்டின் கால்நடை வளர்ப்போர் சங்கம், போர்க்கொடியை உயர்த்தியிருக்கிறது. பண்ணை அல்லது புல்வெளிகளில் மேய்த்து வளர்த்து, வெட்டி விற்கப்படும் இறைச்சிதான் மாட்டிறைச்சி என்பது அவர்கள் வாதம். எனவே, ‘பீப்’ எனப்படும் ‘மாட்டுக் கறி’ மற்றும், ‘மீட்’ எனப்படும், ‘இறைச்சி’ ஆகிய இரு சொற்களையும், ஆய்வுக்கூட இறைச்சியை தயாரித்து விற்பனைக்கு விடவிருக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தவே கூடாது என, கால்நடை சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.

‘மெம்பிஸ் மீட்ஸ்’ என்ற ஆய்வக இறைச்சி நிறுவனம், 2021இல் தங்கள் ஆய்வக மாட்டுக்கறி விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், ‘ஜஸ்ட்’ என்ற இன்னொரு ஆய்வகக் கறி நிறுவனம், 2018 டிசம்பருக்குள் தங்கள் மாட்டு செல்லில் விளைந்த மாட்டுக்கறியை, பெட்டிகளில் அடைத்து விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தோற்றத்திலும், சுவையிலும் இயற்கை மாட்டுக் கறியைப் போலவே ஆய்வகத்தில் வளர்ந்த கறி இருப்பதோடு, மேய்சலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் தங்கள் கறியால் ஏற்படாது என, அந்நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்கின்றன.

முக்கியமாக, இனி ஒரு மாட்டையும் இறைச்சிக்காக கொல்லவேண்டியிருக்காது என்றும் அவை தெரிவித்துள்ளன. பல சமையல் கலை பிரபலங்களிடம் தந்து சமைக்கச் சொல்லி, ‘ஆஹா, பேஷ், பேஷ்’ என்று பாராட்டுக்களையும் வாங்கியிருக்கின்றன மெம்பிஸ் மற்றும் ஜஸ்ட் போன்ற நிறுவனங்கள்.

வண்ணங்களை பிரதிபலிக்கும் பாக்டீரியா

காலனி, காலனியாக உயிர்களின் உடலில் குடியேறி, நோய்களை பரப்பி, கொல்பவைதான் பாக்டீரியா என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதே பாக்டீரியாவின் மரபணுக்களை திருத்தினால், நமக்கு பயனுள்ள வேலைகளையும் அவை செய்யும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், ஹோகோமைன் பி.வி., என்ற நிறுவனமும் இணைந்து, வண்ணங்களையும், சாயங்களையும் தயாரிக்க உதவும் பாக்டீரியாவை படைத்திருக்கின்றனர்.

‘பிளாவோ பாக்டீரியா’ என்ற ஒரு வகை பாக்டீரியாக்கள் வண்ணங்களை உமிழ்பவை. அவை குறிப்பிட்ட நிறமிகளை சுரப்பவை அல்ல. அவற்றின் உடலமைப்பு, ஒளியை பிரதிபலிக்கும்போது, நுண்ணோக்கி வழியே பார்க்கும் மனித கண்களுக்கு, குறிப்பிட்ட நிறங்களில் தெரிகின்றன என்பதை விஞ்ஞானி கள் கண்டறிந்தனர்.

மயிலின் தோகை, பட்டாம்பூச்சியின் இறக்கை போன்றவற்றிலும் இதே போன்ற ஒளிப் பிரதிபலிப்புதான் நம் கண்களுக்கு வண்ணங்களை காட்டுகின்றன. எனவே, அடுத்த கட்ட ஆராய்ச்சியில், பாக்டீரியாக்களின் மரபணுவில் மாற்றங்களை செய்து, குறிப்பிட்ட வண்ணங்களை, வண்ணக் கலவைகளை, அல்லது வண்ணமே இல்லாத வகையிலும் பாக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

சில ஆண்டுகளில் நச்சுத் தன்மை இல்லாத, இயற்கையான வண்ணப் பூச்சுக்களை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள்.
பலப்படுத்தப்படும் உலக விதைக் காப்பகம்!

இயற்கைப் பேரிடராலோ அல்லது மனிதர்களின் அழிவுச் செயலாலோ உணவுப் பயிர்கள் பூண்டோடு அழிந்துபோனால் என்ன செய்வது? அப்படி அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிலிருந்து தப்பிக்கத் தான், ‘ஸ்வால்பார்டு உலக விதைக் காப்பகம்‘, 2008ல் உருவாக்கப்பட்டது.

நார்வேயிற்கும், வட துருவத்திற்கும் இடைப் பட்ட ஒரு பகுதியில் அந்த விதைக் காப்பகம் கட்டப்பட்டு, அதில் உலக நாடுகளிடமிருந்து சேமிக்கப்பட்ட 8.90 லட்சம் வகை பயிர்கள், தாவரங்களின் விதைகள் பத்திரப்படுத்தப் பட்டுள் ளன. ஆனால் பாருங்கள், கடந்த ஆண்டு நார் வேயின் உறைபனிப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பனி உருக ஆரம்பித்தது. இதனால், பூமிக்கடியில் சுரங்கம் போலக் கட்டப்பட்டுள்ள விதைக் காப்பகத்தின் ஒரு பகுதிக்குள் நீர் புகுந்துவிட்டது.

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால், சுரங்கக் கட்டடத்தை புதுப்பிக்கவும், மாற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நார்வே அரசு, 83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உடனடியாக வேலையை துவங்கி,விட்டது.

சுவர்களை பலப்படுத்துவது, காப்பகத்தினுள், விதைகள் கெட்டுப்போகாமல் இருக்க, தட்ப வெப்பத்தை சீராக வைப்பது, மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்படி செய்வது ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தத்தால் பயிர்கள் நாசமானதால், ஸ்வால்பார்டிடம் கொடுத்து வைத்திருந்த விதைகளை வாங்கிச் சென்றது. பிறகு, 2015இல் எடுத்த விளைச்சலில் கிடைத்த விதைகளை மீண்டும் ஸ்வால்பார்டிடமே ‘டிபாசிட்’ செய்தது. எதிர்கால உலக உணவு வினியோகத்தில், ஸ்வால்பார்டுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும்.

குளு குளு தலைக்கவசம்!

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், அதை மீறுபவர்கள்தான் அதிகம். ஹெல்மெட் அணிவதால் தலையில் ஏற்படும் கடும் புழுக்கமே இதற்கு காரணம்.

அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினரிடம் வாகன ஓட்டிகள் இதைக் கூற முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தலையை குளு குளுவென வைத்துக் கொள்ளவும், வியர்க் காமல் தவிர்க் கவும் “ஏசி’ தலைகவசத்தை அய்தராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கவுஸ்துப் கவுன்டின்யா, சிறீகாந்த் கொமுல்லா, ஆனந்த் குமார் ஆகி யோர் தயாரித்துள்ளனர்.

கல்லூரியில் பயில தினந்தோறும் 60 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று வந்த போதுதான் ஏசி தலைக்கவசத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், 2016-இல் படிப்பை முடித்தவுடன் ஏசி தலைக் கவசத்துக்கான ஆய்வுகளில் இறங்கி விட்ட தாகவும் கவுஸ்துப் தெரிவித்தார்.

முதல்கட்டமாக, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஏசி ஹெல்மெட்டுகளை இவர்கள் தயாரித்து வெற்றி கண்டுள்ளனர்.

2 மணி நேரம் பேட்டரி சேமிப்புத் திறன் கொண்ட தொழிற்சாலை ஏசி ஹெல்மெட்டை ரூ. 5,000 விலையிலும், 8-மணி நேரம் பேட்டரி திறன் கொண்ட ஏசி தலைக் கவசத்தை ரூ. 5,500 விலையிலும் இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சாதாரண தலைக்கவசங்களை விட 250 கிராம் கூடுதல் எடை கொண்ட இந்த குளு  குளு தொழிற்சாலை ஏசி தலைகவசங்களை மொபைல் போன் பேட்டரிகளைச் சார்ஜ் செய்து போல சார்ஜ் கொள்ளலாம்.

இந்திய கடற்படை கப்பல்களில் அடித் தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், டாட்டா மோட்டார் நிறுவனம் தனது தொழிற் சாலையில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கும் இந்த தலைக்கவசங்களை வாங்க முன்வந்துள்ளன.

மாதம்தோறும் 1000 ஏசி தலைக்கவசங் களைத் தயாரிக்கும் வகையில், தொழிற்சாலை அமைக்க இந்த இளைஞர்களுக்கு தெலங் கானா அரசும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஏசி தலைக்கவசங்களை உருவாக்கும் பணியில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் சந்தைகளிலேயே கிடைக்கும் 85 சதவீத பொருள்களைக் கொண்டே இவர்கள் ஏசி தலைக்கவசங்களை தயாரிக்கின்றனர் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner