எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா இருப்பது, துபாயில் தான். அங்குள்ள, ‘முகமது பின் ரசீத் அல் மக்தோவும் சூரிய பூங்கா’வின் மின் உற்பத்தித் திறன், 2030 வாக்கில் 5,000 மெகாவாட்டாக உயர்த்த, துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்கென, சமீபத்தில், 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கூட்டவும், 853 அடி உயர, சூரிய ஒளி வாங்கி கோபுரத்தை கட்டவும், துபாய் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கெனவே அங்கு 23 லட்சம் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய திட்டத்தின்படி சூரிய ஒளியை குவியங்கள் (லென்சுகள்) மூலம் பிரதிபலித்து, ஒரு கோபுரத்தின் மீது குவியப்படுத்த உள்ளனர். கோபுரத்தில் படும் அதிக வெப்பத்தைக் கொண்டு ஒரு திரவத்தை ஆவியாக்குவர். அந்த ஆவியின் உந்து விசையில் டர்பன்களை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்வர். வரும் ஆண்டுகளில், மின் உற்பத்திக்கு பெட்ரோலிய பொருட்களின் பயனை வெகுவாகக் குறைக்க துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த சூரிய மின் ஒளி தொழில்நுட்ப முயற்சிகள் வெகுவாக உதவும்.

கட்டுப்படும் காகித விமானம்!

காகிதத்தில் விமானம் செய்து காற்றில் வீசுவது எல்லா சிறு வயதினருக்கும் பிடித்த விளையாட்டு. ஆனால், கையைவிட்டு கிளம்பியதும் விமானம் சிறுவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. விடுவித்த வேகம், வீசும் காற்றைப் பொறுத்து காகித விமானம் தரையைத் தொடலாம் அல்லது சில வினாடிகள் பறந்து மெல்லத் தரையிறங்கலாம்.

இந்த காகித விமானத்திற்குள் ஒரு சிறிய இயந்திரத்தை பொருத்தி, அதை கட்டுப்படுத்தும் திறனை சிறுவர்களுக்குத் தந்தால்? அதைத்தான் செய்திருக்கிறது, ‘பவர் அப் டார்ட்.’

லித்தியம்-பாலிமர் மின்கலன், ஒரு மின் விசிறி மற்றும் மோட் டாரைக் கொண்ட பவர் அப் டார்ட்டை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

எனவே, காகித விமானத்தை சிறுவர்கள் தங்கள் விருப்பப்படி வெகு நேரம் காற்றில் பறக்கவிட முடியும். தவிர சிறிய கேமரா ஒன்றும் இந்த விமானத்தில் பொருத்த முடியும்!


மின்சார ‘மினி’ பம்பு!

உலகெங்கும் இருக்கும் மிதிவண்டி பிரியர்களுக்கு, சக்கரத்தில் காற்று குறைந்து விட்டால், பெரிய தலைவலி தான். கை பம்பு அல்லது காற்றடைத்த டப்பா போன்றவற்றுடன் அலைய முடியாது.

இதற்கு தீர்வாக, கையடக்க பம்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது, ‘பும்பா’ என்ற இந்த பம்பு, மின்சாரத்தால் இயங்குகிறது. இதன் எடை வெறும், 190 கிராம் தான். ஒரு மணி நேரம் மின்னேற்றம் செய்து வைத்துக்கொண்டால் போதும். இரண்டு மிதிவண்டி சக்கரங்களுக்கும், போதிய காற்றழுத்தத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு சக்கரத்திற்கு 50 நொடிகளில் காற்றை அடித்துத் தந்துவிடும் திறன் கொண்டது இந்த மினி பம்ப்.

மேலும், வீட்டில் வைத்து காற்றடித்துக்கொள்வதற்காக, சற்றே பெரிய பம்பையும் வெளியிட்டிருக்கிறது பும்பா. அண்மையில், அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடந்த, ‘இன்டெர்பைக்‘ கண்காட்சியில் இந்த புதுமையான பம்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

காலணி தைக்கும் ரோபோ!

 

டோக்கியோவில், காலணி தைக்கும் ரோபோ ஒன்றை, ‘யுனீக்’ காலணி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

‘உலகின் மிகச் சிறிய காலணி தொழிற்சாலை’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ரோபோ, 15 அடிக்கு 5 அடி இடத்திற்குள் அடங்கிவிடுகிறது.

இரண்டு ரோபோ கரங்கள், ஒரு இணை காலணிகளை ஆறு நிமிடத்திற்குள் தைத்துத் தருகின்றன. வாடிக்கையாளர் கால் அளவு களை எடுத்துத் தந்ததும், காலணிக்கான பொருட்களை எடுத்து, நூலைக் கோர்த்து, தைத்து தருகிறது யுனீக் ரோபோ.

ஆனால், காலணியின் இறுதி வடிவத்தை, ஒரு காலணி வடிவமைப்பாளர்தான் சரிபார்த்து, திருத்தித் தருகிறார். இந்த ரோபோ கரங்களை காலணி தயாரிக்கும் விதத்தில் உருவாக்க ஆறு ஆண்டுகள் பிடித்ததாக யுனீக் காலணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரபல காலணி தயாரிப்பாளர்கள், இனி புதிய காலணிகளை வடிவமைத்து, அதற்கான மென்பொருளை மட்டும் தங்கள் கிளை களுக்கு அனுப்பினால் போதும். கிளைக் கடைகளில் உள்ள ரோபோ, அங்கு வரும் வாடிக்கையாளரின் அளவுகளை எடுத்து ஆறு நிமிடங்களில் தைத்துத் தந்துவிடும்!

உறைந்த பனியிலும் பிளாஸ்டிக் குப்பை!


ஆர்டிக் கடல் பகுதியின் உறைந்த பனிப்பாறைகள் தற் போது  உருக ஆரம்பித்துள்ளன.

இதனால் அங்கே இதுவரை மனிதன் செல்ல முடியாத பகுதி களுக்கு செல்லும் வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.

அப்படி அங்கு சென்ற பிரிட்டனின் எக்செட்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிட்டிருந்தன.

உருகும் பனிப் பாறை பகுதிகளில் பிற கடல் நீர் வந்து சேர்வதால், அதன் வழியே கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளும் வர ஆரம்பித்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


வெகுதூரம் செல்லும் மின் பேருந்து

மின்சார பேருந்துகள், பல நாடுகளில் சத்தமில்லாமல் அறிமுகமாகி வருகின்றன. அடிக்கடி மின்னேற்றம் செய்யவேண்டும் என்பதால் மின்சார பேருந்துகளால் வெகு தூரம் பயணிக்க முடியாது என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது.

இதை முறியடிக்க, ‘புரோடெரா’ என்ற மின் பேருந்து தயாரிப்பு நிறுவனம், அண்மையில், ‘கேட் டலிஸ்ட் இ2’ என்ற மின் பேருந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இது ஒரு முறை மின்னேற்றம் செய்ததும், 1,772 கி.மீ., தூரம் பயணித்து சாதனை படைத்திருக்கிறது. இத்தனைக்கும் கேட்டலிஸ்ட் இ2 ஒன்றும் குட்டி பேருந்து அல்ல.

12 மீட்டர் நீளம் கொண்ட பெரிய பேருந்து. டீசல், பெட்ரோல் பேருந்துகளின் யுகம், முடிவுக்கு வந்து விட்டது என்றும், இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்றும், அமெரிக்காவைச் சேர்ந்த புரோடெரா நிறுவனம் ஊடகங்களிடம் முழக் கமிடுகிறது.

அதுமட்டுமல்ல; கேட்டலிஸ்ட் இ2 வாகனத்திற்கு தானோட்டி தொழில்நுட்பத்தையும் கொண்டு வர ஆராய்ச்சி நடப்பதாகவும், அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, ஓட்டுநர் இல்லாமல் ஆயிரம், கி.மீ., தூரம் ஓட்டிச் செல்லும் தொழில்நுட்பம்!  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner