எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூக்கக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை தருவதற்கு முன், 'ஸ்லீப் லேப்' எனப்படும் தூக்க ஆய்வுக்கூடத்தில் நோயாளியை தூக்க வைத்து மருத்துவர்கள் பரிசோதிப்பர்.

ஆனால், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தலை, நெஞ்சு என்று பல இடங்களில் உணர்வான்களைப் பொருத்திய பிறகு, இயல்பாகத் தூக்குவதற்கு சிரமப்படுவர். தவிர, தூக்க ஆய்வுக்கு இரண்டு, மூன்று முறையாவது போய் வரவேண்டும்.
இந்த அவஸ்தைகளைத் தடுக்க, அமெரிக்காவிலுள்ள எம்.அய்.டி., கல்வி நிலையத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட விஞ்ஞானிகள், ஒரு எளிய கருவியை உருவாக்கியுள்ளனர்.

ரேடியோ அலைவரிசை ஒன்றை, படுத்திருக்கும் நோயாளி மீது படச் செய்து, அவரிடமிருந்து எதிரொலித்து வரும் அலைவரிசையை அலசுவதன் மூலம், நோயாளியின் தூக்கம் எப்படி, அவரது இதயத் துடிப்பு என்ன என்பது போன்ற பல தகவல்களை அக்கருவி கணித்து பதிவு செய்து விடுகிறது.

வீடுகளில் இப்போது இருக்கும், 'வைபை' கருவியைப் போலவே இதை வீட்டிலேயே வைத்திருக்கலாம். தூக்க நோயாளியை இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணித்து, மருத்துவருக்கு வேண்டிய தகவல்களை பதிவு செய்ய முடியும்.

இந்த தகவல்களை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அலசி, அறையில் உள்ள இதர மின்னணு கருவிகள் அனுப்பும் ரேடியோ அலைவரிசைகளை கழித்துக் கட்டி, நோயாளியிடமிருந்து, அவரது தூக்கம் தொடர்பாக வந்த அலைவரிசைகளை மட்டும் பிரித்துக் கொடுக்கிறது. இதனால், இக்கருவியின் தகவல்கள், 80 சதவீத துல்லியத்துடன் இருப்பதாக எம்.அய்.டி.,யின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்கமின்மை, குறட்டை போன்றவற்றால் உலகெங்கும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கருவி சந்தைக்கு வந்தால், நிச்சயம் பலருக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner