எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெண் என்ற ஒரே காரணத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டவர் மரியா சிபில்லா மெரியன். பரிணாம வளர்ச்சி தொடர்பான கருத்துகளை சார்லஸ் டார்வின் முன்வைப்பதற்கு முன்பே, அது குறித்துத் தன் ஓவியங்கள் மூலம் பேசியவர் மரியா. வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத காலத்திலேயே பூச்சிகளைப் பற்றி நிறைய விஷயங்களை ஆராய்ந்தார்.

1647 ஏப்ரல் 2 அன்று, ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் பிறந்தார் மரியா சிபில்லா மெரியன். இவருடைய தந்தை மத்தேயோஸ், புத்தகப் பதிப்பாளர். அதிலும் பூக்கள், தாவரங்கள், உயிரினங்கள் ஆகியவற்றின் ஓவியங்களைக் கொண்ட ஓவியப் புத்தகங்களைப் பதிப்பிப்பவராக இருந்தார். சிறு வயதிலிருந்தே அந்தப் புத்தகங் களைப் பார்த்துவந்த மரியாவுக்கு, ஓவியங்கள் மீது ஈடுபாடு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. மரியாவுக்கு ஓவியத்திலிருந்த ஈடு பாட்டைப் பார்த்து ஜேக்கப், ஓவியத்தின் நெளிவு சுளிவுகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் பூக்களையும், தாவரங்களையும் வரைந்துவந்த மரியா, ஒரு நாள் பட்டுப்பூச்சி ஒன்றை யதேச்சையாகப் பார்த்தார். அதன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார். அது எவ்வாறு நகர்கிறது, எப்படி உண்கிறது என்பதையெல்லாம் கவனித்து அதை வரையத் தொடங்கினார். அன்றிலிருந்து பூச்சிகள், புழுக்களை வரைவதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இப்படி அவர் பூச்சிகளும் ஓவியமுமாக வளர்ந்துவந்த காலத்தில், தனது 18-ஆம் வயதில் சக ஓவியரான ஜோஹன் ஆண்ட்ரியாஸ் கிராஃப் என்பவரை மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்  - மனைவி விவாகரத்துப் பெற்றனர். மரியா, தன் மகள்களுடன் நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்றார். அங்கு தனது ஓவியங்களை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

மரியாவுக்குப் பூச்சிகள் மீதிருந்த ஆர்வம் அலாதியானது. எந்தளவுக்கு என்றால், பூச்சிகளைப் பிடித்து வளர்க்கும் அளவுக்கு! ஆம் பட்டுப்பூச்சி, கம்பளிப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சி வகைகளை உயிருடன் சேகரித்தார். அவை முட்டையிடுவதை, முட்டையிலிருந்து வெளிவருவதை, முழுமையாக வளர்ந்த பூச்சியாக மாறுவதுவரை, அந்த உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியை ஒவ்வொரு கட்டமாக ஓவியமாக வரைந்து தள்ளினார்.

பரிணாமவியலின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி குறித்த சிந்தனைகளை முன்வைப்பதற்கு முன்பே, பூச்சிகள் எப்படி வளர்கின்றன என்பதை ஓவியமாக வரைந்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியை உலகுக்குக் காட்டினார் மரியா. இதனால், பரிணாமவியல் கருத்தின் முன்னவராக ஏராக மரியா இருப்பதோடு, பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த முன்னோடிப் பூச்சியியலாளராகவும் அறியப்படுகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்த ஆம்ஸ்டர்டாம் நகர நிர்வாகம், அவருக்கு நிதியுதவி அளித்து, தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சுரிநாம் நாட்டுக்குப் பூச்சிகளைப் பற்றி ஆய்வு செய்ய அனுப்பிவைத்தது. இதுவே அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது. காரணம், அன்றைக்கு அதுபோன்ற நிதியுதவி ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்ததுதான்.

தனது 52-ஆம் வயதில் சுரிநாமுக்குச் சென்ற மரியா அங்கிருந்த பூச்சிகள், தவளைகள், பாம்புகள் உள்ளிட்ட பலவற்றை ஓவியமாக வரைந்தார். அப்போது மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாம் திரும்பினார். அங்கு திரும்பவும் தன் ஓவியங்களை விற்று வாழ்க்கை நடத்தினார். அதன்மூலம் வந்த வருவாயைக்கொண்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுரிநாமில் அவர் வரைந்த ஓவியங்களைத் தன் கண்டுபிடிப்புகளோடு மெட்டமார்ஃபசிஸ் இன்ஸெக் டோரம் சுரிநாமென்ஸியம் எனும் புத்தகமாக வெளி யிட்டார். 1705-ஆம் ஆண்டு வெளியான அந்தப் புத்தகம் அய்ரோப்பா கண்டத்தை உலுக்கியது. அதுவரை மண்ணிலிருந்து பூச்சிகள் நேரடியாகத் தோன்றுகின்றன என்ற கருத்து, மரியாவின் பரிணாம வளர்ச்சிக் கருத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல ஒரு சிலந்தி, ஹம்மிங் பறவையைச் சாப் பிடுவதுபோல அவர் வரைந்திருந்தார். அதைப் பார்த்த விஞ்ஞானிகள் சிலர், சிலந்தியாவது பறவையைச் சாப்பிடுவதாவது என்று கேலி பேசினர். ஆனால், அது உண்மை என்பதை டார்வினின் நண்ப ரான ஹென்றி வால்டர் பேட்ஸ் பின்னாளில் நிரூபித்தார்.

இவ்வாறு, அறிவியலைக் கலைக்கண் கொண்டு பார்த்த மரியா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி, 1717 ஜனவரி 13ஆம் தேதி அன்று மறைந்தார். இந்த ஆண்டுடன் அவர் இறந்து 300 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவரைப் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் நவீன வசதிகள் பெருகிவிட்ட இன்றைக்கும்கூடப் பலருக்கும் தெரிய வில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner