எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூரிய கதிர்வீச்சை வடிகட்டும், ‘ஓசோன்’ வாயுப் படலத்தில் பெரிய ஓட்டை விழ, பலவித வாயுக்கள் காரணமா கின்றன. ஆனால், காபி, தேநீர் ஆகியவற்றை பதப்படுத்த பயன்படும், ‘டைக்ளோரோ மீத்தேன்’ என்ற வேதிப் பொருளும், ஓசோன் படலத்தை பதம் பார்ப்பதாக, பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். உணவுத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும், டைக்ளோரோ மீத்தேன் வெளியேற்றத்தால், அண்டார்டிக் காவின் மேல் வளிமண்டலத்தில், 30 ஆண்டுகளில் நிரப்ப முடியாத அளவுக்கு, ஓசோன் சேதாரமடைந்து உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மான்ட்ரியேல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள, ஓசோனுக்கு எதிரான வேதியல் மாசுக்கள் பட்டியலில், டைக்ளோரோ மீத்தேன் இல்லை என்பது தான், அதிர்ச்சிகரமான விஷயம்.

திறன் மிக்க சூரிய ஒளி பலகை!


வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மாத்யூ லம்ப், உலகின் அதி திறன் வாய்ந்த சூரிய ஒளிப் பலகையை உருவாக்கிஉள்ளார்.
சூரிய ஒளியை அதிக பட்சம் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றும் திறனில் இன்றைய உலக சாதனை 25 சதவீதம் தான். அதாவது, சூரிய ஒளியின் சக்தியில், 75 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள சூரிய ஒளிப் பலகை, சூரிய ஒளியின் திறனை, 44.5 சதவீதம் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை தயாரிக்கிறது.

வழக்கமான சூரிய ஒளிப் பலகைகள் சூரிய ஒளிக் கற்றையில், நீள அலைவரிசை கொண்டவற்றை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள பல அடுக்குகளைக் கொண்ட சூரிய ஒளிப் பலகை, காலியம் ஆன்டிமோனைடு என்ற வேதிப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், இப்பலகையின் மேற்பரப்பில் மிக நுண்ணிய குவி ஆடிகள் பதிக்கப்பட்டிருப்பதால், அதிக அடர்த்தியுள்ள சூரிய ஒளிக் கதிர்கள், கீழே உள்ள சூரிய ஒளி வாங்கிகளைச் சென்றடைகிறது.

இதனால், அதிக அளவு மின்சாரத்தை இப்பலகைகள் உற்பத்தி செய்ய முடிகிறது.இந்தியா உட்பட பல நாடுகள் சூரிய சக்திக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்திருப்பதால், இத்தொழில்நுட்பம் விரைவில் உலகெங்கும் பரவிருக்கிறது.

உப்பிலிருந்து மின்சாரம்!

உப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில் நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது, 'மால்ட்டா!' இது, கூகுளின் பரிசோதனை நிறுவனங்களுள் ஒன்று.கூகுளின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்' பல ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான், 'கூகுள் எக்ஸ்!' இது, பல தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகிறது. கூகுளின் தானோட்டி கார்கள் முதல், கூகுள் கிளாஸ் வரை பல புதுமைகள் இதே கூகுள் எக்சிலிருந்து வெளிவந்தவை.மால்ட்டாவின் தொழில் நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது. மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் கலனில் சேமிக்கும் பகுதி, குளிர் சக்தியாக மாற்றி ஹைட்ரோகார்பன் கலனில் சேமிக்கும் பகுதி, காற்றிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும், 'டர்பைன்' பகுதி. சேமிக்கப்பட்ட வெப்பம் மற்றும்   டர்பைன் பகுதிக்கு வரும்போது காற்றழுத்தம் உருவாகி டர்பைன் வேகமாக சுழல, மின்சாரம் உற்பத்தியாகிறது.இந்த தொழில்நுட்பம் பல அளவுகளில், உலகின் பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றிலுள்ள ஆபத்துகளை நீக்கி, பாதுகாப்பை அதிகரித்திருப்பதும், விலை குறைவான பொருட்களை பயன்படுத் துவதும், பராமரிப்பு செலவுகளை குறித்திருப்பதும் தான் மால்ட்டாவின் ஆராய்ச்சி செய்திருக்கும் சாதனை.

தவிர, இதை வீட்டுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தும் பல அளவுகளில் கருவிகளை செய்ய முடிகிற வகையில் மால்ட்டா வடிவமைத்திருக்கிறது. இதுவரை ரகசியமான பரிசோதனையாக இருந்த மால்ட்டா, விரைவில், 'சீமன்ஸ், ஜெனரல் எலக்ட்ரிக்' போன்ற மின் உற்பத்தி கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் போட தயாராகியிருப்பதால், ஊடகங்களில் செய்தி கசிந்திருக்கிறது.

மலிவு விலை, மின் கார்!வாகன போக்கு வரத்தில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பெரும் புரட்சி என்று,   வல்லுநர்கள் சொல்கின்றனர். அமெரிக்காவிலுள்ள, 'டெஸ்லா' மின்சாரக் கார் நிறுவனம், மலிவு விலை காரான, 'மாடல் 3'யை அண்மையில், முதல், 30 பேருக்கு அளித்துள்ளது. கடந்த ஆண்டே, உலகெங்கிலுமிருந்து, அய்ந்து லட்சம் பேருக்கு மேல், டெஸ்லா இணையதளம் மூலம், 64 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, மாடல் 3க்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்தும் சில ஆயிரம் பேர், 22.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த காருக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆடம்பர கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெஸ்லா மின்சார கார்களை விற்று வந்தது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பெட்ரோலிய வாகனங்களை முற்றிலும் சாலையிலிருந்து அகற்ற, சூளுரைத்திருக்கும் டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், மின் வாகனங்களே இனி எதிர்காலம் என்றும், அதை சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தார்; அதன்படியே இப்போது செய்திருக்கிறார். வீட்டிலேயே, சூரிய மின்சாரத்தை சேமிக்கும், 'பவர் பேக்' மின்கலன், வீட்டுக் கூரையில் படும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் நவீன ஓடுகள் என, மின் வாகனத்திற்குத் தேவையான சகலத் தையும் எலான் மஸ்கின் நிறுவனங்களே செய்து விற்க ஆரம்பித்திருப்பதால், நிச்சயம் மின்சார கார்கள் அடுத்த, 15 ஆண்டுகளில் சகஜமாகிவிடும் என்கின்றனர் வல்லுநர்கள். மாடல் 3 காரில் பல நவீன தொழில்நுட்பங்களை டெஸ்லா அறிமுகப்படுத்தி இருக்கிறது. உதாரணத்திற்கு, காருக்குள் ஒரு, 'அதி திறன் கணினி' இருக்கிறது. அதற்கான மென்பொருளின் புதிய பதிப்புகளை இணைய இணைப்புகளின் மூலம் டெஸ்லாவின் மென்பொருள் பிரிவு தானாகவே அனுப்பி புதுப்பித்துவிடும். இணையத்தில் வாகன விமர்சன இதழ்களின் கணக்குப்படி மாடல் 3ஐ முழுவதும் மின்னேற்றம் செய்ய, 5.30 மணி நேரம் ஆகும். முழு மின்னேற்றம் செய்ய இந்திய கணக்குப் படி, 350 முதல், 400 ரூபாய் வரை ஆகலாம். மாடல் 3 ஒரு மின்னேற்றத்தில், 354 கி.மீ., துரம் வரை போகும்; அதிகபட்ச வேகம் மணிக்கு, 225 கிலோ மீட்டர்! 'ஒரு கார் கம்பெனி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும், ஒரு தொழில்நுட்ப கம்பெனி கார் தயாரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்' என்று புகழ்கிறார், ஒரு அமெரிக்க போக்குவரத்து துறை வல்லுநர்.


குழந்தை நீரிழிவுக்கு - தடுப்பூசி

நீரிழிவு நோய் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இதில், 'டைப் 1' ரக நீரிழிவு நோய் சில வைரஸ் தொற்றினால் வரக்கூடும் என பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வைரஸ்களைப் பற்றி கடந்த, 25 ஆண்டுகளாக செய்த ஆய்வுக்குப் பிறகு, அவற்றைத் தடுக்கும் ஊசி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவை விட குறைவாகவே வருகிறது என்றாலும், வைரஸ் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு ஆரம்பித்து விடுவது கொடுமையானது. உலகெங்கும் ஆண்டுக்கு, 80 ஆயிரம் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு உண்டாகிறது. குறிப்பிட்ட சில வைரஸ்கள், உடலில் இன்சுலினை சுரக்கும் கணையத்தை தாக்குகின்றன. இதனால்தான் டைப் 1 நீரிழிவு குறைபாடு உண்டாகிறது. எனவே, அதை உருவாக்கும் வைரசுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் டைப் 1 நீரிழிவை வெற்றிகரமாக தடுக்க முடியும் என பின்லாந்திலுள்ள டேம்பர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். விலங்குச் சோதனைகளில் வெற்றி கிடைத்திருப்பதையடுத்து, 2018இல் மனிதர்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனைகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் வெற்றி கிடைத்தால், டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாவதை தடுக்க முடியும்.

புற்றுநோயைத் தடுக்குமா குங்குமப் பூ?
ஆசிய நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் குங்குமப் பூ துகள்கள் புற்று நோயை தடுக்கக்கூடும் என இத்தாலிய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குங்குமப் பூவிலுள்ள பல வேதிப் பொருட்களுள் ஒன்றான, 'குரோசெட்டின்' என்பதும் ஒன்று. அதை செயற்கையாக உருவாக்கி, ஆய்வுக்கூடத்தில் சோதித்தபோது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை அவை தடுத்தன. ஆனால், ஆரோக்கியமான மனித செல்களின் வளர்ச்சியை குரோசெட்டின் தடுக்கவில்லை. எனவே, புற்று நோயை, குறிப்பாக கர்ப்பப் பை புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றை மட்டுப்படுத்த குங்குமப் பூ உதவக்கூடும் என இத்தாலிய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அடுத்து புற்று நோயாளிகளுக்கு குரோசெட்டினைத் தந்து பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner