எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆளில்லாமல் பறக்கும், ‘ட்ரோன்’களை முதலில் பயன்படுத்த ஆரம்பித்திருப்போர், கடத்தல்காரர்கள், உளவு பார்ப்போர், குறும்புக்காரர்கள் போன்றோர் தான். இவர்களை தடுக்க, பலவித கருவிகளை உருவாக்கியிருக்கிறது, ‘ட்ரோன் ஷீல்டு’ நிறுவனம்.

துப்பாக்கி வடிவிலான, ‘ட்ரோன் கன்’ தொந்தரவு தரும் ட்ரோனை நோக்கி, ரேடியோ அலைகளை செலுத்துகிறது. இதனால், ரேடியோ அலை ஆணை மூலம் இயங்கும் ட்ரோன், குழப்பமடைந்து திரும்பிச் செல்லும் அல்லது தரையி றங்கிவிடும்.

‘ட்ரோன் சென்டினல், ட்ரோன் சென்ட்ரி’ ஆகிய இரண்டும், காவல் தூண் வடிவிலிருக்கும் அமைப்புகள். இவற்றை நிரந்தரமாகவும் நிறுவலாம் அல்லது தற்காலிகமாகவும் நட்டு வைக்கலாம்.

ரேடார், வானொலி அலை, வெப்பம், ஒலி, ஒளி ஆகியவற்றை கண்டறியும் உணரிகள் போன்ற வசதிகளை கொண்ட இவை, அத்துமீறும் ட்ரோன்களை அடையாளம் கண்டதும், அது பதிவு செய்யப்பட்டதா என, தகவல் களஞ்சியத்தில் தேடி பார்த்து, உரிமையாளருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை வினாடியில் அனுப்புகின்றன.

அப்போதும் திரும்பிச் செல்லாவிட்டால், வலுவான ரேடியோ அலைகளை அனுப்பி, அந்த ட்ரோனை குழப்பி, தரையிறங்கவோ திரும்பிச் செல்லவோ செய்கின்றன. 2 கி.மீ., துரம் வரை, இந்த வேலையை இரு அமைப்புகளும் செய்ய முடியும். சிறை சாலைகள், நாட்டின் தலைவர்களின் பாதுகாப்பு பிரிவுகள், சிவில் மற்றும் ராணுவ விமான நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து, விற்பனை செய்கிறது, ட்ரோன் ஷீல்டு.