எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மிதமிஞ்சிய போக்குவரத்து இரைச்சலுக்கும், இதய நோய் வருவதற்கும் தொடர்பிருப்பதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள், நார்வே மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த, 1.44 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தினர். அதிக போக்குவரத்து இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் சோதித்தனர். அதில் பலருக்கு இரைச்சலால் ஏற்படும் நாள்பட்ட மனச்சோர்வு போன்ற காரணங்களால், ரத்தத்தில், இதயநோய் பாதிப்பைக் காட்டும் புரதங்கள் இருப்பது தெரிய வந்தது. காற்று மாசுபாடும் இதய நலனை பாதிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

****

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலுள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் மிலானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இணைய அடிமைகளுக்கு ரத்த அழுத்தம் மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். தினமும் அதிக நேரம் இணையத்தை பயன் படுத்தும் வழக்கம் உள்ளதாக ஒப்புக்கொண்ட, 144 பேரிடம் நடத்தப் பட்ட அந்த ஆய்வில், இணையத்தை பயன்படுத்தி முடித்து எழும்போது, ரத்த அழுத்தம், 3-4 சதவீதம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அதேபோல ஆய்வில் கலந்து கொண்டவர்களின் இதயத் துடிப்பும் கூடுதலாக இருந்தது. இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை அல்ல. என்றாலும், அவர்களுக்கு உளவியல் பதற்றம் தொற்றிக் கொள்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு, ‘பிலோஸ் ஒன்’ இதழில் வெளியாகியுள்ளது.

****

பிரபஞ்சத்தின் காலவெளிப் பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு அலைகளை கண்டறியும், ‘லிகோ’ ஆய்வகம், அண்மையில் மூன்றாவது முறையாக, ஈர்ப்பலைகளை கண்டறிந்துள்ளது. முதல் இரு ஈர்ப்பலைகளைப் போலவே, இந்த ஈர்ப்பு அலையும், இரு பெரும் கருந்துளைகள் இணைவதால் ஏற்பட்டவையே என, லிகோ விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியனைவிட, 49 மடங்கு பெரிய கருந்துளைகள் அவை என்றும், அவற்றின் இணைப்பு பூமியிலிருந்து, 3 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றும், லிகோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

****

மூக்கின் வழியே நுரையீரலை சென்று தாக்கும், புளூ வைரஸ்களை தடுக்க, புதிய முறையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நுரையீரலில், வைரஸ்களை எதிர்க்கும் டி.ஆர்.எம்.எஸ்., என்ற செல்கள் உண்டு. ஆனால், ஆய்வகத்தில் அந்த செல்கள், அதிக காலம் உயிரோடு இருப் பதில்லை. இதனால் அவற்றை வைத்து தடுப்பு மருந்தை உரு வாக்க முடியாமலிருந்தது. மெல்போர்ன் விஞ்ஞானிகள், மனித மூக்கில் உள்ள திசுக்களிலும் அந்த செல்கள் இருப்பதையும், அவை அதிக காலம் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மூக்கில் உள்ள, டி.ஆர்.எம்.எஸ்., செல்களை வைத்து புளூ வைரசுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியுமா என,  தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

தோலை ஊடுருவிப் பார்க்கும் லேசர்!

சொரியாசிஸ் எனப்படும் சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும் தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண் களைத் தான் நம்ப வேண்டும்.

ஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொறி நோயை துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.

‘ஆர்சம்‘ என சுருக்கமாக அழைக்கப்படும், ‘ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ் கோப்பி’ தொழில்நுட்பம் மெல்லிய லேசர் துடிப்பு களை பயன்படுத்துகிறது.

லேசர் பட்டதும் தோலின் திசுக்கள் வெப்ப மடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் பகுதி, மீஒலி அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின் வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக் குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தக் கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க விளைவுகள் கிடையாது.

இந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின் நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்து வரால் முடியும் என்கின்றனர் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.
அடுத்த கட்டமாக தோல் புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றை கண்டறியவும் இக்கருவியை மேம் படுத்த உள்ளனர்.

குட்டி சில்லில் 30 பில்லியன் டிரான்சிஸ்டர்கள்!

நகத்தின் அளவே உள்ள, 5 நானோ மீட்டர் சிலிக்கன் சில்லில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களை பதித்து, புதிய சாதனை படைத்திருக்கிறது,  அய்.பி.எம்., இந்த சாதனைக்கு ‘சாம்சங் மற்றும் குளோபல் பவுண்டரீஸ்’ ஆகிய இரண்டும் உதவி யுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 7 நானோ மீட்டர் சிலிக்கான் தகடுகளில், 20 பில்லியன் டிரான் சிஸ்டர்களை, அய்.பி.எம்., பதித்து சாதனை புரிந்தது. ‘எக்ஸ்ட்ரீம் அல்ட்ராவயலட் லித்தோகிராபி’ என்ற அச்சு முறை மூலம், நேனோ அளவே உள்ள டிரான்சிஸ்டர்களை கச்சிதமாக பதித்துள்ளது, அய்.பி.எம்.தகவல்களை சேமிக்கவும், பரிமாறவும், அலசவும் டிரான்சிஸ்டர்கள் உதவுகின்றன.

இவ்வளவு டிரான்சிஸ்டர்களை, மிகக் குறுகிய இடத்திற்குள் குவித்திருப்பதால், இந்த சில்லுகள் மற்ற சில்லுகளை விட, மூன்று மடங்கு குறைவாகவே மின்சாரத்தை உறிஞ்சும். மேலும், இவற்றின் தகவல் பரிமாற்ற வேகமும், பல மடங்கு அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அய்.பி.எம்., உரு வாக்கிய, 7 நேனோ மீட்டர் சில்லுகளே, 2018இல் தான் சந்தைக்கு வரவுள்ளன.

எனவே, 5 நானோ மீட்டரில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட இந்த சாதனைச் சில்லு, சந்தைக்கு வர நான்கு ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது.  

அழிவை நோக்கி இந்திய தேனீக்கள்1

இந்தியாவில் தேனீக்களின் எண்ணிக்கை அழிந்து வருவதாக, ‘பயாலஜிகல் கன்சர்வேஷன்’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  அதிலும் குறிப்பாக, ஒடிசாவில் சில வகை தேனீக்களின் வரத்து, 2002லிருந்தே காணவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித் துள்ளனர். காடுகள் அழிப்பு, பூச்சி மருந்துகளின் பயன் அதிகரிப்பு, ஒரே பயிர் வகையை விதைப்பது போன்றவை தேனீக் களுக்கு ஆபத் தை விளைவித்திருப்பதாக, அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

பிளவில் அண்டார்டிகா பனிப்பாறை

மேற்கு அண்டார்டிகா பகுதியில் உள்ள, ‘லார்சன் சி’ என்ற பிரம்மாண்ட பனிப்பாறை, அண்மையில், 17 கி.மீ., நீளத்திற்கு பிளவு பட்டுள்ளது. இந்த பிளவு மேலும் தொடர்வதாக, பிரிட்டனைச் சேர்ந்த, ‘புராஜக்ட் மிடாஸ்’ என்ற விஞ்ஞானிகளின் அணி கணித்துள்ளது.

ஏற்கெனவே லார்சன் ஏ என்ற பனிப்பாறை, 1995லும், லார்சன் பி என்ற பனிப்பாறை, 2002லும் உடைந்து கடல் நீரில் மிதக்க ஆரம்பித்தன. இப்போது அவற்றுக்கு அருகில் உள்ளதும், அந்த இரண்டையும் விட பெரியதுமான, லார்சன் சி பனிப்பாறை அதே ஆபத்தில் உள்ளது. பனிப்பாறைகள் உடைந்தால், கடல் மட்டம் உயரவும், நிலப்பரப்பு குறையவும் நேரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் 319 புதிய வகை தாவரங்கள்!

இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு துறை, 2016இல் மட்டும், 319 புதிய தாவர வகைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதில், 206 தாவரங்கள், அறிவியலுக்கே புதியவை. மீதமுள்ள 113 தாவரங்கள், இதற்கு முன் காணப்படாத, புதிய பகுதிகளில் செழித்து வளர ஆரம்பித்துள்ளவை. காட்டு ஏலம், காட்டு இஞ்சி, காட்டு நெல்லி போன்ற புதிய வகைகள், மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு உதவக்கூடும் என, கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. என்றாலும், அதிகபட்சமாக, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில், 17 சதவீதமும், கிழக்கு இமாலய பகுதிகளில், 15 சதவீதமும், மேற்கு இமாலய பகுதிகளில், 13 சதவீதமும் புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.