எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தினமும் மிதமாக சாக்லேட் சாப்பிடுவது, சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு, இதயத்துடிப்பு சீராவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவர்களும் டென்மார்க்கைச் சேர்ந்த மருத்துவர்களும் செய்த ஆய்வு தெரிவிக்கிறது. சாக்லேட்டிலுள்ள பிளேவனால் போன்ற சத்துக்கள், இதயத்துடிப்பை சீராக்குவதில் உதவக்கூடும் என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள், ‘ஹார்ட்’ இதழில் வெளியாகியுள்ளன.

------------------------

டெங்கு, சிக்குன் குனியா, ஜிக்கா போன்ற நோய்களைப் பரப்பும், ‘ஏடிஸ் எகிப்தி’ வகை கொசுக்களை தடுக்க, புதிய பொறி ஒன்றை அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள் ளனர். கொசுக்கள், பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றில் முட்டையிடக்கூடியவை. எனவே, சிறிய பிளாஸ்டிக் கோப்பையில், பைரிப்ரோக்சிபென் என்ற வேதிப் பொருளை தடவி வைத்தால், அதில் நீர் தேங்கியதும், பெண் கொசுக்கள் அதில் வந்து முட்டையிடும். கொசு முட்டை அந்த மருந்தில் விழுந்ததும் பட்டுப்போய் இனப் பெருக்கம் நின்றுவிடும்.

------------------------

பேஸ்புக் போன்ற இணையதளங்களை அளவுக்கு மீறி, தினமும் பயன்படுத்துவதால், மூளையில் நம் பழக்க வழக்கங்களை தீர்மானிக்கும் பகுதியில் உள்ள திசுக்களின் வளர்ச்சி குறைவதாக, ஜெர்மனியைச் சேர்ந்த உல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்கள், 46 பேரிடமும், பெண்கள், 39 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், ‘பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச்‘ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

------------------------

நோய் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளை, எதிர்த்து உயிர்வாழ கிருமிகள் பழகி வருவது, ஒரு பெரும் மருத்துவ அறைகூவல். அண்மையில் அமெரிக்காவிலுள்ள ஸ்கிப்ஸ் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வான்கோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை, மாற்றியமைத்து சோதித்தனர். மூன்று வெவ்வேறு வழிகளில் இந்த புதிய மருந்து பாக்டீரியாக்களை தாக்குகிறது. எனவே, அவற்றை பாக்டீரியாக்களால் எதிர்க்க முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆச்சரியப்பட வைக்கும் ஜூபிட்டர்

அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’ அனுப்பிய ‘ஜூனோ’ விண்கலம், 2016 ஜூலையில் ஜூபிட்டர் கிரகத்தின் வளி மண்டலத்தை நெருங்கி, அதை சுற்றி வர ஆரம்பித்தது. நீள் வட்டப் பாதையில், 53 நாட்களுக்கு ஒரு முறை, ஜூபிட்டரை முழுதாக வலம் வந்த ஜூனோ, பல ஆச்சரியகரமான தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. முதலா வதாக, ஜூபிட்டரின் வட துருவமும், தென்துருவமும் முற்றிலும் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டி ருப்பது, விஞ்ஞானிகளை ஆச்சரியமூட்டியுள்ளது.

மேலும், ஜூபிட்டரின் மேல் பகுதியில், ஆங் காங்கே பல முட்டை வடிவ புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விட்டம் 1,000 கி.மீ அளவு உள்ளன! 2011இல் அனுப்பப்பட்ட ஜூனோ, தற்போது, ஜூபிட்டரின் தரைப் பகுதியிலிருந்து 53 ஆயிரம் கி.மீ., உயரத்தில் வலம் வந்தபடி படங் களையும், வளி மண்டலம், காந்தப் புலம் போன்ற தகவல்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

ஜூபிட்டரின் காந்தப் புலம், சில இடங்களில் பலம் மிக்கதாகவும், சில இடங்களில், பலகீனமாக இருப்பதும், ஜூனோ அனுப்பிய தகவல்களில் தெரிய வந்துள்ளது. இதுவும் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜூனோ மேலும் சில முறை ஜூபிட்டரை வலம் வந்தால், மேலும் பல ஆச்சரியங்கள் வெளிப்படுத்தப்படலாம் என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பச்சை பாசியிலிருந்து காலணிகள்!

நீரில் வளரும் பச்சை பாசியிலிருந்து பிளாஸ்டிக் போலத் தயாரிக்க முடியும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘அல்ஜிக்ஸ்’ மற்றும் ‘எபெக்ட்’ ஆகிய இரு நிறுவனங்கள் செய்து காட்டின. தற்போது அவை உருவாக்கிய, ‘ப்ளூம் போம்‘ என்ற விந்தைப் பொருளை, ‘ப்ளூம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் சந்தைப்படுத்தத் துவங்கியுள்ளது.

ஆசியா மற்றும் அமெரிக்காவின் நீர் நிலைகளில் அறுவடை செய்யப்படும் பாசிகளை சேகரித்து, ப்ளூம் போம் தயாரிக்கப்படுகிறது.
பாசிகளை உலர வைத்து, பின் அவற்றை நுண் குளிகைகளாக மாற்றி, வேறு சில வேதிப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு, மென்மையாக, வளைந்து கொடுக்கக் கூடிய, அதே சமயத்தில் உறுதியான போம் தயாரிக்கப்படுகிறது.

இதை வைத்து காலணிகள், தரை விரிப்புகள் போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்க முடியும். ‘வைவா பேர்பூட்’ என்ற காலணி நிறுவனம், விரைவில் ப்ளூம் போம்களைப் பயன்படுத்தி காலணிகளை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

பெட்ரோலியத்தின் அடிப்படையிலான, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்படும் காலணி களுக்கு மாற்றாக, இயற் கைப் பாசியால் செய்யப் படும், ப்ளூம் காலணிகள் சுற்றுச்சூழல் பிரியர் களுக்கு மிகவும் பிடிக் கும் என, வைவா பேர் பூட் நிறுவனம் நம்புகிறது.

தெரியுமா உங்களுக்கு?

சங்குகளின் ஓடுகள் பலம் மிக்கவை. எளிதில் உடைக்க முடியாதவை. எனவே சங்குகளின் வேதியியல் கட்டமைப்பை, அமெரிக்காவின் மாசாசூ செட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சி யாளர்கள் பரிசோதனை செய்தனர். அவற்றின், மூன்று அடுக்குகள் கொண்ட கட்டமைப்பும், வேதியியல் அம்சங்களும் தான் அவற்றுக்கு பலத் தைத் தருவதாக, ஆய்வுகள் மூலம் அவர்கள் கண்டறிந்தனர். தலைக் கவசம், உடலை காக்கும் கேடயம் போன்றவற்றை தயாரிக்க, சங்குகளின் வேதியியல் அமைப்புள்ள பொருட்களை தயாரிக் கலாம் எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கண்ணாடி தவளை

தவளை இனங்களில், கண் ணாடித் தவளைகள் உண்டு. இவற்றின் வயிற்றுப் பகுதிக்குள் இருப்பவை அப்படியே தெரியும் என்பதால், இவற்றுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால், அமே சானின் ஈக்வடார் வனப் பகுதியில், விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள புதிய கண்ணாடித் தவளை, சற்று வித்தியாச மானது. இதன் வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, அடி நெஞ்சுப் பகுதியும் அப்படியே வெளியே தெரிகிறது.

ஆம், அதன் இதயம் துடிப்பதைக்கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால் இதன் முதுகுப் பகுதியில் பச்சைப் புள்ளிகள் கொண்ட தோல் மூடியிருக்கிறது. மொத்தம், 2 செ.மீ., நீளமே உள்ள இந்த தவளைகள், இலைக்கு அடியில் பெரும்பாலும் இருப்பவை. எனவே தான், இத்தனை காலமாக, உயிரியல் விஞ்ஞானிகளின் கண்களில் படாமல், தப்பித்திருக்க முடிந்தது. ‘ஹயாலினோ பாட்ராசியம் யாகு’ என்ற உயிரியல் பெயரிடப்பட்டுள்ள இந்த தவளையைப் பற்றி, ‘ஜூ கீய்ஸ்’ இதழில், ஆராய்ச்சிக் கட்டுரை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டினால் ஆன செவிப்பறை!

காதுகளின் உட்புறத்தில் ஏற்படும் நாள்பட்ட தொற்றுக் களால் கடும் வலியும், காது கேட்கும் திறன் இழப்பும் ஏற் படலாம். இந்த தொற்றுக்களை நீக்கி காதை சரி செய்ய, நோயாளிகள் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்கிறது.  இந்த அவஸ்தைகளை போக்க, ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘கிளியர் ட்ரம்‘ என்ற செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியிருக்கின்றனர்.

8 ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின், பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள கிளியர் ட்ரம், கண்ணாடிக் காகிதம் போலத் தோற்றமளிக்கிறது. இதைப் பொருத்தியதும், நோயாளிக்கு முன் போல தெளிவாக ஒலிகளைக் கேட்கும் திறன் கிடைக்கிறது. இதனால் தான், இதற்கு கிளியர் ட்ரம் என, ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

கிளியர் ட்ரம்மை, நுட்பமான அறுவைச் சிகிச்சை மூலம் நோயாளியின் காதில் பொருத்திய சில நாட்களிலேயே, காதிலுள்ள இயற்கையான செவிப்பறை சவ்வுகள் அதைப் பற்றிக்கொண்டு வளர ஆரம்பித்துவிடும். இதனால், சிகிச்சை முடிந்தும், பல முறை மருத்துவரை பார்க்க வரவேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர், இதை உருவாக்கிய பெர்த் மற்றும் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner