எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவியல் துளிகள்

மனித மூளை எப்படி செயல் படுகிறது? புத்திசாலித்தனத்தின் உயி ரியல் அடிப்படை உண்டா? இந்த கேள்விகளுடன் ஆம்ஸ் டர் டாமிலுள்ள பிரீ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 60,000 பெரியவர்கள், 20,000 குழந்தை களின் மரபணுக்களை தொகுத்து ஆராய்ந்து வருகின் றனர். இந்த ஆய்வில் புத்திசாலித்தனத்திற்கு காரணமாக உள்ள, 40 புதிய மரபணுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தோடு, புத்திசாலித்தனத்திற்கு அடிப்படையாக அறியப்படும் மரபணுக்களின் எண்ணிக்கை, 52 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும், அறிவுத் திறனுக்கு மரபணுக்கள் மட்டுமே காரணியாக இருக்க முடியாது என்றும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

****

ஆஸ்துமா தாக்குதல் வருவதற்கு முன்பே, அதை கண்டறிந்து நோயாளியை எச்சரிக்க உதவும் கருவியை அமெரிக்காவிலுள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நோயாளியின் வெளி மூச்சை இக்கருவியினுள் செலுத்தினால், அந்த மூச்சிலுள்ள வேதிப் பொருட்களை, கிராபீன் அடிப்படையிலான நேனோ மின்னணு உணரி ஒன்று அலசி, ஆஸ்துமா தாக்குதல் ஏற்படவிருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடும். இக் கருவி, ஆஸ்துமா தவிர, வேறு சில சுவாச நோய்களையும் கண்டறியும் என ரட்கர்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

****

பல ஆண்டுகளாக மது அருந்துவதால், ஈரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் வரை கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஈரல் பாதிப்பு ஏற்பட, வயிற்றில் உள்ள சிலவகை பூஞ்சைகளும் காரணம் என எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ‘ஜர்னல் ஆப் கிளினிகல் இன்வெஸ்டிகேஷன்’ இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின்படி, மதுவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புக்கு, வயிற்றிலுள்ள பூஞ்சைகளை கணக்கில் கொண்டு சிகிச்சை அளிப்பது பலன் தரக்கூடும்.

****

இமயமலை மீது ஏறுவதற்கு வழிகாட்டிகளாக தொழில் நடத்தும் ஷெர்ப்பாக்கள், மிக உயரமான இடங்களில் இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தாக்குப் பிடிப்பதில் வல்லவர்கள். கடல் மட்டத்தில் வசிப்பவர்களை விட, உயரமான நேபாளப் பகுதிகளில் வசிக்கும் ஷெர்ப்பாக்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜனை சுமக்கும் ஹீமோ குளோபினின் அளவு குறைவாக இருப்பதாகவும், இதனால் அவர்களது அடர்த்தி குறைவான ரத்தம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதில்லை எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

துப்பறியும் கூகுள் ‘லென்சு’

ஆண்டுதோறும் தனது, ‘கூகுள் அய் ஓ’ மாநாட்டில் பல புதிய சேவைகளையும், பொருட்களை யும் அறிமுகப் படுத்தும். இந்த முறையும் அண்மையில் நடந்த கூகுள் மாநாட்டில் பல புதுமை களை கூகுள் அறிமுகப்படுத்தியது.

அதில் ஒன்றுதான் ‘கூகுள் லென்ஸ்.’ ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கூகுள் அசிஸ்டென்ட்’ மென்பொருளுடன் இணைந்து செயல்படும் கூகுள் லென்ஸ், மொபைல் கேமராவை நம்பி இயங்கக்கூடியது. இதை அறிமுகப் படுத்திய கூகுளின் தலைமை செயல் நிர்வாகி , இதன் பயன்பாட்டை மாநாட்டில் விளக்கினார்.’’

புதிய வகை பூ ஒன்றை பார்க்கிறீர்கள். அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, உங்கள் மொபைலில் அதைப் படம் பிடித்தால், உடனே கூகுள் லென்ஸ் அதைப் பற்றிய தாவரவியல் தகவல் முதல் பல சுவையான தகவல்களை உங்களுக்கு உடனே சேகரித்து தந்துவிடும்,’’ என்றார் சுந்தர் பிச்சை.

உங்களைச் சுற்றி உள்ள உலகை உங்களுக்கு மேலும் அர்த்தமுள்ள தாக ஆக்க கூகுள் லென்ஸ் பயன்படும் என்கிறார் அவர்.ஒரு கடையின் முன் நின்று அதன் பெயர் பலகையை படம்பிடித்தால், அந்தக் கடையின் பொருட்கள், சேவைகளைப் பற்றி இணையத்தில் பிறர் எழுதிய விமர்சனங்களை உங்களுக்கு கூகுள் லென்ஸ் காட்டிவிடும்.
ஒரு கலை நிகழ்ச்சி பற்றிய விளம்பரத்தை படம்பிடித்தால், கூகுள் அசிஸ்டென்டின் உதவி யுடன், கூகுள் லென்ஸ் அதற்கான அனுமதிச் சீட்டை முன்பதிவு செய்து தரும்.

இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டும் வேலை செய்யும் கூகுள் லென்ஸ் விரைவில் அய்போன் களுக்கும் வரவிருப்பதாக சுந்தர்
அறிவித்திருக்கிறார்.

குளிர்ச்சி தரும் நுண்ணுயிரி ஆடைகள்

ஜவுளித் துறையில், ‘புத்திசாலி ஆடைகள்’ சில வந்து அசத்த ஆரம்பித்துள்ளன. கணினி சில்லுகள், மொபைல் செயலிகள் மூலம் இவை இயங்குபவை. ஆனால், மாசாசூ செட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள், நுண்ணுயிரி செல்களை வைத்துத்தைத்த உடைகளை வடிவமைத்துள்ளனர்.

‘பயோ பேப்ரிக்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை உடைகள், அணிபவரின் உடல் வெப்பம் மற்றும் வியர் வையை உணரும் திறன் கொண்டவை. நுண்ணுயிரிகள் கொண்ட துணியை, சிறு சிறு துளைகள் கொண்ட உடையில் வைத்து ஆராய்ச்சியாளர்கள் தைத்தனர். இதை அணிபவருக்கு வியர்த்தாலோ, உடல் வெப்பம் கூடினாலோ, இந்த துளைகளை மூடியிருக்கும் துணி லேசாக திறந்து கொள்ளும். இதனால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகை ஆடைத் தொழில் நுட்பம் உடனடியாகப் பயன்படும். மேலும், வெப்பப் பகுதியில் இருப்பவர்களுக்கும் இவை தினசரி உடையாகவும் பயன்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உடையில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரி களை மரபணு மாற்றம் செய்வதன் மூலம், வியர்வை துர்நாற்றம் ஏற்பட்டால், இனிய நறுமணத்தை நுண்ணுயிரிகள் வெளியிடும்படியும் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தை எச்சரிக்கும் தாவரங்கள்!

ஒரு செடி, தனக்கு ஆபத்து ஏற் பட்டதும், அக்கம் பக்கத்திலுள்ள தாவரங் களை, பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கும் என்பதை தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துஉள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள டிலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வுக்கூடத்தில் நுற்றுக் கணக்கான கடுகு செடிகளை வைத்து இரண்டு ஆண்டுகள் செய்த ஆய்விற்குப் பின் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஒரு செடியின் சில இலைகள் கொய்யப்பட்ட பிறகு, இலைகளில் சில வேதிப் பொருட் களை உற்பத்தி செய்து காற்றில் பரப்புவதன் மூலம், மற்ற செடிகள் அதை புரிந்துகொள் கின்றன.  ஆபத்து என்ற தகவல் கிடைத் ததும், அக்கம்பக்கத்து செடிகள், மறு நாளே சற்று வேகமாக வளர்ந்திருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பாது காப்பு கருதி மேற்கொள்ளப்படும் செயல் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


களை எடுக்கும் ரோபோ

விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில்.’

அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் இதை தயாரித்திருக்கிறது.வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளும், உணரிகளும் பார்த்துக்கொள்கின்றன.

அதேபோல, தோட்டப் பகுதியை விட்டு இந்த ரோபோ தவறுதலாக வேறுபக்கமும் போகாது. சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தியிருப்பதால், இதற்கு மின் தேவையும் இல்லை. 2017 இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும், 18,000 ரூபாய் மதிப்புள்ள டெர்ட்டில் ரோபோவுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

மலேரியாவை சமாளித்த குரங்குகள்   

மலேரியா வராமல் தடுக்க சில தடுப்பூசிகள் உருவாக்கப் பட்டுள்ளன. என்றாலும், அவை எதிர்பார்த்த அளவுக்கு பலன் தருவதில்லை. இந் நிலையில், அமெரிக்காவி லுள்ள, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆய்வு நிலை யத்தைச் சேர்ந்த பிரகாஷ் சீனிவாசன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மலேரியா தடுப்பு மருந்தில், ஒரு புதிய வேதிப் பொருளை சேர்த்து, எட்டு குரங்குகள் மீது பரிசோதனை நடத்தினர். இதில், நான்கு குரங்குகள் மலேரியா கிருமிகளை முற்றிலும் எதிர்த்தன. மீதமுள்ள நான்கு குரங்குகளில் மூன்றால், மலேரியா அறிகுறியை 25 நாட்கள் வரை தள்ளிப்போட முடிந்தது. எனவே, இந்த புதிய மலேரியா தடுப்பூசி வலுவானதாக இருக்க வாய்ப்புள்ளது.