எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கண்ணாடியை பயன்படுத்தி, வேண்டிய பொருட்களை வடிவமைக்க உதவும் முப் பரிமாண அச்சு தொழில்நுட்பத்தை, முதல் முறையாக ஜெர்மனியிலுள்ள கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் உருவாக்கி இருக்கிறது.

புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு உதவும் முப்பரிமாண அச்சியந்திரங்களுக்கு மூலப் பொருளாக, பீங்கான், பாலித்தீன், பலவித உலோகங்களை பயன்படுத்துவது வழக்கம்.

மருத்துவத் துறையில் திசுக்களை உருவாக்க உயிரிப் பொருட்களைக் கூட பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.ஆனால், கண்ணாடியை பயன்படுத்துவது சவாலானதாக இருந்து வந்தது.

கார்ல்ஷுஹேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், துய்மையான குவார்ட்ஸ், திரவ பாலிமர் ஆகிய இரண்டையும் கலந்து கண்ணாடிப் பொருட்களை உருவாக்கி இருக்கின்றனர். இந்தக் கலவையை முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, மிகச் சிறிய கண்ணாடிப் பொருள் முதல், நுட்பமான வேலைப்பாடுள்ள பொருட்கள் வரை, சில மணி நேரத்தில், அச்சிட்டு எடுத்துவிட முடியும்.

இந்த அச்சியந்திரத்தால் நுகர் பொருட்களை மட்டுமல்ல, ஒளியைப் பயன்படுத்தும் கணினிகளுக்கான பாகங்களைக்கூட துல்லியமாகத் தயாரித்துத் தர முடியும் என, கார்ல்ஷுஹேயின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.