திண்டுக்கல்லில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆர். ரூபாதேவி கால்பந்து விளையாட்டில் சிறுவயது முதலே கொண்ட ஆர்வம் காரணமாக இன்று சர்வதேசக் கால்பந்துப் போட்டி நடுவராக உயர்ந்து நிற்கிறார்.
திண்டுக்கல் நகரின் மய்யத்தில் அமைந்துள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் கால்பந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். அதுவே தன் வாழ்க்கையாக மாறப் போவதை அப்போது அவர் நினைத்திருக்கவில்லை. அப்போதெல்லாம் மாலையில் வகுப்பு முடிந்ததும் கால்பந்து விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர் ஜெசின்ஜெஸ்டின் என்னைத் தினமும் கால்பந்து விளையாட ஊக்குவித்துப் பயிற்சியளித்தார். எனது முதல் பயிற்சியாளர் அவர்தான். பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டிகளில் விளையாடினேன். என்கிறார் ரூபாதேவி

அதுவரை அணியில் தானும் ஒருத்தி என்று நினைத்துவந்தவர் விளையாட்டில் தன் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணம் வந்தவுடன் கடும் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பு, பட்டயப் படிப்பு என எனது கல்வியை ஒருபக்கம் தொடர்ந் தாலும், காலை, மாலை நேரம் மைதானத்தில் இருக்கத் தவறியதில்லை. காரணம் எனது முழுக் கவனமும் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது என்கிறார்.

இவரது அர்ப்பணிப்பைத் தெரிந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டக் கால்பந்து கழகத் தலைவர் ஜி.சுந்தரராஜன், செயலாளர் எஸ்.சண்முகம் ஆகியோர் இவரை ஊக்கப்படுத்தியதுடன் பயிற்சிக்குத் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளையும் செய்துள்ளனர். அத் துடன் தமிழ்நாடு கால்பந்துக் கழகம் தனக்கு முழு ஆதரவளித்தததையும் அவர்களது ஊக்கமும் உதவியுமே தன்னை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார் ரூபாதேவி.

கிடைத்தது நடுவர் பணி

 

தமிழக அணிக்காக சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என அனைத்துப் பிரிவுக் கால்பந்துப் போட்டிகளிலும் ரூபா விளையாடியுள்ளார். இடையில் சில ஆண்டுகள் போட்டிகள் அதிகம் நடைபெறாததால், இவரது கவனம் நடுவர் பணி மீது திரும்பியது.

2007ஆம் ஆண்டு முதன்முறையாகக் கால்பந்து நடுவருக்கான தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்போது மத்திய அரசு புராஜெக்ட் பியூச்சர் ரெஃப்ரி என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் கால்பந்து நடுவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதற்குத் தேர்வு செய்யப்பட்டு புதுடில்லி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குப் பயிற்சி பெறச் சென்றேன். இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றேன் என்று தான் நடுவரான கதையை விவரிக்கிறார் ருபாதேவி

ஒலிம்பிக் கனவு

தொடர்ந்து இந்திய கால்பந்துக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் மலேசியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற தெற்காசியக் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார் ரூபாதேவி.
எனது செயல்பாட்டைப் பார்த்த ஆசிய கால்பந்துக் கழகம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் நடுவராகப் பங்கேற்க வாய்ப்பளித்தது. இந்திய, ஆசிய அளவிலான போட்டிகளில் எனது பங்களிப்பைப் பார்த்த இந்திய, ஆசிய கால்பந்துக் கழகங்கள் என்னை சர்வதேச நடுவராக ஃபிஃபா கால்பந்து அமைப்புக்குப் பரிந்துரை செய்தன. அதற்கான தேர்விலும் தேர்ச்சிபெற்றேன். எனது செயல்பாடு, தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு என்னை சர்வதேச கால்பந்து நடுவராக ஃபிஃபா அறிவித்தது என்கிறார்.

மாநில அளவில், தேசிய அளவில், ஆசிய அளவில், சர்வதேச அளவில் படிப்படியாக உயர்ந்த இவருக்கு ஒலிம்பிக், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியம். தீரா ஆர்வம், கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கும் ரூபாதேவி எப்படிப்பட்ட இலக்கையும் அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக நம்பலாம்.

போர்க்கப்பல்களைக் கண்காணிக்கும் வீராங்கனைகள்

இந்திய விமானப்படையில் சென்ற மாதம்தான் மூன்று பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்க அனுமதித்துள்ளனர். அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோஹனா சிங் என்ற மூன்று பெண்களும் ஓராண்டு கடினப் பயிற்சிக்குப் பிறகு போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக்கியிருக்கின்றனர்.

“ஆண் போர் விமானிகளுக்கு எந்த விதத்திலும் குறைந் தவர்கள் அல்ல இந்த மூன்று பெண் விமானிகள்’ என்று இந்திய விமானப்படைத் தளபதி இவர்களை பாராட்டியிருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் இந்த மூன்று பெண்களும் முழு நேர போர் விமானிகளாவார்கள். இந்திய விமானப்படை பெண்களைப் போருக்குத் தயார் செய்யும்போது, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கப்பல்படை நினைத்ததோ என்னவோ 20 கடல் படை வீராங்கனைகளைக் கண்டெடுத்து சீன போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்களைத் தீவிர மாகக் கண்காணிக்க நியமித்துள்ளது.

இந்தப் பெண்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் திறமை வாய்ந்த விமானத்தில் பறந்து கண் காணிப்பார்கள்.  இந்தக் கண்காணிப்புக்குப் பயன்படும் “பொசிடியன் - 8’  என்னும் கப்பல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் செலவில் எட்டு விமானங்கள் சென்னையை அடுத்த அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு விமானங்கள் வர உள்ளன.  இன்னொரு ரஷ்ய விமானத்தில் 30 பெண்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானங்கள் 250 கி.மீ. தூரத்தில் கடலின் உள்ளே பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பலைக்கூட கண்டு பிடித்து அழிக்கக்கூடிய திறன் பெற்றது. ஆனால் இந்த ரஷ்ய விமானம், அமெரிக்க விமானத்தைவிட திறன் குறைவானதுதான்.

இந்தப் போர் விமானங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க வல்ல  ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதே சமயம் எதிரியின் கப்பல்களில் இருக்கும் பீரங்கிகள் இவர்கள் பறக்கும் விமானத்தை வீழ்த்தும் அபாயமும் உள்ளது. இந்த அபாய சூழ்நிலையில் சுமார் 50 வீராங்கனைகள் இந்திய மண்ணின் பாதுகாப்புக்காக கடல் மேல் பறந்து கண் மூடாமல் கண்காணித்து வருகின்றனர்.

“சமீபத்தில் 26 இந்திய வீரர்களுடன் காணாமல் போன எம்வி எமரால்டு கப்பலைப் பெண் குழு ஒன்றுதான் கண்டுபிடித்தது. 16 போர் வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பத்து பேர் சம்பவ இடத்தில் இறந்து போயிருக்கலாம். இந்த ரோந்து மற்றும் போர் விமானங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் பெண்களே. அவர்களால் எந்தச் சவால்களையும் சந்திக்க முடியும்” என்கிறார் இந்திய கப்பல்படைத் துணைத் தளபதி சாவ்லா.

இந்திய சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அதிநவீன கண்காணிப்பு இந்தியாவுக்கு வெகு அவசியமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்புப் பணியை 50 வீராங்கனைகள் ஏற்றிருக்கின்றனர் என்பது இந்தியப் பெண்களுக்குப் பெருமை தரும் விசயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்திய பெண்கள் ஆக்கி கேப்டன் ராணி ராம்பால்

சென்ற மாதம் டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியப் பெண்கள் அணியும்  ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

பெண்கள் அணி தோற்கடித்தி ருப்பது சீன அணியை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பதிமூன்று ஆண்டுகள் கழித்து தற் போதுதான்  கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான பெண்கள் ஆக்கி அணி தங்கக் கோப்பையைப் பெற்று பெருமையுடன் தாயகம் திரும்பி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த “ஆசிய வாகையர்’ கோப்பைக்கான ஆக்கி போட் டியிலும் சீன அணியை இந்திய பெண்கள்   அணி வென்றது.

அந்தப் போட்டியை விட முக்கியத் துவம் வாய்ந்த ஆசியக் கோப்பைக்கான போட்டியில் வென்றது   இந்தியப் பெண்கள் அணிக்கு அதிகப் புகழையும் முக்கி யத்துவத்தையும் அளித்துள்ளது.


பிளாஸ்டிக் கழிவுகள் ஆறு, ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றன. மறு சுழற்சி முறையை பரவலாக கடைபிடிக்கும் பிரான்சு போன்ற நாட்டில் கூட, பெட்ரோலியப் பொருட்களால் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்களில், 45 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படாமல் நேரடியாக குப்பைக்கூளமாக நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்சின் முன்னணி பிளாஸ்டிக் பாட்டில் களைத் தயாரிக்கும், ‘லைஸ் பேக்கேஜிங்’ அண்மையில், ‘வேகன் பாட்டில்’ என்ற புதிய வகை பிளாஸ்டிக் பாட்டில்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வேகன் பாட்டில்கள் உயிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப் பட்டவை. அதாவது, இந்த வகை பிளாஸ்டிக்குகள் இயற்கையான பொருட்களைப் போலவே, மண்ணில் புதைந்ததும் விரைவில் மட்கிப் போகும் தன்மை உடையவை. வேகன் பாட்டில்களின் மூடி, அதன் மேல் ஒட்டப்படும் லேபிள் ஆகியவையும் எளிதில் மட்கும் தன்மை உடையவை என்கிறது லைஸ் பேக்கேஜிங்.

எத்தனை நாட்களில் வேகன் பாட்டில் மட்கிப் போகும்? வெறும், 90 நாட்கள் போதும் என்கிறது அந்நிறுவனம். அதே சமயம், வேகன் பாட்டில்களை பல முறை மறு சுழற்சி செய்யவும் முடியுமாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களைத் தயாரிக்க, அய்ரோப்பாவில் ஒரு பெரும் இயக்கமே ஆரம்பித்திருக்கிறது. வேகன் பாட்டில் அதன் முக்கிய மைல்கல் எனலாம்.

ஓட்டுநரில்லா லாரி சோதனை  

தானோட்டி வாகனங்களை பயன்படுத்துவதில் பயணியர் போக்குவரத்தை விட சரக்குப் போக்குவரத்து துறை முந்திக்கொள்ளும் போலத் தெரிகிறது. அமெரிக்காவில் கடந்த அக்டோபர் முதல்

வாரத்திலிருந்து, ‘எம்பார்க்‘ நிறுவனத்தின் தானோட்டி லாரிகள்,

‘பிரிஜிடைர்’ என்ற குளிர்பதன பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, 1,000 கி.மீ., தூரம் சென்று இறக்கிவிட்டு திரும்பி வர ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து, கலிபோர்னியா மாகாணம் வரையிலான இந்த பயணத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மனித ஓட்டுநர் தான் ஓட்டுகிறார். ஆனால், இடைப்பட்ட தூரத்தில் ஓட்டுநர் சும்மா அமர்ந்திருக்க, எம்பார்க் லாரி தன்னைத்தானே பத்திரமாக ஓட்டிச் செல்கிறது. அடுத்த சில ஆண்டுகள் வரை, லாரியில் ஓட்டுநர் துணைக்கு இருப்பார். வெள்ளோட்டம் முடிந்ததும், முழு பயணத்தையும் எங்கள் தானோட்டி லாரியே கவனித்துக் கொள்ளும் என்று அறிவித்திருக்கிறது எம்பார்க்.
சரக்கு லாரி ஓட்டுநர்களுக்கு அமெரிக்காவில் பற்றாக்குறை ஏற் பட்டிருக்கிறது. மேலும், அனுபவமுள்ள லாரி ஓட்டுநர்கள் வயதான வர்கள் என்பதால், ஆண்டுதோறும் கணிசமானோர் ஓய்வு பெற ஆரம்பித்துள்ளனர். இதனால் தான், கூகுளின், ‘வேமோ, டெஸ்லா, உபேர், வால்வோ, டெய்ம்லர்’ ஆகிய பல வாகன தயாரிப்பாளர்களும், தானோட்டி லாரிகளை சாலையில் இறக்கி விடும் சோதனைகளில் மும்முரமாகியுள்ளனர்.

மிகப் பழைய
டைனோசர் கால் தடங்கள்

பிரான்சில் உள்ள பிளாக்னே என்ற மலைக் கிராமப் பகுதி யில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள டைனோசர் கால் தடங்கள் தான், உலகின் மிகப் பழை யவை என வல்லுநர்கள் அறிவித்து உள்ளனர். சவுரோபாட் வகை டைனோசர்களின் கால் தடங்கள் அப்பகுதியில், அரை கி.மீ., தூரம் வரை பதிந்துள்ளன. மொத்தம், 110 தனித்தனி டைனோசர் பாதப் பதிவுகள் அங்கு இப்போதும் உள்ளன.

பிளாக்னே கிராமத்தில், 2009இல் கண்டுபிடிக்கப்பட்ட இத் தடங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், இந்த டைனோசர்கள்,

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று

அறிவித்துள்ளனர். இவற்றின் உடல், 115 அடி நீளமும், 40 டன் வரை எடையும் உள்ளவையாக இருக்கலாம் என்று கணித் துள்ளனர்.

‘சூப்பர் கம்ப்யூட்டர்’ - முதலிடத்தில் சீனா!

அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில், பருவநிலை கணிப்பு, ராணுவ நடவடிக்கைகள் போன்ற பல வற்றுக்காக, ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ எனப்படும் மீத்திறன் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மீத்திறன் கணினிகளை தயாரித்து பயன்படுத்துவதில், வல்லரசு நாடுகளுக்குள் பெரும் போட்டியே நடக்கிறது. இந்தப் போட்டியில் முன்னணியில் இருந்த அமெரிக்காவை, கடந்த சில ஆண்டுகளாகவே சீனா பின்னுக்குத் தள்ளி வருகிறது.

மீத்திறன் கணினிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடும் இணையதளமான, ‘டாப்500.ஆர்க்‘ அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, எண்ணிக்கையில் அதிகமான மீத்திறன் கணினிகளை சொந்தமாக வைத்திருக்கும் நாடுகளில், சீனா முதலிடம் வகிக்கிறது. உலகின் மிக வேகமான மீத்திறன் கணினியான, ‘சன்வே டாய்ஹு லைட்’ உட்பட, மொத்தம், 202 மீத்திறன் கணினிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவிடம், 143 மீத்திறன் கணினிகள் உள்ளன. மூன்றாம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம், 35 மீத்திறன் கணினிகள் உள்ளன.

கடந்த ஜூலையில், சீனா தன் சன்வே டாய்ஹு லைட் மீத்திறன் கணினி மூலம், பேரண்டத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவை அடங்கிய மிக விரிவான டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறது.

பொன் நிற உருளைக் கிழங்கு!

பல வளரும் நாடுகளில், ‘வைட்டமின் ஏ’ சத்து குறைபாடுள்ளவர்கள் இருப்பது இன்றும் நீடிக்கிறது. இதை தடுக்க, இன்று அன்றாட உணவாகிவிட்ட உருளைக் கிழங்கை பயன்படுத்தலாம் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாண பல்கலைக் கழகம் மற்றும் இத்தாலிய பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு திருத்தம் மூலம் பொன்னிற உருளைக் கிழங்கை உருவாக்கி உள்ளனர். இந்த புதிய வகை உருளைக் கிழங்கை வெட்டிப் பார்த்தால், வழக்கமான வெளிர் நிற சதைப் பகுதிக்குப் பதிலாக, பொன் மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதி இருக்கிறது.

அது மட்டுமல்ல, இதில், ‘புரோ வைட்டமின் ஏ’ மற்றும் வைட்டமின் ஆகிய சத்துகள் செறிவாக உள்ளன. ‘புரோ வைட்டமின் ஏ’வைத்தான் நம் உடல் செரிமானம் செய்து, ‘வைட்டமின் ஏ’ சத்தாக மாற்றிக் கொள்கிறது.

‘வைட்டமின் ஏ’ சத்து, இளம் வயதில் கண் பார்வை பறி போவதைத் தடுக்கக்கூடியது.

மேலும், தொற்றுகளை எதிர்க்கும் சக்தியை உடலுக்குத் தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந் தையைப் பெறவும், ‘வைட்டமின் ஏ’ முக்கியம்.’ வைட்டமின் இ’ சத்து நரம்புகளுக்கும், தசைகளுக்கும் வலுவைத் தர உதவுகிறது.
பொன்னிற உருளைக் கிழங்குகள் இத்தகைய நன்மைகளை எளிய மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


விண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழை வதை, அக்டோபர் 19 அன்று ஹவாய் பல் கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலை நோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது விண்பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். அதிவேகத்தில் ஒரு கோடுபோல் சூரியப் பாதையில் நுழைந்த அந்தப் பொருள் வியப்பளித்தது.

இது கிட்டத்தட்ட 1,300 அடி அகலம் கொண்டதாக இருக்கலாம் என்று கணக் கிட்டது நாசா. அதன் வேகத்தின்படி அது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த பொருளாக இருக்க முடியாது எப்பதை உறுதிசெய்யப் பல விண்ணோக்கு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முடிவாக இது அதிவேகத்தில் சூரியனைச் சுற்றிப்போகும், நட்சத்திரங்களுக்கிடையே இருந்து வந்த பாறைப் பொருளாக இருக்கலாம், இது சூரியனைச் சுற்றிச் செல்லும் பாதையை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் இது திரும்பி வராது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.
எங்கிருந்து வந்தது?

இந்தப் பாறை, லிரா  நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஒரு நொடிக்கு 25.8 கி.மீ.வேகத்தில் பயணித்து வந்தது. இது சாதாரணமாக நமது கோள்கள் சுற்றும் சமதளப் பாதைக்கு மேலி ருந்து வந்து சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இருந்தாலும் இது நமது கோள்களோடு மோதவில்லை. செப்டம்பர் 2 அன்று புதனு டைய சுற்றுவட்டப்பாதையில் இருந்த அது , பூமியின் சுற்றுவட்டப்பாதையை அக்டோபர் 14 அன்று கடந்து சென்றது. பூமியின் சுற்று வட்டப்பாதையைக் கடக்கும்போது ஒரு நொடிக்கு 27 கி.மீ.வேகத்தில் பெகாசஸ் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கிச் சென்றது.

இதுபோன்ற சிறிய பாறைப் பொருட்கள் மற்ற நட்சத்திரங்களுக்கு இடையே கோள்கள் உருவான காலத்தில் தூக்கி வீசப்பட்ட பொருளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்தில் நுழையும் வேற்று நட்சத்திரக் கூட்டத்தின் முதல் பொருளும் இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள்.

வேற்று நட்சத்திர விருந்தாளி

சூரியக் குடும்பத்தை நோக்கி வந்து சென்ற பொருள் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட வெளியில் இருந்து வந்தது என்பதை எப்படி அறிந்தார்கள்?

வந்து சென்ற விண்பொருள் மணிக்கு 91,732 கி.மீ வேகத்தில், நமது கோள்கள் சூரி யனைச் சுற்றும் சமதளப் பாதைக்கு நேர் செங்குத்தாக வந்தது. நமது சூரியக் குடும்பத் தில் உள்ள பாறைப் பொருட்கள், வால் நட்சத்திரங்கள் இம்மாதிரி பாதையில் சுற்றுவ தில்லை. அவை பெரும்பாலும் நமது கோள்கள் சுற்றும் சமதளப் பாதையிலேதான் சுற்றிச் செல்லும்.

ஆனால், நமது சூரியக் குடும்பத்துக்கு விருந்தாளியாக வந்த பாறை புதன்கோள் பாதையில் நுழைந்து பிறகு சூரிய ஈர்ப்பு விசையால் உடனடியாகத் திரும்பிப் பூமியின் சுற்ற வட்டப்பாதையில் பூமிக்கு 1 கோடியே 50 லட்சம் மைல்களுக்கு உள்ளாகவே சென்றுவிட்டது. முதலில் இதற்கு வால் நட்சத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் எண் ‘சி/2017 ஹி1’ இதற்கு கொடுக்கப்பட்டது. பிறகு வால் நட்சத்திரத்துக்கு உரிய அறிகுறிகள் எவையும் இல்லை என்பதால் விண்பாறைப் பொருட்களுக்கான எண் ‘கி/2017 ஹி1’  இதற்குகொடுக்கப்பட்டுள்ளது.


பாக்டீரியாக்களுக்கும் உணர்வு உண்டு

நேனோ அளவில் இருக்கும் உயிரினமான பாக்டீரியாவுக்கு, தொடு உணர்வு உண்டு என்கிறது, ‘சயன்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு. ஒட்டுண்ணிகளான பாக்டீரியாக்கள், உயிரினங்களின் வயிற்றுச் சுவர் உள்ளிட்ட, உடல் பாகங்களில் தொற்றிக் கொண்டு, இனப்பெருக்கம் செய்பவை. அவை, ஒரு விலங்கில் இருந்து இன்னொன்றுக்கு தொற்றும் போது, அந்த இடத்தின் மேற்பரப்பை உணரவும், தம்மைச் சுற்றி உள்ளவற்றை அறியவும், தொடு உணர்வை பயன்படுத்துகின்றன என்கின்றனர், ஆய்வாளர்கள். வேதியல் சமிக்ஞைகளை அனுப்பி தகவல்களை பரிமாறுவது மட்டுமல்ல, தொடு உணர்வும் அவற்றின் பிழைப்புக்கு அவசியம்.


கடலில் மிதக்கும் காற்றாலைகள்

உலகிலேயே முதன்முறையாக, அயர்லாந்து நாட்டில், சமீபத்தில் செயல்பட துவங்கி உள்ளன. கடலுக்குள் காற்றாலைகள், ஏற்கனவே சில நாடு களில் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவை, ஆழமில்லாத கடல் பகுதிகளாக பார்த்துத் தான் கட்டு விக்கப்படுகின்றன. ஆனால், அயர்லாந்தில் அமைக்கப்பட்டிருக்கும், ‘ஹை விண்ட்’ காற்றாலை பண்ணை, அசலாகவே, கடல்நீரில் மிதக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள, அபெர்தீன்ஷயர் நகரின் கடற்கரையில் இருந்து, 25 கி.மீ., தொலைவில், கடலில் மிதக்கும்படி, அய்ந்து ஹை விண்ட் காற்றா லைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கரையை விட, கடலுக்குள் காற்றின் வேகம் அதிகம். எனவே, 830 அடி உயரம் உள்ள இந்த ஆலைகளால், மொத்தம், 30 மெகாவாட் மின் சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம், 22 ஆயிரம் வீடுகளின் பயன்பாட்டுக்கு போது மானது. கடலின் ஆழம், 2,600 அடிகள் இருந் தால் கூட, இந்த மிதவை காற்றாலைகளால், செம்மை யாக இயங்க முடியும்.

இத்திட்டம், வெறும் முன்னோட்டம் தான். விரைவில் சோதனை முடிந்ததும், அயர்லாந்து மேலும் பல மிதவை காற்றாலைகளை மிதக்க விடத் திட்டமிட்டு உள்ளது.


ஓட்டுநரின்றி ஓடும்  
‘கூகுள்’ கார்  

கூகுளின் தானோட்டி வாகன நிறுவனமான, ‘வேமோ’ சமீபத்தில், நிஜமாகவே தானோட்டி வாகனத்தை, சாலையில் வெள்ளோட்டம் பார்க்க துவங்கி இருக்கிறது. இதுவரை, தானோட்டி வாகன வெள்ளோட்டங்களின் போது, மற்ற வாகனங்களில், ஓட்டுனர் அமர்ந்திருப்பது போலவே, தானோட்டி வாகனத்திலும், ஒருவர் அமர்ந்திருப்பார்.

போக்கு வரத்து விளக்கு நிறுத்தங்களில் அல்லது கடந்து போகையில், வேமோ வாகனத்தில், வாகன ஓட்டுனர் இல்லாமல் இருப்பதை பார்த்தால், திடுக்கி டுவதை தடுக்கத் தான் இந்த ஏற்பாடு.

ஆனால், அக்., 15 முதல், ஓட்டுநர் இடத்தில் யாரும் இல்லாமலேயே, வாகனத்தை செலுத்த துவங்கி இருக்கிறது, வேமோ. ஆனால், அதே வாகனத்தில், வேமோவின் பொறியாளர் யாராவது ஒருத்தர் நிச்சயம் இருப்பார். அடுத்த சில மாதங்களில், வாடகை வாகன நிறுவனம் ஒன்றின் உதவியுடன், சாதாரண பயணியரையும் ஏற்றிச் செல்ல, வேமோ திட்டமிட்டு உள்ளது.இன்னும் மூன்று ஆண்டுகளில், தானோட்டி வாகனங்களை, வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய, கூகுளின் வேமோ திட்டமிட்டிருக் கிறது.


பாதத்தின் சூட்டை தணிக்கும் கிராபீன்

காலணிகளை அணியும் போது, பாதத்தில் வெளிப்படும் வெப்பம், ஒரு பெரும் தொந்தரவு. இதற்கு, ‘கிராபீன்’ எனும், விந்தைப் பொருள் உதவும் என்கின்றனர், இத்தாலியைச் சேர்ந்த, இத் தாலியானோ தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள்.

இவர்கள், சமீபத்தில், ‘பேடல்’ என்ற காலணி நிறுவனத்துடன் இணைந்து, கிராபீன் தாள்களை கொண்ட, ஒரு காலணியை தயாரித்து சோதித்து உள்ளனர். ஓர் அணுவின் தடிமனே கொண்ட கிராபீன் தாள், அருமையாக வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. காலணியில் அதை வைக்கும் போது, பாதத்தின் வெப்பத்தை விரைவில் கடத்தும் என்பதால், அதை அணிபவருக்கு, பாதச்சூடு ஒரு பிரச்சினையாக இருக்காது என்கின்றனர், இத்தாலி யானோ விஞ்ஞானிகள்.கிராபீன் தாளை அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக, பாதத்தை தொடும் பகுதியில், வழக்கமாக இருக்கும் பாலியூரிதேன் பட்டையின் மீது, கிராபீன் துகள்களை, புதிய வேதியல் முறையில் பதிய வைத்தனர் விஞ்ஞானிகள். இந்த பட்டைகள், பாதத்தின் வெப்பத்தை, 50 சதவீதத்தை வேகமாக கடத்துவதை கண் டறிந்தனர். இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ‘பிரெஷ் ஷூஸ்’ என்ற பெயரையும் சூட்டியிருக் கிறது, இத்தாலியானோ.

Banner
Banner