உலகின் முதல் தானோட்டி டிராம் வண்டியை, ஜெர்மனியிலுள்ள பாட்ஸ்டாம் நகரில் தொழில்நுட்ப வல்லுநர்கள், வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்து உள்ளனர்.

ரயில்களைப் போல அல்லாமல், டிராம் வண்டிகள், நகரின் சாலைகளுக்கு நடுவே புகுந்து செல்பவை. எனவே, பாதசாரிகள், இரு சக்கர வாகனங்கள், டிராமின் தண்டவாளத்திற்குக் குறுக்கே திடுமென வரும் வாய்ப்புகள் அதிகம். சீமென்ஸ் நிறுவனத்தின் கூட்டுறவில் தயாராகி இருக்கும் இந்த தானோட்டி டிராம் வண்டி, அத்தகைய குறுக்கீடுகளின்போது, பிரேக் போட்டு நின்று, பின் சென்று காட்டியது. பாட்ஸ்டாம் நகருக்கு அருகே உள்ள பெர்லின் நகரில் நடக்கும், இன்னோ டிரானஸ் - 2018 என்ற போக்குவரத்து தொழில்நுட்பக் கண்காட்சியை ஒட்டி இந்த வெள்ளோட்டம் நடத்திக் காட்டப்பட்டது. தானோட்டி கார்களில் உள்ள ஏதே லிடார், உணரிகள், கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களை, இந்த தானோட்டி டிராம் வண்டியும் பயன்படுத்தியது.

மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும் உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

பிரிட்டனைச் சேர்ந்த சர்ரே பல்கலைக்கழகம், அண்மையில், ரிமூவ் டெப்ரிஸ் என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இது, பூமியைச் சுற்றி தாழ்வாக சுழன்று வரும் விண்வெளி குப்பையை, வலை வீசிப் பிடிக்கும் துப்புரவுப் பணியை, வெற்றிகரமாக செய்திருக்கிறது.

பல நாடுகள், விண்வெளியில் செயற்கைக் கோள்களை, 60 ஆண்டுகளாக ஏவி வருகின்றன. இக்கோள்களுக்கு சில ஆண்டுகளே ஆயுள். பின், அவை பூமிக்கு மேலே உலோகக் குப்பை கழிவுகளாக சுற்றி வருகின்றன.

இக்குப்பை, புதிய செயற்கைக்கோள்களுடன் மோதி செயலிழக்கச் செய்யும் ஆபத்து நேரக்கூடும் என்பதால், விண்வெளிக் குப்பையை அகற்ற, பல வழிகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.

அதில் ஒன்றைத் தான் சர்ரே பல்கலைக்கழகம், தற்போது வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒரு கையளவு சிறிய செயற்கைக்கோளை, ரிமூவ் டெப்ரிஸ் கோள் வலைவீசிப் பிடித்துள்ளது. அடுத்தகட்டமாக, அதை பூமியை நோக்கி தள்ளிவிட, அது புவியீர்ப்பு விசைக்கு ஆட்பட்டு, அதிவேகமாக காற்று மண்டலத்தில் நுழைய, எரிந்து துகள்களாகிவிடும். இந்த முறையில், கணிசமான விண்வெளிக் குப்பையை அகற்றலாம் என, சர்ரே விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Banner
Banner