சிறிய தோட்டத்தை நடவு முதல், அறுவடை வரை செய்து பராமரிக்க, ஒரு ரோபோ வந்திருக்கிறது. ‘கார்டன் ஸ்பேஸ்’ என்ற பெயர் உள்ள இந்த ரோபோவை, உரிமையாளர் தனது மொபைல் மூலம் கண்காணிக்கலாம்.

ஒரு மொபைல் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டதும், அதன் மூலம் உரிமையாளருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது கார்டன் ஸ்பேஸ் ரோபோ. அந்த செயலியில் என்ன செடிகளை நடப்போகிறார் என்பதை உரிமையாளர் பதிவு செய்ததும், அதை எங்கே, எப்படி நட வேண்டும் என ரோபோ வழி சொல்கிறது.

சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் இந்த ரோபோவுடன் ஒரு நீர் குழாயை இணைத்துவிட்டால் தோட்டத்தை வலம் வந்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறது. பூச்சிகள் வந்து அமர்ந்தால், நீரை பீய்ச்சியடித்து விரட்டுகிறது. செடியில் விளைச்சலை எப்போது அறுவடை செய்யலாம் என்பதையும் உரிமையாளருக்கு நினைவூட்டும் இந்த ரோபோவில், 360 கோணத்திலும் சுழலும் வீடியோ மற்றும் புகைப்பட கேமராக்கள் உள்ளன.

மாதாந்திர சந்தா அடிப்படையில் இந்த ரோபோவை மேகக் கணினி சேவையுடனும் இணைத்து, தோட்டப் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை பெற முடியும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுவோரை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, இப்போதைக்கு, 100 சதுர அடி தோட்டத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் என்கிறது, கார்டன் ஸ்பேசை தயாரித்துள்ள ஆஸ்திரேலிய நிறுவனம்.

‘பச்சோந்தி’ போல நிறம் மாறும் கருவிகள்!

ஒரு தயாரிக்கப்பட்ட பொருளால், பச்சோந்தியைப் போல நிறத்தை மாற்றிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்... முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் அச்சிடப்பட்ட ஒரு பொருளின் நிறத்தை நினைத்தபடி மாற்றும் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின், எம்.அய்.டி ஆய்வு மய்யத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
இந்த அசத்தல் தொழில்நுட்பத்திற்கு, ‘கலர் பேப்’ என, பெயரிடப்பட்டு உள்ளது. திரையில் தெரியும் உருவங்களின் துல்லியத்தை அளக்க, ‘பிக்செல்’ என்ற அளவு பயன்படுவதைப் போல, முப்பரிமாண பொருட்களின் துல்லியத்தை அளக்க, ‘வோக்செல்’ என்ற அளவை பயன்படுகிறது. கலர் பேப் முறையில் முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிடப்படும் பொருட்களின் மேற்பரப்பில் சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களைக் கொண்ட வோக்செல்கள் இருக்கும்.

இந்தப் பொருளை புறஊதா கதிர்களில் காட்டினால், மூன்று வண்ணங்களும் முடுக்கப்பட, நம் கண்களுக்கு நன்றாகத் தெரியும். புற ஊதாக் கதிரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பிறகும், அந்த மூன்று வண்ணங்களும் கலவையாக நமக்குத் தெரிந்தபடியே இருக்கும். அதேபோல நம் கண்ணுக்குத் தெரியும் ஒலியின் குறிப்பிட்ட அலைவரிசையை அந்த பொருளின் மீது பாய்ச்சும் போது, அதை மட்டும் நம் கண்ணுக்குத் தெரியாதபடி அணைக்கவும் முடியும். இந்த முறையில் நமக்கு வேண்டிய வண்ணத்திற்கு ஒரு பொருளை மாற்ற முடியும்.

இப்போதைக்கு எம்.அய்.டி.,யின் தொழில்நுட்பம் மூன்று அடிப்படை நிறங்களை மட்டுமே கையாள்கிறது. அதன் துல்லியமும் சற்று குறைவாகவே இருக்கிறது. ஆனால், மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் வண்ணங்களின் அளவை அதிகரிக்கவும், துல்லியத்தை அதிகரிக்கவும் முடியும் என்கின்றனர், எம்.அய்.டி., விஞ்ஞானிகள். தினமும் பயன்படுத்தப்படும் கருவிகள் நன்றாக இருந்தாலும், அவை பழையவை என்பதாலேயே தூக்கி எறியும் கலாச்சாரம் உலகெங்கும் பரவி இருக்கிறது. இந்த வண்ணம் மாற்றும் தொழில்நுட்பம், ஒரு பொருளின் நிறத்தை மாற்றி புதியது போல ஆக்கிவிடுவதால், அத்தகைய விரயங்களை தடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆளில்லாமல் பயணிக்கும் தானோட்டிப் படகு

வானூர்தி, கார், லாரி என்று பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பம் வந்துவிட்டது. கப்பலில் அப்படி வராமலா இருக்கும்... இதோ வந்தாச்சு! அன்டார்டிகா கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக, ஆஸ்திரேலிய அரசின் அறிவியல் அமைப்பான, சி.எஸ்.அய்.ஆர்.ஓ., ஆளில்லாமல் கடலில் பயணிக்கும் ‘செயில் ட்ரோன்’ என்ற ஆய்வுப் படகை பயன்படுத்தவிருக்கிறது.

சி.எஸ்.அய்.ஆர்.ஓ.,வும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஓர் அமைப்பும் கூட்டாக செயில் ட்ரோனை உருவாக்கியுள்ளன. இந்த தானோட்டிப் படகில் உள்ள பாய்மரம், காற்றின் சக்தியை பயன்படுத்தி பயணிக்க, இதன் மீதுள்ள சூரிய மின் பலகை, பல கருவிகளுக்குத் தேவையான மின்சாரத்தை தரும்.

தன் இருப்பிடத்தையும், போக வேண்டிய கடல் பாதையையும் அறிய, செயற்கைக் கோளை செயில் ட்ரோன் பயன்படுத்துகிறது. எதிரே வரும் படகுகள், பனிப் பாறைகளை தவிர்க்க உதவும் உணரி போன்ற கருவிகள் இப்படகில் இருக்கின்றன. தேவைப்பட்டால், ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக் கோள் வழியே, படகை செலுத்தவும் முடியும்.

அன்டார்டிகா பகுதியின் வானிலை, கடல் நீரிலுள்ள கரியமிலம் மற்றும் இதர தன்மைகளை அளக்கும் கருவிகள் செயில் ட்ரோனில் பொருத்தப் பட்டுள்ளன.

இரவு - பகல் பாராமல் கடலின் தன்மைகளை தன் கருவிகள் மூலம் உணர்ந்து, அந்த தகவல்களை கரையிலிருக்கும் ஆய்வகத்திற்கு தொடர்ந்து அனுப்ப வல்லது செயில் ட்ரோன். ‘இதுவரை கடல் குறித்து பெற முடியாத தகவல்களை இந்த தானோட்டிப் படகு தொழில்நுட்பம் மூலம் அறிவியல் உலகம் பெற முடியும்‘ என்கிறார், சி.எஸ்.அய்.ஆர்.ஓ.,வின் ஆய்வுத் தலைவரான ஆண்ட்ரியாஸ் மருசோஸ்.

பேரிடரிலிருந்து மீட்க உதவும் செயலி!

 

இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த இடங்களில் சிக்கியவர்களால், பல மணி நேரங்கள் உயிர் பிழைத்திருக்க முடிகிறது. அப்படி பிழைத்திருப் பவர்களுக்கு உரிய நேரத்திற்குள் முதலுதவி மற்றும் மீட்பு உதவிகள் சென்று சேராதபோது தான் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

அப்படி பேரிடர்களில் சிக்கியவர்கள், தங்கள் இருப்பிடத்தை தெரிவிக்க உதவும் தொழில்நுட்பத்தை, ஸ்பெயினின் அலிகான்ட் ஆய்வுப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் செயலி வடிவிலான இந்த தொழில்நுட்பம், ஆபத்துக்கு உதவி கோரும் சமிக்ஞைகளை ‘வை--பை’ மூலம் அனுப்பியபடி இருக்கும். இந்த சமிக்ஞைகளை தேடும் பணியில் உள்ளோர் ஒரு சிறிய ஆன்டெனா பொருத்திய கருவியை மொபைலில் இணைத்து பயன்படுத்தலாம். பேரிடரில் சிக்கியவர்களின் இருப் பிடத்தை காட்டித் தரும் சமிக்ஞைகள் கிடைத்ததும் உடனே அந்த இடத்தை நோக்கி சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஆபத்தில் சிக்கியவர்கள் இந்த செயலியை முடுக்கி விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. மொபைல் டவர்கள் இல்லாத இடங்களிலும், குறைந்தது, 4 கி.மீ., தொலைவு வரை இந்தச் செயலியால் சமிக்ஞைகளை அனுப்ப முடியும்.

மலை, காடுகள், கட்டட இடிபாடுகள், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து மீட்க இத்தொழில்நுட்பம் உதவும் என, ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.


இந்தியாவில் நடைபெறும் ஒரே பனிச்சறுக்கு கார் பந்தயத்தில் முதன்முதலாக ஒரு பெண் பங்கேற்றுள்ளார். பல்வேறு சாகசங்களும் சவால்களும் நிறைந்த பனிப் பாதையில் கார் பந்தயத்தில் இதுவரை ஆண்களே பங்கேற்றுள்ளனர். இரண்டு நாள்கள் காஷ்மீரில் இந்தப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

பனிச்சறுக்கு கார் பந்தயத்தில் பெண்ணா? என்று அனைவரும் புருவம் உயர்த்துகின்றனர்.

காஷ்மீரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷர்மீன் முஸ்தாக். 40 வயதாகும் இவர் ஒரு மருத்துவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஷர்மீன் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். “ஒரு வழியாக போட்டியில் பங்கேற்றுவிட்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு மூழ்கிவிடுமோ என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். நல்லபடியாக அது நிறைவேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறேன். காஷ்மீரில் நடக்கும் கார் பந்தயத்தை எப்போதும் பார்வையாளராக இருந்து பார்ப்பதுண்டு. அப்போது பந்தயக்காரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பேன். தற்போது எனது பெயரையும் இந்தப் போட்டிக்கு பதிவு செய்து பங்கேற்றதில் பெருமையாக உணர்கிறேன்.

காஷ்மீரியப் பெண்களுக்கு நான் ஓர் உத்வேகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகளைத் தாண்டி காஷ்மீர் பெண்கள் வெளியே வர வேண்டும். உங்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதனைத் தவறவிடக் கூடாது. வெற்றி, தோல்வி என்பது அடுத்த கட்டம். திறமையை வெளிப்படுத்துவதே முக்கியம். உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க தடைகளைத் தாண்டி வெளியே வாருங்கள்’’ என்றும் அறைகூவல் விடுத்துள்ளார் இந்த மருத்துவர்.

“யாருக்குத் தெரியும் வரும்காலத்தில் காஷ்மீர் பெண்கள் நாங்கள் ஒரு குழுவாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்‘’ என்று கட்டைவிரல் உயர்த்தி காட்டுகிறார் ஷர்மீன்.

உலக சுகாதார நிறுவனக் காலண்டரில் இந்தியப் பெண்!

உலக சுகாதார நிறுவனத்தின்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு பெண். யார் அவர்? மிகப் பெரிய நடிகையோ, பிரபலமோ அல்ல, இமாச்சலப் பிரதேசத்தில் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றும் கீதா வர்மா தான், உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பெற்றுள்ளார்.

கீதாவின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தான் இந்த உயரத்தை எட்ட வைத்துள்ளது என்கின்றனர் உடன் பணிபுரிவோர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாப்நாட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா வர்மா. சுகாதாரப் பணியாளரான இவர், தான் பணியாற்றும் பகுதிகளில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசிகளை அங்குள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் வழங்கியுள்ளார். மணல்வாரி அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வைரஸால் பரவுகின்றன. இந்த நோய் தாக்கும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதன் காரணமாக சுவாசப் பிரச்சினை, மூளையில் பாதிப்பு, காதில் சீழ்வடிதல் போன்ற நிரந்த பாதிப்புகள் ஏற்படும். ரூபெல்லா என்பதும் வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய நோய்தான். ஆனால் இந்த நோய் தாக்கிய வர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாலும். சளி, காய்ச்சல், இருமல் என்ற சாதாரண அறிகுறியோடு இந்த நோய் போய்விடும். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும் போது, கருவில் உள்ள குழந்தைகளுக்கு இருதயம், கல்லீரல் பாதிக்கப்படும். சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தடுப்பூசி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த தடுப்பூசியைத் தான் தான் பணியாற்றும் பகுதியில் 100 சதவீதம் விநியோகித்துள்ளார் கீதா வர்மா. அதே போன்று தடுப் பூசிக்கான முகாம்களிலும் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி யுள்ளார். இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதியில் ஒவ்வொரு பகுதியாகப் பயணித்து தடுப்பூசிகளை தக்க சமயத்தில் வழங்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. மேடு, பள்ளம், பள்ளத்தாக்கு, பனி படர்ந்த சாலைகள் என பல சவால்களைச் சந்தித்து மிகவும் அர்ப்பணிப்புடன் தன் பணியைச் செய்து வருகிறார் கீதா.

சாதனைகள் என்பது யாவர்க்கும் சாத்தியமே!
தையல் கலையில் அசத்தும் மாற்றுத்திறனாளிப் பெண்!

சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்த அருள்மணி இணையர்களின் மகளான இவர், பிறவிலேயே பெருமூளைவாதம் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதனால், உடல் வளர்ச்சி என்பது அவருக்கு எட்டாக்கனியாகி விட்டது. பள்ளிப்பருவத்தில் சக மாணவர்களின் கேலிப்பேச்சு, மனதை துளைக்க துவண் டவர், வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.

உடலில் குறை என்பது நான் விரும்பி பெற்ற வரமல்ல. எனவே, அதை பொருட்படுத்த தேவையில்லை என்று முடிவு செய்தவர், தற்போது தனது தன்னம்பிக்கையால் தையல் கலையில் தேர்ந்து, பிறருக்கு நம்பிக்கையூட்டும் நாயகியாய் ஜொலிக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளும், நோய்களால் பாதிக்கப் பட்டவர் களும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் தயவில் வாழ வேண்டும் என்பது நமது சமூகத்தில் ஒரு எழுதப்படாத விதி.

எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு, அதன் மூலம் பெற் றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். சிரமப்படுபவர்களுக்கு  முன்னுதாரணமாக  இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று மனதில் தோன்றியது. அதற்காக நான் தேர்வு செய்தது தான் தையல் கலை. காமராஜர் காலனியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தில் சேர்ந்தேன். மூன்றரை மாதம் தையல் கலையில் பயிற்சி பெற்றேன்.

தற்போது ஆண்கள் சர்ட், சுடிதார், பிளவுஸ் என்று எண்ணற்ற ஆடைகளை வடிவமைக்க கற்றுக் கொண்டேன்.

விரைவில் தையலகம் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். ஆண்களுக்கு உத்தியேகம் புருசலட்சணம் என்பார்கள். பெண் களுக்கு வேலைவாய்ப்பு என்பது என்னைப் பெறுத்தவரை வாழ்க்கை. சுயமாக ஒரு தொழிலை கற்றுக் கொண்டதால் புதிய பிறவி கிடைத்தது போல் உணர்கிறேன். எனவே மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள், என்று நிறைவு செய்கிறார் பூர்ணிமா.

ஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தின் பொறுப்பாளர் நாகராஜ் கூறுகையில், கடும் சிரமங்களுக்கு இடையில் பூர்ணிமா நம்பிக்கையோடு மய்யத்தில், பயிற்சி பெற வந்தது வியக்க வைத்தது. இதனால் அவருக்காக தையல் மிசினில் சில மாற்றங்களை செய்தேன்.

அவரால் வழக்கமான இருக்கையில்  அமர்ந்து பயிற்சி பெற முடியாது என்பதால், பிரத்யேகமாக ஒரு இருக்கையை வடிவமைத்தேன்.

மிகுந்த அர்ப்பணிப் புடன் பயிற்சி பெற்றவர், தற்போது  அனைத்து வகை உடைகளையும் அற்புதமாக தைத்து  வருகிறார்.  எனக்கு தெரிந்து  இந்தியா விலேயே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு, தையல் கலையில் சாதனை படைக்கும் ஒரே பெண் பூர்ணிமா தான். இவர் தைக்கும் துணிகள் அனைத்தும் அத்தனை நேர்த்தியாக உள்ளது.

இங்கு பயிற்சி பெறும் 60 பேரும், அவரைப் போல தைக்க வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளனர்.

இது தான் அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவரை முன்னுதாரணமாக கொண்டு, யார் எங்கள் மய்யத்திற்கு வந்தாலும் எங்களால் இயன்ற உதவிகளை செய்து பயிற்சி அளிக்க காத்திருக் கிறோம், என்றார்.


ஆழ்கடலில் சிக்கி, கரைக்கு வர முடியாதவர்களைக் காப்பாற்ற, ஆஸ்திரேலியாவின் கடலோர காவல் அமைப்பினர் வெற்றிகரமாக, ‘ட்ரோன்’களை பயன்படுத்தி உள்ளனர்.

அண்மையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நீந்தப் போன இரு இளைஞர்கள், வெகு நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை. இந்த தகவல் கிடைத்ததும், கடலோர காவல் பணியாளர்கள், புதிதாக வாங்கிய ஆளில்லாமல் பறக்கும் வாகனத்தை அனுப்பி, தேடல் பணியில் ஈடுபட்டனர்.

கரையிலிருந்து முக்கால் கி.மீ., தொலைவில் அந்த இளைஞர்கள் தத்தளிப்பதை, ட்ரோனில் இருந்த கேமரா மூலம் காவல் படையினர் கண்டறிந்தனர். உடனே, ஒரு பொத்தானை அழுத்தியதும், ட்ரோனிலிருந்து மிதவை ஒன்று, கடலில் இருந்த இளைஞர்களை நோக்கி விழுந்தது. விழும்போதே அந்த மிதவை காற்று நிரம்பி விரிவடைந்து, கடலில் மிதந்தது. அதைப் பிடித்துக்கொண்டு, அந்த இரு இளைஞர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.

பேரிடர் காலங்களில், கடலில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க ட்ரோன்கள் ஒரு வழி என்று, நியூ சவுத்வேல்ஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மீட்புப் பணிக்கு வெறும், 70 வினாடிகள் தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

குளோனிங் முறையில் குரங்குகள்!
விஞ்ஞானிகள் சாதனை

சீன விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டுக்குட்டி எப்படி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டதோ, அதே முறையில் தற்போது குரங்குக்குட்டிகளை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், மனிதனை குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள மக்காக் வகை குரங்குகளுக்கு, ஷோங், ஷோங் மற்றும் ஹுவா ஹுவா என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 6 வாரங்களுக்கு முன்பு பிறந்த இந்த இரண்டு குட்டிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. இந்த சோதனை மருத்துவத்துறையிலும் சீனாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெழுகுவத்தியில் இருந்து மின்சாரம்

வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம், இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே வந்து விட்டது. என்றாலும், அந்த தொழில்நுட்பம் வீடுகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு சரியான கருவிகள் உருவாக்கப்படவில்லை.

நார்வேயைச் சேர்ந்த, ‘லுமினைசர்’ நிறுவனம், சாதாரண மெழுகுவர்த்தி தரும் வெப்பத்தை வைத்து, சில எல்.இ.டி., விளக்குகளை ஆறு மணி நேரம் வரை எரியச் செய்யும் லாந்தர் விளக்கை உருவாக்கி இருக்கிறது.

மெழுகுவர்த்தியை ஏற்றி லுமினைசருக்குள் வைத்து விட்டால், அந்த வெப்பத்திலிருந்து மின்சாரத்தை தயாரித்து, எல்.இ.டி., விளக்குகள் பளிச்சென்று எரிகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விசயம், மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தை விட, 15 மடங்கு வெளிச்சத்தை இந்த எல்.இ.டி., விளக்குகள் தருகின்றன.

செவ்வாய் கிரகத்தில் வலம் வரும், ‘கியூரியாசிட்டி’ ஊர்தியிலும் இதே தொழில்நுட்பம் தான் பயன் படுத்தப்படுகிறது என்கிறது, லுமினைசர் நிறுவனம்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இணையத்தில் விற்பனைக்கு வரவுள்ளது, இந்த மெழுகுவர்த்தி மின் லாந்தர்.

செவ்வாயில் பனிக்கட்டிகள்!   

செவ்வாய் ஒரு வறண்ட கிரகம் என்று தான் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், செவ்வாயின் நிலப் பகுதிக்கு அடியில் பனிக் கட்டிகள் உறைந்த நிலையில் இருக்கக்கூடும் என்பதை, அண்மையில், ‘நாசா’வின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான, ‘நாசா’ அனுப்பிய செவ்வாய் ஆய்வுக் கலனின் ரேடார் கருவி, செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து, தகவல்களை அனுப் பியது.

அந்தத் தகவல்களை வைத்துப் பார்க்கையில், ஆய்வு செய்த சில இடங்களில், செவ்வாயின் நிலப் பரப்புக்கு அடியில், 90 மீட்டர் அளவுக்கு தடிமனான பனிக்கட்டிப் பாறைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த பனிக்கட்டிகள் மண், கல் கலக்காமல் துய்மையான நிலையில் இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இது உறுதி செய்யப்பட்டால், பூமியிலிருந்து செவ் வாய்க்கு செல்ல இருக்கும் எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, குடிநீருக்கு பிரச்சினை இருக்காது. எங்கே தோண்டினால் பனிக்கட்டிப் பாறைகள் இருக்கும் என்பதை, பூமியிலிருக்கும் விஞ்ஞானிகளே துல்லிய மாக சொல்லி அனுப்பி விடுவர்.

“புளு டிராம்'' பேருந்து!

சிங்கப்பூரிலுள்ள நான் யாங் பல்கலைக்கழக வளாகத்திற் குள், கடந்த சில ஆண்டுகளாக, பரிசோ தனை முறையில் தானோட்டி வாகனம் ஒன்று இயங்கி வருகிறது.

மாணவர்களும், பேராசிரி யர்களும் பயன்படுத்தும், ‘புளூ டிராம்‘ என்ற இந்த வாகனத்தில், அண்மையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மின்சாரத்தில் இயங்கிய அந்தக் கால, ‘டிராம்‘ வண்டிகளைப் போல இயங்கினாலும், இந்த வண்டிக்கு மேலே மின் கம்பிகள் இல்லை. மாறாக, ஒவ்வொரு நிறுத்தத்திலும் இதற்கு மின்னேற்றம் செய்யப்படுகிறது.

வெறும், 20 வினாடிகளில், 2 கி.மீ., தூரம் செல்வதற்குத் தேவையான மின்சாரம், வாகனத்தின் மின்கலன்களில் ஏறிவிடும். அடுத்த நிறுத்தத்தில், பயணியர் ஏறி அமர்வதற்குள் மீண்டும் மின்னேற்றம் நிகழ்ந்துவிடும்.

இந்த பரிசோதனை வெற்றி பெற்றால், நகர நாடான சிங்கப்பூர் முழுவதும், பயணியர் போக்குவரத்துக்கு புளூ டிராம் வண்டிகளை அந்நாட்டு அரசு களமிறக்கக்கூடும்.

Banner
Banner