இன்று திறன்பேசி எப்போதும் நம்முடன் இருக்கிறது. இதனால் ஒலி, காட்சி, எழுத்து என, தினமும் எட்டு மணி நேரத்திற்கும் மேல் அவற்றை நுகரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

மனைவி/கணவன் அழைப்புகள், கடன்காரர் மிரட்டல்கள் போன்றவை மட்டுமல்ல, இணையம் மூலம், ‘வாட்ஸ் ஆப்’ வதந்திகள், ‘பேஸ்புக்‘ பொறாமைகள், எதிர்மறை மனநிலைகளைத் தூண்டும் தகவல்கள், கட்டுரைகளின் தாக்கங்களால், நாள் முழுவதும் ஒருவரின் மனநிலை மாறுபாட்டுக்கு உள்ளாக நேரிடுகிறது.

இதற்கு மாற்று மருந்தாக, ‘மூட்ரைஸ்’  என்ற ஒரு செயலியை உருவாக்கியிருக்கிறார், மைக்கேல் பிலிப்ஸ் மாஸ்கோவிட்ஸ். இந்த செயலி காட்சி, ஒலி மற்றும் எழுத்து வடிவில் பயனாளிக்கு, ‘டிஜிட்டல் சத்துணவை’ நாள் முழுவதும் தரும் என்கிறார் அவர்.

மூட்ரைஸ் செயலி மூலம் வரும் எல்லா உள்ளடக்கங்களும், அதை நுகர்வோருக்கு நல்லுணர்வுகளைத் தரக்கூடியவை என, உளவியல் மற்றும் மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்டவை என்கிறார் மாஸ் கோவிட்ஸ். நமக்குள் குறிப்பிட்ட உணர்வுகள் ஏற்படுவதற்கு, குறிப்பிட்ட, ‘நியூரோடிரான்ஸ்மிட்டர்’ என்ற வேதிப்பொருட்கள் நம் உடலில் உற்பத்தியாக வேண்டும்.

உதாரணத்திற்கு மகிழ்ச்சிக்கு, செரோடோனின், தன்னம்பிக்கைக்கு, டோபாமைன், மனித தொடர்புக்கு, ஆக்சிடோசின், தெம்புக்கு, என்டோர்பின், மன அமைதிக்கு, காமா அமினோபியூடைரிக் அமிலம், மன ஒருமைப்பாட்டிற்கு, அசிடைல்சோலின், போன்றவை சுரக்க வேண்டும்.

மூட்ரைஸ் செயலியில் வரும் இசை, காணொளி, கட்டுரைகள் போன்றவை, இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு எந்த உணர்வு வேண்டுமோ, அந்த உணர்வுக்கான பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுத்து படிக்கலாம், பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

இந்த செயலியை பயன்படுத்த, மாதம், 500 ரூபாய் வரை சந்தா செலுத்த வேண்டும் என்பது தான், கவலையை தருகிறது.

 

ஜப்பானிய விண்வெளி அமைப்பான, ‘ஜாக்சா’ அனுப்பிய, ‘ஹயாபுசா - 2’ விண்கலம், வெற்றிகரமாக இரண்டு சாதனைகளை செய்திருக்கிறது. முதலாவது, பூமிக்கு அருகில் கடந்து செல்லும் விண்கல்லான, ‘ரியுகூ’வின் மேல் பத்திரமாகச் சென்று அமர்ந்து கொண்டது. அடுத்தது, 1 கி.மீ., நீளமுள்ள அந்த விண்கல்லை குடைந்து, அதன் துகள்களை சேகரித்திருப்பது.

கடந்த, 2014இல் ஏவப்பட்ட ஹயாபுசா - 2 விண்கலம், 2018 ஜூனில் ரியுகூவின் சுற்று வட்டப்பாதையை நெருங்கியது. பின், செப்டம்பர், 2018இல் இரண்டு துரப்பணக் கருவிகளை வெற்றிகரமாக ரியுகூவின் மேல் அமரச் செய்தது.

அந்த இரண்டு துரப்பணக் கருவிகளும் ரியுகூவின் மேற்பரப்பைக் கிளறி, துகள்களை சேகரித்தன.

ஆனால் ரியுகூ விண்கல் கணித்ததைவிட கடினமாக இருந்ததால், பிற சோதனைகளை முடித்த பின், ரியுகூவை துளையிடும் கடினமான பணியை செய்யலாம் என, ஜாக்சா விஞ்ஞானிகள் ஒத்திவைத்தனர்.

விண்கல்லிலிருந்து, 20 கி.மீ., தூரத்தில் கண் காணிப்பிலிருந்த, ஹயாபுசா - 2 விண் கலம், கடந்த வாரம் பத்திரமாக ரியுகூ மீது

தரையிறங்கியது. அடுத்த, 18 மாதங்களுக்கு அது அங்கேயே இருக்கும்.

துரப்பணக் கருவிகள் ரியுகூவை குடைந்து, மேலும் துகள் மாதிரிகளை எடுத்து, 2022இல் பூமிக்கு திரும்பும்.

பிரபஞ்சத்தில், 4.6 பில்லியன் ஆண்டு களுக்கும் முந்தைய விண்கற்களின் மாதிரி களை ஆராய்ந்தால், நமது சூரிய மண்டலம் உருவான விதம், உயிர்கள் உருவான விதம் போன்றவற்றை அறிய முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த, தனியார் விண்வெளி அமைப்பான, ‘ஆர்பெக்ஸ்’ முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் ஒரு முழு ராக்கெட் இயந்திரத்தை அச்சிட்டுள்ளது. இந்த முறையில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய ராக்கெட் இது தான்.

‘கியூப்சாட்’ எனப்படும் மிகச் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்ட, ‘ஆர்பெக்ஸ் பிரைம்‘ ராக்கெட்டின் இரண்டாம் நிலை இயந்திரமாக, முப்பரிமாண அச்சு மூலம் வடிக்கப்பட்ட இயந்திரம் பொருத்தப்படும்.

இந்த வகை ராக்கெட்டுகளைவிட, 30 சதவீதம் எடை குறைவாகவும், 20 சதவீதம் செம்மையாகவும் இயங்கும் திறன் கொண்டது. சிறு சிறு பாகங்களாக தயாரித்து பற்றவைத்தல் அல்லது ரிவெட் மூலம் இணைக்கப்படுவதற்கு பதில், முப்பரிமாண அச்சியந்திரத்தில் ஒரே தடவையில் முழுமையாக தயாரிக்கப்பட்டது, இந்த ராக்கெட் இயந்திரம்.

இந்த இயந்திரத்தில் உள்ள எரிபொருள், ‘பயோபுரப்பேன்’ வகையைச் சேர்ந்தது. அதாவது, விவசாயக் கழிவுகள் போன்றவை மூலம் தயாரிக்கப் பட்ட புரப்பேன் எரிபொருளைக் கொண்டது.

இதனால், பெட்ரோலியப் பொருட்களைவிட, 10 சதவீதம் குறைவான கரியமில வாயுவையே இது வெளியிடும்.

வரும், 2021இல் பிரிட்டனின் ஏவுதளத்திலேயே, பிரிட்டன் செயற்கைக் கோள்களைத் தாங்கி, பிரிட் டனின் தனியார் விண்வெளி அமைப்பு விண்ணில் பாயவிருக்கிறது.

Banner
Banner