. ஒரு செல்லை இரண்டாக பிளக்கும் தொழில் நுட்பம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது தான். ஆனால், அது ஆராய்ச்சி யாளர்களின் வேகத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள் ளனர். இது இரண்டே நிமிடங்களில் 150 உயி ருள்ள செல்களை சரிபாதியாக வெட்டித் தருகிறது. இரண்டாக வெட்டிய செல்களை ஆராய்வது, புற்றுநோய், நரம்பு செல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் உதவும். புதிய பொருட்களை உருவாக்கும் பொறி யாளர்களுக்கும் செல் ஆராய்ச்சி உதவுகிறது.

. சாலைப் போக்குவரத்து இரைச்சல் அதிக முள்ள பகுதியில் வசிக்கும் பெண்களின் கருத் தரிக்கும் திறன் பாதிக்கப்படுவதாக டென்மார்க் கிலுள்ள மருத்துவ மய்யத்தின் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். டென்மார்க்கில் வசிக்கும், 65 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதிக வாகன இரைச்சல் உள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு கருத்தரிக்கும் முயற்சிகள் வெற்றி பெருவது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை தாமதமாவ தாக ஆய்வில் தெரியவந்தது. வீட்டிற்குள் வரும் இரைச்சலை முடிந்தவரை தடுப்பது உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

. இன்று எல்லோர் கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் மூளையின் செயல் திறனை பாதிக்கிறதா? அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 800 பேரிடம் ஒரு சோதனையை நடத்தினர். அதில் ஸ்மார்ட்போனை வைத்திருக்கலாம்; ஆனால், பயன்படுத்தக் கூடாது என்று ஒரு தரப்பின ரிடமும், ஸ்மார்ட்போனை வைத்திருக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரிடமும் நிபந்தனையிட்டு, சில மூளைத்திறனை சோதிக்கும் தேர்வுகளை நடத்தினர். இறுதியில், ஸ்மார்ட்போனுடன் தேர்வில் பங்கேற்றவர்களின், தேர்வில் குறை வாகவே வெற்றிபெற்றது தெரியவந்தது. இத னால், ஸ்மார்ட்போனை பயன்படுத்தாவிட்டாலும், அது அருகில் இருப்பதேகூட, மூளையின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பிளாஸ்திரி வடிவில் தடுப்பூசிஊசியின் வலிக்கு பயந்தே பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. எனவே, பிளாஸ்திரியின் வடிவில் தடுப்பு மருந்துகளை போட்டால் என்ன என்று யோசித்தனர், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள்.

அதன் விளைவாக பிளாஸ்திரி வடிவில் தடுப்பு மருந்தை செலுத்தும் உத்தியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அண்மையில் இந்த பிளாஸ்திரி மூலம் சிலருக்கு இன்புளு யென்சா தடுப்பூசிகளை போட்டு வெள்ளோட்டம் பார்த்ததில், பெரும்பாலானோர், இனிமேல் இதேபோல தடுப்பு மருந்துகளை போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியா ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள பிளாஸ் திரியில், மிக நுண்ணிய பிளாஸ்டிக் ஊசிகள் இருக்கின்றன. அந்த ஊசிகளில் திரவ வடிவில் இல்லாமல், பொடிகளாக தடுப்பு மருந்து வைக்கப்படுகிறது. பிளாஸ்திரியை கையில் ஒட்டிக்கொண்டால் சில நிமிடங்களில் ஊசி முனை கரைந்து மருந்துப் பொடி, ரத்தத்தில் கலந்துவிடும். வலி துளியும் இருக்காது. மருந்து உடலில் கலந்ததும், பிளாஸ்திரியை குப்பையில் போட்டு விடலாம். அதிலுள்ள நுண் ஊசிகளின் முனை கரைந்துவிடும் என்பதால், குப்பையை தொடுவோருக்கு எந்த தொற்றும் ஏற்படாது.

தடுப்பு மருந்து பொடி வடிவில் இருப்பதால், அவற்றை பாதுகாக்க குளிர் சாதனங்கள் எதுவும் தேவையில்லை. வளரும் நாடுகளில் தடுப்பூசி திட்டங்களுக்கு பிளாஸ்திரி வடிவ ஊசி நிச்சயம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும் என்று ஜார்ஜியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை, பிரபல மருத்துவ இதழான, ‘லான்செட்’டில் அண் மையில் வெளியிடப்பட்டுள்ளது.

உருவாகிறது விண்வெளி ராணுவம்!விண்வெளி ஆராய்ச்சியில் இன்று பல நாடுகள் ஆர்வம் செலுத்துவதால், அமெரிக்காவுக்கு மேலுள்ள விண் வெளிப் பகுதியை பாதுகாக்க தனி படை தேவை என்று அந்நாட்டு நாடாளு மன்றத்தில் ஒரு தரப்பினர் நினைக் கின்றனர்.

அவர்கள், அண்மையில், ‘அமெரிக்க விண்வெளிப் படை’ ஒன்றை அமைக்க சட்ட முன்வரைவை உருவாக்கி விவா தத்திற்கு விட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளியின் பாது காப்பு தொடர்பான அனைத்தையும் இந்தப் படை மேற்பார்வை செய்யும். இருந்தாலும், அந்நாட்டு விமானப் படையின் ஒரு அங்கமாகவே செயல் படும் என்று சட்டம் இயற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்க விமானப் படை யின் தலைமை இதை எதிர்க்கிறது.

‘ஏற்கனவே அந்த வேலையில் முக்கால் வாசியை நாங்கள் செய்து கொண்டு தானே இருக்கிறோம், பிறகு எதற்கு தனி விண்வெளிப்படை?’ என்று அமெரிக்க விமானப்படை உயர் அதி காரி ஒருவர் கேட்டிருக்கிறார்.

வளையும் ‘டிவி’ திரை!

திரைத் தொழில்நுட்பத்தில், பல புதுமைகளை விடாப் பிடியாக அறி முகப்படுத்தி வரும் எல்.ஜி., அண்மை யில் வளைந்து கொடுக்கும் தன்மை யுள்ள, ‘டிவி’ திரையை அறிவித்துள் ளது.

ஒ.எல்.இ.டி., தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த, ‘டிவி’ யை, சுவற்றில் ஓவியம் போல ஆணி அடித்து மாட்டி விட்டு, தேவைப்படாதபோது சுருட்டி வைத்துக்கொள்ள முடியும்.

அது மட்டு மல்ல, இந்தத் திரைக்கு அப்பால் உள்ள வகை களை, 40 சதவீத தெளிவுடன் பார்க்கவும் முடியும் என் கிறது எல்.ஜி. வர்த்தக வளாகங்களில் விளம்பரங் களுக்கும், பெரிய பதாகை களைப் போல பொது இடங்களில் தொங்க விடவும் இந்த திரை பயன்படும் என்கிறது எல்.ஜி., இத்த னைக்கும் இதன் துல்லியம், எச்.டி., திரைகளுக்கு ஈடாக இருப்பதுதான் ஆச்சரியம்.  

‘வியாழன்’ கோளில் மேகக்கூட்டம்
சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கோளின் (ஜூபிடர்) வளிமண்டலத்தில் ஒளி மற்றும் இருள் மேகங்கள் சூழ்ந்து இருக் கும் அரிய புகைப்படத்தை நாசா வின் ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ளது.

சூரிய மண்டலத்தில் 5ஆவது கோளாக உள்ள வியா ழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப் பப்பட்டுள்ள ஜூனோ விண் கலம் அரிய நிழற்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

இதுவரை வெளியான படங் களில் வியாழனில் பெரிய அளவி லான சிவப்பு நிறப் (வெப்பம் அதிகமாக உள்ள) பகுதிகள் நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன. ஆனால் தற்போது பூமியில் உள்ள ஜெமினி தொலை நோக்கி எடுத்துள்ள படங்களில் குளிர் நிறைந்த பகுதிகள் இருப் பது தெரியவந்துள்ளது.

தொலைநேக்கி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள வானிலை ஆய்வாளர் கிளன் ஆர்டான் இதுபற்றி வர் ணிக்கும் போது, வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வுகளின் ஒரு புதையல் இது என்றார்.

இதேபோல் அமெரிக்காவின் பெர்கிலியில் உள்ள கலிபேர் னியா பல்கலைக்கழக விண் வெளி ஆராய்ச்சியாளர் மைக்கேல் வாங் கூறுகையில், வியாழனின் தற்போதைய புகைப்படம் செங்குத்து நிலையில் எடுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் வளி மண்டலத்தில் உள்ள வானிலை, காலநிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக கணக்கிட முடியாது. ஆனாலும் வியாழனின் வளி மண்டலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றார்.

தினமும் வேலைக்கு பேருந்து கார், சைக்கிள் ஆகிய வற்றில் போவோரில், சைக்கிளில் போவோர், நாள் முழுவதும் வேலைச் சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர்’ என, ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கனடாவிலுள்ள மான்ட்ரியேல் நகரில், 123 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘இன்டர் நேஷனல் ஜர்னல் ஆப் வொர்க் பிளேஸ் மேனேஜ்மென்ட்’ இதழில் வெளியாகியுள்ளன. நல்ல உடற் பயிற்சியாகக் கருதப்படும் சைக்கிள் ஓட்டுதல், வேலைத் திறனையும் அதிகரிப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் மற்றும் இரட்டையர் மத்தியில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், மரபணுவுக்கும், உளவியல் நோய் களுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றன. அண்மையில் அய்ஸ்லாந்தில் மன நோய்கள் உள்ள ஒரே குடும்பத் தைச் சேர்ந்த, 10 பேரிடம் நடத்திய ஆய்வில், மன நோய்க்கும், மரபணு அமைப்புக்கும் தொடர்பிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு, ‘நேச்சர் ஜெனடிக்ஸ்’ இதழில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

====================

பலவித நோய்களை எதிர்க்கும் புதிய ஆன்டி பயாடிக்குகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகி வருகிறது. இந்நிலையில், ‘செல்’ என்ற ஆராய்ச்சி இதழ், ‘சூடோஇரிடிமைசின்’ என்ற புதிய ஆன்டி பயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கிறது. இத்தாலியில் உள்ள ஒரு பகுதியின் மண் ணிலிருந்து எடுத்து உருவாக்கப்பட்ட இந்த ஆன்டிபயாடிக் மருந்து, ஆய்வுக்கூட எலிகளுக்குப் பயன்படுத்தியதில், அவை, ‘ஸ்ட்ரெப்டோகோகஸ்’ 20 வகை நோய்க்கிருமிகளை கொல்வதாகத் தெரிகிறது.

====================

தினசரி பிரச்சினைகளால் ஏற்படும் மனச் சுமை, நம் உடலிலுள்ள மரபணுக்களின், டி.என்.ஏ.,க்கள் வரை சென்று பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. தியானம், சீன யோகக் கலையான டாய்ச்சி போன் றவை, நம் மனதை அமைதிப்படுத்துவதோடு, மரப ணுக்களில் கவலையால் ஏற்படும் சேதாரத்தையும் வெகுவாக குறைப்பதாக, இங்கிலாந்திலுள்ள கோ வென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்ட றிந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தியானம் போன்றவற்றின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட, 18 ஆராய்ச்சிகளின் புள்ளிவிபரங்களை தொகுத்து ஆராய்ந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சூரிய சக்தியால் உப்பு நீரை குடிநீராக்கலாம்!

பல நாடுகளில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் தீர்வாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், இத்தொழில் நுட்பத்திற்கு அதிக மின்சாரம் தேவை.அமெரிக்காவிலுள்ள, ரைஸ் பல்கலைக் கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு, ஏற்கனவே பரவலாக உள்ள சவ்வு மூலம் உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி வெப்பத்தை உறிஞ்சும், நேனோ கரித் துகள்கள் தடவிய சவ்வு ஒன்று உள்ளது.இந்த சவ்வின் மீது சூரிய ஒளி படும்போது, அதன் வெப்பத்தால் நீர் ஆவியாகிறது.

நீராவி குளிர்ந்ததும் தூய நீர் கிடைக்கிறது. சூரியஒளியை சவ்வின் மீது குவிக்க ஒரு குவி ஆடியை பயன்படுத்துவதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை விட, 25 மடங்கு சூடு உண்டாகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவுள்ள சவ்வுப் பலகை மூலம் மணிக்கு, 20 லிட்டர் தண்ணீரை இத்தொழில்நுட்பம் சுத்திகரிக்கும் என ரைஸ் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவ ரான, கிவிலின் லீ தெரிவித்துள்ளார். எங்கும் தூக்கிச்செல்லும் பெட்டி வடிவில் இந்தக் கருவி இருப்பதால், மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூட, உப்பு நீரை சுத்திகரிக்க முடியும்.

ட்ரோன்கள் மூலம் வனப்பகுதிகளில் கண்காணிப்பு

விலங்குகளை கடத்தும் வனக் கொள்ளையர்களை கண்காணிக்க, ‘ட்ரோன்’கள் எனப்படும் ஆளில்லாமல் பறக்கும் சிறு வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. நியூராலா என்ற அமெரிக்க நிறுவனம், ட்ரோன் களுடன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன் படுத்துகிறது.இதன் மூலம் வழக்கொழியும் ஆபத்திலுள்ள விலங்குகளை கடத்தல் பேர்வழிகளிடமிருந்து காக்கும் பணியை மேலும் வலுப்படுத்தும் என்கிறது நியூராலா. தென்னாப்ரிக்கா, மலாவி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின், அரசு வனத்துறையினருடன் நியூராலா இணைந்து இப்பணியில் களமிறங்கியுள்ளது.

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களில் உள்ள வீடியோ கேமராக்கள் எடுக்கும் நேரலை காட்சிகளை, நடமாடும் கட்டுப்பாட்டு அறையிலுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அவற்றை அலசுகிறது.

காட்சிகளில் தெரியும் விலங்குகள், ஆட்கள், வாக னங்கள் போன்றவற்றை உடனுக்குடன் அடையாளம் காண்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதும் தென்பட்டால், உடனே வனக் காவலர்களுக்கு மொபைலில் தகவல் அனுப்புகிறது. அகச் சிவப்பு ஒளிக் கேமராக்களும் ட்ரோன்களில் உள்ளன. எனவே, ராப்பகலாக நியூராலாவின் மென்பொருளால் கண்காணிக்க முடியும்.
ஆப்ரிக்கக் காடுகளில் யானைகளும், காண்டா மிருகங் களும், 10 ஆண்டுகளுக்குள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன. எனவே, லிண்ட்பர்க் பவுண்டேஷன் அமைப்பும், நியூராலாவும் இணைந்து நடத்தும், ‘ஆப ரேஷன் ஏர் ஷெப்பர்ட்’ என்ற கண்காணிப்பு திட்டம், அவ்விரு விலங்குகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதுவரை நியூராலா, 4,000 முறை ட்ரோன்களை பறக்கவிட்டு, 5,000 மணி நேரங்கள் கண் காணிப்பு செய்திருக்கிறது.

தமிழக வனத்துறையும் சில ட்ரோன்களை வாங்கி யுள்ளது. நியூராலா போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் அதற்கு உதவக்கூடும்.

சுவரை ஊடுருவிப் பார்க்கும் தொழில்நுட்பம்!

ஒரு செங்கல் சுவரின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியுமா? ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை புதிய வகையில் பயன்படுத்தி, அது முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாசமின் முஸ்தாபி மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவி ஆர்.சித்ரா கரணம் ஆகிய இருவரும், இரண்டு ட்ரோன்கள் வைபை சமிக்ஞைகளை அனுப்பி பெறும் சாதனங்களை மட்டுமே வைத்து இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கி யுள்ளனர்.

சோதனைகளில், இரண்டு ட்ரோன்கள் செங்கல்லாலான நான்கு சுவர்களை வட்டமிட்டன. ஒருபுறமிருந்து ட்ரோன் அனுப்பும் வைபை சமிக்ஞையை, மறுபுறமிருந்த ட்ரோன் பெற்றுக்கொண்டது. நடுவே உள்ள சுவர்களுக்குள்ளே, சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சமிக்ஞை சுவர்களைக் கடந்து செல்கையில் ஏற்படும் சமிக்ஞை இழப்பை வைத்து, உள்ளே இருக்கும் பொருட்கள் என்ன என்பதை சரியாக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கண்டுபிடிப்பு, கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியவும், கட்டடங்களில் விரிசல் போன்றவை உள்ளனவா என்பதை கண்டறியவும், புதைபொருள் ஆராய்ச்சியிலும் உதவும் என, இரு விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

வரைய தெரியாதவர்களுக்கு
கூகுளின் உதவி!

சில மாதங்களுக்கு முன், கூகுள், ஒரு விளையாட்டு இணையதளத்தை துவங்கியது. ‘குயிக் ட்ரா’ என்ற அந்த தளத்தில், எவரும், கோட்டோவியங்களை வரையலாம்.

அந்தத் தளத்தை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு பொருளின் பெயரை அறிவிக்கும். உடனே சில வினாடிகளில் அதை கோட்டோவியமாக நீங்கள் வரைய வேண்டும். அது எப்படி இருந்தது என்பதை, கூகுளின் புத்திசாலி மென்பொருள் மதிப்பிடும்.பல லட்சம் பேர் பங்கேற்று வரும் அந்த தளத்தின் தகவல்களை வைத்து, அண்மையில், ‘ஆட்டோ ட்ரா’ என்ற தளத்தை துவங்கியிருக்கிறது. இதில், நீங்கள் ஒரு பொருளை வரைய வரைய, அந்தத் தளத்தின் மேல் பகுதி, ‘மெனு’வில், ‘’நீங்கள் வரைந்துகொண்டிருப்பது இதுவா?’’ என்று நீங்கள் வரையும் பொருளை ஒத்த பல படங்களை காட்டும்.

அதில் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் வரைந்த கோட்டோவியத்துக்குப் பக்கத்தில், அதைவிட அசத்தலான ஓவியம் வந்துவிடும். இதை வீட்டுப்பாடம், அலுவலக அறிக்கை போன்ற எதற்கும் எடுத்துப் பயன்படுத்தலாம். வரையத் தெரியாதவர்களுக்கான தளம் இது என்று கூகுளே விளம்பரப்படுத்தி வருகிறது
மிதமிஞ்சிய போக்குவரத்து இரைச்சலுக்கும், இதய நோய் வருவதற்கும் தொடர்பிருப்பதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள், நார்வே மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த, 1.44 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தினர். அதிக போக்குவரத்து இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் சோதித்தனர். அதில் பலருக்கு இரைச்சலால் ஏற்படும் நாள்பட்ட மனச்சோர்வு போன்ற காரணங்களால், ரத்தத்தில், இதயநோய் பாதிப்பைக் காட்டும் புரதங்கள் இருப்பது தெரிய வந்தது. காற்று மாசுபாடும் இதய நலனை பாதிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

****

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலுள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் மிலானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இணைய அடிமைகளுக்கு ரத்த அழுத்தம் மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். தினமும் அதிக நேரம் இணையத்தை பயன் படுத்தும் வழக்கம் உள்ளதாக ஒப்புக்கொண்ட, 144 பேரிடம் நடத்தப் பட்ட அந்த ஆய்வில், இணையத்தை பயன்படுத்தி முடித்து எழும்போது, ரத்த அழுத்தம், 3-4 சதவீதம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அதேபோல ஆய்வில் கலந்து கொண்டவர்களின் இதயத் துடிப்பும் கூடுதலாக இருந்தது. இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை அல்ல. என்றாலும், அவர்களுக்கு உளவியல் பதற்றம் தொற்றிக் கொள்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு, ‘பிலோஸ் ஒன்’ இதழில் வெளியாகியுள்ளது.

****

பிரபஞ்சத்தின் காலவெளிப் பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு அலைகளை கண்டறியும், ‘லிகோ’ ஆய்வகம், அண்மையில் மூன்றாவது முறையாக, ஈர்ப்பலைகளை கண்டறிந்துள்ளது. முதல் இரு ஈர்ப்பலைகளைப் போலவே, இந்த ஈர்ப்பு அலையும், இரு பெரும் கருந்துளைகள் இணைவதால் ஏற்பட்டவையே என, லிகோ விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியனைவிட, 49 மடங்கு பெரிய கருந்துளைகள் அவை என்றும், அவற்றின் இணைப்பு பூமியிலிருந்து, 3 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றும், லிகோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

****

மூக்கின் வழியே நுரையீரலை சென்று தாக்கும், புளூ வைரஸ்களை தடுக்க, புதிய முறையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நுரையீரலில், வைரஸ்களை எதிர்க்கும் டி.ஆர்.எம்.எஸ்., என்ற செல்கள் உண்டு. ஆனால், ஆய்வகத்தில் அந்த செல்கள், அதிக காலம் உயிரோடு இருப் பதில்லை. இதனால் அவற்றை வைத்து தடுப்பு மருந்தை உரு வாக்க முடியாமலிருந்தது. மெல்போர்ன் விஞ்ஞானிகள், மனித மூக்கில் உள்ள திசுக்களிலும் அந்த செல்கள் இருப்பதையும், அவை அதிக காலம் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மூக்கில் உள்ள, டி.ஆர்.எம்.எஸ்., செல்களை வைத்து புளூ வைரசுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியுமா என,  தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

தோலை ஊடுருவிப் பார்க்கும் லேசர்!

சொரியாசிஸ் எனப்படும் சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும் தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண் களைத் தான் நம்ப வேண்டும்.

ஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொறி நோயை துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.

‘ஆர்சம்‘ என சுருக்கமாக அழைக்கப்படும், ‘ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ் கோப்பி’ தொழில்நுட்பம் மெல்லிய லேசர் துடிப்பு களை பயன்படுத்துகிறது.

லேசர் பட்டதும் தோலின் திசுக்கள் வெப்ப மடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் பகுதி, மீஒலி அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின் வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக் குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தக் கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க விளைவுகள் கிடையாது.

இந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின் நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்து வரால் முடியும் என்கின்றனர் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.
அடுத்த கட்டமாக தோல் புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றை கண்டறியவும் இக்கருவியை மேம் படுத்த உள்ளனர்.

குட்டி சில்லில் 30 பில்லியன் டிரான்சிஸ்டர்கள்!

நகத்தின் அளவே உள்ள, 5 நானோ மீட்டர் சிலிக்கன் சில்லில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களை பதித்து, புதிய சாதனை படைத்திருக்கிறது,  அய்.பி.எம்., இந்த சாதனைக்கு ‘சாம்சங் மற்றும் குளோபல் பவுண்டரீஸ்’ ஆகிய இரண்டும் உதவி யுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 7 நானோ மீட்டர் சிலிக்கான் தகடுகளில், 20 பில்லியன் டிரான் சிஸ்டர்களை, அய்.பி.எம்., பதித்து சாதனை புரிந்தது. ‘எக்ஸ்ட்ரீம் அல்ட்ராவயலட் லித்தோகிராபி’ என்ற அச்சு முறை மூலம், நேனோ அளவே உள்ள டிரான்சிஸ்டர்களை கச்சிதமாக பதித்துள்ளது, அய்.பி.எம்.தகவல்களை சேமிக்கவும், பரிமாறவும், அலசவும் டிரான்சிஸ்டர்கள் உதவுகின்றன.

இவ்வளவு டிரான்சிஸ்டர்களை, மிகக் குறுகிய இடத்திற்குள் குவித்திருப்பதால், இந்த சில்லுகள் மற்ற சில்லுகளை விட, மூன்று மடங்கு குறைவாகவே மின்சாரத்தை உறிஞ்சும். மேலும், இவற்றின் தகவல் பரிமாற்ற வேகமும், பல மடங்கு அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அய்.பி.எம்., உரு வாக்கிய, 7 நேனோ மீட்டர் சில்லுகளே, 2018இல் தான் சந்தைக்கு வரவுள்ளன.

எனவே, 5 நானோ மீட்டரில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட இந்த சாதனைச் சில்லு, சந்தைக்கு வர நான்கு ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது.  

அழிவை நோக்கி இந்திய தேனீக்கள்1

இந்தியாவில் தேனீக்களின் எண்ணிக்கை அழிந்து வருவதாக, ‘பயாலஜிகல் கன்சர்வேஷன்’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  அதிலும் குறிப்பாக, ஒடிசாவில் சில வகை தேனீக்களின் வரத்து, 2002லிருந்தே காணவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித் துள்ளனர். காடுகள் அழிப்பு, பூச்சி மருந்துகளின் பயன் அதிகரிப்பு, ஒரே பயிர் வகையை விதைப்பது போன்றவை தேனீக் களுக்கு ஆபத் தை விளைவித்திருப்பதாக, அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

பிளவில் அண்டார்டிகா பனிப்பாறை

மேற்கு அண்டார்டிகா பகுதியில் உள்ள, ‘லார்சன் சி’ என்ற பிரம்மாண்ட பனிப்பாறை, அண்மையில், 17 கி.மீ., நீளத்திற்கு பிளவு பட்டுள்ளது. இந்த பிளவு மேலும் தொடர்வதாக, பிரிட்டனைச் சேர்ந்த, ‘புராஜக்ட் மிடாஸ்’ என்ற விஞ்ஞானிகளின் அணி கணித்துள்ளது.

ஏற்கெனவே லார்சன் ஏ என்ற பனிப்பாறை, 1995லும், லார்சன் பி என்ற பனிப்பாறை, 2002லும் உடைந்து கடல் நீரில் மிதக்க ஆரம்பித்தன. இப்போது அவற்றுக்கு அருகில் உள்ளதும், அந்த இரண்டையும் விட பெரியதுமான, லார்சன் சி பனிப்பாறை அதே ஆபத்தில் உள்ளது. பனிப்பாறைகள் உடைந்தால், கடல் மட்டம் உயரவும், நிலப்பரப்பு குறையவும் நேரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் 319 புதிய வகை தாவரங்கள்!

இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு துறை, 2016இல் மட்டும், 319 புதிய தாவர வகைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதில், 206 தாவரங்கள், அறிவியலுக்கே புதியவை. மீதமுள்ள 113 தாவரங்கள், இதற்கு முன் காணப்படாத, புதிய பகுதிகளில் செழித்து வளர ஆரம்பித்துள்ளவை. காட்டு ஏலம், காட்டு இஞ்சி, காட்டு நெல்லி போன்ற புதிய வகைகள், மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு உதவக்கூடும் என, கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. என்றாலும், அதிகபட்சமாக, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில், 17 சதவீதமும், கிழக்கு இமாலய பகுதிகளில், 15 சதவீதமும், மேற்கு இமாலய பகுதிகளில், 13 சதவீதமும் புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


Banner
Banner