அய்போனில் உள்ள சில வசதிகளை வைத்து, ரத்த அழுத்தத்தை அளக்க, ஒரு செயலியை உருவாக்கி யுள்ளனர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.

இது, ஏன் வேறு யாருக்கும் தோன்றவில்லை எனக் கேட்கத் தோன்றும் கண்டுபிடிப்பு. ரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் களுக்கு, இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.

அய்போனில், ‘3டி டச்‘ என்ற வசதி, ‘அய்போன் 6’ மாடலிலிருந்து கிடைத்து வருகிறது.

இதையும், ‘செல்பி கேமரா’வையும் வைத்து, இந்த செயலி ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளக்கிறது.

தொடுதிரையில் பாதியும், செல்பி கேமரா மீது பாதியும் படும்படி சுட்டுவிரலை வைத்தால், விரலுக்கு வரும் ரத்த நாடித் துடிப்பை கேமரா அளக்கிறது; தொடுதிரையும் நாடித் துடிப்பை அளக்கிறது.

இந்த இரண்டு அளவைகளையும், செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கணித்து, ரத்த அழுத்தத்தை அய்போன் உரிமையாளருக்கு உடனே காட்டி விடுகிறது.

தற்போது வெள்ளோட்டத்திலிருக்கும் செயலியை, மிச்சிகன் விஞ்ஞானிகள் விரைவில் அய்போன் பயனாளி களுக்கு அளிப்பர். ஆண்ட்ராய்டு பயனாளி களுக்கான செயலி, பின்னர் வெளியிடப்படும்.

 

ஒரு சிறிய ட்ரோன் பறப்பதற்கு தேவையான கனமில்லாத, மிகச் சிறிய மோட்டார் கிடைக்குமா என்று தேடினார், பொறியாளரான கார்ல் புகேஜா. மத்திய தரைக்கடல் தீவான மால்டாவைச் சேர்ந்த அவர் தேடியது கிடைக்கவில்லை.

செம்புக் கம்பியில் காயில் கட்டி, பியரிங் வைத்து காந்தத்தை உருவாக்கும் போது, எவ்வளவு சிறிய மோட்டாரும் சற்று கனமாகவே இருந்தது.

கார்லுக்கு திடீரென ஒரு யோசனை... சர்க்கியூட் போர்டுகளை அச்சிடுவது போல ஏன், நாமே ஒரு சிறிய மோட்டாரை அச்சிடக் கூடாது? உடனே, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தி காயில்களை அச்சிட்டு, பியரிங்கை பொருத்தி இயக்கிப் பார்த்தார்.

பலகீனமான விசையுடன் தான் அது சுழன்றது. பல முறை முயன்ற பின், அவர் அச்சிட்ட மோட்டார், ஒரு ட்ரோனை அந்தரத்தில் பறக்கவைக்கும் அளவுக்கு விசையுள்ளதாக, வெற்றிகரமாக உருவானது.

உண்மையில் கார்ல், ட்ரோன் தயாரிப்பாளரல்ல. காப்புரிமை இல்லாத திறமூல ரோபோக்களை உருவாக்குவதில் தான் அவருக்கு நாட்டம் அதிகம். எனவே, மோட்டாரை அச்சிட்டது போல, ரோபோக்களின் கைகளையும், கால்களையும் இயக்கு வதற்குத் தேவையான, ‘லீனியர் ஆக்சுவேட்டர்’கள் எனப்படும் விசை முடுக்கிகளையும் இதேபோல அச்சிட முடியுமா என, கார்ல் ஆராய்ந்து வருகிறார்.

நியூசிலாந்தில் குப்பையாகும் மின்னணு கருவிகளி லிருந்து பயனுள்ள உலோகங்களை பிரித்தெடுக்க, புதுமையான உயிரியல் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

கணினி, அலைபேசி போன்ற கருவிகள் பழைய தானதும், அவற்றை சேகரிக்க சில அமைப்புகள் நியூசிலாந்தில் உள்ளன.

ஆனால், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக மறுசுழற்சி செய்வதில்லை.

எனவே, ‘மின்ட் இன்னோவேசன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு, உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி முறையை உருவாக்கியுள்ளது.

சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகளை வேதியியல் திரவங்களில் கரைத்து, அந்த திரவங்களில் நுண்ணு யிரிகளைச் சேர்க்கிறது மின்ட். அந்தக் கரைசலில் இருக்கும் தங்கம், செம்பு போன்ற உலோகங்களை, நுண்ணுயிரிகள் உணவாக உண்கின்றன.

பிறகு, அந்த உலோகங்களை பிரித்தெடுத்துக் கொள்கிறது மின்ட்.

இன்றுள்ள மறுசுழற்சி முறைகள் நச்சு வாயுக்களை உமிழும் நிலையில், அதிக செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாமல் உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என்கின்றனர், மின்ட் அதிகாரிகள்.

ஆக்லாந்திலுள்ள, ‘ரிமார்க்கிட்’ என்ற மின்னணு கழிவுகளை சேமிக்கும் நிறுவனத்துடன் மின்ட் இணைந்து, 2019இல் உயிரி மறுசுழற்சி ஆலையை துவங்க இருக்கிறது.

Banner
Banner