இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவரான சைதன்யா கரம்சேது, கடல் நீரிலிருந்து குடிநீரை தயாரிக்க உதவும், எளிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

இன்று பூமியில் உள்ள, 8 பேரில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதே சமயம், உலகின், 70 சதவீதம் பகுதியை கடல் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த இரு தகவல்களையும் கவனித்த சைதன்யாவுக்கு கடல் நீரிலிருந்துதான் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க முடியும் என்று தோன்றியது.

அமெரிக்கா விலுள்ள ஓரிகன் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரிலுள்ள தனது பள்ளி ஆய்வகத்தில் ஆராய்ச்சியை துவங்கினார்.

கடல் நீரிலுள்ள உப்பை அகற்றுவது அதிக செலவு பிடித்தது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.கடல் நீரை குடிநீராக்க முயன்ற விஞ்ஞானிகள் இதுவரை, உப்புடன் பிணைந்திருக்கும், 10 சதவீத நீர் மூலக்கூறுகள் மீதுதான் கவனம் செலுத்தினர்.

ஆனால் உப்புடன் பிணையாமல் இருக்கும், 90 சதவீத நீரை கவனிக்கத் தவறிவிட்டனர். நான் உருவாக்கிய தொழில்நுட்பம் அந்த, 90 சதவீத நீரை பிரித்தெடுக்க உதவுகிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் சைதன்யா.

அவரது சில ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. அந்த நிதி அனைத்தும் அவரது யோசனைக்கான பரிசுகளாக குவியத்துவங்கின.

கடந்த ஜனவரியில், ரீஜெனரான் அறிவியல் திறமையாளர் களுக்கான தேடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான, 300 மாணவர்களில் சைதன்யாவும் ஒருவர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!    

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’  எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமானவற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லி விடும்.

இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும். பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அது தரும். நாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ், லேக்டோஸ், சார்பிட்டால் போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. இதனால் வயிற்றிலுள்ள உணவுகள் நொதித்தல் என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து, பின் சுவாசப் பையின் வழியே வெளியேற்றப்படும்.இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரி மானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு ஆறுதல். சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப் படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடுப்பு உயர ரோபோ ‘கேஸி!’

ரோபோவியலாளர்கள், ஆளைப் போலவே, ரோபோ, ஆளுயர ரோபோ என, படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபாடிக்ஸ் நிறுவனம், இடுப்பு உயர ரோபோவை, அதுவும், இடுப்பு வரை மட்டுமே உள்ள ரோபோவை உருவாக்கி ஆச்சரியப் படுத்தி உள்ளது.

நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கேஸி’ என்ற இந்த ரோபோ, இரு கால்களும், சுற்றிலுள்ளவற்றை பார்க்கும், கேமரா கண்கள் மற்றும் பலவித உணர்வான்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது. கடை கண்ணிக்குப் போய் வருபவர்கள், இதை உடன் அழைத்துச் சென்றால், திரும்பி வரும் போது, சாமான்களை சுமந்து வரும் திறன் கொண்டது. கூட யாரும்வராவிட்டாலும், இதையே கடைகளுக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி வரச் சொல்ல வும் முடியும். ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ரோபோ விஞ்ஞானிகள் முன் உருவாக்கிய, ‘அட்ரியாஸ்’ என்ற ரோபோவை அடிப்படையாக வைத்து, அதிலுள்ள குறைகளை போக்கி, கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், கேஸியை நேரடியாக நுகர்வோருக்கு விற் காமல், பிற ரோபோ தயாரிப்பாளர்களுக்கு விற்கவே, அஜிலிட்டி விரும்புகிறது. அதாவது, பிற ரோபோ கம்பெ னிகள், கேஸியை அடிப்படையாக வைத்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கூடுதல் திறன்கள், வசதிகளை சேர்த்து விற்பனை செய்யலாம். மனிதர்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய, தேவையான அதே அளவு சக்தியை, தெம்பை மட்டுமே செலவிடும் வகையில், கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ட்ரோன்களை அழிக்க  நுண்ணலை கருவி !

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடுவது போன்ற அத்து மீறல்களும் அதிகரித்துள்ளன.  எனவே, ராணுவம், காவல்துறையினருக்கு ட்ரோன்களை தடுக்க அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கியிருக்கிறது ‘ரேதியான்’ நிறுவனம். மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’ என்ற இச் சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது.

ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் உண்டு. ட்ரோனை கண்டறிந்ததும், டிஷ் மூலம் அடர்த்தியான நுண்ணலை துடிப்புகளை பேசர் அனுப்பும். இதனால் ட்ரோன்களில் இருக்கும் மின்னணு சாதனங்கள் நொடியில் பொசுங்கிவிடும். ஒரே சமயத்தில் பல ட்ரோன்களை இதுபோல பொசுக்க பேசரால் முடியும். அதுமட்டுமல்ல, எதிரியின் செயல் பாடுகளை முடக்க, அவர்கள் பயன்படுத்தும் எந்த மின்னணு சாதனத்தையும் தொலைவிலிருந்தே வறுத்தெடுக்க பேசரால் முடியும். இதை சிவிலியன்கள் பகுதியில் பயன்படுத்தப்படுவதை கற்பனை செய்தாலே நடுக்கம் வருகிறது, இல்லையா?

மலேரியாவை அறிய உதவும் சாதனம்!    

ஆப்பிரிக்காவின் வளரும் நாடுகளில், மலேரியா ஒரு பெரிய மருத்துவ சவாலாக இருக்கிறது. மருத்துவ வசதி கள் குறைவான அங்கு, ரத்த பரிசோதனை நிலையங்களும் குறைவு. இதனால், மலேரியா இருப்பதை உடனே கண்டறிய முடிவதில்லை. இப்போது, வசதி குறைவானவர்களிடம் கூட ஸ்மார்ட்போன்கள் இருப்பதால், அதை பயன்படுத்தியே மலேரியாவுக்கான ரத்த பரிசோதனை செய்யும் ஒரு கருவியை சில இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். ‘மதிபாபு’ என்ற அந்த சாதனம், மொபைல் செயலி ஒன்றையும், விரலை வைத்து சோதிக்க சிறிய கருவியும் கொண்டது. மதிபாபு கருவியில் விரலை வைத்ததும், எல்.இ.டி., ஒளி பாய்ந்து விரலின் மறுபக்கம் வரும். அப்படி வரும் ஒளியின் தன்மையை, மறுபக்கத்திலுள்ள ஒரு சிறிய உணர்வான் உணர்ந்து, மொபைல் செயலிக்கு தகவல் அனுப்பும்.
அந்த தகவலை வைத்து, ஒருவருக்கு மலேரியா உள்ளதா என்பதை சில வினாடிகளில் தெரிவித்துவிடுகிறது மதிபாபு செயலி. எங்கும், எவரும் பயன்படுத்தலாம் என்பதும், விரலை குத்தி ரத்தம் எடுக்கவேண்டியதில்லை என்பதும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள்.

மலையுச்சி ஏன் வெப்பமாக இல்லை?

மலையுச்சிகளுக்குப் போகும்போது நாம் சூரியனுக்கு நெருக்கமாவும் செல்கிறோம். ஆனால், வெப்பம் அதிகரிப்பதற்கு பதிலாக, குளிர் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள இடைவெளி 15 கோடி கி.மீ. அப்படிப் பார்த்தால் எவரெஸ்ட் உச்சியில் நாம் ஏறி நின்றாலும் இந்த 15 கோடி கிலோ மீட்டர் இடைவெளில் வெறும் 9 கி.மீ. மட்டுமே குறைந்திருக்கும். எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான இடைவெளியில் எந்த முக்கியமான மாற்றமும் இருக்காது.

மலையுச்சிகளில் நாம் ஏற ஏற, தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருவதுதான். வளி மண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்துகொண்டே வரும். இப்படிக் குறையும் விகிதம் நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகம். ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சட்டென்று குறைந்துவிடுகிறது.

வளிமண்டல அழுத்தம் குறைவு என்பது வேறொன்று மில்லை. காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்து கொண்டே போவதுதான் வளிமண்டல அழுத்தம் குறைவு. அதனால்தான் மலையுச்சிகளில் போகும்போது மக்கள் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.

வளிமண்டலத்தில் டிராபோபாஸ்  எனப்படும் பகுதி இருக்கிறது. இதுவே டிராபோஸ்பியர், ஸ்டிராட்டோஸ் பியர் ஆகிய வளிமண்டல அடுக்குகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி. பூமிக்கு 12 கி.மீக்கு மேல் உள்ள இந்தப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே வளி மண்டலம் இருக்கிறது. இந்த இடங்களில் எஞ்சியிருக்கும் வளிமண்டலத்தின் அளவு வெறும் 10 சதவீதம்தான். அதனால் இந்த இடங்களில் காற்றழுத்தம் மிக மோசமாகக் குறைந்துவிடுகிறது. அதனால் வெப்பநிலையும் கடுமையாகக் குறைகிறது. எவ்வளவு என்றால், மைனஸ் 55 டிகிரி செல்சியஸ்வரை.

அப்படியானால், இந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி விமானத்தில் பயணிக்கிறார்களே, அவர்களுக்கு என்ன ஆகும்? நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. விமான இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன்னதாக பயணிகளையும் விமானப் பணி யாளர்களையும் சுற்றியுள்ள காற்றை வெப்பப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே செய்யப்பட்டுள்ள வெப்பம் கடத்தும் திறன் தடுப்பு, மனித உடல் வெளிவிடும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் விமானத்துக்குள் மனிதர் களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

இறக்கை முளைத்த காற்றாலை!

மூன்று பெரிய விசிறிகள் கொண்ட காற்றாலைகள் மீது உள்ள குறைகளை களைய, புதிய காற்றாலை ஒன்றை, ‘டையர் விண்ட்ஸ்’ என்ற துனீசிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. காற்றாலைகளின் ராட்சத விசிறித் தகடுகள் சுழலும் போது எழும் இரைச்சல், அக்கம் பக்கத்தவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுண்டு. தவிர, பறவைகள் அடிபட்டு இறப்பதும் உண்டு.

இதற்கு மாற்றாக டையர் விண்ட்ஸ் உருவாக்கியுள்ள காற்றாலைக்கு இரண்டே இறக்கைகள் தான் உள்ளன. ஹம்மிங்பேர்டு என்ற குட்டிப் பறவை, மலர்களில் தேன் உறிஞ்சும்போது, அதன் அலகு துளியும் அசையாமல் இருக்கும். ஆனால், அதன் இறக்கைகள் வினாடிக்கு, 80 முறை அடித்துக் கொண்டிருக்கும். இதை கவனித்த டையர் நிறுவன விஞ்ஞானிகள், ஹம்மிங்பேர்டின் இறக்கை அமைப்பை, ‘காப்பி’ அடித்து, தங்கள் காற் றாலையை வடிவமைத்து உள்ளனர்.காற்று வீசும்போது, டையர் காற்றாலையின் இறக்கைகள் இரண்டும், ஹம்மிங்பேர்டு பறவையின் இறக்கை நுனி, ‘8’ வடிவில் அசைய ஆரம்பிக்கும்.

இந்த அசைவின் விசையில், காற்றாலையின் துணில் இருக்கும் மின் உற்பத்தி இயந்திரம் இயங்கி, மின்சாரம் உற்பத்தியாகிறது. மூன்று ராட்சத தகடு ஆலைகளை விட, சிறிய இரண்டு இறக்கை ஆலை கூடுதலாக மின் உற்பத்தி செய்வதாகவும் டையர் நிறுவனம் தெரி விக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான ஜீன்கள்!

உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக் களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில் செயல்படும், ‘பயோபேங்’ என்ற திட்டத்தில் பங்கேற்ற, நான்கு லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் மேற்கொண்ட மரபணு முடிவில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணுக்கள், மனித ரத்த நாளங்கள் மற்றும் இதயத் திசுக்களில் செயல்படுபவை. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள இந்த மரபணுக்களின் அடிப் படையில், புதிய மற்றும் செம்மையான உயர் ரத்த அழுத்த மருந்துகளை உருவாக்க முடியும்.மேலும், ஒருவருக்கு பரம்பரையாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை பரிந்துரைக்கவும் இக்கண்டுபிடிப்புகளை மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

செவ்வாயில் பனி குடில்கள்!  

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்று வசிக்கப் போவது உறுதியாகி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற, தனியார் நிறுவனங்கள் முதல், நாசா போன்ற, அரசு விண்வெளி அமைப்புகள் வரை, இப்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை வேகப்படுத்தியுள்ளன. செவ்வாயில் மனிதர்கள் வசிக்க, அதன் தட்ப வெப்பமும், பிரபஞ்சக் கதிர்வீச்சும் பெரும் தடையாக உள்ளன. இந்த சவால்களை சமாளிக்க, துருவப் பகுதிகளில் எஸ்கிமோக்கள் பயன்படுத்தும், ‘இக்ளூ’ எனப்படும், பனிக் குடிசைகள் உதவும் என, நாசா அறிவித்துள்ளது. செவ்வாயில் கிடைக்கும், பனிப் படிவு இருப்பதால் அதை வைத்தே, ஒரு குழாய் போன்ற அமைப்பில் நிரப்பி, அவற்றை, கூரையாகவும் சுவர்களாகவும் பயன்படுத்தினால், கதிர் வீச்சிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் தப்பிக்க முடியும் என, நாசா

அறிவித்துள்ளது. ஆனால், ஒரு குடியிருப்புக்கு தேவையான, பனிக்கட்டிகளை குழாய்களில் நிரப்ப, ஓர் ஆண்டு காலம் பிடிக்கலாம் என்பது தான் சிக்கல். இருந்தாலும், குடியிருப்பு பணிகளை, ஒரு விண்வெளி வீரர்களின் அணி ஆரம்பித்து வைக்க, பூமியிலிருந்து அடுத்து வரும் அணி கட்டடப் பணியை தொடர்ந்தால், முதல் மனித குடியிருப்புத் தயாராகி விடும் என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘சுவரொட்டி’ தொலைக்காட்சி!  

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த 2017க்கான ‘சி.இ.எஸ்.,’ எனப்படும் நுகர்வோர்மின்னணு பொருட் காட்சியில் அறிமுகமான சில புதுமைகள்!

சி.இ.எஸ்.,சில் புதுமையான, ‘டிவி’ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது நிச்சயம். இந்த ஆண்டு, ‘டிவி’ திரையை இளைக்க வைத்து தனித்து நிற்க வைப்பது தான் புதிய போக்கு. சோனி, எல்.ஜி., சாம்சங் ஆகிய மூன்றுமே, ‘டிவி’ திரைக்குப் பின்னால் இருந்த மின்னணு சமாச்சாரங்களை தனியே வைக்கும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளன.

தவிர, எல்.சி.டி., - எல்.இ.டி., வகை திரைகளுக்கு அடுத்து, இப்போது எல்லா நிறுவனங்களுமே, ஓ.எல்.இ.டி., வகை திரைகளை நாட ஆரம்பித்திருக்கின்றன. இதில், பல விமர்சகர்கள் விருது அளித்தது எல்.ஜி.,யின், ‘சுவரொட்டி’ திரைகளுக்குத் தான்.

எல்.ஜி., இதை, ‘வால் பேப்பர்’ திரைகள் என்கிறது. ‘எல்.ஜி., - ஓ.எல்.இ.டி.டபிள்யு’ வரிசை, ‘டிவி’க்கள், உண்மையிலேயே சுவற்றில் ஓவியத்தை மாட்டுவது போல, இரு ஆணிகளை அடித்து மாட்டி, கீழ் பகுதியை காந்தத்தின் மூலம் அசையாமல் இருக்க வைத்து விடலாம்.

ஓ.எல்.இ.டி., ‘டிவி’க்களில், திரையில் உருவங்களுக்கு ஒளியேற்றும் தேவை இல்லை என்பதால், மின்சார செலவு கணிசமாக குறையும் என்கிறது, எல்.ஜி., பல அளவுகளில் வரும் எல்.ஜி.,யின் வால்பேப்பர், ‘டிவி’ திரைகளின் தடிமன் வெறும், 2.5 மில்லி மீட்டர்களே!

திரையில் காட்சிகளை தோன்ற வைக்கும் மற்ற எல்லா மின்னணு அமைப்புகளும் ஒலி பெருக்கியில் அடக்கி விட்டது, எல்.ஜி., இந்த அமைப்பை, ‘சவுண்ட் பார்’ என்கிறது, எல்.ஜி., திரைக்கு அடிவாரத்தில் சவுண்ட் பாரை வைத்து, அதிலிருந்து மின் கம்பிகளைக் கொண்ட சிறிய பட்டையை, ஒல்லித் திரையுடன் இணைத்துவிடலாம்.  திரைக்கு இரு ஓரங்களில் நின்று பார்த்தாலும் படம் பிசிறில்லாமல் தெரியும் என, எல்.ஜி., சொல்கிறது.

Banner
Banner