Banner

கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை முறையில் தயாரித்து பொருத்துகின்றனர். ஆனால், அவை மற்ற உடல் உறுப்புகளுடன் இணைந்து இயற்கையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது.

ஆனால், சுவீடனின் கோதன் பர்க், சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்லைக்கழக விஞ்ஞானி மாஸ் ஆர்டிஷ் கடாலன் செயற்கை கை தயாரித்துள்ளார். இது ரோபோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கெனவே உள்ள துண்டிக்கப்பட்ட கையுடன் இணைந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்த கையை மேக்னஸ் (42) என்ற சரக்குந்து ஓட்டுநருக்கு பொருத்தியுள்ளனர்.

விபத்தில் அவர் தனது வலது கையை இழந்தார். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள ரோபோ கைமூலம் அவர் லாரி ஓட்டுகிறார். வீட்டில் தனது அன்றாட பணிகளையும் செய்கிறார்.

இந்த செயற்கை கை மின் முனைகளால் (எலெக்ட் ரோட்களால்) உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தப்படும் பகுதியில் உள்ள தோலின் மேற்பரப்பில் ஊடுருவி நரம்பு மண்டலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மூளைக்கு தெரிவிக்கின்றன.

ரோபோ கை பொருத்தி தனக்கு மீண்டும் வாழ்வளித்த விஞ்ஞானிகளுக்கு மேக்னஸ் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வகையான ரோபோ கை பொருத்தப்பட்ட முதல் மனிதர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

செவ்வாயின் துணைக்கோளான போபாசை செவ்வாய்க் கலன் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இஸ்ரோ, செவ்வாய்க்கலனின் பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களில் இந்தச் சிறிய வீடியோ படம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

6,779 கிலோமீட்டர் விட்டம் கொண்ட செவ்வாய் கோளின் முன் 22 கிலோமீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட இந்த துணைக்கோள் சிறிய புள்ளியைப் போல் தெரிகிறது.

இந்தத் துணைக்கோள் செவ்வாய் கோளைச் சராசரியாக 6000 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தில் ஒரு கோளை மிக அருகில் சுற்றிவரும் துணைக்கோள் இதுதான்.

நாளொன்றுக்கு மூன்று முறை செவ்வாய் கோளை இது சுற்றி வருகிறது. இந்தத் துணைக்கோள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் போது செவ்வாய் கோளிலிருந்து 66,275 கிலோமீட்டர் உயரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கோளின் துணைக்கோள்களான போபாஸ், டெய்மாஸ் ஆகியவை 1877-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டன. இந்த இரண்டில் போபாஸ்தான் பெரியது. டெய்மாஸின் விட்டம் 12.6 கிலோமீட்டர் ஆகும். போபாஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள் பயம் என்பதாகும். இது ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் செவ்வாய் கோளை நோக்கி 1.8 மீட்டர் தூரம் நகர்கிறது.

இதனால், அடுத்த 5 கோடி ஆண்டுகளில் இந்த துணைக்கோள் செவ்வாய் கோளின் மேல் மோதி வெடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

போபாஸ் என்ற பெயரில் செவ்வாய் கோளிற்கு விண்கலங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்ய இயலும் பேட்டரியை சிங்கப்பூரில் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேட்டரிகளின் ஆயுள் இருபது ஆண்டுகளாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சென் ஜியாடாங் இது குறித்து தெரிவித்த விவரம்:

நாங்கள் உருவாக்கியுள்ள இந்த பேட்டரி மூலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனங்கள் பயன்பெறும். செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை, இதனைப் பயன்படுத்த முடியும்.

ரீசார்ஜ் செய்யத் தக்க லித்தியம்-அயன் பேட்டரிகளின் சராசரி ஆயுள் 500 ரீசார்ஜ் களாகும். அதாவது, சராசரியாக 500 முறை ரீசார்ஜ் செய்ய இயலும். கால அளவில் கூற வேண்டுமானால், முழுமையான ரீசார்ஜ் அளிக்க இரண்டு மணி நேரமாகும்பட்சத்தில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

இப்போதைய பேட்டரிகளில் உள்ள கிராஃபைட்டுக்கு பதிலாக, டைட்டானியம் டையாக்சைடு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலிலுள்ள முடியின் பருமனில், ஆயிரத்தில் ஒரு பங்காக இதனைச் சிறிதாகத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம்.

வேதியியல் அடிப்படையில் இது வேகமாகச் செயலாற்ற வல்லது என்பதால், இதனைப் பயன்படுத்தும் பேட்டரியின் ரீசார்ஜ் மிக வேகமாக நிகழ்கிறது. மேலும் இதன் ரீசார்ஜ் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும். இதன் ஆயுள் 20 ஆண்டுகளாக இருக்க முடியும். அடிக்கடி பேட்டரி சார்ஜ் செய்வதால் அதன் ஆயுள் தீர்ந்துவிடும் காரணத்தால் பேட்டரியை மாற்றுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

பயன்படுத்திய பேட்டரிகளால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் மாசு குறையும். அடுத்த 2 ஆண்டுகளில் இது விற்பனைக்கு வரக் கூடும் என அவர் கூறினார்.

Banner

அண்மைச் செயல்பாடுகள்