அறிவியல் துகள்கள்

ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர்.

வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்துகொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி கொண்டது. ஆனால், அதே சிலந்தியின் விஷத்தில் உள்ள ஒரு பொருள், பக்கவாதம் தாக்கப்பட்ட மனித மூளையில் செல்கள் அழிந்துவிடாமல் காக்கும் திறன் கொண்டது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ரோபோக்கள் மனிதர்களுடன் பழகும்போது, மனிதர்கள் சொல்வது புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். இந்த குழப்பத்தை தவிர்த்து, மனிதர்களிடம் சரியான கேள்விகள் கேட்டு, விளக்கம் பெறும் திறனை ரோபோக்களுக்கு அளித்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

சிலிக்கன் சில்லுக்குள் மரம்!

ரோபோக்களை வேலைக்கு அமர்த்துவது இப்போது செய்தி களில் அடிபடுகின்றன. இந்த ரோபோக்கள் இயங்க மின்சக்தி அவசியம். ஆனால், இவற்றுக்கான மின்கலன்கள் அதிக எடையுள்ளவையாக இருப்பதால், ரோபோக்களை சிறிய அளவில் தயாரிப்பது சவாலாக உள்ளது.இதற்கு இயற்கையிடமிருந்து ஒரு உத்தியை, அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மரம் எப்படி நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி, இலைகளின் மூலம் சர்க்கரையை உருவாக்கி, தனக்கு வேண்டிய சக்தியை உருவாக்கு கிறது என்பதை கவனித்து, அதே போல, ஒரு சிறிய சிலிக்கன் சில்லில் செயற்கையாக ஒரு சாதனத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ’ட்ரீ ஆன் எ சிப்’ எனப்படும் இந்த தொழில்நுட்பம் பரிசோதனை நிலையை தாண்டினால், சில சர்க்கரை கட்டிகளை வைத்தே சிறிய ரோபோக்களை இயக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


புற்றுநோய் கட்டிகளை நீக்க உதவும் ஒளிரும் திரவம்

புற்றுநோய் கட்டியை துல்லியமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது சவாலானது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு ஒளிரும் திரவத்தை புதிதாக உருவாக்கியுள்ளனர்.

இதை உடலில் செலுத்தினால், புற்றுநோய் கட்டி முழுவதும் ஒளிரும். அதை வைத்து, புற்றின் சுவடே இல்லாமல் கட்டியை முழுமையாக நீக்க முடியும் என, இதை உருவாக்கிய வேதியல் விஞ்ஞானி ஹையிங் லியு தெரிவித்துள்ளார்.

நம் உடலில் ஒரு கடிகாரம் உண்டு. ஆனால், அது எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கு, ‘கரன்ட் பயாலஜி’ ஆய்விதழில், நரம்பியல் விஞ்ஞானியான எரிக் ஹெர்சாக் விடை யளித்திருக்கிறார்.

இதுநாள் வரை செல்களின் உள் அமைப்பில் இருக்கும், ‘அஸ்ட்ரோசைட்’ எனப்படும் பகுதியை, செல்களுக்கு ஆதரவாக இருக்கும் துணை செல்கள் அல்லது வெறும், ‘இடம் நிரப்பிகள்’ என்று கருதப்பட்டன. உடலின் பெரும்பாலான செல்களில் இருக்கும் அவை தான் உயிரி கடிகாரம் போல செயல்படுகின்றன என்கிறார் ஹெர்சாக்.

நிலாவில் மொபைல் நெட்வொர்க்!  

நிலாவில் கால் பதிக்கும் முதல் வர்த்தக நிறுவனமாக தங்களுடையது இருக்கும் என்று அறிவித்துள்ளது, அய்ரோப்பாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு. ‘பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் அந்த குழு, 2018ல், இரண்டு சிறிய ஊர்திகளை, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், பால்கன் 9 ராக்கெட்டுகள் மூலம் நிலாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

பெர்லின் நகரைச் சேர்ந்த அக்குழு, வோடபோன் நிறுவனத்துடன் சேர்ந்து நிலாவில் ஒரு மொபைல் சமிக்ஞை நிலையத்தை அமைக்க வுள்ளது. நிலாவில் பல ஊர்திகளை பரிசோதனை முறையில் அனுப்ப, இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் தனியார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால், அந்த ஊர்திகள், நிலாவிலிருந்து பூமிக்கு தகவல் பரிமாற இந்த நிலையம் உதவும் என, பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ் அமைப்பின் தலைவர் ராபர்ட் போஹெமி தெரிவித்துள்ளார். ‘மனித குலம் பூமித் தொட்டிலை விட்டு வேறு கிரகங்களுக்குச் செல்ல வேண்டியதை உணர்ந்திருப்பதால், அதற்கேற்ற தகவல் தொடர்பு சேவைகளை நாம் பூமிக்கு அப்பாலும் உருவாக்க வேண்டும்‘ என்று ராபர்ட் கூறியுள்ளார். ‘அலினா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலா ஊர்தி, வருங்காலத்தில் விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் வைக்கும்போதும் மிக்க பயனுள்ளதாக இருக்கும். பூமியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எல்.டி.ஈ., எனப்படும் மொபைல் தொழில்நுட்பமே நிலாவிலும் பயன்படுத்தப்படும் என்று பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ் குழு தெரிவித்துள்ளது. ‘இத்திட்டம் வெற்றி பெற்றால், ஜெர்மனியின் முதல் நிலவு முயற்சியாகவும் இருக்கும்‘ என்று, ஜெர்மனியின் வோடபோன் தலைவர் ஹான்ஸ் அமெட்ஸ்ட்ரெய்டர் தெரிவித்தார்.


பற்களை வார்க்கும் 3டி பிரின்டர்!

மருத்துவத் துறையில் முப்பரிமாண அச்சு இயந் திரங்கள் அருமையான சேவைகளை செய்து வரு கின்றன. உச்சந்தலை முதல், பாதம் வரை பல உறுப்பு களை, மருத்துவர்கள் முப் பரிமாண அச்சு இயந்திரங்களின் உதவியால் செய்து விடுகின்றனர்.

சிங்கப்பூரை சேர்ந்த, ‘ஸ்ட்ரக்டோ’ தயாரித்துள்ள, ‘டென்டாபார்ம்‘ என்ற இயந்திரம் பற்களை வார்த் தெடுக்க உதவுகிறது. மிகச் சிறிய அளவே உள்ள டென்டாபார்ம், பல் மருத்துவர்களுக்கு வேகமாக, கச்சிதமாக பற்களை அச்சிட்டு தந்துவிடுகிறது.டென்டா பார்ம், 50 மைக்ரோ மீட்டர் துல்லியத்தில் பற்களை அச்சிட வல்லது.  ஏற்கனவே, இதே சிங்கப்பூர் நிறுவனம், ஆர்த்தோ பார்ம் என்ற எலும்புகளை அச்சிடும் முப்பரிமாண இயந்திரத்தை தயாரித்துள்ளது குறிப் பிடத்தக்கது. ‘டென்டாபார்மில் பயன்படுத்தப்படும், ‘மாஸ்க் ஸ்டீரியோ லித்தோகிராபி’ தொழில்நுட்பம், பல் மருத்துவர்களின் எல்லா தரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், பல் மருத்துவ உலகில் டிஜிட்டல் புரட்சியை விரைவு படுத்தும்‘ என்கிறார், ஸ்ட்ரக்டோ வின் நிறுவனர்களுள் ஒருவரான ஹப் வான் எஸ்ப்ரோயக்.

ஆய்வுக்கூடத்தில் ‘வளர்ந்த’ கோழிக் கறி!

கோழி இல்லாமல், கோழிக் கறி சமைக்க முடியுமா? ‘மெம்பிஸ் மீட்ஸ்’ என்ற அமெரிக்க உணவு ஆராய்ச்சி நிறுவனத்தால் முடிந்தி ருக்கிறது.
அண்மையில், அது உலகிலேயே முதல் முறையாக, அசல் கோழியின் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் வளர்த்து உருவாக்கிய செயற்கை இறைச்சியை அறிமுகப்படுத்தியிருக் கிறது.கோழி, ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பதற்கு, மேய்ச்சல், பண்ணை என்று எந்த முறையை கடைபிடித்தாலும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் அதிக சேதாரம் நிகழ்வதை தடுக்க முடிவ தில்லை.
ஆனால், ‘சிந்தெடிக் பயாலஜி’ எனப்படும் செயற்கை உயிரியல் முறையில், ‘மெம்பிஸ் மீட்ஸ்’ போன்ற உணவு நிறு வனங்கள் உருவாக்கும் இறைச்சிகளுக்கு நீர், தீவனம், நிலப்பரப்பு போன்றவை அதிகம் தேவையில்லை. விலங்கு கள் வெளியேற்றும் பசுமைக் குடில் வாயுக்கள், ஓசோன் படலத்தை சிதைக்கும் ஆபத்தும் தவிர்க்கப்படுகிறது. தவிர, செயற்கை உயிரியல் முறையில், அசல் விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்ப தால், விலங்கு வதை குறித்த கவலைகளும் கிடையாது.வேறு ஒரு நிறுவனம் ஆய்வகத்தில் உருவாக்கிய செயற்கை மாட்டிறைச்சி, 2013இல் அறிவிக்கப்பட்டபோது, அதன் சுவை நன்றாக இல்லை என்ற புகார் எழுந்தது.

ஆனால், மெம்பிஸ் மீட்சின் கோழி இறைச்சி அசல் போலவே இருப்பதாக அதை ருசித்தவர்கள் புகழ்ந்துள்ளனர். மெம்பிஸ் மீட்சின் தலைமை செயல் அதிகாரியான உமா வலேட்டி ஒரு அமெரிக்கா வாழ் இந்தியர். இவர், ‘பீர் தயாரிக்கப்படுவதற்கு ஒப்பான முறையை நாங்கள் கோழி இறைச்சியை உருவாக்க பயன்படுத்துகிறோம். 2021 வாக்கில் மெம்பிஸ் மீட்சின் கோழி, வாத்து இறைச்சிகள் எங்கள் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும்‘ என்கிறார்.அசல் கோழி இறைச்சியின் சுவை, தோற்றம் இருந்தாலும், மெம்பிஸ் மீட்சால், விலை மட்டும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

மிதக்கும் சூரிய மின் நிலையம்

இந்தியாவின் மிகப் பெரிய மிதக் கும் சூரிய மின் நிலையம் கேரள மாநிலம் காயம் குளத் தில் அமைக்கப்பட் டுள்ளது. ராஜீவ் காந்தி கூட்டுச் சுழல் மின்உற்பத்தி ஆலை யில்  100 கிலோ வாட் பீக் ஆற்றல் அளவுகொண்ட சூரிய மின்தகடுகள் பதிக்கப் பட்டுள்ளன. தேசிய அனல் மின் கழகம்  இந்தத் தகடுகளை நிறுவியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்குள் சூரிய மின் நிலையம் அமைப்பதால் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் வெப்பம் குறைக்கப்படுகிறது. இதனால் மின் ஆற்றல் உற்பத்தி இழப்பும் குறையும். மேலும் இந்தத் தகடுகளை மேலே நிறுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாவதும் குறையும். அதனால் மிதக்கும் சூரிய மின் நிலையம் இப்போது உலகம் முழுவதும் பரவலாகிவருகிறது. உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் தென்கொரியாவின் அன்சியோங் நகரத்தில் நிறுவப்பட்டது.

ஒளிரும் தவளை

உலகின் முதல் ஒளிரும் தவளை அர்ஜெண்டினா வில் சாண்டஃபே என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப் பட் டுள்ளது. காலை வெளிச்சத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தத் தவளைகள் இரவில் நீலம், பச்சை நிறங்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன.     ‘Proceedings of the National Academy of Sciences’     என்னும் இதழில் இது குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. குறைந்த அலைநீளத்தில் ஒளியை கிரகித்து, நீண்ட அலை நீளத்தில் ஒளியைப் பிரதிபலிப்பதனால்தான் இந்த ஒளிரும் தன்மை ஏற்படுகிறது.

உலகின் மிகச் சிறிய காந்தம்
புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்

அறை அளவுக்குப் பெரிதாக இருந்த கணினி இன்று உள்ளங்கையில் வைத்து இயக்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. அந்த வகையில் முதல் தலைமுறை கணினி யிலிருந்து நான்காம் தலைமுறை கணினிக்கு வந்தடைந்திருக்கிறோம். அதேபோல ஆரம்ப கால கிராமஃபோன் இசைத் தட்டுகள் ஹோட்டல் தோசை போலப் பெரிதாக இருந்தன. அதிலிருந்து பாக்கெட் அளவு ஆடியோ கேசட் வந்தபோது, அதில் அதிக அளவாகச் சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அளவுக்கு இசையைப் பதிய முடிந்தது.

அடுத்து சி.டி. டிஸ்க், எம்.பி. 3 சி.டி., பென் டிரைவ், தம் டிரைவ் எனப் படிப்படியாகச் சாதனங்களின் அளவு சிறுத்தும், அதில் பதிவு செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இப்படித் தொழில்நுட்பம் பெரிய எல்லைகளை ஒவ் வொரு முறையும் தொடும்போது தொழில்நுட்பச் சாதனங்களில் அளவு சிறுத்துக்கொண்டே போகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஒரு கிரெடிட் கார்டின் அள விலான பகுதியில் 35 கோடி பாடல்களைப் பதியும் நாள் தொலைவில் இல்லை என நிரூபித்துள்ளனர் நானோ அறிவியல் விஞ்ஞானிகள்.

ஒரு அணுவில் ஒரு பிட்

கலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள அய்.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மய்யத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை பிட் தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.

அணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் நோபல் பரிசு வென்ற ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி  மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.

கணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு பிட்  எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற் போதுள்ள வன்தட்டு இயக்கியில்  ஒரு பிட்டைப் பதிவு செய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த அய்.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள். தொழில் நுட்பத்தை முடிந்த அளவுக்குச் சுருக்கினால் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை மேற்கொண்டோம் என்கிறார் நானோ ஆய்வாளர் கிரிஸ்டோபர் லட்ஸ்.

1,000 மடங்கு அதிகம் பதியலாம்

இது நானோதொழில்நுட்பத்தின் 35 ஆண்டு கால வரலாற்றில் மைல் கல். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு காந்த அணுக்களில் தகவல் பதிய அவற்றுக்கு இடையில் ஒரு நானோமீட்டர் இடைவெளி இருந்தாலே போதுமானது. (ஒரு நானோமீட்டர் இடைவெளி என்பது ஒரு குண்டூசி தலையின் அகலத்தில் 10 லட்சத்தில் ஒரு பங்கு.) இந்தக் கண்டுபிடிப்பு மூலமாகத் தற்போது உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ் மற்றும் மெமரி சிப்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிக அடர்த்தியில் பதியலாம்.

ஆகவே, கூடிய விரைவில் எல்லோருடைய கணினி, கைபேசி உட்பட அத்தனை சாதனங்களும் இன்னும் பல மடங்கு அளவில் சிறுத்துத் திறனில் மேம்படும். இந்த ஆய்வு முடிவு நேச்சர் ஆய்விதழில் மார்ச் 8 அன்று வெளியானது. நாம் இது வரை அடைந்ததில் உச்சபட்ச சாத்தியம் இந்த ஒற்றை அணு. இதுவரை நாங்கள் பார்த்த சேமிப்பு சாதனங்களிலேயே இதுதான் அதிஅற்புதமானது. அதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்றார் முன்னாள் அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானியும் தற்போது கொரியாவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் சயின்ஸ்-ன் விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச்.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை

450 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக்-அய் இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. மார்ச் 11-ம் தேதி ஒடிசாவில் உள்ள சாந்திபூர் கடல் பகுதியில் இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது.

இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப்பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம்வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இப்போது அதன் வேகத்தை 450 கிலோ மீட்டராக அதிகப்படுத்தியுள்ளனர்.

இதன் வேகத்தை 800 கிலோ மீட்டராக மாற்றும் ஆய்வு இப்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மோஸ்க்வ ஆகிய இரு நதிகளின் பெயரை இணைத்து இந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வைதிகர்களின் இறக்கம்

11.08.1929 - குடிஅரசிலிருந்து..

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை.  நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:

1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்து வதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்  பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற் படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத்துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும். குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்களுக்குக் கடவுள் எண்ணம் எப்பொழுது எப்படி ஏற்பட்டது?

28.07.1929- குடிஅரசிலிருந்து...

மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகு தான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படு வதில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக் கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத் திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கை யின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானா லும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டு மானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டு தான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றது, இவைகளெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள், அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளிமலையாக வும் அங்கு கடவுள் இருப்பதாக வும் அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப் பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல் நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்ன வென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக் கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனா யிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக் கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரிய மெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக சூரிய, சந்திரகிரணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து  சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங்கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகா தார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப் பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாத வைகளையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச் சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்

படாம லிருப்பதையும் பார்க்கின் றோம் அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.
இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவ தில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க் கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடுசெய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக் கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத்திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத் திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக் கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறி வுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக் காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந் தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒரு வொருக்கொருவர்  கடவுள் வணக்கத்திலும், கடவுள் மீது சுமத்தும் பொறுப் பிலும் அநேக வித்தியாசமுண்டு.
Banner
Banner