கட்டடம் கட்டும் ரோபோக்கள் பல பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்காவிலுள்ள எம்.அய்.டி., ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், யார் உதவியும் இல்லாமல், ஒரு முழு வீட்டைக் கட்டும் திறனுள்ள ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் பிளாட்பார்ம்‘ என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சக்கரங்களைப் பயன்படுத்தி நகர்கிறது. இதன் நீண்ட உலோகக் கரம், எல்லா திசைகளிலும் திரும்பும் லாவகம் கொண்டது.

இந்த உலோகக் கரத்தின் நுனியில் தேவைக்கேற்ப கருவிகளை மாட்டிக்கொள்ளலாம். இந்த கருவிகள் சிமென்ட், மணல், பனித் துகள், மரச் சிராய்ப்புகள் என, பல கட்டடப் பொருட்களைக் கையாளும் திறன் கொண்டவை.

கட்டடத்திற்கான வரைபடத்தை வைத்து, அவற்றுக்கு வேண்டிய பொருட்களை இந்த ரோபோ வாகனத்தில் வைத்துவிட்டால், ரோபோவே ராப்பகலாக உழைத்து முழு வீட்டைக் கட்டித் தந்துவிடும். இந்த ரோபோவால், பாலைவனம், பனிப் பிரதேசம், ஏன், செவ்வாய் கிரகத்தில் கூட கிடைக்கும் பொருட்களை வைத்து, வீடு கட்ட முடியும்.


மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை.

ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது.

இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப் பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் திருப் பினால், விமானம் வேகமாக பறந்து செல்லும்.

ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 300 கி.மீ., துரத்தை ஈகிளால் பறந்து கடக்க முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் அது பறக்கும் என்பதால் தான், அதை ஜெட் விமானம் என்று லிலியம் சொல்கிறது.


‘பேஸ்புக்‘கின் ஒரு பிரிவு, மூளை -கணினி இடைமுகத் தொழில்நுட்பத்தில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால், எவரும், நினைத்ததை, நினைத்த வேகத்தில், கணினியில் தட்டச்சு செய்ய முடியும்.

இதே தொழில்நுட்பத்தை, வேறு பல ஆராய்ச்சி நிலையங்களும் சோதித்து வருகின்றன. ஆனால், பேஸ்புக்கின் தொழில்நுட்பம், மூளைக்குள் அறுவை சிகிச்சை மூலம், எந்த கருவியையும் வைக்காமல், ‘ஸ்கேனர்’ ஒன்றை தலைக்கு அருகே வைத்து, மூளையில் சிறு மின் அலைகளாக உதிக்கும் எண்ணங்களை படித்து, புரிந்து கொண்டு, அவற்றை எழுத்துக்களாக கணினி திரையில் காட்டும் திறன் கொண்டது.

விரல்களால் விசைப் பலகையில் தட்டச்சு செய்வோர், நிமிடத்திற்கு, 35 முதல், 75 சொற்கள் வரை தட்டச்சு செய்வர். தற்போது வந்துள்ள குரல் உணர் தொழில்நுட்பங்கள் அதைவிட வேகமாக செயல்படுகின்றன.ஆனால், மனதில் எண்ணம் உதிக்கும் வேகம் அதிகம்.

எனவே, பேஸ்புக்கின் மூளை-க்கணினி இடைமுகத்தை பயன்படுத்துபவரால் நிமிடத்திற்கு, 100 சொற்கள் வரை தட்டச்சு செய்ய முடியும். அடுத்து, பிறர் பேசுவதை கேட்பதற்கு, மனிதத் தோலை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பேஸ்புக் உருவாக்கி வருகிறது.

மனித தோல் மீது சில உணர்வான் கருவிகளை வைத்து, குறிப்பிட்ட அலைவரிசை மூலம் தகவல்களை பரிமாற முடியும் என்கிறது பேஸ்புக். காது கேட்கும் திறன் இல்லாதவருக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.

Banner
Banner