‘சுவரொட்டி’ தொலைக்காட்சி!  

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த 2017க்கான ‘சி.இ.எஸ்.,’ எனப்படும் நுகர்வோர்மின்னணு பொருட் காட்சியில் அறிமுகமான சில புதுமைகள்!

சி.இ.எஸ்.,சில் புதுமையான, ‘டிவி’ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது நிச்சயம். இந்த ஆண்டு, ‘டிவி’ திரையை இளைக்க வைத்து தனித்து நிற்க வைப்பது தான் புதிய போக்கு. சோனி, எல்.ஜி., சாம்சங் ஆகிய மூன்றுமே, ‘டிவி’ திரைக்குப் பின்னால் இருந்த மின்னணு சமாச்சாரங்களை தனியே வைக்கும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளன.

தவிர, எல்.சி.டி., - எல்.இ.டி., வகை திரைகளுக்கு அடுத்து, இப்போது எல்லா நிறுவனங்களுமே, ஓ.எல்.இ.டி., வகை திரைகளை நாட ஆரம்பித்திருக்கின்றன. இதில், பல விமர்சகர்கள் விருது அளித்தது எல்.ஜி.,யின், ‘சுவரொட்டி’ திரைகளுக்குத் தான்.

எல்.ஜி., இதை, ‘வால் பேப்பர்’ திரைகள் என்கிறது. ‘எல்.ஜி., - ஓ.எல்.இ.டி.டபிள்யு’ வரிசை, ‘டிவி’க்கள், உண்மையிலேயே சுவற்றில் ஓவியத்தை மாட்டுவது போல, இரு ஆணிகளை அடித்து மாட்டி, கீழ் பகுதியை காந்தத்தின் மூலம் அசையாமல் இருக்க வைத்து விடலாம்.

ஓ.எல்.இ.டி., ‘டிவி’க்களில், திரையில் உருவங்களுக்கு ஒளியேற்றும் தேவை இல்லை என்பதால், மின்சார செலவு கணிசமாக குறையும் என்கிறது, எல்.ஜி., பல அளவுகளில் வரும் எல்.ஜி.,யின் வால்பேப்பர், ‘டிவி’ திரைகளின் தடிமன் வெறும், 2.5 மில்லி மீட்டர்களே!

திரையில் காட்சிகளை தோன்ற வைக்கும் மற்ற எல்லா மின்னணு அமைப்புகளும் ஒலி பெருக்கியில் அடக்கி விட்டது, எல்.ஜி., இந்த அமைப்பை, ‘சவுண்ட் பார்’ என்கிறது, எல்.ஜி., திரைக்கு அடிவாரத்தில் சவுண்ட் பாரை வைத்து, அதிலிருந்து மின் கம்பிகளைக் கொண்ட சிறிய பட்டையை, ஒல்லித் திரையுடன் இணைத்துவிடலாம்.  திரைக்கு இரு ஓரங்களில் நின்று பார்த்தாலும் படம் பிசிறில்லாமல் தெரியும் என, எல்.ஜி., சொல்கிறது.

அட்டைக் கணினி

கடன் அட்டைகள் நான்கை அடுக்கியது போன்ற தடிமன்; ஸ்மார்ட்போன் மின்கலனைப் போன்ற தோற்றம்; ஆனால் உள்ளே அபார திறன் கொண்ட, ‘இன்டெல்’லின், ‘கம்ப்யூட் கார்டு’ சி.இ.எஸ்.,ல் பலரைக் கவர்ந்தது. நினைவகம், தகவல் அலசும் புராசசர், வை - பை ரேடியோ போன்றவற்றை அடக்கியது.

விசைப் பலகையையும், திரையையும் இணைத்தால், இது ஒரு முழு கணினி தான். இதை, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் நிறுவனம் படைத்திருப்பது, பலரை வாய் பிளக்க வைத்திருக்கிறது. திற மூல கணினி உலகில் பிரபலமான, ‘ராஸ்ப்பெர்ரி பை’ கணினி புராசசர்களுக்கு போட்டியாக வந்துள்ள, ‘இன்டெல்’லின் இந்த படைப்பை, வீடு மற்றும் அலுவலக சாதனங்களுடன் இணைத்து அவற்றை, ‘புத்திசாலி’ இயந்திரங்களாக மேம்படுத்த முடியும்.

ஏற்கனவே நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளரான, ‘ஷார்ப்’ இந்த அட்டைக் கணினியை பயன்படுத்த இருக்கிறது. மேலும் பல கணினி மற்றும் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், ‘இன்டெல்’லின் இந்த குட்டி ஜீனியசை தங்கள் சாதனத்துடன் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேசைக் கணினி, மடிக் கணினி, பலகைக் கணினி ஆகியவற்றுக்கு அடுத்து, அட்டைக் கணினி ரகத்திற்கு இன்டெல் அச்சாரம் போட்டிருக்கிறது!


குரல் கட்டளை நுட்பத்தில் முந்தும் ‘அலெக்சா!’

வீடு, அலுவலகங்களில் உள்ள சாதனங்களை குரல் உத்தரவின் மூலம் இயக்குவதும், அவை தரும் தகவல்களை குரல் மூலமே கேட்பதும், இனி எதிர்காலத்தில் பரவலாகிவிடும் என்கின்றனர் கணிப் பொறி விஞ்ஞானிகள்.

இதனால், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, குரல் சார்ந்த சாதனங்களுக்கு இனி கிராக்கி அதிகரிக்கும். இந்த சந்தையில், 2015ல் அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ என்ற தட்டையான, ‘ஒலிபெருக்கி’ போன்ற கருவி, அமேசானின் செயற்கை நுண்ணறிவு மென் பொருளான, ‘அலெக்சா’வைக் கொண்டு இயங்குகிறது. இதை, ‘ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ என்றே அமேசான் அழைக் கிறது.எக்கோ கருவியிடம் அதன் உரிமையாளர் கட்டளையிட்டால், அவர் விரும்பும் பாடல்களை இசைக்கும்.

கேட்கும் தகவல்களை இணையத்தில் தேடி, பதிலைத் தரும். வீட்டு மின் அமைப்புகளை கட்டுப் படுத்தும். வீட்டிலுள்ள பிற சாதனங்களுடன் பேசும். எக்கோவை அடுத்து, ‘டாட்’ என்ற சிறிய ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் அமேசான் அறிமுகப்படுத்தியது. இந்திய அமேசானில், 8,000 ரூபாய்க்கு கிடைக்கும்; டாட்டும் அலெக்சா மென்பொருளையே பயன்படுத்துகிறது.

கடந்த சில வாரங்களாக, அமேசானின் அலெக்சா மென்பொருளை பயன்படுத்தும் பிற நிறுவனங்களின் கருவிகளும் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. லெனோ வாவும் அலெக்சாவை பயன்படுத்தும் ஸ்மார்ட் ஸ்பீக் கரை அறிமுகப்படுத்தியுள்ளது. அலெக்சா மூலம் இயங் கும் விளக்கை ஜெனரல் எலக்ட்ரிக்கும், துணி துவைக்கும் இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் ஆகியவற்றை விர்ல்பூல் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், குரல் கட்டளை தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன.  என்றாலும்,  அமேசானின் தொழில்நுட்பத்தையே இப்போது வீட்டு பயன்பாட்டு சாதன நிறுவனங்கள் சுவீகரித்துள்ளதால், அலெக்சா முன்ணணி இடத்தை பிடித்துள்ளது.

ட்ரோன்களை அழிக்க நுண்ணலை கருவி!  

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடுவது போன்ற அத்து மீறல்களும் அதி கரித்துள்ளன.

எனவே, ராணுவம், காவல்துறையினருக்கு ட்ரோன்களை தடுக்க அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கியிருக்கிறது ‘ரேதியான்’ நிறுவனம். மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’ என்ற இச் சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டி ருக்கிறது.

ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் உண்டு. ட்ரோனை கண்டறிந்ததும், டிஷ் மூலம் அடர்த்தியான நுண்ணலை துடிப்புகளை பேசர் அனுப்பும். இதனால் ட்ரோன்களில் இருக்கும் மின்னணு சாதனங்கள் நொடியில் பொசுங்கிவிடும்.

ஒரே சமயத்தில் பல ட்ரோன்களை இதுபோல பொசுக்க பேசரால் முடியும். அதுமட்டுமல்ல, எதிரியின் செயல்பாடுகளை முடக்க, அவர்கள் பயன்படுத்தும் எந்த மின்னணு சாதனத்தையும் தொலைவிலிருந்தே வறுத்தெடுக்க பேசரால் முடியும். இதை சிவிலியன்கள் பகுதியில் பயன்படுத்தப்படுவதை கற்பனை செய்தாலே நடுக்கம் வருகிறது, இல்லையா?

பழைய துணியிலிருந்து விமான எரிபொருள்!

வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து, எரிபொருட்களை தயாரிக்க முடியுமா? இன்று, உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த நோக்கத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

ஜப்பானின் சுற்றுச்சூழல் திட்டமிடல் அமைப்பான, ‘ஜெப்லான்’ பசுமை பூமி அமைப்பு மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை, பழைய துணிகளிலிருந்து, ‘பயோ எத்தனால்’ எனப்படும் எரிபொரு ளை தயாரிக்க முயன்று வருகிறது. பழைய துணிகளில் உள்ள பருத்தியை நொதிக்கவைத்து, அதில் கிடைக்கும் சர்க்கரைகளை கொண்டு விமான எரிபொருளை தயாரிப்பதே இந்த அமைப்புகளின் நோக்கம். இதற்கென, ஜப்பானிலுள்ள துணி விற்பனையாளர்களிடம் பேசி உபரியான, விரயமான துணிகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பருத்தியிலிருந்து குறைந்த அளவே சர்க்கரையை பிரித்தெடுக்க முடியும்.

எனவே, வீணாகும் இதர நார் பொருட்கள் மற்றும் காகிதங்களையும் கலந்து நொதிக்கவைத்தால், கட்டுபடியாகக்கூடிய அளவுக்கு விமான எரிபொருள் கிடைக்கும். இதற்கென உருவாக்கப்பட்டுவரும் சோதனை ஆலையிலிருந்து வரும் பயோ எத்தனாலை, அடுத்த மூன்று வருடங்களுக்கு பயன்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கவிருக்கிறது ஜப்பான் ஏர்லைன்ஸ்.

Banner
Banner