சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் விதமாக கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 130 வெளிநாட்டு செயற்கைக் கோள் களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உலக அளவில் சிறந்த 10 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழ் கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை கண் காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

அதேசமயம், தன்னுடைய நிதித்  தேவை யை பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் நம்முடைய ராக்கெட் மூலம் இஸ்ரோ வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேசன் என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம் இஸ் ரோவின் வர்த்தக பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் பணியை இஸ்ரோ கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது. இதுவரை 237 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ நம்முடைய ராக்கெட்கள் மூலம் வர்த்தக ரீதியாக விண் ணில் செலுத்தி உள்ளது.

ஒரே ஆண்டில் 130

குறிப்பாக, கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 19 நாடுகளைச் சேர்ந்த 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றி கரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது. இதில், 106 செயற்கைக் கோள்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட் டுள்ளன.

நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், கஜகஸ்தான், அய்க்கிய அரபு அமீரகம், ஜப்பான், லட்வியா, சிலி, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவாக்யா, லித்துவேனியா, பிரான்சு, செக் குடியரசு ஆகிய 15 நாடு களுக்குச் சொந்தமான தலா ஒரு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது.

முன்னதாக, 2016இல் 22 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் 2015இல் 17 வெளி நாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்படி, முதல்முறையாக 130 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை ஒரே ஆண்டில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத் துள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் இந்தியா தடம் பதித்துள்ளது.

குறைந்த கட்டணம்

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ தனது பிஎஸ் எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது. இதுவரை 42 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 40 ராக்கெட்கள் வெற்றியை தந்துள்ளன. இதனால், இந்த ராக்கெட் உலக அளவில் மிகுந்த நம்பத்தன்மையை பெற்றுள்ளது.

மேலும், செயற்கைக் கோள்களை விண் ணில் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா குறைந்த கட்டணமே வசூலிக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நுகர்வோர்கள் இந்தி யாவை அதிகம் தேடி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆட்களுடன் பறக்கும், ‘ட்ரோன்!’   

‘ட்ரோன்’ எனப்படும் வானுர்தி, ஆளின்றி தானே பறக்கும் வாகனங்கள். ஆனால், அண்மையில், ஜெர்மானிய ட்ரோன் தயாரிப்பாளர், ‘வெலோகாப்டர்’ என்ற நிறுவனம் ஆளை ஏற்றி, தானே பறந்து செல்லும் திறன் கொண்ட ட்ரோன் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பயணி சும்மா அமர்ந்திருந்தால் போதும்.

‘ஏர் டாக்சி’ சந்தையை குறிவைத்து தயாரிக்கப்படும் வெலோ காப்டரின் மேலே, 18 சிறிய விசிறிகள் உள்ளன. நேராக தரையிறங்கி, நேராக வானில் உயரும் வெலோ காப்டர், நகரகளில் குறுகிய தூரத்திற்கு பயணி யரை ஏற்றிச் செல்ல உதவும். வெலோகாப்டரில், பிரபல சிலிக்கன் சில்லு நிறுவனமான, ‘இன் டெல்’லும் முதலீடு செய்திருக்கிறது.

எனவே, வெலோகாப்டரில் முதன் முதலில் பறந்து காட்டியதும் இன்டெல்லின் உயர் அதிகாரி தான்.

வெலோகாப்டர் போன்றவற்றை செலுத்த விமானி தேவையில்லை என்பதாலும், எங்கும் இறங்கி பயணியரை, ‘பிக் அப்’ செய்ய முடியும் என்பதாலும், ‘உபேர்’ போன்ற வாடகை வாகன துறை நிறுவனங்கள், ட்ரோன்களின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்துள்ளன. சரியான தொழில்நுட்பம் வரும்போது அதை பட்டென்று அபகரிக்க காத்திருக்கிறது.

தையல்கார ‘ரோபோ’க்கள்

விரைவில், ‘ரோபோ’க்கள் தையல் வேலை யையும் கையில் எடுத்துக் கொள்ளப் போகின்றன. அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், கணினி பார்வை மற்றும் ரோபோ கரங்களினால் சிக்கலான தையல் வேலை களை செய்கிறது.

‘சியூவ்போட்’ எனப்படும் இந்த தையல் ரோபோக்களை, ‘சாப்ட்வியர்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 2018இன் இறுதிக்குள், ‘அடிடாஸ்’ நிறுவனத்தின், ‘டி - சர்ட்’ தையலகத்திற்கு இந்த சியூவ்போட்கள் வேலைக்குப் போய்விடும். அங்கு, 22 வினாடிகளுக்கு ஒரு டி - சர்ட் வீதம் தைத்துத் தள்ளும் என, சாப்ட்வியரின் தலைமை நிர்வாகியான பழனிசாமி ராஜன், ஊடகங்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வியரின் தையல் ரோபோக்களை, சீன பின்னலாடை நிறுவனமான டியான்யுவான் கார்மென்ட்ஸ் வாங்கி, அமெரிக் காவில் அது நடத்தும் தையல் ஆலையில், அமெரிக் காவின் அடிடாஸ் நிறுவனத்துக்கு ஆடைகளை தைத்துத் தரவிருக்கிறது!

தையல் பணியாளரின் அனுபவம் மிக்க பார்வை மற்றும் கைவண்ணத்தை ரோபோ மயமாக்க, கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சாப்ட்வியரின் தையல் ரோபோவில் உள்ள அதிவேக கணினி கேமராக்கள், ஊசியை நோக்கிச் செல்லும் துணியை வினாடிக்கு, 1,000 தடவைகள் படமெடுத்து அலசி, துணியை மைக்ரோ மீட்டர் துல்லியத்துடன் துணியை எங்கே நகர்த்த வேண்டும் என்று தெரிவிக்க, ரோபோ கரங்கள் அதேபோல துணியை நகர்த்தி தையல் வேலையை முடிக்கின்றன. இப்படி ஒரு ரோபோ தைக்க ஆகும் செலவு வெறும், 22 ரூபாய் தான். சாப்ட்வியரின் ரோபோக்கள் அடுத்து, ஜீன்ஸ் போன்ற கடினமான தையல் சவால்களை ஏற்கவிருக்கின்றன.

2019இல் வரும் ஜி.எம்., மின் தானோட்டி கார்!

கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், ஜி.எம்., எனப்படும் ஜெனரல் மோட்டார்ஸ், வரும், 2019இல் புதிய தானோட்டி கார் ஒன்றை அறிமுகப் படுத்த இருக்கிறது. முற்றிலும் மின்சாரக் காரான, ‘போல்ட்’ என்கிற தன் மாடல் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் தானோட்டி காருக்கு, ‘க்ரூயிஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, அமெரிக்க வாகனத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், க்ரூயிஸ் காரில் வாகன ஓட்டி பயன்படுத்தும், ‘ஸ்டியரிங்’கும், ‘ஆக்சலரேட்டர், பிரேக்‘கிற்கான பெடல்களும் இருக்காது என, ஜி.எம்., அறிவித்திருப்பது தான்.

அமெரிக்காவின் சில மாகாணங்களில் தன் தானோட்டி வாகன தொழில்நுட்பத்தை ஏற்கனவே, ஜி.எம்., வெள்ளோட்டம் பார்த்து வருகிறது.

2019இல் வெளிவரும் க்ரூயிஸின் விலை மற்றும் தொழில்நுட்ப விபரங்களை, ஜி.எம்., அடுத்து வரும் மாதங்களில்வெளியிடக்கூடும்.

என்றாலும், கூகுளின் தானோட்டி வாகன பிரிவான, ‘வேமோ’ இன்னும் தன் கார் எப்போது சந்தைக்கு வரும் என, திட்டவட்டமாக தெரிவிக்க வில்லை. இதனாலும், க்ரூயிஸ் தானோட்டி காரின் அறிவிப்பு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்த அல்மரினா மஸ்கரெல்லோ எனும் பெண்மணிக்கு அந்தக் ‘கை’ பொருத்தப்பட்டுள்ளது. “இழந்த கை மீண்டும் கிடைத்ததை போல் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கையை உருவாக்கிய இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே தொடு உணர்வு உள்ள செயற்கை கை ஒன்றை உருவாக்கினார்கள்.

எனினும், அந்தக் கையுடன் பொருத்தப்பட்டிருந்த தொடு உணர்வை உள்வாங்கும் கருவி (சென்சார்) மற்றும் கணிப்பொறி ஆகியன அளவில் பெரியதாக இருந்ததால், அதை ஆய்வகத்துக்கு வெளியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் இல்லாமல் போனது.

அதே கருவிகளை ஒரு தோள் பையில் சுமந்து செல்லும் அளவுக்கு சிறிய அளவில் தற்போது உருவாக்கியுள்ளனர் அந்தக் குழுவினர்.

இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மின்னணுவியல் மற்றும் ரோபோடிக் வல்லுநர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த செயற்கைக் கையால் தொடப்படும் பொருள் மென்மையானதா, வன்மையானதா என்பதை அறியும் உணர் கருவி அத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கருவி, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணிப்பொறிக்கு அனுப்பும் சமிக்ஞை மூலம் மூளை அப்பொருளைத் தொடுவதை உணரும் வகையில் அந்தக் கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வக சோதனைகளின்போது அல்மரினாவின் கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், தான் என்ன பொருளைத் தொடுகிறேன் என்பதை அவர் சரியாகக் கூறியுள்ளார்.

எனினும், அது இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதால் அல்மரினாவுக்கு அந்த செயற்கை கை ஆறு மாதங்களே பொருத்தப்பட்டிருந்தது. ஆய்வுகள் முழுமை செய்யப்பட்ட பின்பு, அந்தக் கையை மீண்டும் பொருத்திக்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முழு முதல் ‘மின்’ விமானம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, எலக்ட்ரோ ஏரோ, விமானிகளுக்கு பயிற்சி தர உதவும் சிறு விமானம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது என்பது தான் இதன் சிறப்பு.

அய்ரோப்பாவில், சில நிறுவனங்கள், பயணியருக்கான சிறு மின் விமானங்களை வடிவமைத்து வெள்ளோட்டம் பார்த்துள்ளன. என்றாலும், முதல் முறையாக விமானிகளுக்கு பயிற்சி தருவதற்கென்று, அரசு அனுமதி பெற்ற மின் விமானம் இது தான்.

சுலோவேனியாவைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் நிறுவனம், இந்த விமானத்தை வடிவமைத்து உதவியிருக்கிறது. இம்மின் விமானத்தின் மின்கலனை ஒரு முறை மின்னேற்றம் செய்தால், ஒன்றரை மணி நேரம் வரை வானில் பறக்க முடியும்.

தேவைப்பட்டால் மீண்டும் தரையிறங்கி, ஏற்கெனவே மின்னேற்றம் செய்து வைக்கப்பட்ட மின்கலனை உடனே மாற்றி வானில் பறக்க முடியும் என்கிறது, எலக்ட்ரோ ஏரோ.

மின் கார்கள் வெகு விரைவில் உலகெங்கும் பரவலாகப் போகும் நிலையில், முழு மின் விமானம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியிருப்பது, விமானத் துறையில் ஒரு புரட்சி என்கின்றனர், விமான ஆர்வலர்கள்.

‘ஓசோன்’ துளை மறைகிறதா?

பூமியின் வளி மண்டலத்தில் இயற்கையாக படர்ந்திருந்த ஓசோன் வாயுப் படலத்தில் விழுந் திருந்த பெரும் துளையின் அளவு சற்று சிறிதாகி இருப்பதாக, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அறிவித்துள்ளது. 2018இல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது.

ஆலைகள், வாகனங்கள் மற்றும் பல கருவிகள் வெளியேற்றும் நச்சு வேதிப் பொருளான, ‘குளோரோ புளூரோகார்பன்’ தான் மெல்லிய ஓசோன் படலத்தில் துளை விழுந்ததற்கு காரணம் என, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, 1989இல், மான்ட்ரியேல் பிரகடனம் மூலம் குளோரோ புளூரோ கார்பனின் வெளிப் பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என, உலக நாடுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை குறைக்க தொடர் பிரச்சாரம் செய்தனர். 20 ஆண்டு களுக்கும் மேலாக நடக்கும் இந்த பிரச்சாரத்தின் பலனாக, அந்த நச்சு வெளியேற்றம் குறைந்திருப்ப தால் தான், தற்போது ஓசோன் படலம் மெல்ல மீட்கப்பட்டு வருவதாக, நாசா கருதுகிறது.

இயற்கை அழித்த வாயுக் கவசமான ஓசோன் தான், சூரிய கதிர்களின் தாக்கத்தால் வரும் தோல் புற்று நோயை தடுக்கிறது.

குண்டு துளைக்க முடியாத இழை!

உலகிலேயே மிக வலுவான இழை ஒன்றை, அமெரிக்காவின், எம்.அய்.டி., ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது.

சமீபகாலம் வரை வலுவான இழை என்றால் அது, ‘கெவ்லார்’ எனப்படும், பொருளில் உருவாக்கப்படும் இழை. அதனால் தான், அதை தோட்டா துளைக்காத உடை தயாரிக்க பயன்படுத்து கின்றனர்.

ஆனால், கெவ்லாரை விட வலுவான, ‘டைனீமா’ என்ற இழையையும் விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டனர். இப்போது, அதை விட வலுவான இழையை, எம்.அய்.டி., விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதுதான், பாலி எத்திலின் நேனோ இழை!

குழ குழவென்று இருக்கும் பாலிமர் ஜெல் திரவத்தை, மிகையான வெப்பம் மற்றும் உயர் மின்புலத்தின் வழியே நுண் இழைகளாக உரு வாக்கும் போது, அந்த நேனோ அளவுள்ள இழைகள் கடும் உறுதியையும், இலகுவான எடையையும் அடைவதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், மின்புலம் மற்றும் வெப்பத்தின் வழியே நேனோ தடிமனுள்ள இழையை உருவாக்கும் போது, எப்படி அதற்கு இத்தனை இலகுத் தன்மையும், வலுவும் வருகிறது என்பது, அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கே இன்னும் புரியவில்லை.

என்றாலும், அவை விரைவில், தோட்டா துளைக்காத உடை, தலைக் கவசம் போன்றவற்றில் பயன்படுத்தப்படலாம் என, அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கோடானு கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அண்டவெளியில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் பயங்கரமாக மோதிக்கொண்டால் என்ன ஆகும்?  டன் கணக்கில் தங்கம் உண்டாகும். அத்துடன் பிளாட்டினம் போன்ற உலோ கங்களும் உண்டாகும். இவ்விதம் தங்கம் உண்டான இடத்தை சமீபத்தில் தொலைநோக்கிகள் மூலம் கண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டபோது உண்டான தங்கம் கொஞ்சநஞ்சமல்ல. பூமியின் எடையை (நிறை) போன்று 200 மடங்கு அளவுக்குத் தங்கமும் பூமியின் எடையைப் போன்று 500 மடங்கு அளவுக்கு பிளாட்டினமும் உண்டானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு தங்கமும் பிளாட்டினமும் திடமான வடிவில் உண்டாகவில்லை. நுண் துணுக்குகள் வடிவிலேயே தோன்றின. நாளடைவில் இவை அண்டவெளியில் உள்ள ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்துவிடும். அண்டவெளியில் நிகழும் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் பதிவுசெய்யப்படுவது இதுவே முதல் முறை. அமெரிக்காவில் லிகோ எனப்படும் இரட்டை ஆராய்ச்சிக் கூடங்கள்தான் முதலில் இதைக் கண்டுபிடித்தன. குளத்தில் சிறிய கூழாங்கல்லை வீசினால், சிறு அலைகள் தோன்றுவதைப் போல் அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதினால் ஈர்ப்பு அலைகள் தோன்றும். இந்த நுட்பமான அலைகளைப் பதிவுசெய்வதற்காகவே இந்த லிகோ ஆராய்ச்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒளித் திரள்

சமீபத்தில் இந்த ஆராய்ச்சிக்கூடங்களில் ஈர்ப்பு அலைகள் பதிவானபோது விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர். உலகெங்கிலும் விஞ்ஞானிகள் பலர் உஷார்படுத்தப்பட்டனர். இத்தாலியில் உள்ள லிகோ ஆராய்ச்சிக்கூடத்திலும் இந்த அலைகள் பதிவாகின. வானில் எந்த இடத்திலிருந்து ஈர்ப்பு அலைகள் வருகின்றன என்ற தகவல் வான் ஆய்வுக் கூடங்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் சுமார் 70 தொலைநோக்கிகள் மூலம் வானில் அந்த இடத்தை ஆராய்ந்தபோது ஒளித் திரள் தெரிந்தது. விரைவில் அது கலைய ஆரம்பித்தது. அந்த ஒளியைத் தக்க கருவிகள் மூலம் ஆராய்ந்தபோது அவ்விடத்தில் தங்கம், பிளாட்டினம் போன்ற தனிமங்கள்  உண்டாகியி ருந்தது தெரியவந்தது.

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பள்ளியில் வேதியியல் பாடத்தில் தனிமங்களின் அட்டவணை பற்றிப் படித்திருக்கலாம். இதைத் தனிமங்களின் பட்டியல் என்றும் கூறலாம். ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கையாகச் சில தனிமங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. மற்றபடி, தனிமங்கள் பூமியில் உண்டாவதில்லை.

தங்கம் உண்டாகும் விதம்

சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுசேர்ந்து ஹீலியம் என்னும் தனிமம் உண்டாகிறது. இதுவே அணுச்சேர்க்கை ஆகும். சூரியனில் மேலும் சில தனிமங்கள் உண்டாகின்றன. சூரியனைவிடப் பல மடங்கு பெரிதாக உள்ள நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கை மூலம் இரும்பு வரையிலான தனிமங்கள் உண்டாகின்றன. அணுப் பட்டியலில் இரும்புக்கு அப்பால் உள்ள தனிமங்கள் பலவும் அண்டவெளியில் பிற அணுக்களுடன் நியூட்ரான்கள் மோதும்போது உண்டாகின்றன.

இந்த மோதல்கள் இரு விதங்களில் நிகழ்கின்றன. ஒப்பு நோக்கு கையில் மெதுவான மோதல்கள். அதி பயங்கர மோதல்கள். அண்ட வெளியில் இவ்விதம் நிகழும் மோதல்களின்போது பல வகையான தனிமங்கள் உண்டாகின்றன. சூப்பர் நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகளின்போது சில வகைத் தனிமங்கள் தோன்று கின்றன என்று அறியப்பட்டிருந்த போதிலும் தங்கம், பிளாட்டினம் போன்ற அதிக எடை கொண்ட தனிமங்கள் எவ்விதமான சூழ்நிலைகளில் தோன்றுகின்றன என்பது குறித்து உத்தேசமான கொள்கைகள்தான் இருந்துவந்தன. நியூட்ரான் நட்சத் திரங்களின் மோதல் களின்போதுதான் தங்கம், பிளாட்டினம் போன் றவை உண்டாகின்றன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

அதென்ன நியூட்ரான் நட்சத்திரம்? பொதுவில் அணுக் களில் புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் அணுவின் மய்யக் கருப் பகுதியில் ஒன்றுசேர்ந்து உள்ளன. இவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அணுவின் மய்யத்தைச் சுற்றி எலெக்ட்ரான்கள் அமைந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை தனிமத்தில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும். இந்த எலெக்ட்ரான்கள் காவல்காரன் போன்றவை. ஓர் அணுவில் உள்ள எலெக்ட்ரான்களை விரட்டியடிக்க முடியாது. ஆனால், தீப்பந்தத்தைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள தேனீக்களை விரட்டியடிக்க முடியும். அதுபோல பயங்கரமான வெப்பம் இருக்கு மானால் எலெக்ட்ரான்கள் பிய்த்துக்கொண்டு ஓடி விடும். சூரியனின் மய்யத்தில் வெப்பம் 15 மில்லியன் டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு உள்ளது. இந்நிலையில், எலெக்ட் ரான்கள் பிய்த்துக்கொண்டு ஓடிவிடு வதால், ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுசேர்ந்து அணுச்சேர்க்கை நிகழ்கிறது.

குட்டி பூமி!

நியூட்ரான் நட்சத்திரத்தில் தனித்தனி அணுக்கள் என்பதே கிடையாது. எல்லாமே நியூட்ரான்களாக இருக்கும். புரோட்டான் ஒன்றுடன் எலெக்ட்ரான் சேர்ந்தால், அது நியூட்ரான் என்று வைத்துக் கொள்வோம். அந்த அளவில் நியூட்ரான் நட்சத் திரத்தில் புரோட் டான்கள் அனைத்துக்குள்ளும் எலெக்ட்ரான் நுழைந்துகொண்டால் என்ன ஆகும். அவை நியூட்ரான்களாகி விடும்.

சூரியன் ஒரு பஞ்சு மிட்டாய் என்றால், நியூட்ரான் நட்சத்திரம் ஒரு கமர்கட்டு மாதிரி. சூரியன் திடீரென நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அதன் குறுக்களவு சுமார் 30 கிலோ மீட்டர் அளவில்தான் இருக்கும். காரணம் என்ன?

எந்த அணுவிலும் காலியிடம் நிறைய இருக்கிறது. ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்ட கால்பந்துதான் ஓர் அணுவின் மையக் கரு என்றால், எலெக்ட்ரான்கள் அந்த மைதானத்தின் விளிம்பில்தான் இருக்கும். அந்த அளவில் எந்த ஓர் அணுவிலும் காலியிடம் உண்டு. ஆனால் அணுவில் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என தனித்தனியே இல்லாமல் எல்லாமே நியூட்ரான்கள் என்றால், காலியிடம் அனைத்தும் நீங்கிவிடும். எனவேதான், நியூட்ரான் நட்சத்திரம் பயங்கர அடர்த்திகொண்டதாக இருக்கும். சூரியன் ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதால் அதன் எடை (நிறை) குறைவ தில்லை. அதன் அளவு மட்டும்தான் குறைகிறது. எனவே, நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும்போது ஏராளமான அளவுக்கு நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை அண்டவெளியில் ஏற்கெனவே உள்ள அணுக்களுடன் மோதும்போது தங்கம், பிளாட்டினம் போன்ற அணுக்கள் உருவாகின்றன.

மோதிக்கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்கள்

 

2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்த சுவாரசியமான, அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு இணையான நிகழ்வுகள் வானியல் துறையிலும் நடந்தேறின. அவற்றில் முக்கியமானவை:

தூரத்து நட்சத்திரங்களைச் சுற்றிக் கோள்கள் இருக்கலாம் என்பது பொதுவான அறிவியல் யூகம். ஆனால், ஒரே நேரத்தில் ஏழு கோள்கள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவருகின்றன என்ற கண்டு பிடிப்பு சிறப்பானது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கோள்களைக் கண்டுபிடிக்கும் குழு 2017 பிப்ரவரி மாதம் 39 ஒளி ஆண்டுகள் தொலை வில் உள்ள டிராப்பிஸ்ட் -1  என்ற குளிர் நட்சத் திரத்தைக் கண்டுபிடித்தது. அதில் சூரியக் குடும் பத்தை நகலெடுத்த மாதிரி ஏழு கோள்கள் சுற்றிவருகின்றன, அவற்றில் மூன்று கோள்களில் தண்ணீர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவந்தது.

ஒளி, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணமாக முதன் முதலாக இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக் கொண்ட காட்சியை ஆகஸ்டு 17 அன்று நாசா வானியலாளர்கள் கண்டனர்.

லேசர் பெர்ப்போ மீட்டர் ஈர்ப்பு விசை அலை ஆய்வு மய்யம், விர்கோ ஈர்ப்பு விசை ஆய்வு மய்யம், 70-க்கும் மேற்பட்ட தரை, விண்வெளி அடிப்படையிலான ஆய்வகங்கள் இந்தக் கண்டு பிடிப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

அதிக நேரம் பறந்த, ‘ட்ரோன்’


ஆளின்றி பறக்கும் சிறு வானூர்திகள், அதிக நேரம் பறப்பதில்லை என்ற குறைபாடு உண்டு. சமீபத்தில்,

ஸ்பெயினில் உள்ள, வாலென்சியா நகரில் நடந்த ஒரு வெள்ளோட்டத்தில், ‘ஹைப்ரிக்ஸ் 20’ என்ற ட்ரோன் வகையைச் சேர்ந்த, ஆளில்லா வானுர்தி, நான்கு மணி, 40 நிமிடங்கள் தரையிறங்காமல் வானில் பறந்தபடி, உலக சாதனை படைத்துள்ளது.

பெட்ரோல், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு பறக்கும், இந்த நான்கு விசிறிகள் கொண்ட, ட்ரோனை, ‘குவாடெர்னியம்‘ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.ஏற்கெனவே, ‘ஸ்கை பிரன்ட்’ என்ற ட்ரோன், இரண்டு மணி நேரம், ஒரு நிமிடம் பறந்து, ‘கின்னஸ்’ சாதனையில் இடம் பிடித்துள்ளது.

அனேகமாக, அந்த இடத்தை, அதைவிட இரு மடங்கு நேரம் பறந்த, ‘ஹைப்ரிக்ஸ் 20’ ட்ரோன் பிடித்து விடும்.’கண்காணிப்பு, வரைபடம் தயாரித்தல், பயிர் பாதுகாப்பு, காவல் துறை மேற்பார்வை போன்ற பணி களுக்கு, தங்கள் ட்ரோன் மிகவும் பயன்படும்‘ என, குவாடெர்னியம் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புதிய கோள்


சிரஸ் என்பது ஒரு குள்ளக் கோள். சூரிய மண்டலத்தின் உட்பகுதியில் பாறைகளாலான பகுதியை கொண்ட இந்தக் குள்ளக் கோளில் கடல், வாயு மண்டலமும் இருக்கலாம் என்று நவம்பர் 2017இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும் தொலைதூரக் கோளான ஜி.ஜே. 1132.பி. மிகவும் சூடான, தடிமனான சூழலைக் கொண்டிருப்ப தாக 2017 ஏப்ரல் 7 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

விண்பாறை

ஒரு விண் பாறைப் பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்தில் நுழைவதை ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் அக்டோபர் 19 அன்று கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது இது ஒரு விண் பாறை யாக வோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப் பில்லை என்றும் இது மற்ற நட்சத்திரங் களிடையே இருந்து சூரியக் குடும்பத்தில் நுழைந்த முதல் பொருள் என்றும் அறிவிக்கப்பட்டது.

Banner
Banner