நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக் காற்று  என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது.

இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம்  தண்ணீர்தான்! என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள்.கோடை காலத்தைச் சமாளிக்க நீரைத் தவிர வேறு என்னென்ன பானங்களை அருந்தலாம்? மருத்துவர்களிடம் கேட்டோம். நம்முடைய வாழ்வியல் முறைதான் ஒரு நாளில் எவ்வளவு நீரை அருந்தவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

வீட்டுக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருப்பவர்கள் நேரடியான வெயிலால் பாதிக்காததால் அவர்களின் உடல் அவ்வளவாக நீரை  இழப்பதில்லை.

இந்தக் காலங்களில் அவர்கள் ஒரு நாளுக்கு சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆனால்,  வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் ஒரு நாளைக்கு 2லிருந்து 3 லிட்டர் வரை நீரை குடிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரன்  மைதானத்தில் விளையாடும்போது அவனது உடலிலுள்ள நீரானது வியர்வையாகவும், ஆவியாகவும் வெளியேறும்.

இந்த மாதிரியான நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு லிட்டர் தண்ணீராவது அந்த நபருக்கு தேவைப்படும். ஆகவே குடிநீரின் அளவு என்பது எவ்வளவு நீர் நம் உடலைவிட்டு வெளியேறுகிறதோ அந்தளவு பருக வேண்டும். சாதாரணமாக சொல்வது என்றால், எவ்வளவு தாகம் எடுக் கிறதோ அவ்வளவு நீரைப் பருகவேண்டும்.

அதிக சூடாகவும், அதிக கூலாகவும் குடிக்கக்கூடாது. வெயில் காலங்களில் குளிர்ச்சியாக குடிக்கும்போது ஆரம்பத்தில் ஒரு திருப்தி  ஏற்படும். ஆனால், மீண்டும் தாகம் ஏற்பட்டு குடிநீர் குடிக்கும் நிலைமைக்குத்தான் அது நம்மைக் கொண்டு செல்லும்.

அதனால்  வெறும் நீரைக் குடிப்பதுதான் நல்லது. அல்லது வெயில் 30 டிகிரி கொளுத்தினால் நீரை கொஞ்சம் 31 டிகிரிக்கு மிதமாக சூடாக்கி  குடிக்கலாம்.இந்த மிதமான சுடுநீர் தாகத்தை விரைவாகப் போக்கும். அல்லது நீரை மண்பாண்டங்களில் சேகரித்து வைத்து குடிக்கலாம். இந்த நீர் பொதுவாக வெளியில் இருக்கும் வெப்பத்தைவிட இரண்டு டிகிரியாவது குறைவாக இருக்கும்.

பழங்களை சாறாக குடிப்பதைவிட பழங்களாகவே சாப்பிடுவதுதான் நல்லது. சாறெடுக்க குடிக்க குறைந்தது இரண்டு மூன்று பழங்களையாவது பயன்படுத்துவோம்.

ஆனால், பழங்களாக சாப்பிடும்போது ஒரு பழத்தில் முடித்துக் கொள்வோம். காரணம், பழங்களை சுவைத்துச் சாப்பிடும்போது நம்  வயிறு நிரம்பிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அது நம் ரத்தத்தில் கலந்து பசியைப் போக்கும். பழச்சாறை ஒரே மடக்கில்  குடித்துவிடுவதால் அது உடனடியாக நம் பசியைப் போக்காது. இதனால் இரண்டு மூன்று டம்ளர் ஜூஸாவது குடிப்போம்.

இதனால் பழச்சாற்றில் கலக்கப்படும் சர்க்கரை, நம் உடலில் அதிகமாகப் போய்ச் சேரும். உடல்பருமன் சீக்கிரத்தில் ஏற்படும். அதோடு  ஒரு பழத்தை கடித்து உண்ணும்போது அதிலுள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலுக்குப் போய்ச்சேரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். இதனால்  மலச்சிக்கல் வழியாக வரும் புற்றுநோயைக் கூட இது தடுக்கும்.

குளிர்பானங்களை பொறுத்தளவில் அவை அதிகப்படியாக குளிரூட்டப்பட்டது. தவிர கலர் போன்ற சேர்க்கைகள், பழக்கூழை  கெடாமல் இருக்க பயன்படுத்தப்பட்ட ரசாயன சேர்க்கைகள், கார்பன்-டை-ஆக்சைடு, அசிடிட்டி போன்ற கலப்புகள் இதில் இருப்பதால்  அவை தாகத்தையும் தீர்க்காது. ஆரோக்கியத்தையும் கெடுக்கும். ஒரு மில்லி லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1 கலோரி இருக்கிறது.

அப்படியென்றால் நாம் ஒருநாளைக்கு குடிக்கும் ஒரு லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1000 கலோரி இருக்கும். ஒரு மனித னுக்கு, ஒரு  நாளைக்கு உயிர்வாழ்வதற்கான கலோரியின் தேவையே சுமார் 1800லிருந்து 2000 வரைதான். அப்படியிருக்க 1 லிட்டர்  குளிர்பானத்திலேயே 1000 கலோரி வந்துவிடுவதால் நாம்  உண்ணும் எல்லா உணவுகளுமே நம் உடலின் கலோரி அளவை  ஏற்றிவிடும்.

சரி. குடிநீரையே மருத்துவ குணம் கொண்டதாக மாற்ற முடியுமா? தாகத்தை நீர் குடித்து சமாளித்து விடலாம் என்றாலும் உடல்  சூடும், குடிக்கும் நீர் வயிற்றை நிரப்புவதால் பசியின்மையும், அதனால் ஏற்படும் சோர் வும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இதற்கும்  நீர்தான் சரியான தீர்வு என்றாலும் நீரோடு சில மருத்துவ குணம்கொண்ட பொருட்களைச் சேர்க்கும்போது அது பல பிரச்னைகளைத்  தீர்க்கும்.

பட்டை: பட்டை இயற்கையான வடிவத்தில் கசப்பாக இருக்கும். பட்டையை அப்படியே உண்டால் உடலை சூடாக்கும். அதுவே பொடியாக்கி  நீரில் கொதிக்க வைக்கும்போது குளிரூட்டும் பொருளாக அதே பட்டை மாறிவிடும். இந்த நீரை அருந்தினால் உடம்பில் ஏற்படும் சூடு  தணியும். தொண்டை வறட்சி நீங்கும்.

ஏலக்காய்: பட்டை மாதிரியே இயற்கையாக சூட்டை கொடுக் கும் உணவுதான் ஏலக்காயும். ஆனால், பொடியாக்கி நீரில் கொதிக்க  வைக்கும்போது பட்டை மாதிரியே குளிராகி நம் தாகத்தைத் தணிக்கும். அத்தோடு உடல் சூட்டைத் தணித்து பசியைப் போக்கும்.

வெட்டிவேர்: இதையும் பொடி செய்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் குளிரும். எரிச்சல் குறையும். உடல் பொலிவு பெறும். வாந்தி  போன்ற பிரச்னைகள் தீரும்.

நன்னாரி: நன்னாரி சர்பத் என்றால் நமக்குத் தெரியும். ஆனால் அந்த சர்பத்தை எந்த நீரில் கலக்குகிறார்களோ, அதை எந்தக் கை  கலக்குகிறதோ என்று நமக்குத் தெரியாது. எனவே நன்னாரியை வாங்கி வீட்டு நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால் உடல் சூடு  தணியும். உடல் எரிச்சல் குறையும். காய்ச்சல் வருவது மாதிரி தோன்றும் எண்ணத்தையும் குறைக்கும்.

லவங்கம்: இதுவும் நம் உடம்பை குளிரூட்டும். தாகத்தைத் தீர்க்கும். ஜீரணத்துக்கு உதவும். உடல் வலியைப் போக்கும்.

அய்ந்தே நிமிடத்தில் ‘சார்ஜ்’ செய்யும் கார் பேட்டரி

 

காருக்கு பெட்ரோல் போட ஆகும் அதே நேரத்திற்குள் மின்சார காரின் மின்கலனை மின்னேற்றம் செய்ய முடியுமா?

இது தான் மின்கலன் தொழில் நுட்பத்தின் முன் உள்ள சவால். அது சாத்தியமே என்கிறது, ‘ஸ்டோர்டாட்!’ இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட், ஒரு மின்சார கார், 482 கி.மீ., துரம் ஓடத் தேவையான மின்சாரத்தை, ஒரு மின்கலனில், அய்ந்தே நிமிடத்தில் மின்னேற்றம் செய்து காட்டியிருக்கிறது.

அண்மையில், பெர்லினில் நடந்த கண்காட்சியில், ‘பிளாஷ் பேட்டரி’ என்ற அந்த மின்கலனை, உலகுக்கு ஸ்டோர்டாட் அறிமுகப்படுத்தியது. இந்த மறு மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலனில் என்ன இருக்கிறது? நேனோ தொழில் நுட்பமும், ஸ்டோர்டாட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட, ரகசிய உயிரி வேதிப் பொருட்களின் கலவையால் செய்த மின் சேமிப்புத் தகடுகள் உள்ளன.பல மின் சேமிப்புத் தகடுகளை, ஒரு சிறு மின்கலன் பெட்டியாக்கியுள்ளனர். இது போன்ற, 40 மின்கலன் பெட்டிகளைக் கொண்ட தொகுப்பு, ஒரு சராசரி மின்சார காருக்கு போதுமானது என்கின்றனர் ஸ்டோர்டாட்டின் அதிகாரிகள். உலகெங்கும் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இத்தருணத்தில், இது நிச்சயம் நல்ல செய்தி தான்.

புற்றுநோயை தடுக்கும்
இத்தாலிய தக்காளி!

இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் விளையும் இரண்டு வகை தக்காளிகளுக்கு, வயிற்றுப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி உள்ளதாக, ‘ஜர்னல் ஆப் செல்லுலர் பிசியாலஜி’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. எனவே, இவ்வகை தக்காளிகளின் தன்மைகளை அலசி, வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே உருவாகிய புற்றுநோயின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்டுரை அறிவுறுத்துகிறது.

காற்று மாசை எரிபொருளாக்கலாம்!

 

காற்றின் மாசுபாட்டை குறைப்பதோடு, எரிபொருளாகப் பயன்படும் ஹைட்ரஜனையும் காற்றிலிருந்து பிரித் தெடுக்கும் ஒரு கருவி இருந்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்திருக்கின்றனர்,

பெல்ஜியத்தைச் சேர்ந்த, லுவேன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.மிகச் சிறிய இந்தக் கருவியில், ஒரு புறம், ‘டைட்டானியம் டையாக்சைடு’ அடிப்படையிலான ஒளியைக் கொண்டு கிரியா ஊக்கியாகச் செயல்படும் தகடு உள்ளது. மறுபுறம், பிளாட்டினம் அடிப்படையிலான கிரியா ஊக்கி உள்ளது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சவ்வு உள்ளது. டைட்டானியம் டையாக்சைடு பகுதியில் காற்றிலுள்ள கரிம மூலக்கூறுகளை சிதைத்து, காற்றை துய்மைப்படுத்துகிறது.

சவ்வின் வழியே கரிம மூலக்கூறுகள் மறுபுறமுள்ள பிளாட்டினம் பகுதிக்கு வரும்போது, அங்கே வேதி வினை நிகழ்ந்து ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகிறது. இன்னும் பரிசோதனை நிலையிலுள்ள இந்த எளிய கருவிக்கு, நீரோ, மின்சாரமோ தேவைப்படாது என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய அம்சம். தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் ஹைட்ரஜன் வாயுவை தயாரித்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க இதை பயன்படுத்த முடியுமா என, லுவேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

நோயறியும் தோல் பட்டை!


ஒருவரது தற்போதைய உடல் நலத்தை உடனுக்குடன் பிரதிபலிக்கும் தன்மை உள்ளது அவரது வியர்வை.

அதில் உள்ள பல வேதிப் பொருட்கள் ரத்தத்திலிருந்து வருபவை. எனவே, நோயறிதலுக்கு வியர்வையை ஆராய்வது முக்கியம் என்ற முடிவுக்கு வந்துள்ளது மருத்துவ உலகம்.

அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தோலின் மீது சிறிய பட்டை போல ஒட்டிக் கொள்ளும் மின்னணு உணரிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணரிகள், வியர்வையில் உள்ள வேதிப் பொருட்களை உணர்ந்தறிந்து, ஒரு மொபைல் செயலிக்கு தகவல்களை உடனுக்குடன் அனுப்பி விடுகின்றன. அந்த தகவல்களை வைத்து, அந்த பட்டையை அணிந்தவருக்கு சர்க்கரை, உப்பு சத்துக்கள் குறைவாக உள்ளதா, மிகையாக உள்ளதா, போதிய நீர் அருந்தி இருக்கிறாரா போன்ற தகவல்களை அந்த செயலி தெரிவிக்கும்.

மேலும், பல நோய்கள், தங்கள் இருப்பைத் தெரிவிக்கும் வேதிப் பொருட்களை ரத்தத்தில் கலக்கின்றன என்பதால், வியர்வையிலும் அவை தலைகாட்டும்.

எனவே, எதிர்காலத்தில் இந்தப் பட்டைகள், பல நோய்களை அறியவும் பயன்படும் என, நார்த்வெஸ்டர்ன் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

திரும்பி வரும் தொழில் நுட்பங்கள்!

வரலாறு திரும்பும்; சில தொழில் நுட்பங்களும் அப்படித்தான். காலாவதியாகிவிட்டவை என்று கைவிடப் பட்ட பிறகும், புதிய வடிவில் திரும்ப வந்து அசத்தக் கூடியவை அவை. அப்படியான மூன்று தொழில் நுட்பங்கள் இதோ:
டிஜிட்டலில் நயம் : கறுப்பு - வெள்ளை!

கறுப்பு - வெள்ளை படச்சுருள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. பல லட்சம் வண்ணங்களில், அதி துல்லியமாக படம் பிடிக்கும் டிஜிட்டல் கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும், கறுப்பு - வெள்ளையில் உலகை படம் பிடிக்க விரும்பும் ஒரு சாரார் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்காக லைக்கா கேமராவினர், 2012ல் உலகின் முதல், கறுப்பு - வெள்ளை டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தினர். தற்போது ‘பேஸ் ஒன்’ தன், ‘ஐ.க்யூ., 3,100 எம்.பி., அக்ரோமேட்டிக்‘ கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அதி துல்லிய டிஜிட்டல் கேமரா, கறுப்பு - வெள்ளையில் மட்டுமே படம் எடுக்கும்; இதன் விலை, 32 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை. ஆம், இது தொழில் முறை புகைப்படக் காரர்களுக்கு மட்டுமே!

பழைய ரெக்கார்டு புதிய இசை!

எம்.பி., 3 வடிவில் இணையத்தில் பாடல்களை கேட்கும் யுகத்தில், பழைய கீறல் விழாத, ‘வினைல் ரெக்கார்ட் பிளேயர்’களை காதலிக்க ஒரு சிறு படை இருக் கிறது. பழைய வினைல் இசைத்தட்டு கருவி, படுத்துக் கொண்டே பாடும். புதிதாக வந்துள்ள ‘புரொ-ஜெக்ட் வி.டி., - பி.டி., ஆர்’ வினைல் இசைக்கருவி, நின்று விளையாடும்! இதை முக்காலி மேசை மீது நிறுத்தலாம் அல்லது சுவரில் மாட்டிக் கொள்ளலாம். சுழலும் இசைத் தட்டு விழாமல் இருக்கும்படி திருகாணி அமைப்பு பார்த்துக் கொள்கிறது. இசைத்தட்டின் சுழல் கோடுகளை, ‘படிக்கும்‘ உலோக முள்ளும் அதற்கேற்ப வடிவமைக்கப் பட்டு உள்ளது. இதிலிருந்து வரும் இசையை, ‘ப்ளூ டூத்’ மூலம் ஹெட் போனுக்கோ, ஸ்பீக்கருக்கோ அனுப்ப முடியும்; விலை, 32 ஆயிரம் ரூபாய்.

கேட்கத் துண்டும் கேசட்!

ரெக்கார்ட் பிளேயரின் இடத்தைப் பிடித்த கையடக்க கேசட் எனப்படும் ஒலி நாடா பேழைகளை, ‘சிடி’க்கள் எனப்படும் குறுவட்டுகள் காலி செய்தன. இருந்தாலும் ஒலி நாடாக்களை ரசிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு இசையாறுதல் தர, லித்துவேனியாவைச் சேர்ந்த, ‘பிரெயின் மாங்க்‘ என்ற நிறுவனம், ‘எல்போ’ என்ற கையடக்க ஒலி நாடா கருவியை தயாரித்துள்ளது. ஒரு ஒலி நாடா பேழையை இசைக்கத் தேவையான பாகங்கள் மட்டுமே இதில் உள்ளன.  


கண்ணாடியை பயன்படுத்தி, வேண்டிய பொருட்களை வடிவமைக்க உதவும் முப் பரிமாண அச்சு தொழில்நுட்பத்தை, முதல் முறையாக ஜெர்மனியிலுள்ள கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் உருவாக்கி இருக்கிறது.

புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு உதவும் முப்பரிமாண அச்சியந்திரங்களுக்கு மூலப் பொருளாக, பீங்கான், பாலித்தீன், பலவித உலோகங்களை பயன்படுத்துவது வழக்கம்.

மருத்துவத் துறையில் திசுக்களை உருவாக்க உயிரிப் பொருட்களைக் கூட பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.ஆனால், கண்ணாடியை பயன்படுத்துவது சவாலானதாக இருந்து வந்தது.

கார்ல்ஷுஹேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், துய்மையான குவார்ட்ஸ், திரவ பாலிமர் ஆகிய இரண்டையும் கலந்து கண்ணாடிப் பொருட்களை உருவாக்கி இருக்கின்றனர். இந்தக் கலவையை முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, மிகச் சிறிய கண்ணாடிப் பொருள் முதல், நுட்பமான வேலைப்பாடுள்ள பொருட்கள் வரை, சில மணி நேரத்தில், அச்சிட்டு எடுத்துவிட முடியும்.

இந்த அச்சியந்திரத்தால் நுகர் பொருட்களை மட்டுமல்ல, ஒளியைப் பயன்படுத்தும் கணினிகளுக்கான பாகங்களைக்கூட துல்லியமாகத் தயாரித்துத் தர முடியும் என, கார்ல்ஷுஹேயின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
Banner