‘பேஸ்புக்‘கின் ஒரு பிரிவு, மூளை -கணினி இடைமுகத் தொழில்நுட்பத்தில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால், எவரும், நினைத்ததை, நினைத்த வேகத்தில், கணினியில் தட்டச்சு செய்ய முடியும்.

இதே தொழில்நுட்பத்தை, வேறு பல ஆராய்ச்சி நிலையங்களும் சோதித்து வருகின்றன. ஆனால், பேஸ்புக்கின் தொழில்நுட்பம், மூளைக்குள் அறுவை சிகிச்சை மூலம், எந்த கருவியையும் வைக்காமல், ‘ஸ்கேனர்’ ஒன்றை தலைக்கு அருகே வைத்து, மூளையில் சிறு மின் அலைகளாக உதிக்கும் எண்ணங்களை படித்து, புரிந்து கொண்டு, அவற்றை எழுத்துக்களாக கணினி திரையில் காட்டும் திறன் கொண்டது.

விரல்களால் விசைப் பலகையில் தட்டச்சு செய்வோர், நிமிடத்திற்கு, 35 முதல், 75 சொற்கள் வரை தட்டச்சு செய்வர். தற்போது வந்துள்ள குரல் உணர் தொழில்நுட்பங்கள் அதைவிட வேகமாக செயல்படுகின்றன.ஆனால், மனதில் எண்ணம் உதிக்கும் வேகம் அதிகம்.

எனவே, பேஸ்புக்கின் மூளை-க்கணினி இடைமுகத்தை பயன்படுத்துபவரால் நிமிடத்திற்கு, 100 சொற்கள் வரை தட்டச்சு செய்ய முடியும். அடுத்து, பிறர் பேசுவதை கேட்பதற்கு, மனிதத் தோலை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பேஸ்புக் உருவாக்கி வருகிறது.

மனித தோல் மீது சில உணர்வான் கருவிகளை வைத்து, குறிப்பிட்ட அலைவரிசை மூலம் தகவல்களை பரிமாற முடியும் என்கிறது பேஸ்புக். காது கேட்கும் திறன் இல்லாதவருக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.குறைப் பிரசவ குழந்தைகளை, மருத்துவமனையில், ‘இங்குபேட்டர்’ கருவியில் வைப்பது இன்று சகஜமாகியிருக்கிறது. இங்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் சில உணர்வான்களை பொருத்துவர்.

இந்த உணர்வான்கள், பிறந்த குழந்தை கை, கால்களை அசைக்க இடையூறாக இருப்பதோடு, சமயங்களில் தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதும் உண்டு.

இதற்கு மாற்றாக, குழந்தையின் உடலில் எதையும் பொருத்தாமல், கண்காணிக்க உதவும் கருவியை, சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்களான இ.பி.எப்.எல்., மற்றும் சி.எஸ்.இ.எம்., ஆகியவற்றின் மருத்துவர்கள் உருவாக்கி யிருக்கின்றனர்.

அந்தக் கருவி வேறு எதுவுமில்லை, கேமராக்கள் தான்! பிறந்த பச்சிளங் குழந்தையின் இதயம் துடிக்கும்போது, அதன் நெற்றிப் பகுதியில் அத்துடிப்பால் மாற்றம் வந்து வந்துபோகும். மேலும் சுவாசிப்பதை கண்காணிக்க குழந்தையின் நெஞ்சாங்கூடு மற்றும் தோள் பகுதிகளை கவனித்தாலே போதும். இந்த இரண்டையும் இரு சிறப்பு கேமராக்கள் படம் பிடித்தபடியே இருக்கும்.

இரவில், விளக்குகளை அணைத்த பிறகும், அகச்சிவப்பு ஒளியில் குழந்தையின் அறிகுறிகளை இக் கேமராக்கள் கண்காணிக்கும். இயல்புக்கு மாறான அறிகுறிகள் தோன்றும்போது, கேமராவின் தகவல்களை கவனிக்கும் மென்பொருள் நிரல், உடனே கண்டுபிடித்து செவிலியரை எச்சரிக்கும்.

தன் குழந்தை பிறந்ததுமே, சிக்கலான மின் கம்பிகளுக்கு மத்தியில் படுத்திருப்பதை பார்க்க நேரும் பெற்றோருக்கு, இப்புதிய கண்காணிப்பு கேமராக்கள் பெரும் ஆறுதலாக இருக்கும்.

முதன் முதலாக கருந்துளையை படம்பிடித்த விஞ்ஞானிகள் அண்டவெளியில் கருந்துளை இருக்கிறது என்பவர்கள் உண்டு இல்லவே இல்லை என்பவர்களும் உண்டு. ஆனால், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை பல நாடுகளில் அமைந்துள்ள, ரேடியோ தொலைநோக்கிகளை கூட்டாகப் பயன்படுத்தி, இராப் பகலாக கவனித்து, கருந் துளையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

இதுவரை ஓவியர்கள் கற்பனையாக வரைந்த கருந்துளைகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வரலாற்றிலேயே கருந்துளை நிஜமாகவே படம்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. நம் பூமி அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டமான பால் வீதி மற்றும் அருகாமையில் உள்ள நட்சத்திரக் கூட்டமான எம்.87 ஆகியவற்றின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள இரு கருந்துளைகளை தொலை நோக்கிகள் கவனித்து தகவல் சேகரித்தன.

அப்படி சேகரித்த தகவல்கள் மட்டும், 500 டெராபைட் அளவுக்கு இருந்தன. அவற்றை, 1,024 கணினி வன் தட்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

இனி, அத்தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளில் உள்ள அதிதிறன் கணினிகள் மூலம் அலசி, கருந்துளைகளின் படத்தை துல்லியமாக சேர்த்து, ‘தைக்க’ வேண்டும்.

இதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பதால், 2018 வாக்கில் தான் கருந்துளைகளின் முதல் டிஜிட்டல் படம் கிடைக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஹெய்னோ பால்கேயின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

பிரபஞ்சத்தில் கருந் துளைகள் இருப்பதாகவும், அவை நேராகப் பயணிக்கும் ஒளிக்கதிரைக்கூட வளைக்கும் அளவுக்கு மிதமிஞ்சிய ஈர்ப்பு சக்தி உள்ளவை என்றும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின்தான் கணித்தார்.

அவரது கணிப்பு விரைவில் மெய்யாகும் என, ரேடியோ தொலை நோக்கிகள் மூலம் தகவல் சேகரித்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு உறுதியாக நம்புகிறது. கருந்துளையின் புகைப்படம் கிடைத்தால், விண்வெளியின் பல புதிர்கள் விடுபடும் என்பதோடு, கிடைத்த தகவல்களை மேலும் ஆராய்வதன் மூலம், அடுத்த, 10 ஆண்டுகளில் பல புதுமைகள் நிகழ்த் தப்படும்.

Banner
Banner