
பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.
பையனுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.
மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.
- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42