எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.4.1929 - குடிஅரசிலிருந்து...

மற்ற நாட்டினர்களின் கடவுள் உணர்ச்சியைவிட நமது கடவுள் உணர்ச்சியும் பக்தியும் பூசையும் நம்மை ஓட்டாண்டிகளாக்கி அறிவிலிகளாக்கி நம்மை நமது நாட்டை விட்டுத் துரத்திக் கொண்டு வருகின்றது. அதுபோலவே மற்ற நாட்டினர்களின் மதத்தைவிட நமது மதம் நம்மை பிரித்துவைத்து இழிமக்களாக்கி அன்னிய ஆட்சிக்கு உட்படுத்தி மனிதத்தன்மை இல்லாமல் வாழச் செய்கின்றது. இவை நேற்று இன்று என்றில்லாமல் ஆராய்ச்சிக்கு எட்டும் சரித்திரகாலம் தொட்டு இப்படியே இருப்பதாய்க் காணப்படுகின்றது. இதற்கு, அர்த்த மில்லாமல் வெள்ளைக்காரர்கள் மீது பழி போடு வதிலும் சுயராஜ்ஜிய சாக்கு சொல்லுவதிலும் பயன் என்ன? என்று தான் கேட்கின்றோம். ஏனெனில் சுயராஜ்ஜியமும் அதற்கு மேற்பட்ட ராமராஜ்ஜியமும் கிருஷ்ணராஜ்யம் முதலிய ராஜ்ஜியங்களும் இருந்த காலத்தில் இருந்த நிலையைவிட வெள்ளைக் காரன் ராஜ்ஜிய காலம் எப்படி இந்நிலைக்கு அதிக மான பொறுப் புடையது என்பது தான்.

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தெருவில் நடக்கவிடாதது ஆப்பிரிக் காரர்களுடைய அகம்பாவமாக இருக்கலாம். அமெரிக்காவில் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை அவமரியாதை செய்தது அமெரிக்கர்களுடைய ஆணவமாக இருக்கலாம். திரு.காந்தியை தண்டித்தது இங்கிலீஷ் காரருடைய இறுமாப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியனை இந்தியாவில் தெருவில் நடக்க விடாததும் இந்துக்கடவுள் கோவிலுக்குள் செல்ல இந்துவை விடாததும் யாருடைய அகம்பாவம், ஆணவம், இறுமாப்பு என்று கேட்கின்றோம்.

திருவாளர்கள், காந்தியும் லஜபதியும் கோவிலுக்குள் சென்று அவர்களது கடவுளை வணங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய கொடுமையையும் அவமானத்தையும் இழிவையும் விடவா திரு தாகூரை அமெரிக்கர்கள் அவமானப் படுத்திவிட்டார்கள் என்று யோசித்தால் இந்தி யர்கள் அயோக்கியர்களா? முட்டாள்களா? என்பதும் அமெரிக்கர்கள் அயோக்கியர்களா? முட்டாள்களா? என் பதும். இந்திய அரசர்கள் ஆட்சி அய்ரோப்பிய அரசர்கள் ஆட்சியைவிட மேலானதாயிருக்குமா என்பதும் விளங் காமல் போகாது. எந்த நாட்டிலாவது குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையில்லாதவனும் தெருவில் நடக்க உரிமையில்லாதவனும் தங்களது உரிமையை மறுக்கின்றவர் களுடன் சேர்ந்து சுயராஜ்யம் அடைய முயற்சிப் பார்களா என்று யோசித்துப் பார்த்தால் சுயராஜ்ஜியத்திற்கு யார் முட்டுக்கட்டை போடு கின்றார்கள் என்கின்ற உண்மை ஒரு மூடனுக்கும் விளங்காமல் போகாது. கடவுளையும் மதத்தையும் கோவில் களையும் காப்பாற்றுகின்றோம் என்று வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து பார்ப்பனக் கட்சியை சாதிக்கப் போவதாக வெளி வந்திருக்கும் ஆஸ்திக கனவான்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் கோவில்களின் பேராலும் நடக்கும் கொடுமை களை ஒழிப்பதற்கு ஏதாவது செய்கின்றார்களா, நினைக்கின்றார்களா, செய்தார்களா, நினைத்தார்களா என்று தான் கேட்கின்றோம். எனவே பார்ப்பனர்கள் தேர்தலுக்கு ஏற்படுத்திக் கொண்ட நாடகத்தில் வரும் வேஷங்களைக் கவனிக்காமல் அந்த வேஷக்காரர்கள் யார்? அவர்களின் அறிவு, ஒழுக்கம், லட்சியம், பிழைப்பு, யோக்கியதை ஆகியவைகள் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால் கண்டிப்பாய் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கூற்றின் உண்மை விளங்காமல் போகாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner