எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாங்குநேரித் தாலுகாவில் மறவர் வகுப்பினர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்போலோர் திருட்டு முதலிய தீயதொழில்களை யுடையவர்களாய் கல்வியறிவற்றிவர்களாய் வாழ்வதை கண்டு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டு மென்று   இத்தாலுக்கா போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகிய திருவாளர் முத்தையா பிள்ளையவர்கள் போலீஸ் ஜில்லா சூப்பரின்டென்டென்ட் வின்டில் துரையுடன் கலந்து பேசி 1927ம் ஆண்டில் மறவர் சங்கம் என ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கன். வின்டில் துரையே இச்சங்கத்தின் தலைவர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன்முயற்சியின் பயனாக மறவர்களனைவரும் ஒற்றுமையாகக்கூடித் தங்கள் வகுப்பாரின் முன்னேற்றத்திற்குப் பொருள் சேர்த்து வேண்டுவன செய்துவருகிறார்கள். இதனால் 1929 ஜனவரியில் ஒர் கூட்டம் கூடி அறிவை வளர்த்து நல்லொழுக்கத்தைத் தருவது கல்வியேயாதலால் கல்வியைத் தம் மக்களுக்குக் கற்பிப்பது இன்றியமையாத முதற்கடமையென தீர்மானித்து அதுபற்றி மஞ்சின்குளம், முதலைக்குளம், புதூர், செண்ப கராமநல்லூர் என்ற நான்கு ஊர்களிலும் மறவர் சங்கத்திலிருந்து ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்துவது, என்றும் தீர்மானமாயிற்று. மறவர் சங்க முன்னேற்தத்திற்கு திரு.முத்தைய பிள்ளையவர்களுக்கு உடன் உழைப்பார் மஞ்சன்குளம் திரு திரவியத்தேவர் என்பவர். இவருடைய தீவிர முயற்சியால் மஞ்சள் குளத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டிட முடிவாயிற்று. இன்ஸ்பெக்டரவர்கள் அதைப் பார்வை யிடுவதற்கு 7.2.1929 வியாழக்கிழமையன்று காலையில் நாங்கு நேரி போர்டு உயர்தரக்கலா சாலைத் தலைமைப் பண்டிதர் திரு. இ.மு.சுப்பிரமணியபிள்ளைய வர்களுடன் சென்றனர். பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்ட பின் திரு. முத்தையா பிள்ளையவர்கள்  அவ்வூர் மறவர் களையெல்லாம் அழைத்து திரவியத்வேவர் வீட்டுக்கு போய் அவர் வீட்டில் தயாரித்த பலகாரங்களையுண்டனர். அப்போது அவர்கள் பேசியதன் சுருக்கம் பின் வருமாறு:

மறவர்களின் தலைவர்களே! நீங்கள் இங்கே இவ்வளவு விரைவில் பள்ளிக்கூடம் கட்டி முடித்ததைப்பார்த்து மகிழ்ச்சி யடைகிறேன். நீங்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் சுத்த முடையவர்களாகவும் இருக்க வேண்டும். சாதி வித்தியாச மென்பது கிடையாது நீங்கள் சுத்தமில்லாதவர்களாக  மாமிச முண்டு வருவதானாலேயே மேல் சாதியென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் உங்களோடு சேராமல் தாழ்த்துகிறார்கள். இப்போது மேல்வகுப்பு சொல்லுகிறவர்களில் ஒருவனாகிய நான் உங்களில் ஒருவராகிய திரவியத்தேவர் வீட்டில் உண்ணுவதை நீங்கள் இதோ நேரே பார்க்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுத்தமுடைவர்களாக ஆவீர்களாகில் உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை. ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஒழுக்கமுடைய வர்களாக விரைவில் ஆக்க வேண்டும். மேலும் நான் எப்படி இப்போது உங்களிடையே வேறுபாடில்லாமல் உடன் உண்ணுகிறேனோ அதைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகயிருக்கும் ஆதிதிராவி டர்களிடம் சுத்தம் கண்ட இடத்து உடன் உண்ணவோ நெருங்கிப் பழகவோ தயாராயிருக்க வேண்டும். மனிதர்களுக்குள் என்ன உயர்வு தாழ்வு? நாம் எல்லோரும் ஒன்று தானே என்று பேசி முடித்தார்கள். அவ்வூராரனைவரும் பிள்ளையவர்களுக்கு நன்றி செலுத்தி அவ்வாறே செய்ய இசைந்தார்கள். போலீஸ்இன்ஸ்பெக்டர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன் முயற்சி மிகவும் பாராட்டத் தகுந்தது. ஏனைய போலீஸ் அதிகாரிகளும் இவர்களைப் போல நடந்து நாட்டுக்கு ஒரு உண்மைத் தொண்டாற்று வார்களாக.

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, “குடிஅரசு” 17.6.1928

பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா?

பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள்.

பார்வதி: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படி-யானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டி யில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்; அடித்துக்கூட தின்று விடுகிறார்களே, அது ஏன்?

பரமசிவன்: நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை; நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்வதி: அதுதான் போகட்டும்; நமது குமாரனாகிய கணபதியின் வாகன மாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ பாவம்!

பரமசிவன்: கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்லுவது!

பார்வதி: அதுதான் போகட்டும்; தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகின்றார்களே, அது என்ன காரணம் நாதா?

பரமசிவன்: கண்மணி, அதுவும் பக்தர்களில் அறியாத் தனம்தான்; ஆனாலும், அது மலம் சாப்பிடுகின்றதல்லவா! அதனால் அதன்மீது சிலர் அசுசியப்படு கின்றார்கள்போல் இருக்கின்றது.

பார்வதி: என்ன நாதா, பைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்து களையெல்லாம் சாப்பிடுகிறதே; அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும் போது, மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது? அதுதான் போகட்டும். நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொள் வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்! இது என்ன அநியாயம்!

பரமசிவன்: அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பார்வதி: நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கவுரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும் நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே; தவிர, விஷ்ணுவின் பெண் ஜாதியான மகாலட்சுமி கூட இதனா லேயே அடிக்கடி என் னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொண்டு மரியாதை செய்கிறார்களே, இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.

பரமசிவன்: என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்து விட்டான். விதியா ரைவிட்டது, சொல் பார்ப்போம்! என் கண்மணி, நீ இதற்காக அழ வேண்டாம்; உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.

பார்வதி: சரி, சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறா அழுக வேண்டும்! போனால் போகட்டும். இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.

இந்து மதம் யாருக்கு சொந்த மதம்?

1929 குடிஅரசிலிருந்து.,

பண்டிதப் பெரு மக்கள் இந்து மதம் யாருக்கு சொந்த மெனக்கண்டும் கண் மூடித்தனமாகவோ அல்லது பண்டிதத் தன்மைக் குப்பங்கம் வருமென்னும் நோக்கங் கொண்டோ, பாமர மக்களை பாழ்படுத்துகின்றனர். சரித்திர சம்பந்தப்பட்ட வரையிலும் ஆரியராலேயே இந்து மதம் ஸ்தாபகமானதெனக் காணலாம். ஆரியரின் குடியேற்றத்தின் பின்னர் இந்து மதமுண்டாயிற்றென்பதில் மயக்கமில்லை. இது நமது பண்டிதர்களும் அறிந்த இரகசியமே. ஆரியர்கள் தங்கள் கபட நாடகத்தால் தமிழ் மக்களை வயப்படுத்தி தமிழ் நாட்டிலிருந்த சில வழிபாடுகளை தமது வழி பாட்டுடன் ஜோடித்து  மக்களை மயக்கி விட்டனர். நாம் எவ்வளவு தூரம் துருவிச் சென்றாலும் இந்துமதம் தமிழ் மக்களாகிய நமக்கு சொந்தமன்று என்ற முடிவுக்கே வருகிறோம்.

சொந்தமற்றதை சொந்தமாகப் பாவிப் பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். ஆரியரால் உண்டாக்கப் பட்ட நான்கு வருணங் களையும் எண்ணிலடங்கா சாதி களையும் உடைய இந்து மதத்திற்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாத பூர்வத் தமிழ் மக்க ளாகிய ஆதி திராவிட ரெனும் சமூகத்தினருக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! இமயகிரிக்கும் குண்டுமணிக்கு முள்ள வித்தியாசத்தை ஒக்கும். இந்து மதமல்லவா பஞ்சமரென்று சண்டாளரெனவும், தீண்டப்படாதவ ரெனவும், தெருவில் நடக்கப் படாதவரெனவும் இன்னும் மிருகத்திலும் கேவலமாக மதிக்கச் செய்தது.

அதனையல்லவா சுயமரியாதை இயக்கம் கண்டிப்பது. இதை அறியாமல்  சகஜாந்தசுவாமி சுயமரியாதைச் சங்கத்திற்கு விரோதமாக போலி ஆஸ்திகர் சங்கத்தில் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்கி அதை தாங்கிப் பேச தலைமை வகித்தது. நன்றியை கொன்றதற்கு ஒப்பாகும். ஆதிதிராவிட ரென்னும் பூர்வத் தமிழ்பெருமக்கள் இந்துமதத்தை விடும் பரியந்தம் பஞ்சமர் தீண்டாதவர் என்னும் பட்டம் மாறவே மாறாது என்றும் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும் கேவலமாகத் தான் வாழவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner