எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(9.2.1968 - விடுதலையிலிருந்து)

பாவமன்னிப்பு சாதனங்கள் எதையும் மனிதர்களை யோக்கிய மாய், நேர்மையாய் நடந்து கொள்வ திலிருந்து பிறழத்தான் செய்யும் என்பது மாத்திரமல்லாமல் நல்ல மனிதர்களையும்கூட அயோக்கி யமாக நடத்தத்தான் தூண்டும்.
மனித சமுதாயம் சீர்பட வேண் டுமானால் எந்த உருவத்திலும் பாவமன்னிப்பு இருக்கக் கூடாது. அரசியலிலும் எந்த லட்சியத்தில் தவறு செய்தாலும் செய்தவனுக்கு மன்னிப்பே இருக்கக் கூடாது.

ஏனென்றால், மூன்றாந்தர, நாலாந்தர நடத்தை உள்ளவர்கள் எல்லாம் தன்னை தேசபக்தன், தியாகி என்று காட்டி பதவிக்கு வர நேர்ந்ததாலே எனது 40 ஆண்டு அனுபவத்தில் அரசியல் என்பது போராட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம், நாசம், கேடு, பலாத்காரம், மோட்சம், புரட்டு, போட்டி, ஒருவரையொருவர் வசை கூறுவது, பழி கூறுவது, கவிழ்க்கச் சூழ்ச்சி, அரசாங்கத்தை அதிகாரிகளை அலட்சியப்படுத்துதல் முதலிய காரியங்களாகத் தானே இருந்து வருவதாகத்தானே பார்க்கிறேன். மத இயல், அரசியல் இரண்டிலுமே நேர்மையாளர் காணவில்லையே?
அதுபோலவேதான் எனது 70 - 75 வருஷ அனுபவத்தில் எந்த பக்திவானிடத்திலும், நாமக்காரன் விபூதிக்காரனிடமும், நாணயம், நேர்மை பார்க்க முடியவில்லையே! எனக்கு அரசர் களைத் தவிர்த்து அவர்களுக்கு அடுத்து எல்லா பெரிய மனிதர் களையும், அரசியல் தலைவர்களையும் பதவியாளர்களையும் தெரியும். என் அனுபவத்தைத்தான் சொல்கிறேன்.

எதனால் இந்தத் தவறு செய்யும் நிலை ஏற்பட்டதோ, அதையே பின் பற்றும்படி நமது பின் சந்ததியை தூண்டும்படியான காரியங்களையே நாம் கடவுள், மதம், சாஸ்திரங்கள், புராணங்கள், இலக்கியங்கள், முன்னோர்கள் முதலியவற்றின் பெயரால் செய்து வருகிறோம். அப்படி செய்யப்படுபவைகளில் ஒன்றுதான் அடுத்து வரப்போகும் மாமாங்க உற்சவமாகும்.  ஒரு அரசியல் காரனுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. கம்யூனிஸ்ட்கள் என்பவர்களுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. நான்தான் பாராங்கல்லில் முட்டிக்கொள்பவர்கள்போல் ஏதோ இப்படி எல் லாம் உளறி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.  இளை ஞர்கள், மாணவர்கள் கூட்டமாவது சிந்தித்துப் பார்க்கட்டும் என்பதற்குத்தான் இதை சொல்லுகிறோம்.  

விக்கிரக வணக்கமும் மனிதன் தலைவிதியும்

(10.2.1929 - குடிஅரசிலிருந்து)

திருநெல்வேலி பி.திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்கள் ரிவோல்ட் பத்திரிகையில் எழுதியதைத் தழுவி மொழி பெயர்த்தது.

கர்மத்தைப் பற்றியும் விக்கிரக ஆராதனையைப் பற்றியும் என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதாயிருந்தாலும் இந்த இரண்டும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமான முட்டுக்கட்டையாயிருந்து வந்திருக்கின்றன. கர்மம் என்பது மனிதனை தன் முயற்சியோடு வாழ்க்கையில் பிரவேசிப் பதையே தடுத்து விடுகின்றது. அதோடு மாத்திரமல்லாமல் மனிதன் என்ன தான் முயற்சி செய்தாலும் நடப்பது நடந்தே தான் தீரும் என்கின்ற ஒரு எண்ணத்தை உண்டாக்கி மனிதனை சோம்பேறி நிலையிலிருந்து அசைய விடாமல் செய்து விடுகின்றது.
விக்கிரக ஆராதனை மனிதன் அக்கிரமங்கள் செய்வதற்கு முதற்காரணமாயிருக்கின்றது. அன்றியும் மக்களில் படித்த வர்களும் படிக்காதவர்களும் எல்லோரும் ஒரே மாதிரியாகவே தாங்கள் என்னதான் அக்கிரமம் செய்தாலும் விக்கிரகங்களுக்கு வேண்டிய பூஜை ஆராதனை அபிஷேகம் உற்சவம் முதலிய வைகளைச் செய்து விட்டால் சகல குற்றங்களும் மன்னிக்கப் பட்டு என்றைக்கும் சவுக்கியமாக இருக்கலாம் என்கின்ற எண்ணம் கொண்ட வர்களாகவே இருக்கின்றார்கள்.

நம்ம ஜனங்கள் தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அவர்கள் தங்கள் முன் ஜன்மத்தின் கர்மம் என்று நினைத்து அதிலிருந்து தப்புவிக்க விக்ரகங்களை வணங்குகிறார்கள். அதன் மூலம் கடவுள் தயவைத்தேடி கர்மத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். தங்களுக்கு ஏதாவது வியாதி வந்தாலுங்கூட அவைகள் தாங்கள் சுகாதார முறையை கவனிக் காததால் வந்தவை என்று எண்ணாமலும் இனி மேலாவது சுகாதார முறையைக் கைக் கொள்ளலாம் என்பதில் சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமலும் போன ஜன்மத்தில் தாங்கள் செய்த கர்மத்தின் பலன் என்றே நினைத்து விடுகின்றார்கள்.

இந்த மாதிரி கர்மத்தை ஒப்புக்கொள்ளும்படியான கொடுமையான கொள்கையானது நமது அறிவையும் முயற்சியையும் கெடுப்பதோடு அதனால் ஏற்படும் கஷ்டத்திலிருந்து விலகும் படியான மார்க்கத்தையும் அடைந்து வெறும் கடவுள் பாதத்தையே நம்பி சுகவாழ்வு முறைகளைக் கையாளமுடியாமல் செய்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஊரில் காலரா ஏற்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். காலரா என்கின்ற விஷபேதி வியாதி தண்ணீரிலிருந்து உண்டாகும் விஷப்பூச்சிகளால் உண்டா கின்றது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம். எங்கெங்கு தண்ணீரைச் சுத்தமாக வைத்திருக்கூடிய முறைகள் போதுமானபடி கையாளப்பட்டு வருகின்றதோ அங்கு காலரா வருவதில்லை. இதுவே சென்ற 25 வருஷ காலமாக இங்கி லாந்தின் அனுபவமாகவும் இருந்து வருகின்றது. ஆனால் நமது ஜனங்களுக்கு மாத்திரம் இந்த விஷயங்கள் அறிவிக்கப்படு வதுமில்லை அறிவிக்கக் கவலை எடுத்துக் கொள்வதுமில்லை.

அது மாத்திரமல்லாமல் இந்த உண்மையான விஷயங்களை அவர் கவனத்துக்கு யாராவது கொண்டு வந்தாலும் கூட அவற்றை அவர்கள் அலட்சியமாய் கருதி பரிகாசம் செய் வதோடு கெட்ட தண்ணீர் சாப்பிடுபவர்கள் எல்லோருமா செத்துப் போகின்றார்கள். விதி மூண்டவன் தானே சாகிறான் என்று விதியில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைப்பற்றி அந்த சமயம் பெருமை பேசிக்கொள்ளு கின்றார்கள். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., பாஸ் செய்ததால் அதிகமான பகுத்தறிவாளிகள் என்று சொல்லும்படியான படித்த கூட்டத்தார்களும் கூட வியாதி களை நீக்குவதற்கு மருந்துகளிலும் சுகாதார விதிகளிலும் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடமே நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள்.

மேற்குலத்தார் என்று சொல்லப்படுகின்றவர்களும் கூட எந்தவிதமான வியாதிகளுக்கும் தங்களது முன் ஜன்ம கர்மத்தின் பலன் என்றே சொல்லிக்கொண்டு அவ்வியாதி களைப் போக்குவதற்கு விருந்து, உற்சவம், மேளம், வேடிக்கை, முதலானவைகள் செய்வதன் மூலம் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து மாற்ற முடியாத கர்ம பலனை அவரால் மாற்றச் செய்து தப்பித்துக் கொள்ள முயலுகின்றார்கள். மனிதர்கள் பொதுவாகவே, தலைவிதியை மீறி எவ்வளவு வேண்டு மானாலும் தப்பிதம் செய்யலாம் என்றும் அதனால் வரும் படியான ஆபத்திற்கு பயப்பட வேண்டியதுமில்லை என்றும் ஆனாலும் நம் முன்னோர்கள் நடந்து வந்த பழக்கப்படியும் அவர்களது வாக்கியப்படியும் கடவுளுக்கு ஏதாவது சிறு லஞ்சம் கொடுத்து விட்டால் போதுமானது என்றும் அதனாலேயே கடவுளின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்கு கிடைத்து விடு மென்றும் என்ன செய்தாலும் சாவு கூட கிட்டநெருங்காதென்றும் கருதியிருக்கிறார்கள்.

கீழ்த்தர மக்கள் என்று சொல்லப்படுபவர்களும் இது போலவே தொத்து வியாதி முதலிய நோய்களுக்கு தங்கள் கிராமத்திலுள்ள கிராம தேவதைகளின் இரத்த வெறியினால் ஏற்பட்ட கோபம் தான் காரணமென்று கருதி அதைத் திருப்தி செய்து சாந்தப்படுத்த ஜீவபலி, மாமிசம், கள்ளு, சாராயம் முதலியவைகள் கொடுத்து வியாதிகளிலிருந்து தப்ப முயற்சிக் கிறார்கள். இதைப் பார்க்கின்ற மேல் குலத்தார்கள் என்பவர்கள் கீழ்க் குலத்தார்களை அவர்களின் இச்செய்கைகளுக்காக முட் டாள்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதுவதில் மாத்திரம் குறைவில்லை. ஆனாலும் உண்மையிலேயே இவ் விஷயத்தில் மேல்குலத்தார் என்பவர்களுக்கும் கீழ்க்குலத்தார் என்பவர் களுக்கும் யாதொரு வித்தியாசம் இல்லை என்பதே நமதபிப்பிராயம்.

ஆகையினால் எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்தியர்களாகிய நாம் சமூக இயல் அரசியல் பொருளாதார இயல் ஆகியவைகளில் ஏதாவது முற்போக்கடைய வேண்டு மானால் மனிதத் தன்மையையே அடியோடு அழிக்கத்தக்கதான மேல்கண்ட இரண்டு விஷயங்களையும் அதாவது விக்கிர கங்களை வணங்குவது என்கின்ற கொள்கையையும் தலை விதி கர்ம பலன், முன் ஜென்மத்தின் வரம், ஊழ்வினை என்ப வைகள் போன்ற நம்பிக் கையையும் அடியோடு ஒழித்தாக வேண்டும் என்பதேயாகும். எனவே “ரிவோல்ட்” பத்திரிகை இந்த விஷயத்தில் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டுமாய் எதிர்பார்க்கின்றேன். இதுவே சுயமரியாதை இயக்கத்தினு டையவும் முக்கிய கடமை என்று கருதுகின்றேன்.

மனிதன் தன்னுடைய மனிதத்தன்மைக்கு அதாவது அற்புதமான மனித சக்திக்கு, மதிப்புக் கொடுக்கும்படியாய் கற்பிக்கப்பட வேண்டும். முன் நாம் செய்த கர்ம பலனை நாமே அடையவேண்டும் என்பது உண்மையானால் அதை அழித் துக் கொள்ளும் சக்தியும் நம்மிடம் உண்டு. கர்மம் என்கின்ற உணர்ச்சியை அழிக்கும் காரியத்தை நமது முயற்சியால் தான் நாம் செய்து கொள்ள முடியுமே தவிர நம்முடையதல்லாத வேறு எந்த சக்தியினாலும் திருமூர்த்தி என்பவர்களினுடைய சக்தியானலும் கூட ஒன்றுமே செய்துவிட முடியாது என்ப தையும் உணரவேண்டும். “தீமைகளோடு நாமே தான் போர் புரிந்தாக வேண்டும், நம்மாலேயே அவைகளை வெல்லவும் முடியும்“ என்ற மோதி என்கின்ற ஆங்கிலகவிவாக்கே நமது ஞாபகக்குறிப்பு வார்த்தையாக இருக்க வேண்டும்.

சிவலிங்க ரஹசியமும் தமிழ் மக்களின் அறியாமையும்

(24.2.1929 - குடிஅரசிலிருந்து)


அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆகிய இவை இரண்டும் செய்விக்காத கெட்டசெய்கை கிடையாது. உதாரண மாக சாம்பலையும் மண்ணையும் முகத்திலும் உடம்பிலும் பூசிவிட்டு கழுத்திலும் கைகளிலும் ஏதேதோ கொட்டை மாலைகளை மாட்டி வெளியில் அனுப்பி வேடிக்கை பார்க்கிறது.

இன்னும் பார்ப்பனர்கள் காமபித்து அதிகமாய்ப் போய் ஆண்குறியும் பெண்குறியும் பிரஜாவிருத்தி, சரீரசுகம் இல் வாழ்க்கை இவைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் இவைதான் கடவுளர் பூஜிக்கப்பட வேண்டுமென்று சுமார் 2000 வருஷங்களுக்குமுன் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி னார்களாம்.

அப்பொழுது அறிவாளிகளான நம்மவர்கள் இந்தத் தீச்செயலை எல்லாவித உபாயங்களாலும் தடுக்கத் தொடங் கினார்கள். நம்மவர்களுக்கு பயந்து சிலர் இந்த கடவுள் வணக் கத்தை ரகசியமாகவும், சிலர் பிரத்தியட்சக் கடவுளை விட்டு மண் ணாலும், கல்லாலும் பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்தி ருக்கும் விதமாகச் செய்வது அதை வணங்கியும் மற்றுஞ்சிலர் முழுமனித வடிவம் நிர்வாணமாகச் செய்தது அதை வணங்கி வந்தார்களாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்கடவுள்கள் உயர்ந்த விலையுள்ள புடவை உடுத்துகிறதும் விபசார உற்சவம் செய் கிறதுமான சாமிகளாக மாறிவிட்டன. ஆஹா இந்த சாமி களுக்குத்தான் நம்மவர்கள் வருஷாவருஷம் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து நாசமாக்குகிறார்கள்.

பெரிய மதில் தின்ன பிராகாரம் கட்டி தங்கள் அறியாமையின் ஞாபகச்சின்னத்தை நிலைநாட்டுகிறார்கள். பால் பழம் சர்க்கரை கொண்டு தினம் 5 வேளை பூஜை செய்து ஆண் பெண் குறி களுக்கு தடவி வழித்துக் கொடுக்கிற பஞ்சாமிர்தத்தை கொஞ்சம் போதும் (மிகவும் கொஞ்சமாக, ஏனென்றால் பார்ப்பன பூசாரி கணக்காகத்தான் கொடுப்பான்) தின்று கடைத்தேறி விட்டதாக நினைக்கிறார்கள்.

தமிழர்களே! சுயபுத்திக்கு மேன்மைகொடுத்து பட்சபாத மில்லாமல் தினமும் 2 நாழி நேரமாவது சாம்பல் பூசுதல், யானைத் தலை கடவுள், மூன்று தலைச்சாமி, ஒத்தைக்கால் தெய்வம், முதலியவற்றை அராய்ந்து பார்த்தால் இந்த ஆபாசத் தின் உண்மை விளங்காமல் போகாது.

இனிமேலாவது ஒவ்வொரு ஊரிலும் கோவில் என்பவற்றில் உள்ள சாமி என்பவற்றை பெய்ர்த்து தூரவைத்து விட்டு அதனுடைய வருமானத்தைக் கொண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமும் அறிவு வளர்ச்சிக்காக புத்தகாரியமும் ஏற் படுத்தி நாட்டை சயமரியாதை உள்ளதாகச் செய்யுங்கள். இன்னும் இந்த ஆண்குறி பெண்குறி தெய்வங்களை கும்பிட்டுக் கொண்டும் சாம்பலை பூசியும் சாணியைத்தின்று கொண்டுமே இருந்தால் பின்னால் இன்னும் எதைத்தான் தின்ன நேரிடுமோ தெரியாது. இவ்வளவு காலம் அறியாமையில் கிடந்து நஷ்டமும் கஷ்டமும் பட்டது போதும்,போதும். கடைசியில் நீங்கள் பூசிக்கும் லிங்கம் என்ன என்பதை மேனாட்டார் தெரிந்து கொண்டு உங்களை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை நினைப் பூட்டுகிறேன். பிறர் சொல்லுவானேன். நமக்கே நம்முடைய இந்த வெட்கக்கேடான ஆசாரத்தில் அவமானத்தினால் தலை குனிந்து போகிறதில்லை. ஏன்! இது அறியாமை! மூடநம்பிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner