எழுத்துரு அளவு Larger Font Smaller Font

19.02.1933  - குடிஅரசிலிருந்து...

மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்பந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படுகின்றது என் றாலும், அது பெரிதும் சுயநலக்காரர் களாகிய முதலாளிமார்கள், சோம்பேறி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத் தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின் றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையா வார்கள். ஒன்று பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம் மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பர மாகின்றது.

இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபச்சாரக் குச்சிக்காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட் டைப்பை) திருடர், தந்தித்திருடர், கத்திரிக்கோல் திருடர், முதலிய திருட்டு வகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கெனவே  உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் முதலிய ஆகாரத்திற்கு அவசியமாய் வேண்டிய சாமான்களாக இல்லாமல் வேறு அநேகவித சாமான்கள் அதாவது விளையாட்டு சாமான்கள், வேடிக்கை சாமான்கள், அதிசய சாமான்கள், அற்புத சாமான்கள் பிரபுக்கள் வீட்டில், மகாராஜாக்கள் வீட்டில் இருக்கத்தக்க சாமான்கள் ஆகிய போக போக்கிய சாமான்களே ஏராளமாய்வரும்.

இவை தவிர காப்பிக் கடை, சோத்துக் கடை இவைகள் புதிய புதிய பெயர்களால் நன்றாய் விளம்பரம் செய்யப்பட்டு, எச்சில் மீது எச்சில் படிந்து, எச்சில் குளத்தில் சாப்பிடுவது போல் ஓட்டல்கள் விளங்கும். இவைகள் தவிர காலரா, மலேரியா, இன்புளூயன்சா, அம்மை, பிளேக்கு முதலிய தொத்து நோய்களும் உண்டாகும் மற்றும் கூட்ட நெருக்கடியில் பலர் நசுக்குண்டு சாகலாம்.

இவைகள் தான் மேல் கண்ட விளம்பரங்களால் ஏற்படும் பயனே தவிர வேறு என்ன ஏற்படக்கூடும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மாமாங்கம் சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமரஜனங்களுக்கு எச்ச ரிக்கை செய்த தற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிக்கையில் அதன் நிருபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார் அதன் சுருக்கமாவது:

சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ் காரர்களும் சேர்ந்து மகாமக பகிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அநேகம் பேர் மாமாங் கத்துக்கு வருவார்கள், ஆதலால் சுயமரி யாதைக்காரர் வேலை பயன்படாது என்று எழுதப்பட்டிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதினாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும் கூட ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியம் மெயில் நிருபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரிய வில்லை. நாஸ்திகர் அல்லாத வர்கள் அவ்வளவு பெரிய மூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிருபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமேஒழிய மற்றபடி சுயமரியாதைக் காரரை ஒன்றும் செய்து விடாது.

மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக் காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.  மாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக் காரருக்குலாபம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதார மற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200, ரூபாய் வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா? என்ற கருத்தின் மீது தான் இந்தப் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய - (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகோணம் மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக் கின்றோம்.

அன்றியும் இதுவரை செய்து வந்த பகுத்தறிவு பிரச்சார மானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச் சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்களும் இந்த மாமாங்கப் புரட்டைப்பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர் களை இந்த மாதிரியான கஷ்டத்தில் இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக.