எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எது அதிகக் கெடுதி?

21.12.1930 - குடிஅரசிலிருந்து..

மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லு கிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.

கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர் களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.

கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லு கின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லு கின்றவர்கள் நல்லவர்கள்.


கேள்வி - விடை  சித்திரபுத்திரன்

21.12.1930 - குடிஅரசிலிருந்து..

கே : கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரசு கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!
கே: ஏன்?
வி : அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஒரு மனிதன் தன் செல்வத்தை அல்லது முக்கியமான பொருளை எங்கே இழந்து விட்டானோ அந்த இடத்தில் தேடினால்தானே கிடைக்கும். பொருளை இழந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் போய்த் தேடினால் கிடைக்குமா? அதுபோலத்தான் நம்முடைய மக்கள் தங்களுடைய மானத்தை - சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்து விட்டார்களோ அந்த இடத்தில் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner