பகுத்தறிவு


20.11.1932 - குடிஅரசிலிருந்து..
.

உலக உற்பத்திக்கும் இயற்கை தோற்றங்களுக்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்க வேண்டாமா என்று கேட்பதின் மூலம் எப்படியாவது ஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச் செய்து அதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே  சர்வசக்தி, சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக் காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக வைத்து பெரிய ஆகாய கோட்டைகள் கட்டு வதையும் பார்த்திருக்கிறேன்.

உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங் களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் சைன்சைத் தொடர்ந்து கொண்டே போனால் என்றும் சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு சைன்சுக்கு யார்கர்த்தா என்கின்ற கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்கவில்லை என்று பதில் சொன்னால் அதுதான் கடவுள் என்று சொல்லி திருப்தி அடைவார்கள். அப்படியானால் அந்த கடவுள் யார்? அவர் எப்படி உண்டானார்? அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதான கேள்விகளை  முன்னைய விஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்விகளை போலவே, போட்டோமானால் அப்படிபட்ட கேள்வி கேட்க கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாக உண்டான தென்றும் அதற்குக் கால வரை இல்லையென்றும் சொல்லுவார்கள்.

அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லி விடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோ யூகத்தின் மீது அதுவும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா என்கிற யூகத்தின் மீது இது வாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம் என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என் பதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.

ஆனால் அப்படிப் பட்டதின் மீது மனித வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமத்துவதும், அதை வணங்குவதும், தொழுவதும், பிரார்த்தனை செய்வது என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம் என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுய நலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கை பிரியத்திற் காகவும் பிறர்க்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத் திற்கும் கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்று வதைப் பார்த்தால் பிறகு எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சி யானாலும் அது எங்கிருந்த போதிலும் அதை அழித்தே தீர வேண்டியிருக்கிறது.

திருடனுக்கும் கடவுள்

அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன் தான் திருடப் புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டு புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலைகாரனும் தான்.

விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலை யடைந்த உடன் கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்துகிறான். இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமையாளனும் தனது சொத்துக்களை திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான்.

இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும் செல்வவான்களும்  கடவுள் பிரார்த் தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிர வேறு எதற்காவது பயன் படுகிறதா என்று பாருங்கள்.

கோயில் பிரவேசம்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...

நம்மைப் பொறுத்தவரை நாம் கோவில் பிரவேசம் என்பதற்கு அனுகூலமாகத் தான் இருக்கின்றோம். எதற்காக என்றால், உயர்வு தாழ்வு மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை, கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும், அவற்றை அனுபவத்தில் நடத்தவும் நிலைநிறுத்தவும், ஏற்பட்ட பல சூழ்ச்சி ஸ்தாபனங்களில் கோவில் பிரவேசத் தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்குப் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்பதாகத் தான் கருதி இருக்கிறோம்.

ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில் நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்காக வேவென்றும் சொல்வதையும்  அதன் பேரால் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப்பதையும் கண்டிக்காமல்  இருப்பதற்கில்லை.

ஒற்றுமை என்னும் விஷ யத்திலும் மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமுகத்திற்கு உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. சுய ராஜ்யம் என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு விடாது.

உதாரணமாக, இன்றைய தினம் துருக்கியும் சுயராஜ்யம் பெற்ற நாடு, கிரீசுதேசமும் சுயராஜ்யம் பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அபிப்பிராயப் பேதத்தால் கிரீசில் இருந்த இசுலாமியர்கள் பத்து லட்சக்கணக்காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள்.

துருக்கியிலிருந்து கிறித்தவர்கள் பத்து லட்சக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால், இதற்குக் சமா தானம் அவர்கள் துரத்தப்படவில்லை - தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு ஓடி  விட்டார்கள் என்று சொல்லக் கூடும். எப்படியிருந்தாலும் அபிப்பிராய பேதமேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும் படியாய் ஏற்பட்டு இன்று சாப்பாட்டிற் கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மற்றும் சில சுயராஜ்ய நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டாஸ்டெண்டு களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டு பல கொடுமைகள் அடைந்து வருகிறார்கள். இவற்றிற் கெல்லாம். அந்நிய ஆட்சி இருந்து கலகங்களையும் அபிப் பிராய பேதங் களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தென்றே சொல்லி விட முடியாது.

ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக்கும் சமத்துவம் இருக்கும் படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்யப்பட்டா லொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப் பட கூடியதில்லை என்றே சொல்லுவோம்.

எனவே, அதை விட்டு விட்டு ஒற்றுமை  மகாநாடுகளுக்கும் கோவில்  நுழைவு பிரசாரமும் செய்வது மேற்கூறிய படி இந்து மதப் பிரச்சாரமும் சாஸ்திர புராணப் பிரசாரமும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி பிர சாரங்களால் நாட்டிற்கோ, மனித சமூகத்திற்கோ ஒரு நன்மையையும் செய்து விடமுடியாது.

இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள அதிகாரம் பதவி பட்டம் செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில மக்களைத் திருப்தி செய்யலாம்.

அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை ஏமாற்றி அடக்கி வைக்கலாம். இவ்வளவு தானே ஒழிய, சமூக சமத்துவத்தையோ சமுக ஒற்றுமையையோ பொருளாதார சமத்துவத்தையோ நிலை நிறுத்தி விட முடியாது.

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

* பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், மக்களுக்கு இருக்க வேண்டிய மானம், அவமானமற்ற தன்மை, கண்ணியம், நேர்மை முதலிய சாதாரணக் குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால் இந்தச் சுதந்திரம் உள்ளவரை மக்களில் நேர்மையுள்ள யோக் கியன் இருக்க மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தச் சுதந்திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள், நாணயமற்ற வர்கள், மக்களை ஏமாற்றி -வஞ்சித்துப் பழக்கப் பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்ற காலிகள் முதலியவர்களது முயற்சியினால், தந்திரத்தினால் என்றால், இதில் யோக்கியம், நேர்மை, உண்மை எப்படி இருக்க முடியும்?

*  சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.

பம்பாய் கிராணிகல் பத்திரிகையில் எழுதுவதாவது:- இந்த துரதிர்ஷ்டமுள்ள நாட்டில் “விசேட உரிமைகளைக்“ காப்பாற்றும் பொருட்டும், “போதிய பிரதிநிதித்துவம் வகித்துக் கொள்ளும் பொருட்டும்“ நிகழும் சண்டை சச்சரவுகளில் உபயோகிக்கப்படும் இந்து என்னும் பதத்தின் அர்த்தம் இன்னதென்பதே எனக்குப் புலப்படவில்லை.

‘இந்து’ என்றால் என்ன அர்த்தம் என்று வினாவியதற்கும் எனக்கு இது வரையில் ஒருவரும் திருப்திகரமான பதில் அளிக்கவுமில்லை எனவே யார் தனை இந்து  என்று கூறிக் கொண்ட போதிலும் அவர் ஒரு ‘இந்து’ வாதல் வேண்டும்.

மதம் என்பது சமூகங்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டிய தற்காக நிறுவப்பட்ட சில வரையறைகள் என்று கூறுவோமாயின், சமூக நன்மைக்காகவே ஏற்பட்ட பல்வேறு மதங்களும் ஒன்றுக் கொன்று முரண்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளவும் வேண்டி யதில்லை.

செத்துப்போம்மதம் சாவதுதானே


ஆனால் மதம் என்பது சில மனிதர்களால் பல நூற்றண்டுகட்கு முன்னர், பிற்கால சந்ததிகள் கண்மூடித் தன்மான தங்கள் பகுத்தறிவை அடமானம் வைத்து அநுசரிப்பதற்காக நிறுவிய சில சட்டங்களாகும் என்று தான் நான் கருதுகின்றேன். ராய்பகதூர் சாரதாவின் மிக சாதாரணமான மசோதாவைப் பற்றி சில பிடிவாதம் பிடித்த அங்கத் தினர்கள் சின்னாட்கட்கு முன்னர் இந்தியா சட்டசபையில் நிகழ்த்திய வாதங்களிலிருந்து மேற்கூறிய உண்மை உறுதி செய்யப்படுகின்றது. 14 வயதுக்கு ஒரு பெண்ணின் மண வயதை உயர்த்தின மட்டில் செத்துப்போகக் கூடிய ஒரு மதம் கழக நலனுக்குத் தீமையை இழைக்கக் கூடியதும் ஒழுக்க ஈனமுமானது என்பதில் தடையில்லை.

மதம் ஒழிதல் வேண்டும்: இதனை இக்கணத்தே ஒழித்து விடுதல் வேண்டும். மரத்தாலும், லோகத்தாலும், கல்லாலும் செய்யப் பட்ட கடவுள்களை நம்பி வணங்கும் ஒரு மனிதன் சாதிபேதத்தில் உறுதியான பற்றுடைய ஒரு மனிதன்; அருவக் கடவுளை நம்பும் ஒரு மனிதன்; மிருக கோடிகளில் ஒருவகை மிருகந்தான் தெய்வீகமுள்ளதென்று அதனை வழிபடும் ஒரு மனிதன்; சில குறிப்பிட்ட நாட்களில் விரதங்கள் அநுஷ்ட்டிக்கும் ஒரு மனிதன், இதனை நெடுக வளர்க்கலாம் இவைகளில் எவன் ‘இந்து’ எனப்படுவோன் இவ்விந்தியாவில் இப்பொழுது கூறப்பட்ட இத்துணை விஷயங்களும் அல்லது அவற்றுள் ஒன்றேனும் ஒரு இந்து என்பவனுக்கு அவசியமில்லை என்று  கூறும் பல இந்துக்கள் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதாக நான் திண் ணமாய்க் கூறுவேன். இத்தகைய சான்றோர்கட்குத்தான் நான்முறையீடு செய்து கொள்ளுவதும்:- இவர்கள் அனைவருமே மதம் என்ற ஒன்றைக் கண்டிப்பதுடனின்றி நமக்கு மதமே இல்லையென்றும் பொதுப்படப் பிரச்சாரம் புரிதல் வேண்டும். கடிதில் ஜனத்தொகை கணக்கு எடுக்கப்படுவதால், அது காலை, மதம் என்ற சட்டத்தில் ஒன்றுமில்லை என்று இப்பெருந்தகையார் அனைவரும் எழுதிவிடுதல் வேண்டும். இவர் தம் மத விரோதப் பான்மை பொது விளம்பரத்துடன் நின்று விடுவதுடனில்லாமல் எழுத்து மூல மாகவும் பதிவு செய்யப்பெற்றாகட்டும்

(பம்பாய் கிராணிக்கல் - திராவிடன்)


புரோகிதரும் திதியும் தம்பியின் சீற்றம் - அய்யரின் ஓட்டம்
(சித்திர புத்திரன்)27.11.1943, குடி அரசிலிருந்து... 

புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு 8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.

சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகை களோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!

அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?

அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.

தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?

முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.

தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?

முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.

தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?

முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று.

ஜீவகாருண்யம்

10.06.1934- புரட்சியிலிருந்து...

இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்கு வார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியா தையும், ஜீவகாருண்யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால், சாப்பிட்டால் அவர்களிடம் குரோதமும், வெறுப்பும் கொள்ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு முகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கட்சிகளும் உண்டாகின்றன.

இந்துக் களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப் படும் வகுப்பார், மாட்டு மாமிசம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக் காரர்கள் என்று கருது வதாகவும், அதனாலேயே அவர்களைத் தொடு வதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப் படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதைச் சாகும் வரை உபத்திர விக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப் பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்து கிறார்கள்.

அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டு விட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகா ருண்யம் பலப்பல ஜீவன்கள் பெயரால் எத்தனை யோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பட்சி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப் படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம்.
மக்கள் சமுக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்து கிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடை முறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமான தென்றே சொல்லலாம்.

மதப்பித்து

27.05.1934 - புரட்சியிலிருந்து....

மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்ட வனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட, அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் நட வடிக்கை என்பவை லட்சியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டி யதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தான் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிறமதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங் களையும் நடவடிக்கைகளையும் பிறமதக்காரன் பின்பற்றி நடக்கின்றானா என்பதையும் கவனித் துப் பார்த்தால் ஒவ் வொரு மதக்காரர் களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும். மற்றபடி அவரவர் மதக்குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது.


1929 - குடிஅரசிலிருந்து...

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும் பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்தில் தேர்தல் பிரசார மாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்கும் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன் பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரிட்சை நடத்திப் பார்த்தாகி விட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பன டிரஸ்டியின் ஸ்தானம், அதாவது சுதேசமித்திரன் இந்து ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய் யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டு விட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா, சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும்பான்மையான ஓட்டர்களாயிருந்தும் ஒருபக்கம் பார்ப்பன ரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலி யாரும், அவரது சகபாடிகளும், திரு.புர்ரா. அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம், சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப்பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரச்சாரம் செய்தும் கடைசி யாய் திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரச்சாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்ப ரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப் படையாகவே, திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரச்சாரமும் அதன் எதிர் பிரச்சாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.

எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் நாத்திகம் ஏற்பட்டுவிட்டது, கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர் களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஐஸ்டிஸ் கட்சியின் ஜீவநாடி என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, செனட் தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் நாதிகத்திற்கு, (அதாவது செங்கற் பட்டுத் தீர்மானத் திற்கு) முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆதிகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப்பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.


சங்கராச்சாரியின் சங்கடம்
கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று!

1935 - குடிஅரசிலிருந்து...

தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான  லோககுரு  சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டுப் போய்விட்டன.
அவருடைய பூஜையில்  வைக்கப்பட்டிருந்த சுமார் 15  விக்கிரகங் களும், இரண்டரை தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய் விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.
பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ,  அல்லது  லோககுரு என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றித்   திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ,  ஏதாவது   சக்தி யென்பது   இருந்தால் திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு   போயிருக்க முடியுமா?  என்று இப்பொழுதுதான் மூட ஜனங்கள் யோசித்துப்பார்க்க ஆரம்பித் திருக்கிறார்கள்.
ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின்  தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப் பனரல்லாத  பணக்காரர்களையும் ஏமாற்றிப் பாத காணிக்கை யென்னும் பேரால், பகிரங்கப் பகற்கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில்ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.  திருடர்களைப்  கண்டுபிடிக்க காவல்துறையினரும் அதிதீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்! அய்யோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்பட வேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள்.
மற்றொரு சுற்றுப்பிரயாணத்தைத் தடபுடலாக விளம் பரத்துடன் நடத்தினால் இழத்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக்கொள்ளலாம், முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை ? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லுகிறோம்.  

ஆழ்வார் திருநகரியும்
அய்யங்கார்களின் அக்கிரமமும்

1929 - குடியரசிலிருந்து...

ஆழ்வார் திரு நகரியென்பது திருநெல்வேலிக்கு சுமார் இருபது மைலிலிருக்கும் ஊர். இவ்விடத்தில் ஆழ்வார் அவ தரித்ததினால் இதற்கு ஆழ்வார் திருநகரியெனும் பெயருண் டாயிற்று எனப்படுகிறது. ஆழ்வார் பிறப்பில் பார்ப்பனரல்லாதார். அப்படிப் பிறந்த இவரை ஆராதிக்கவும் இவர் விக்கிரத்துக்கு அபிஷேகம் பண்ணிக்கழுவவும் ஆடை அணி முதலியவற்றைக் கொண்டு அலங்கரிக்கவும் அவ்விக் கிரகத்திற்கு அமுது செய்வித்த அன்னப்பட்சனம் முதலியவைகளையும் அபிஷேகமுறையால் கழுவின நீரையும் புசிக்கவும் உள்ள பாத்யதைகளை இந்த அய்யங்கார்களாகிய பார்ப்பனர்களே உரிமை செய்து கொண்டதோடு நில்லாமல் ஆழ்வார் திரு வீதிகளில் உத்சவம் கொண்டாடுகிற சமயத்தில் ஆழ் வார் விக்ரகத்தை நான்கு வீதிகளிலும் ப்ரதட்சணமாக தூக்கிக்கொண்டு வருகிறசமயத்தில் கூட பார்ப்பனல் லாதாரை ஆழ்வார் பக்கத்தில் சென்று தரிசிக்க விடாமல் ஜீயர்களென்போரும் ஆச்சாரிகள் என் போரும் சுற்றிக்கொள்கிறார்கள்.

இத்தோடு தங்கள் சாதியாரைத் தவிர வேளாளர் களோ, நாயக்கர்களோ, கோனார்களோ, நாயக்கர் களோ தரிசிக்கவோ கும்பிடவோ ஆழ்வார் விக்ரகத் திற்கு பக்கத்தில் சென்றால் அவர்களை உற்றுப்பார்க் கிறதுமல்லாமல் உனக்குக்கண்ணில்லயா?  தூரவிருந் தால் தெரியாதா? பெரியவாள் சின்ன வாள் மேல் சாதி கூட தெரிகிறதில்லையா? என்று மரியாதைக்குப் பங்க முண்டாகும். சொற்களால் நிந்திக்கிறார்கள்.

சுயமரியாதையுள்ளவர்கள் யாராவது இதற்கு ஏதாவது சமாதானமாக கோவிலுக்குள் தான் இம்மாதிரி அநீதி நடத்துகின்றீர்கள். வீதிகளில் கூட நாங்கள் ஆழ்வாரை அணுகக்கூடாது என்பது எவ்வளவு அகம்பாவமான காரியம்! என்று கேட்டால் ஓ ஓஹோ நீ பிராமணாள், புடை சூழ்ந்து வருகிறபோது அவாளை மதியாமல் ஆழ்வார் பக்கத்தில் வந்து பிராமணாள்வந்து இருக்கிறார்களே என்று கூட மதியாமல் பிரதட்சணம் செய்வதாகச் சொல்லுகிறாயே நீ என்ன ஜாதிமனிதன் என்று நிந்தித்து துரத்தியடித்துத் துன் புறுத்துகிறார்கள்.

இக்கொடுமையைச் சகியாதவர்களாகிய தன் மதிப்பு கொண்டவர்களில் ஒருவரான திருவைகுண்ட தாசர் என்பவர் ஆழ்வார் வீதிகளில் பிரதட்சணமாக வரும்போது நீங்கள் வீதிகளில் மேய்த்து திரியும் நாய், பன்றி, கழுதை முதலிய இழி ஜந்துக்களைப் பார்ப்பதும் பக்கத்தில் போவதும் அவைகளை பிரதட்சணம் செய்வதால் வந்த தீங்கென்ன என்று கேட்டார்.

இந்த கேள்வி கேட்டதும் பார்ப்பனர் மனம் புண்ணானதாக கேட்டவரை உருட்டிப் பார்த்து அடே சூத்திரப்பயலே இனி இங்கு நில்லாதே ஓடிப்போ என்று பாதகப் பார்ப்பனர் கடிந்து பேசத்துவக்கினார்கள். உடனே இந்த சுயமரியாதை வீரர் ஓய்! நீ யார் தெரியுமா, நீர் ஓர் வடநாட்டு ஆரியன், இந்த ஆழ்வார் யார் தெரியுமா, தென்னாட்டவர், நானும் தென் னாட்டவன், ஆக நானும் ஆழ்வாரும் ஓர் நாட் டவர்கள். ஒரே பார்ப்பனரல்லாத இனத்தவர்கள், இந்த ஆழ்வாருக்கு கோவில், குளம், கட்டுவித்தவர்களும் எங்களினத்தார்களாகிய பார்ப்பனரல்லாதாரேயா வார்கள். பூசை, திருவிழா முதலியசெலவுகளுக்கும் மானியம் விட்டவர்களும் நாங்களே, இவைகளை நடத்தி வைக்கக்கூலி பேசி கூலிக்கு உழைக்க வந்த ஆட்களாகிய உங்களை விசாரிப்பவர்களும் நாங்களே யாவோம். நீங்கள் செய்யும் அக்கிரமங்களை அறிந்து கண்டிக்கவும், விலக்கவும், புதிதாகச் சேர்க்கவும் உரிமையுள்ளவர்களும் நாங்களாகவே இருக்க இம்மாதிரியான அநீதிகள் இனி நிலைக்காது என்று சொன்னார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இச்சுயநலப் பார்ப்பனருக்குக் கோபாவேசம் பிறந்து  அப்பெரியா ரான நியாயவாதியை அடித்து துன்புறுத்தினார்கள் என்றால் இவர்களின் அக்கிரமத்துக்கு யார் பொறுப் பாளிகள்? தேவஸ்தான பரிபாலன கர்த்தர்களா? ஊர் பொதுமக்களா? சர்க்கார்தானா? என்று பார்க்கும்போது ஒவ்வொரு சுயமரி யாதை வாய்ந்தவர்களுக்கு இதை சீர்படுத்தும் பொறுப்பு உண்டு என்பதும் சுயமரியாதை ரத்த ஓட்டமில்லாத எந்த அதிகார அமைப்போ ஆளுகையோ நாட்டில் இருந்தாலும் மக்களை அடிமைப்படுகுழியிலும் அறியாமையிலும் மூழ்கத் தான் செய்யுமென்பதும் திண்ணம்.

ஆகையால் சுயமரியாதை கொழுந்து விட்டு படர்ந்து வரும் இக்காலத்திலாவது, இத்தகைய அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஒழித்து நாட்டின் நலனை நிறுவ முன்வர பொதுமக்களை வற்புறுத்தி அழைக்கிறேன் என்று ஓர் அனுதாபி எழுதுகிறார்.


27.11.1938 குடி அரசு  சொற்பொழிவிலிருந்து...  
தாய்மார்களே! தோழர்களே!

அருமைச் சிறுவன்  லூர்துசாமியும், சகோதரி பார்வதி யம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக் கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்க வில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6  வாரம் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆச்சாரியாருக்கு நடுக்கம்

இன்று பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேட்டவுடன் ஆச்சாரியாருக்கு நடுக்க மேற்பட்டிருக்கும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் சிறைக்குச் சென்றனர் என்பதைக் கேட்க அளவுக்கு மீறி நடுங்கி இருப்பார். இன்று கோர்ட்டில் தாய்மார்கள் இந்தி ஒழிய வேண்டும் அல்லது நாங்கள் ஒழியவேண்டும் என வீரத்துடன் பதில் கொடுத் தார்கள். ஆனால் ஆச்சாரியார் இனி வேறு பெண்களில்லை எனச் சமாதானப் பட்டிருப் பார். யாராவது துர்மந்திரிகளும் அவ்வளவுதான் இனிப் பெண்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருப்பார்கள். இல்லாவிட்டால், நான் பழகியவரை ஆச்சாரியார் இப்படிக் கவலையில்லாதிருக்க மாட்டார். மேலும் 2,3 சாமியார்கள் தான் இருக்கிறார்கள்; சிலர் தான் எதிர்க்கின்றார்கள் என்று அவர் கருதக்கூடாது. அதற்காவன நீங்கள் செய்ய வேண்டும். தோழர் பொன்னம்பலம் அவர்கள் கூறியதுபோல் ஒன்றரை ஆண்டில் 4 கோடி கடன் வாங்கி விட்டனர். அதைப்பார்த்து கவர்னருக்கு இப்பொழுது தான் சிறிது தலைவலிக்க ஆரம்பித்திருக்கின்றது. இது 2 நாளில் நின்றுவிடும் என ஆச்சாரியார் நினைக்கின்றார்.

நாட்டில் இந்நிலையை அவர் உண்டாக்கி இருக்கா விட்டால் இவர்கள்  எனது தாய்மார்கள் முன் வந்திருப் பார்களா? தாய்மார்கள் வந்து எங்கட்குப் புத்தி கற்பிக்க  ஊக்கமூட்ட வேண்டுமென்றால் இது யாருடைய தர்மம்? தோழர் ஆச்சாரியார் அளித்தது தானே! அவர் அன்புடன் நல்கியது தானே. உண்மையோடுழைப்பதன் மூலம் வெற்றியடைந்து, இனி தமிழர்களிடத்து வால் நீட்டக் கூடாது என்ற எண்ணத்தை அவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தமிழர்கள்  தமிழ்ப் பெண்கள்  சரியாகக் கவனிக்க வில்லை என்றுதான் அவர் கொடுமை செய்து வந்தார். இப்பொழுது சற்று யோக்கியமாக நடந்து வருகிறார். தமிழர்கள் வெறுப்பிற்கு பயந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இரகசியங்களில் காரியங்கள் செய்து வருகிறார். இன்றைய தாய்மார்களைப் போல் நாமும் நடந்தால் நமது தொல்லைகள் நீங்கும். சிறை செல்லச் சிறிதும் பயப்படக் கூடாது. இத்தகைய நிலையில் பெண்களைச் சிறையிட்ட அரசு எங்கும் கிடை யாது. அரசாங்கத்திற்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால், சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. ஆனால் இன்றைய ராம ராஜ்யத்தில் தாய் மொழியிடத்து அன்பு கொண்டால் போதும் உடனே சிறைத்தண்டனை. நமக்குப் பல காலமாகத் தொல்லை கொடுத்து வருவதோடில்லாது வீணே இன்று சிறை என்றால் என்ன நினைப்பது?

தமிழன் வாழ்வு அவருக்கு
பொறுக்கவில்லை

நேற்றுவரை சட்டம் மீறலைத் தவறெனக் கண்டித்து வந்தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக் கூடாது என்று நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக் கூடத்தை மாமனார் வீடு போலவும் படுக்கையறை போலவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. ஒருவரை வையவோ அன்றி அடிக்கவோ வேண்டுவதில்லை. தமிழ்வாழ்க என்றால் போதும் உடனே தம்பீ! வா வென ஆச்சாரியார் அழைத்துக் கொள்ளுவார். நான் பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாகவேண்டு மென நினைக்கவேண்டாம்.

தமிழன் வாழ்வு அவர்கட்குப் பொறுக்கவில்லை. என் றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகின்றார்களென்று சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். பானகல் அரசர் வெற்றி பெற்ற காலத்துப் பானகல் இறந்தார் என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரிகளை இராட்சதர்களென்றும் அரக்கர்கள் என்றும் இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று உச்சிக்குடுமி ஒழிக எனத் தொண்டர்கள் கூறினார் களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுகிறார். உச்சிக் குடுமி ஒழிக என்றால் என்ன? உச்சிக்குடுமித் தன்மை தானே ஒழிய வேண்டுமென்பது. இதற்கு இவ்வளவு ரோஷம் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று சரிகைக்குல்லாய் ஒழிக என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000-தர்ப்பையோ அன்றி உச்சிக்குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிய என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்) பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான் இராவணன் என்று கதை எழுதி வைத்து, அந்தப் பெயரால் தமிழர்களை அழைக்கும் போது உச்சிக்குடுமி, டவாலி, தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத்தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள்.

விநோத சாட்சியம்

இன்று காலை, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் கவனித்தேன். ஒரு சாட்சியம் கூறும் சப்இன்ஸ்பெக்டர் தாய்மார்கள் கூறாதவற்றைச் சேர்த்துக் கூறுகின்றார். அவரது மயிர் காம்பிலுள்ள ஒவ்வொரு துளி ரத்தமும் நம்முடைய உழைப்பினால் கிடைத்த பணத்தினால் ஊறியது என்பதை நினைக்கவில்லை. அவர் என்ன செய்வார்? மேலே உள்ளவர்களின் தயவுக்காகக் கிளிப்பிள்ளை போல் கூறுகிறார். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. இது தானா சத்திய ஆட்சி, ராமராஜ்ய ஆட்சி, காந்தியின் அஹீம்சா ஆட்சி எனக் கேட்கின்றேன். எனக்குச் சத்தியத்தில் சிறிதும் நம்பிக்கையில்லை. ஆனால் உண்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றேன். சத்தியம் என்று நினைத்தால் பழுக்கக் காய்ந்த கொழுவை உருவலாம் என்றும் பண்டைப்பெண்கள் மணலைச் சோறு ஆக்கியிருக்கின்றனர் என்றும் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே கொழுவை இன்று சத்தியத்தில் நம்பிக்கையுள்ள சத்தியமூர்த்தியாலும் உருவ முடியாது. அல்லது காந்தியாலும் முடியாது. எனவே எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கையில்லை. இன்று தாய்மார்கள் எந்தப் பையனை அல்லது உபாத்தியாயரைக் காலைக் கட்டிப் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாதெனத் தடுத்தனர்.

ஆனால் சென்ற ஆண்டு காங்கிரஸ்காரர்கள் கிராம்பு மறியலில், கப்பலை விட்டு மூட்டைகளை இறக்கக் கூடா தெனத் தடுத்தனர். மூட்டை ஏற்றிய வண்டியை ஓட்ட விடாது சக்கரத்தின் கீழ்படுத்துத் தடுத்தனர். கடையில் விற்கக் கூடாதென்றும், வாங்க வருபவர்களையும் தடுத்தனர். இதற்குக் காங்கிரஸ் மந்திரிகள் உத்தரவு கொடுத்தனர். தொண் டர்களைப் பாராட்டினர். அதைவிட இந்தி ஒழிக என்று கூறுவது தவறானதா? இந்தி உண் மையில் ஒழிந்துவிட்டது. செத்த பாம்பை ஆச்சாரியார் ஆட்டுகிறார். இந்தி எதிர்ப் பாளர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு 18 மாதம், 2 வருஷம் தண்டனை விதிக்கப் படுகின்றது.

மனம் மாறாவிட்டால்.?

உண்மையில் சொல்லுகிறேன் தினம் 5 பேர் வீதம் பெண்கள் ஒரு மாதம் தொடர்ச்சியாகச் சென்றால் கட்டாயம் ஆச்சாரியார் நிலை மாறும். மாறாவிட்டால் தமிழர்கள் இரத்தம் கொதிக்கும்; உணர்ச்சி பெருகும்.

இன்று சென்னையை ஏன் தமிழ்நாட்டையே சிறப்பித்த  தமிழ்ப்பெண்களின் வீரத்தை இந்தியா முழுவதும் அறியச் செய்த தாய்மார்களைத் தொடர்ந்து அவர்களுக்குக் கவுரவமளிக்க வேண்டுகிறேன்.


மேல்நாட்டில் எமன் இல்லையா?

28.06.1931 - குடிஅரசிலிருந்து

நமது நாட்டு மக்களின் சராசரி வயது ஒவ்வொருவனுக்கு, 24 தான் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் மேல்நாட்டில் வயது 45 என்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு காரணமென்ன? அங்கு எமன் இல்லையா? நமது நாட்டு எமன் அவர்களிடம் சிறுவயதில் செல்லுவ தில்லையா?

அவனுக்கு நம்மிடம்தானா சதா வேலையிருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். நமது நாட்டு மக்களிறந்து விட்டால் உடனே நாம் என்ன செய்வது. அவனுடைய சீட்டை பிரமதேவன் கிழித்து விட்டான். விதி முடிந்தால் யார் என்ன செய்ய முடியும்? என சொல்லி விடுகின்றோம்.

ஆனால் மேல் நாட்டானோ அப்படியில்லை. அவன் யாராகிலும் காலராவிலிறந்து விட்டால் உடனே ஆகாரம், தண்ணீர், காற்று முதலியவைகளை கவனித்து, ஆராய்ச்சி செய்து தக்கமுறைகளைக் கண்டுபிடித்து மற்றவர்களோ சாகாமல் இருக்கப் பாடுபடுகின்றானே யொழிய நம்மைப் போல் ஓங்காளியம்மனைக் கும்பிடுவதில்லை.

நமது மதராசைப் பொறுத்தவரையிலும் ஒரு உதாரணம் என்னவென்றால், ஒரு தடவை சென்னையில் 15 நாட்கள் வரையிலும் காலராயிருந்ததினால், உடனே ஒரு மீட்டிங்கில் ஹெல்த் ஆபிசர் வேலைக்கு லாயக்கில்லை என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். ஹெல்த் ஆபிசரும் அதற்குத் தக்கவாறு பதில் சொல்லி தனது முயற்சியில் 15 நாள் பொறுத்தாவது அடியோடு நிறுத்தப் பட்டதை எடுத்துக் காட்டினாரேயல்லாமல்  கடவுள் செயலுக்கு நான் என்ன செய்ய முடியு மென்பதாக உரைக்கவேயில்லை.


தந்தை பெரியார் பொன்மொழிகள்

* இன்றைய வாலிபர்கள் தங்களுக்கு மிக்க பொறுப்பு இருக்கிற தாகக் கருத வேண்டும். பெண்மணிகளும் மானம் ஈனம் என்ப வைகளைக் கூட லட்சியம் செய்யாது முன்வர வேண்டும். ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.

* அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்புப் பலமாய்விடுமே என்கிற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவ மாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது.

*மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன் னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலைநிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து...

கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பான் உரையாடல்.

க: என்ன சாஸ்திரிகளே நேற்று சனாதன கான்பரன்சுக்கு வந்திருந்தேளா?

கா: நீங்கள் போயிருந்தேளே என்ன நடந்தது?

க: அதை என்ன சொல்லச் சொல்கிறேள். ஆதிசேஷ னாலும் வர்ணிக்க முடியாது குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவிருக்கும், பாயாசம் பட்சணத்தோடு சாப்பா டையா!

கா: எல்லோருக்குமா?

க: எல்லோருக்குமில்லை. இருந்தாலும் நான் விடுவேனா? சாப்பிட்டு விட்டேன்.

கா: சாப்பாடு கிடக்கட்டும், அதைச் சொல்லி என் வயிற் றெறிச்சலை கிளப்பப் பார்க்கிரேளா, அங்கே என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கோ.

க: முதல் நாள் ஸ்வாமியளவாள் மூனு மணி நேரம் இங்கிலீஷிலே ஜமாச்சுட்டாள். என்ன ஜோர்! என்ன ஜோர்!! நீங்கள் வராமலிருந்துட்டேளே.

கா: உங்களுக்கும் எனக்கும் இங்கிலீஷிலே ஒரு அட்சரம்கூட தெரியாதே ஸ்வாமி. நான் வந்து என்ன பண்ண. உங்களுக்கு எதனாலே அய்யா நன்னாயிருந்தது?

க:  ஸன்னிதானம் இங்கிலீஷிலே பேசுறபோது அங்கே யிருந்த வக்கீல் ஸனாதனிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரெஸிச்சாள். அநேக இடங்களிலே சிரித்தாள். சில சமயங்களிலே “ஹியர்” இன்னாள். அதினாலே நன்னாத்தானே இருந்திருக்கணும்.

கா: என்ன அநியாயம்! ஆச்சாரியாள் அதிலும் ஜகத்குரு “நீச” பாஷையிலேயா ஸனாதனம் பேசறது! என்ன அக் கிரமம், பறையன் கோவிலுக்குள் போனாக்கூட பிராயச் சித்தம் உண்டு. இந்த அதர்மத்துக்கு ஏதையா பிராயச்சித்தம். எல்லாம் புதுசு புதுசா வராப்பலே இதுவும் ஒரு அபிநவ ஸனாதனம் போலிருக்கு?

க: ராஜாவுக்கும் வைஸ்ராய்க்கும் தெரிய வேண்டாமா சாஸ்திரியளே?

கா: நம்ம சாஸ்திரப்படி எந்த சத்ரியன் நமக்கு இப்போ ராஜாவா யிருக்கான், அவனிட்டே தெரிவிக்க, ஆச்சாரிகளும் சவுகர்யம் போலே தர்மாசரணை செய்யலாமானால் காந்தியும் சாஸ்திரத்துக்கு அர்த்தம் நன்னாய்ச் சொல்லலாம்.

க: என்ன சாஸ்திரியளே அப்படியானால் பஞ்சமர் எல்லாம் கோவிலுக்குள் வரலாம் என்கிரேளா.

கா: அப்படித்தான் சொல்கிறேன்.

க: என்ன சாஸ்திரியளே. இதுவரை உங்களை ஸ்னாதனி என்றல்லவா நினைச்சேன். திடீரென ஹரிஜன சாஸ்திரிய ளாய் மாறிட்டேளே.

கா: உமக்கு கண்ணிருக்கா அதோ பாரும் பூட்ஸ் காலோடே அந்த கிருஸ்தவரும் வாயிலே சுருட்டோடே அந்த முஸ்லிமும் த்தஜஸ்தம்பம் வரை போலாமானால் கட்டாயமாய் நம்ம பறையன் முத்தனும் சக்கிலி பழனியும் இன்னம் கொஞ்சதூரம் கூட உள்ளே போலாம் சாஸ்திரி யாளே.

க: (பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு) சாஸ்திரியளே ரொம்ப கோபத்திலிருக்கேள். இப்போ உங்களிட்டே தர்மம் பேசப்படாது! கோபம் படாதய்யா நான் போறேன்.

கா: எனக்கு ஒன்றும் கோபமில்லை சாஸ்திரியளே எல்லாம் ஆசாரியாளுக்குத் தானிருக்கு.

க: என்னய்யா ஸ்வாமிகளைப் பத்தி கண்டபடி பேசுரேள்.

கா: எந்த சாஸ்திரத்திலே அய்யா ஆச்சாரியாளை மோட்டாரிலும், ரயிலிலும் போகக் சொல்லியிருக்கு? எந்த  ஸ்மிருதியிலே, பிராமணனை வக்கீல் பண்ணச் சொல்லி ருக்கு. கோர்ட்டிலே பஞ்சமன் ஜட்ஜா வந்தா அவனுக்கு மரியாதையோடு எழுந்து நின்று ஸலாம் போட்டு “யுவர் ஆனர், யுவர் லாட்ஷிப்” என்று சொல்ல எந்தச் சுருதியிலே சொல்லிருக்கு சாஸ்திரியளே.

க: அதெல்லாம் ஆபத்தர்மம் அய்யா,

கா: ஆபத்தர்மம் இது தானா? லட்சக்கணக்காய் சம்பாதிச்ச பிறகும் கூட இன்னும் ஆசை விடாமல் ராக்கொள்ளி பிசாசு மாதிரி கட்சிக்காரன் ரத்தத்தை உறுஞ்சரது. இவர் தான் இப்போது இந்த ஆபத்தர்மம் நடத்திக் கொண்டு நம்ம சனாதனத்தைக்  காப்பாற்ற  வந்திருக்காளய்யா, எல்லாம் பெரியவாளுக்கு ஒரு ஸ்னாதனம், ஏழைகளுக்கு தனிஸ்னாதனம் போலிருக்கு. கோவிலுக்குள் பஞ்சமனை மட்டுமா போகக்கூடாதென்று சொல்லிருக்கு? பதிதனும் போகக்கூடாதேஸ்வாமி, கோவிலிலே எத்தனை பதிதன் வாரான் தெரியுமா உமக்கு? நீங்கள் தினம் என்னய்யா பிராயச்சித்தம் பண்ணரேள். ஆகமசாஸ்திரப்படி கோவிலில் மூர்த்தியின் ஸான் னித்யம் போய் ரொம்ப நாளாயிருக்க னுமே? இந்த கோவில்களிலே பறையன் போய் என்னய்யா குறையப்போறது? இன்னம் ஒரு விஷயம் அதையும் கேளும். என்னிக்கி நாம் சமஸ்கிருதத்தை கேவலமாய் எண்ணி பர பாஷையை பெரிசாய் நினைத்து நம்ம குழந் தைகளை வாசிக்க வச்சோமோ அன்னிக்கி  தொலைந்தது நம்ம ஸனாதனமும், நம்ம பிராமணயமும். மனுஸ்மிருதி 2ஆவது அத்தியாயம் 168வது ஸூலோகத்திலே ‘எந்தத்

துவிஜன்’ (பிராமண, சத்ரிய வைசிஜன்) வேதாத்யாயனம் பண்ணாமல் மற்றதைப் படிக்கிறானோ அவன் அதே ஜன்மத்திலேயே வெகு லேசாக குடும்பத்துடன் சூத்திரனாய் விடுகிறான். ஆகையால் நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான் அஸெம்ளியிலே ரெங்கய்யர் கொண்டு வந்த பில் ரொம்பசரி. ஓய் சாஸ்திரிகளே இன்னும் கேளும்.

மகாபாகவத்திலே ஏகாதச சகந்தத்திலே சிறீதரர் சொல்லுகிறார் “நோச்சுரேத் யாவனீம் பாஷாம் பிராணை கண்ட கதைரபி அதாவது பிராமணன் கழுத்துக்கு கத்தி வந்தாலும் ஏ பி சி என்று உச்சாரயம் பண்ணக்கூடாது என்று அர்த்தமில்லையா? இப்போது இங்கிலீஷ் உச்சரிக்காத பிராம்ணன் எங்கே அய்யா இருக்கான்? பூரி ஆச்சாரி யாளுக்கு இப்போ நீங்கள் ஏற்படுத்தி இருக்கிற மஹத்வம் யவண பாஷா பாண்டியத் துக்காகதானே?

க: இதெல்லாம் ஏனய்யா பேசரேள்? பிரகிருக சர்ச்சை தீண்டாமையைப் பத்தித்தானே, பின்னே பிராமணன் என்ன செய்யணும் என்கிறீர்?

கா: இப்போது இவ்வளவுஸனாதனம் பேசறவாள் சாஸ்திரப் படியே நடந்து காட்ட வேண்டியது முன்பு பட்டாடாடை கட்டிக் கொண்டிருந்த இங்கிலீஷ் படித்த பிராமணாள் இப்போது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுச் சாந்துக்கு பதில் விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டும் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சீட்டாடிக் கொண்டோ அல்லது  காந்தியை வைதுகொண்டு பழைய தொழில்களை விடாமல் நடத்திக்கொண்டு வந்தால் அது ஸனாதனமாகாது.

முதலாவது, ஆச்சாரியாள் இங்கிலீஷை மறக்கணும்  வக்கீல் ஸனாதனிகள் வக்கீல் தொழிலை விடணும். ஸ்ருதிஸ்மிருதி புராண இதிகாசங்களையும் பாரத்ட அத்தியாபனம் யாகம் பிரதிக்ரஹம் இவைகளைக் கொண்டு உஜ்ஜீவிக்கணும் அவாள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி அவர்கள் நடக்கத் தயாரில்லா விட்டால் அவாள் சனாதனத்தினைப்பற்றி பேசக் கூடாது தெரியுமா?


ஆஸ்திகர்களே
எது நல்லது?

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?

அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?

குடி அரசு, 21.12.1930

சிறீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

சிறீரங்கம் சிறீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உற்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.

இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின் றாயோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக சிறீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப் பார்களோ தெரியவில்லை.

குடி அரசு,  21.12.1930


சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.           - தந்தை பெரியார்


Banner
Banner