பகுத்தறிவு

31.01.1948 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

கடவுள்: என்னடி பொறுமை ரூபி, கருணை ரூபி. அவர்கள் இங்கு குறைகளைத் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ள வந்திருக்கிறவர்கள். எங்கிருக்கிறார்கள் என்று சொன்னதைக் கேட்டாயோ? சுயராஜ்யத்தில் இருந்து வந்தார்களாம். சுயராஜ்யத்தில் இருப்பவர்களுக்கு இங்கு என்ன வேலை? என்னிடத்தில் எதற்குத் தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்வது? சுயராஜ்யம் என்றால் என்ன அர்த்தம் என்று உனக்குத் தெரியுமோ? இல்லையோ? சுயஆர்ஜ்ஜிதம் என்றால் என்ன? ஒருவன் தானாக சம்பாதித்தது என்றுதானே அர்த்தம். அது போல் சுயராஜ்யம் என்றால் என்ன? அது அவனுடைய ராஜ்யம் என்றுதானே அர்த்தம். அவர்களுடைய ராஜ்யத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றுதானே அர்த்தம். ஆகவே மகா ஜனங்களின் ராஜ்யத்தில் மகாஜனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், இந்த வெட்கங்கெட்ட பசங்கள் இங்கு என்னத்துக்கு வந்து கேள்வி கேட்பாடு இல்லையா என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுவது என்பது.

இந்தப் பயல்கள் நான் ஒருவன் இருக் கிறேன் என்பதாக நினைத்தார்களா? இந்த ராஜ்யம் என்னுடையது என்பதை மதித்தார் களா? என்னால் எதுவும் செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்டார்களா? இது கடவுள் ராஜ்யம், இது கடவுள் செயல், என்பதை நினைத்தார்களா? இப்படிப்பட்ட பயல்கள் உதைப்பட்டால், அடிபட்டால், சோத்துக்குத் திண்டாடினால், துணிக்குப் பறந்தால், பெண்டு பிள்ளைகளைக் கண்டவன் அடித்துக் கொண்டு போனால் எனக்கு என்ன? உனக்குத்தான் என்ன? கவலைப் படட்டும்! இன்னும் படட்டும்! சுயராஜ்யம் என்பதிலுள்ள சுயம் என்பது ஒழியும் வரை படட்டும்! நாசமாகட்டும்! எவன் ராஜ்யம் எப்படி போனால் எனக்கு என்ன கவலை?

மகாஜனங்கள்: சுவாமி! சுவாமி! இந்தச் சங்கதி இதுவரையில் எங்களுக்குத் தெரிய வில்லையே. பூலோகத்தில் எவனோ நாலு வயது சோத்துப் பிள்ளைகள் சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று கூப்பாடு போட்டான்களே என்று நாங்களும் தெரியாமல் கூப்பாடு போட்டு இந்தக்கதி ஆகி விட்டோம். இனி அது தங்களுடைய ராஜ்யம் தான். தாங்கள் தான் எங்களை ஆள வேண்டும். சுயராஜ்யம் என்பதே நாதீகத் தன்மை என்பதையும் முட்டாள் தனம் என்பதையும் இப்போது நாங்கள் நன்றாய் உணர்ந்து விட்டோம். எங்களைக் காப்பாற்றி அருள வேண்டும்.

கடவுள்: இது மாத்திரமா? உங்கள் நாஸ்திகத் தன்மைக்கு உதாரணம் இன்னும் எவ்வளவு அக்கிரமம் செய்கிறீர்கள்? சுயராஜ்யம் என்று சொல்லிக் கொண்டு உங்கள் இராஜ்யத்தில் நீங்கள் ஒருவொருக்கொருவர் உதைத்துக் கொண்டால் அமெரிக்காவுக்கு எதற்கு ஆகப் பிராது கொண்டு போவது.

அவன்களென்ன என்னைவிடப் பெரிய சக்தி வாய்ந்தவன்கள், இது எனக்கு எவ்வளவு அவமானமாக இருக்கிறது. நினைத்தால் கொதிக்கிறதே இரத்தம். நான் கல்லுப்போல் - ஏன் கல்லாகவே ஊருக்கு 100, 200 ஆயிரம் என்கின்ற கணக்கில் இருக்கிறேன். எனக்கு என்று தினம், மாதம், வருஷம் என்கின்ற கணக்கில் எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறீர்கள் தொட்டதற் கெல்லாம் பிரார்த்தனை, அர்ச்சனை, தொழுகை செய்கிறீர்கள். இந்தக் காரியத்துக்கு என்னைக் கொஞ்சம் கூட மதிக்காமல் நினைக்காமல் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதைச் சிறிது கூட தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாமல் ஓடுகிறீர்களே அமெரிக் காவுக்கு வெட்கமில்லை மானமில்லை, நீங்கள் ஆஸ்திகர்களா? கடைந்தெடுத்த நாஸ்திகர்கள் அல்லவா? மகா ஆணவம் பிடித்த அகங் காரிகளல்லவா? போங்கள்! என் முன் நில்லா தீர்கள்! உங்களைப் பார்க்கப் பார்க்கப் பதறு கிறது, கொதிக்கிறது, துடிக்கிறது, போங்கள் வெளியே! டேய் துவார பாலகா! டேய் நந்தி! டேய் கணங்களே! இந்தப் பசங்களை வெளியேற்றுங்கள்.

அம்மன்: சுவாமி! கோபித்துக் கொள் ளாதீர்கள். தாங்கள் சர்வ சக்தர், சர்வ தயாபரர். தாங்கள் கோபிக்கப்படாது. அவர்கள் நம்ம பிள்ளைகள் தானே.

கடவுள்: போடி, போடி! நம்ம சர்வ சக்திக்கும், சர்வ காரணத்துக்கும் ஆபத்து வருகிற போது என்ன பொறுமை என்ன மன்னிப்பு? நாம் மிஞ்சிய பிறகல்லவா மற்ற சங்கதிகள் போ, போ! உனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. தையல் சொற்கேளேல் தெரியுமா? நமக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டுவிட்டது. சிறிது சாந்தி வேண்டும்! போங்கள்! யாவரும் வெளியில்.......

(தர்பார் மண்டபக் கதவு அடைக்கப்பட்டு விட்டது)

 

பிராமணனும் சத்திரியனும்

06.03.1948 - குடிஅரசிலிருந்து...

10 வயதுள்ள பிராமணனும், 100 வய துள்ள சத்திரியனும் பிதா - புத்திரன் என்ற மரியாதையோடு நடக்கவேண்டும். அதாவது பிராமணனைப் பிதாவாகவும், சத்திரியனைப் பிராமணனுடைய புத்திர னாகவும் கருதவேண்டும்.

இந்த மனு நீதி சட்டமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க, அதை நடை முறையில் நடத்தி வருகிற நமது திராவிட மந்திரிகள், அக்கிரகாரச் சிறுவரான அய்ந்து வயது அனந்தராமனுக்கு எப்படிச் சொந்தம்? என்ன முறை?

14.08.1948 - குடிஅரசிலிருந்து...

எனக்குத் தெய்வீகம் என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற் பட்டதல்ல.

பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வரு பவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக் காட்டு கிறான். ஆதலால், நான் மூடநம்பிக்கையில், மகாத்மா தன்மையில் இதைப் பேசவில்லை. சத்திய நீதியில் பேசுகிறேன், எப்படி என்றால்,

இது நம் நாடு. வடநாட்டான் ஆதிக்கம் செலுத்து கிறான். சுரண்டுகிறான்.

நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டு மன்னர் சந்ததிகள். ஆரியன் ஆதிக்கம் கொண்டான். பிச் சைக்குப் புகுந்த ஆரியனுக்குப் பிறவி அடிமையாயிருக்கிறோம்.

தமிழ் நம் நாட்டு மொழி, இனமொழி. இந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றமொழி. வடமொழி - அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் நம் மனிதத்தன்மை, மானம், உரிமை பாழாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நம் உடன் பிறந்தவர்கள் விபீஷ ணர்களானது உண்மையில் மகாமகா இழிவு என்பது சத்தியம்.

இவைகளைத்தான் சத்தியமும், நீதியும் ஆகும் என்றேன்.

இவை தோல்வியுறாது!  தோல்வி உறாது! தோல்வி உற்றால்தான் நட்டம் என்ன? அந்தத் தோல்வியைக் கண்டிப்பாய் நாம் அனுபவிக்கமாட்டோம். நம்மைத் தோற் கடித்தவர்களும், தோல்வியைக் கண்டு சும்மா இருப்பவர்களும், தோல்வியைச் சகித்துக் கொண்டு உயிர் வாழுபவர்களுமேயாவார்கள், அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

- ஈ.வெ.ராமசாமி

இனி இந்துவாக இருக்க மாட்டேன். நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன். இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் கூறுவார்களானால், பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப்பட்டதல்ல.

அது தேவாளுக்கு எழுதப்பட்ட தாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள். கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும், பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும். உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

24.01.1948 - குடிஅரசிலிருந்து....

கேள்வி: பெண்களுக்குப் புருஷர்கள் என் றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

விடை : கற்பு என்கிற வார்த்தையும், விபசார தோஷம் என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப் படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்ட தாலேயே சட்டப்படி முழு விடுதலை பெற்றிருக் கின்றார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல், புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ; ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை, துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம், அதை யாராவது தொட்டால், கழுவினால் கூடத் தீட்டுப் போகாது, அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்தரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல், தாங்கள் தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். - பெரியார்

10.4.1948 - குடிஅரசிலிருந்து..

பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித் தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

Banner
Banner