பகுத்தறிவு

விதவைகளாக இருப்பதை விட கஷ்டம் வேறு உண்டா?

27.10.1929- குடிஅரசிலிருந்து...

விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதைப் பற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி விவாகம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால் அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா? என்னைக் கேட்டால் இந்தக்கொடிய நாட்டில் விதவை களுக்கு துன்பத்தை இழைத்தவர் நமது ராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்பிராயம்.

ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படியென்றால், ராய் மோகன் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருந்திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்த உடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீயாகவே உயிருடன் கட்டையில் வைத்து சுடப்பட்டு கற்பு  லோகத்தை அடைந்து மோட்சத்திலிருந்திருப்பாள்.

கற்பு லோகமும் மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந் தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம்:- அதாவது உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டமிருந்திருக்கக்கூடும். ஆனால் அந்தப்படி சுடாமல் காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு அதன் ஆயுள் கால முழுவதும் அங்குல அங்குலமாக சித்ரவதை செய்வது போன்ற கஷ்டத்தை வினாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கின்றேன்.

இப்பொழுதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும். மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் கொஞ்சகாலத்திற்காவது இருக்க வேண்டும்.

இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்து பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை யாவது புதுப்பிக்கவேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது.

மனிதனுக்கு தன் பெண்ஜாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சை தணிக்க வேண்டியதும், மிருகங்களுக்கு ஏற்படும் தினவை தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொரிகல் நட்டு வைக்க வேண்டியதும், 32 தர்மங்களில் இரண்டு தர்மமாகக் கொண்டு

கோயில்களில் தாசிகளை வைத்தும் கிராமங்கள் தோறும் நத்தங்களில் சொரி கல் நட்டு வைத்தும் இருக்கிறார்கள். ஆனால் இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்டமுடியாமல் போய்விட்டது? என்பதை நினைக்கும்போது ஜீவ காருண்ய புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

அதோடு மாத்திரமல்லாமல் அம்மாதிரி ஜீவகாருண்யம் கூடாது என்பதற்கு சாஸ்திரம் இருப்பதாயும், அந்த சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்டதாகவும் மனிதர்கள் என்பவர்கள் சொல்ல வருவார்களானால் அப்படிப் பட்ட சாஸ்திரத்தையும் கடவுளையும் மனிதர்களையும் என்ன செய்வது என்பதை நீங்கள்தான் யோசித்து முடிவு கட்டவேண்டும்.

ஒரு பெண்ஜாதியை இழந்த ஆண், கலியாணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறார்களா? அப்படிக்கிருக்க புருஷனை இழந்தவள் கலியாணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம்? என்பது நமக்கு விளங்கவில்லை.

நாட்டில் சிறப்பாக, நமது சமுகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப்பெற்று கொலை செய்வதும், வீடுகளைவிட்டு பெற்றோர் அறியாமல் நினைத்த புருடர் களுடன் ஓடுவதும், பிறகு பொது விபசாரிகளாகி குச்சுகள் மாறுவதும் முதலான காரியங்களை தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்தும் வரும்போது விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா? ஜாதி வழக்கமா? என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கின்றேன்.

சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஜாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லா விட்டால் என்ன? அதைப்பற்றி கவனிப்பதில் பலன் என்ன? புருஷனிழந்த பெண்ணுக்கு புருஷ இச்சை இருக்குமா? இருக்காதா? அவளுக்கு புருஷன் வேண்டுமா? வேண்டாமா என்பதைத் தானே கவனித்து முடிவு கட்ட வேண்டும். அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால் அந்த பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மாவிட்டு விடுவானா? என்று கேட்கின்றேன்.

தினம் புருஷனுடன் வாழ்ந்து கொண்டு புருஷன் என்பதாக தனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இருக்கும் மாங்கலியப் பெண்களின் போக உணர்ச்சியைவிட மேல்கண்ட கணவனில்லாத பெண்களின் உணர்ச்சி எத்தனை மடங்கு அதிகமாயிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்!

ஒரு ஜீவனை பட்டினியாகப் போட்டு கொல்லுவதிலும், ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் காப்பாற்றுவது கொடுமை அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஒரு பெண் எதற்காக விதவையாய் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவரை- யாராவது காரணம் சொன் னார்களா? அல்லது எந்த மதமாவது, எந்த ஜாதியாவது காரணம் சொல்லியிருக்கின்றதா? காரணமில்லாமல் இவ்விதக் கொடுமையான ஜீவஇம்சையை செய்து கொண்டிருக்கும் சமுகம் வடிகட்டின முட்டாள்தன முடையது என்பதற்கு என்ன ஆட்சேபணைகள் சொல்லப் போகின்றீர்கள்?

விதவைகளாயிருப்பது கடவுள் கட்டளை என்று கருதுவீர்களானால் விதவை களுக்கும் போக உணர்ச்சியும், அதனால் ஏற்படும் கவலையும், சில சமயங்களில் கர்ப்பமுண்டாக்கப்படுவதும், அது அழிக்கப்படுவதும், பெற்ற குழந்தையை கழுத்தைத் திருகுவதுமான காரியங்கள் நடைபெறமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

கோவிலில் சமத்துவம் வந்தால்
மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்காது

27.10.1929- குடிஅரசிலிருந்து...

சகோதரர்களே! நமது தமிழ்நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்து பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆயின. ஆனால்  பம்பாய்க்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கிவிட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

நிற்க, சிலர் நம்மை உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்று கேட்கின்றார்கள். ஆனால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான்.

அதாவது, கோயிலில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் கடவுளை மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும் அதனுள் இருக்கும் கல், செம்பு, காரை, மரம், படம் முதலிய சிலை உருவங்களும், பெரியோர்களால் செய்துவைத்த ஏற்பாடுகளாகும் என்றும் பாமர மக்களுக்கு இதைச் சொன்னால் புரியாதென்றும், அதையே கடவுள் வீடு என்றும், உள்ளிருப்பவைகளே கடவுள்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது என்பதாக தத்துவார்த்தம் சொல்லுகின்றார்கள்.

இந்த தத்துவார்த்தம் சொல்லுகின்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்றால் ஒன்று இவர்கள் கடவுளை மிகக் கேவலப்படுத்துபவர்களாயிருக்க வேண்டும்; அல்லது கடவுள் தன்மை இன்னது என்பதை அறியாத மூடர்களாயிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொதுஜனங்களை ஏமாற்றும் அயோக்கியர்களாயிருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஏனெனில், எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும். சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதனின் முயற்சி வேண்டுமென்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால்.

அவன் கடவுள் என்பதற்கு மேல்கண்ட எல்லாம் வல்ல சக்தியும் எங்கும் உள்ள சக்தியும் ஒப்புக் கொண்டவனவானா என்று கேட்கின்றேன் . ஆதலால் ஒரு சமயம் கோயில்கள் மூடர்களால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் நமக்கு ஆட்சேபணை இல்லை. அப்படிக்கில்லாமல் கோயில்கள் அறிவாளிகளால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் கண்டிப்பாய் அந்த அறிவாளி என்பவர்கள் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தவர்களாகத் தானிருக்கவேண்டும்.

ஏனெனில், அந்தக் கோயில்கள் இப்போது அந்த பெரியோர்கள் என்பவர்களின் ஆசாரப்படி (ஆகமப்படி) நடந்து வருவதாகவே இருக்கின்றது. அந்த ஆகமங்கள் என்பவைகளே மனிதன் அந்தக் கோயிலுக்குள் போகவும் அங்குள்ள சாமியை வணங்கவும் பல நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கின்றது. அந்த நிபந்தனைகள் மனிதத் தன்மைக்கு சிறிதும் பொருத்த மில்லாததாயிருக்கின்றன.

அதில் ஒரு சிறிதும் ஒழுக்கத்திற்கும், பக்திக்கும் ஆதாரமானதும் கடவுள் ஞாபகம் வருவதற்கு ஆதார மானதுமான காரியங்கள் இல்லவே இல்லை. அங்குள்ள கடவுள்களைப் பார்த்தால் கடவுள் ஞாபகம் வருமென்றால் அங்குள்ள தாசிகளைப் பார்த்தால் தாசிகள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன். மற்றும் அங்கு கடவுளை வணங்க வரும் மற்ற பெண்களைப் பார்த்தால் பெண்கள் ஞாபகம் வராதா, என்று கேட்கின்றேன்.

உணர்ச்சியற்ற குழவிக்கல்லை பார்த்த மாத்திரத்தில் கடவுள், ஞாபகம் வருவதானால், உயிருள்ள ஜீவன்கள், பெண்கள், தங்களை பிறர் பார்க்க வேண்டுமென்று அலங்கரித்துக் கொண்டுவந்து நின்றால், ஏன் அந்த ஞாபகம் வராது, அன்றியும் அங்கு கடவுளுக்கு நடக்கும் மற்ற காரியங்களையும் பார்த்தால் ஏன் பார்க்கின்ற மனிதனுக்கு மற்ற ஞாபகமும் வராது என்று கேட்கின்றேன்.

கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும் மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும் ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்துகொண்டு சோம்பேறித் தனமாய் வயிறு வளர்க்க வேண்டி பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும்.

முன் காலத்தில் இருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும், அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காகப் பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும்.

அவ்வித சூழ்ச்சியை ஒழிக்கவே நாம் எல்லோருக்கும் கோயில் பிரவேசம் கேட்கின்றோம். இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒரு விதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இந்த கோயில்கள்தான் சிறிதும் மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது.

ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ மோட்சத்திற்காகவோ, பாவ மன்னிப்புக் காகவோ அல்லவே அல்ல! கோவில் சமத்துவமடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது.


தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.


இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவை களுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங் குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதிக செல் வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதி யைப்பற்றி சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத் தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதி யின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண், பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றி ருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பி னதாகவும், அவன் போய்ப்பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப்படு கின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

5. இன்னும் பல வழிகள் சொல்லப்படு கின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளை யாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல வித மாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதா யிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டு தானே தீரும் (இவை களைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற் பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர் என்று சொல்லுவதும் மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்க வும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டி ருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல் பல லட்சக் கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களை யெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம் மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங் களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகா மணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை யில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல் லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியா தென்றே சொல்லுவோம் இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

- ‘குடிஅரசு’ - கட்டுரை - 26.08.1928

இந்து மதம் என்று உண்மையில் கிடையாது

21.7.1929- குடிஅரசிலிருந்து...

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீதுள்ள துவேசத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லு கின்றார்கள். ஆனால் இப்போது நமது நாட்டில் ஆங்கி லத்திலும் தமிழிலும் வல்லவர் என்றும்,

சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண்ணிய அறிவுடையவ ரென்றும், பல்லோரால் மதிக்கப்படும் உயர்திருவாளர் திருநெல்வேலி கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல், அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச்செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.

முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிக்க வேண்டியது யாதெனில் இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும் இந்துமதம் என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப்படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர்களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க அவர் வழக்கைப் பின்பற்றி மேலைதேசத்தார் யாவரும் இந்நாட்டி லுள்ளாரை இந்துக்கள் எனவும், இந்நாட்டை இந்தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.

இந்நாட்டிலே சமயங்களைப் பற்றி சிறிதும் அறியா தவர்கள் தங்கள் மதத்தை இந்துமதம் என்று கூறுவார்கள். அய்ரோப்பியம், அமெரிக்கம் ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னோரது சொற்களும், நாகரிகங்களும் குறிக்கப்படுவதே அல்லாது சமயம் குறிக்கப்படாமை போல இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையிலுள்ள மக்களின் நாகரிகத்தைக் குறிப்பதேயன்றி சமயத் தைக் குறிப்பதன்று. இருக்கருத்தை சுவாமி விவேகானந் தரும் தமது சொற்பொழிவு பலவற்றில் சுட்டியுள்ளார்...

ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்ததால், தலைமை ஆசிரியரை வைத்ததால் அருள் நூலை வைத்ததால் எழுதுவது முறை... கிறித்துமதமும் மகம்மதிய மதமும் தங்கள் தலைவரது பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள்ளன. அவ்வாறே புத்தமதமும், ஆருகதமுமாம். ஆனால், இந்து என்ற சொல்லோ சமயக்கருத்து யாதொன் றையும் குறிப்பதில்லை.  இக்குறிப்பில் திரு. பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப் பிராயம் கொண்டதாகக் கூறி இருக்கின்றார்.

எனவே, இப்படி ஒரு அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்ற ஒன்றைக் கற்பித்துக் கொண்டு சமயத்திற்கேற்றபடியெல்லாம் தங்கள் தங்கள் சுயநலத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனைக் காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டி ருப்பது என்பது விளங்கவில்லை.

இதைப்பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிர மணிய அய்யரான ஒரு பார்ப்பனர் அவர்கள் காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங்கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் இந்து மதம் என்னும் பழைய கோட்டை, அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி முட்டுக்கொடுத்து பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்ணியமின்றி வெட்டித்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படைகளின் மீது நமது தற்கால அவசியத்திற்கும், உபயோகத்திற்கும் ஏற்றதாகச் சாதாரணமான புதுக்கட்டிடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்று கின்றது என்று எழுதி இருக்கின்றார்.

இன்னும் அநேக பெரியோர்களும் ஆராய்ச்சியாளர் களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும் மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபசாரித்தனத்தைத் தடுக்கவும், சிறு குழந்தை களைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம்மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும் வீரமும் யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும்.

எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என்கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின் றார்களோ அதுபோலவே நாமும் சொல்ல வேண்டியவர் களாயிருக்கின்றோம். ஏனெனில், இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால் நமக்கு ஆதிதிராவிடர் களை விட கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது.

அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்த சீர்திருத்தக்காரரோ, சட்டசபை பிரதி நிதியோ, வேறு எந்த சமுகத் தலைவரோ முயற்சித்த தாகத் தெரியவில்லை. ஆஸ்திகம் போச்சு, கடவுள் போச்சு, மதம் போச்சு, சமயம் போச்சு, புராணம் போச்சு,

கலை போச்சு என்று கூப்பாடு போட்டு கூலிபெற நமது நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக் கின்றதே யல்லாமல் மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மைபெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதிதிராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்து விடுஎன்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருதுகின்றோம்.


தந்தை பெரியார் பொன்மொழி

தீண்டாமை: இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம், ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.

கல்வியில் இருக்கும் சூதுகள்

7.7.1929 - குடிஅரசிலிருந்து...

கல்வியில் இருக்கும்  சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ். செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், அது பிராமணப்பிள்ளை. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது.

நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம். அதனால் சீக்கிரம் வருவதில்லை என்று ஒரு வார்த் தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம்பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ்வொரு வகுப்பிலும் பாசு ஆகிக் கொண்டே போனாலும் எப்படியும் பி.ஏ.பரீட்சைக்கு போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறி னால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருஷம் தவறினால் இருப்பதைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்-களாகி விடுகின்றார்கள்.

ஆனால் பார்ப்பனர் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21இல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7ஆவது வயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம். 7ஆவது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும் ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ.பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக் கின்றது.

அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு அய்ந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6ஆவது பாரத்திற்கும் 6 வருஷம், அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய்தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5ஆவது வயது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுபோய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள்.

தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும் இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு முதல் பாரத்திற்கு லாயக்கு என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு அய்ந்து வருடப் படிப்பும் காலமும் காலச்செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்-கின்றார்கள்.. அந்த நிபந்தனையும்  இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில்கூட சேர்த்து விடுவார்கள்.

தவிர 18, 19இல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25ஆவது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர்களுக்குச் சாவகாசம் இருக் கின்றது. ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ள போதிய சௌகரியம் இருக்கின்றது.

நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், இவன் ரொம்பவும் சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டு வாருங்கள். என்று சொல் லுவதும், குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா? ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள் என்று பரிதாபப்பட்டு திருப்பி அனுப்பி விடுகின்றார்கள்.

தவிர, நாம் நிர்ப்பந்தப்படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக்கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.

பிறகு பல வழிகளிலும் அதாவது உனக்குப் படிப்பு வராது வேறு வேலை பார்த்துக் கொள், வீணாய்ப் பணம் செல வழிக்காதே பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச் சர்க்கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர்களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறினால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள்.

இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்குப் போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர் மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே. கடைசியாகப் பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்திற்குப் போவதற்கு வேண்டிய வயது தாண்டிவிடுகின்றது. ஒரு சமயம் மீதி இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால்.

அவசரத்தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றன. பரீட்சையில் தவறிப் போனாலோ அதோ கதிதான். வெளிப் படையாக இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வருகின்றது.

ஆதலால், சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா, என்று விசாரித்துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத்தி னர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

பார்ப்பனரல்லாத மாணவர்களும் நமக்கு எழுதிக் கொண்டி ருப்பதைவிட இதற்காக ஒரு மாணவ மாகாநாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக்காட்டிப் பரிகாரத்திற்குச் சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.

Banner
Banner