பகுத்தறிவு

திருவாங்கூர் சமஸ்தானம்

1-12-1929 - குடிஅரசிலிருந்து....

திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும்.

இதன் பரப்பு 7500 சதுர மைல்களாகும். இந்த நாற்பது லட்சம் ஜனத்தொகையில் ஏறக்குறைய சரிபகுதி ஜனங்கள், அதாவது இருபது லட்சம் பேர்கள் இந்துக்கள் அல்லாதவர்களான கிறிஸ்துவர்களும், மகமதியர் களுமே யாவார்கள். எஞ்சி உள்ள இருபது லட்சத்திலும் சமார் பன்னிரண்டு லட்சம்பேர்கள் தீண்டக் கூடாத வர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள்,  கண்ணில் தென்படக் கூடாதவர்கள் ஆகிய மிருகங் களிலும் கீழானவர்கள் ஆவார்கள்.

இப்படியாக முப்பத்தி யிரண்டு லட்சம் ஜனங்கள் போக எஞ்சியுள்ள சுமார் எட்டு லட்சம் பேர்களே, ஜாதி இந்துக்கள் அதாவது மனித உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதில் 50,000 பேர்கள் பார்ப்பனர்கள் இப்படியாக 40 லட்சம் சனத்தொகை கொண்ட இந்த அரசாங்கத்திற்கு வருஷாந்திர (ரிவினியூ) வருமானம் சுமார் எழுபது லட்ச ரூபாயாகும்.

எனவே, இந்த நிலையில் உள்ள மேற்படித் திருவாங்கூர், ராச்சியத்தில் தேவஸ்தான சம்பந்தமாக செலவு செய்யும் தொகையோ பதினேழு லட்ச ரூபாயாகும். இந்த 17 லட்ச ரூபாய் தொகையானது இந்து மத சம்பந்தமான தேவஸ்தானங்களில் செலவு என்று சொல்லப் பட்டாலும், இவைகள் ஏறக்குறைய, ஏன் முழுவதும், மேலே காட்டப்பட்ட 50 ஆயிரம் பார்ப்பனர் களுக்கே, அவர்களது சாப்பாட்டிற்கே செலவு செய்யப்பட்டு வருகின்றது.

அரசன் தனது ராஜ்ஜியதில் உள்ள எல்லா மக்களிடத்திலிருந்தும் வரிவசூலித்து ஒரு ஜாதிக்கு மாத்திரம் அதுவும் அநேகமாக வரி கொடுக்கக் கூடாத ஜாதியும், கஷ்டப்படாமல் பிறர் உழைப்பில் தேகம் நோகாமல் வாழ்கின்ற ஜாதியும், தங்களைத் தவிர மற்ற மக்களெல்லாம் கீழ்ஜாதி, இழிகுலத்தவர்கள், தங்களது வைப்பாட்டி மக்களாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜாதியுமாகிய பார்ப்பனர்களுக்கே போய் சேருகின்றது என்றால், அந்த ராச்சியத்தின் நீதிக்கும் புத்திக்கும் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

அந்த ராச்சியத்தில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும்; மற்றும் வெளிநாட்டிலிருந்து அந்நாட்டுக்கு சென்று குடியேறும் பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் சகிதம் அவர்கள் எந்த வேலையில் எவ்வளவு சம்பாதித் தாலும், எந்த உத்தியோகத்தில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும்,

எந்த வியாபாரத்தில் எவ்வளவு லாபம் அடைந்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலை யில்லாமல் பார்ப்பனர் என்கின்ற பேருக்கு மாத்திரம் தினம் இரண்டு வேளை கோயிலிலும், ஊட்டுப்பறை என்னும் சாப்பாட்டுச் சத்திரங்களிலும் தாராளமாகவும் நிரந்தர மாகவும் சாப்பாடு போடப்பட்டு வருகின்றது.

இது நிற்க; மற்றபடி, பண்டிகை நாட்களிலும் புண்ணியநாள்கள் விரதநாள்கள் என்பவைகளிலும் சிரார்த்த நாள்களிலும் மிகுதியும் விசேஷமான சாப்பாடும், தவிர பணமும், கால், அரை, ஒன்று என்பதாக தட்சணையும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, மாதம், தவறாமல் உற்சவங்களுக்கு இப்படியே நடக்கின்றது. இவைகள் தவிர அந்த நாட்டு பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதிப் பெண்கள் என்பவர்கள் பார்ப்பனர்களை புணருவது மோட்ச சாதனம் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

இவை தவிர, ஆறு வருஷத்திற்கு ஒரு முறை ஜபம் என்னும் பெயரால் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு சடங்கும் கொண்டாடப்படுகின்றது. இச்சடங்கானது 56- நாள்களுக்கு தொடர்ச்சியாய் நடத்தப்படுவதாகும்.

இந்த அய்ம்பத்தியாறு நாள்களுக்கும் சுமார் பதினையாயிரம் பார்ப்பனர்கள் வரை மூன்று வேளை உணவுகளும், ஒவ்வொரு வேளைக்கும் பத்து இருபது வகை காய்கறிகளுடனும், 5, 6, வகை பலகாரங்களுடனும், 2, 3 வகை பாயாசங்களுடனும், 2, 3 வகை அப்பளங்களுடனும் விருந்துகள் நடக்கும் இவ்விருந்து செய்வதற்காக சமையல்காரர்கள் மாத்திரம் தினம் ஆள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ரூபா கூலியில் 600, 700 நபர்கள் அமர்த்தப் படுவார்கள்.

தவிரவும் மேற்கண்ட பதினையாயிரம் பேர்களுக்கும் தினம் இவ்வித விருந்தளிப்பதுடன் நபர் ஒன்றுக்கு நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் வீதம் தட்சணையும் கொடுப்பார்கள். மற்றும் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை உடன் கூட்டிக் கொண்டு போய் அவைகளையும் பார்ப்பனப் பிள்ளைகள் என்று காட்டி அவைகளுக்கும் தட்சணை வாங்கிக் கொள்வார்கள்.

அன்றியும் தூர தேசங்களில் இருந்துவரும் பதினாயிரக் கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு போக வர பிரயாணச் செலவும், சாப்பாடு, தட்சணையும் கொடுத்து ஆள் ஒன்றுக்கு ஒவ்வொரு கட்டில் மெத்தை, இரண்டு தலையணை, சால்வை நான்கு, நான்கு ஜோடி வேஷ்டிகள் முதலியவைகளும் கொடுப்பார்கள். மற்றும் இவை போன்ற பல செலவுகளுக்காக மேற்கண்ட எட்டு லட்ச ரூபாயும் 56 நாள்களில் பஞ்சு பஞ்சாய்ப் பறந்து செலவாகிவிடும்.

இப்படிச் செலவு செய்து நடத்தப்படும். இந்த முறை ஜபமானது எதற்காக என்றால், சுமார் 200 வருஷத்திற்கு முன் இருந்த ஒரு ராஜா அந்நாட்டில் செய்த ஏதோ ஒரு சிற்றரசர்கள் யுத்தத்தில் சில பார்ப்பனர்கள் இறந்து போனதால் அந்தப் பாவம் தீர்ந்து தங்களுக்கு சந்ததி விர்த்தியாவதற்கு பிராயச்சித்தமாக இப்படி இந்த இருநூறு ஆண்டுகளாக ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு லட்ச ரூபாய் (அதாவது, அந்த பார்ப்பனர்களின் குடும்பத்திற்கு போய் சேரும்படி) செலவு செய்து முறை ஜபம் செய்யப்பட்டு) வருகின்றது.

இந்த மாதிரியான முட்டாள் தனமான கொள்கைகள் உடையவர்களாகிய இந்து அரசர்களால் இந்தியா ஆளப்பட்டு வந்து இருந்ததனால் இன்றைய தினம் இந்தியா ஆயிரக்காணக் கான வருஷங்களாக அன்னியநாட்டு நன்மையின் பொருட்டு அன்னி யர்களால் ஆளப்படுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

நிற்க, இந்தப்படி ஆறு ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து முறை ஜெப பிராயசித்தம் செய்து வந்தும், அந்த ராஜாங்கத்திற்கு சந்ததி இல்லாமல் அடிக்கடி சுவிகாரம் செய்துதான் பிள்ளைகள் உண் டாக்கி பட்டம் கட்டி ஆளப்பட்டு வருகின்றது. இதை அந்த ராஜி யத்திலுள்ள ஒவ்வொரு ராஜாக்களும் கண்டு வந்திருந்தும், இம் மாதிரியான மூடநம்பிக்கை இவர்களை விட்டு போகவில்லை யானால், இவர்கள் ஒரு நாட்டை ஆள யோக்கியதை உடையவர்களா என்று கேட்கின்றோம்.

20-10-1929- குடிஅரசிலிருந்து....

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி களாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவா லேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லு கிறது.

அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ் வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷய மாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடு முறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங் களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக் கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மை களையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலை களையும், நகைகளையும், வாத்தியக் காரர்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இது போலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்தி ருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம் பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போறாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றையதினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின் றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங் களிடத்தில் வெகு பக்தியாய் அவை களைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப்பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடு வார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர் களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக் கிறார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென் சிலையும் கிழிந்த காகிதக்குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின் றார்களே அல்லாமல் காலோ கையோ பட்டு விட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடு கின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமை களாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழி லாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக் கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத் திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்கவேண்டும். என்னைப் பொறுத்த வரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் ஒழுக்கத் தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக் காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்தி ருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூஜை செய்பவர் களை தற்குறி களாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான் களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள். உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயி ருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடி மைப்பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியா பாரிகள் அரசாட்சியுடனும் தொழி லாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலு விருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம் மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வ மல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண் ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரிய மாய்ச் சொல்லுவேன்.
-தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதியைக் காப்பாற்றும் திருவாங்கூர் ராஜ்யம்

14.7.1929- குடிஅரசிலிருந்து...

திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத்தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசையிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்ய மாக்கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்குப் போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில், திருவாங்கூர் சமஸ்தானம் ராமராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே ஜாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் சாட்சாத் மகாவிஷ்ணுவினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படி யென்றால் திருவாங்கூர் ராஜ்யம் பத்ம நாப சாமிக்குச் சொந்தமானது.

இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும், ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ மகாவிஷ்ணுவாகும்.

எனவே, மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய ராமராஜ்யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராம ராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசியம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும்.

அதோடு வெள் ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே-தேசிய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெருமை என்னவென்று பார்ப் போமானால் அதுமிக்க அதிசயிக்கத் தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர் ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்ன வென்றால், திருவாங்கூர் ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது என்ப தாகும்.

இரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட  பெருமை யையுடையதாகும். அதாவது 1881ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களையுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16.5-லட்சம் கிறிஸ்துவர்களை உண்டாக்கியிருக்கின்றது.

திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை கொண்டதாகும். இதில் 16.5 லட்சம் கிறிஸ்து வர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாப சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19.5 லட்சம் ஜனங் களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவே பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் பத்மநாபசாமி எழுந் தருளும் தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்) இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்ம நாப சாமியைக் கும்பிடு வதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர் களுடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இந்த நிலையில் திருவாங்கூர் ராஜ்யமானது இப்போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசிய சமஸ்தானங்களை நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசிய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர்களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.


மோட்சம், நரகம் என்பன யாவை?

15.09.1929- குடிஅரசிலிருந்து...

சிறீரெங்கநாதபுரம் அ.வெ.சுப்பையா அவர்கள் மோட்சம் நரகங்களைப் பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விருப்புகின்றார் மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அனுபவிக்கின்றோம்.

இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நகரம் உளவாயின், அவைகளை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின் அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல்மிக்க அறிவிலாததாகும்.


மறைந்து வரும் கடவுள் உணர்ச்சி

28.07.1929 - குடிஅரசிலிருந்து...

மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை.

எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும்.

அது எப்படி என்றும் எப்போதென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ் கிருதம், துலுக்கு,

ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கையின் இயங்குத லுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள்,

எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லா, காட் என்று சொல்லப் படுகின்றதென்று சொல்வதானா லும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டி லுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும்.

அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றது, இவைகளெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள்,

அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளி மலையாகவும் அங்கு கடவுள் இருப்பதாக வும் அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப் பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல் லோகமென்றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள்.

அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்ன தென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அது போலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை.

உதாரணமாக சூரிய, சந்திர கிரணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து  சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும்.

இப்போது வானசாஸ்திரம் தெரிந்த வர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங்கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன.

இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாம லிருப்பதையும் பார்க்கின்றோம் அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.- தந்தை பெரியார்இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்?  நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிறவர்களுமா யிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.

பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படியிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காகநான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதம் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக் காமலும் குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.  குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக் குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்ற மடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவியென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணம் தாராளமாய் கிடைப்ப தாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப் பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.

ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவை களைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சி, புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக் கூடியவர்களாயுமிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும் படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.

மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள் ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக்கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை. அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டுமானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.  

(காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926ஆம் தேதி ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு -  25.04.1926

Banner
Banner