Banner

பகுத்தறிவு

காட்சி-1

மகன்: ஏம்மா, மேலே பறக்கற அந்தப் பருந்தைப் பார்த்து, கன்னத்திலே போட்டுக்கிட்டு கும்பிடுறீங்க?

தாய்: அது பருந்தல்ல! நமது திருமாலின் வாகனம்!

மகன்: அப்படீன்னா, அதைக் கண்டால் பய பக்தியோடு கும்பிடனுமாம்மா?

தாய்: ஆமாம்! அந்தக் கருடாழ்வாரைப் பார்ப்பதே பெரிய புண்ணியம்! கட்டாயம் நாம் அதைப் பயபக்தியோடு கும்பிடனும்.

காட்சி-2

மகன்: அம்மா! நேற்று நீங்க காட்டிய அந்தக் கருட பகவான் இன்று நம்ம வீட்டிலேயே வந்து உட்கார்ந்திருந்தாரம்மா!

தாய்: அப்படியா! நமக்கு ஏதோ நல்ல காலம் வந்திருக்கு! சரி! நீ என்ன செய்தே!

மகன்: நீங்க சொல்லிய அறிவுரைப்படி அந்த கருடபகவானை பயபக்தியோடு கும்பிட்டேன்!

தாய்: (தனக்குள்) அடடா! இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்தி உணர்வு!

மகன்: அப்புறம் நம்ம கருட பகவான் கீழே வந்து நம்ம கோழிக்குஞ்சு ஒன்றை தூக்கிக்கிட்டு மேலே போனார் - நம்ம கருடபகவான்தானே என்று நானும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கிட்டு நின்றேனம்மா!

தாய்: அட, தடிப்பயலே! அந்தப் பருந்தை அடிச்சு விட்டாமே பார்த்துக்கிட்டு நின்றேன் என்கிறாயே! அருமையா வளர்த்த கோழிக்குஞ்சு போச்சே! உனக்கு அறிவு இருக்கா?

மகன்: !......?.....!.......?

காட்சி -3

மகன்: அம்மா! இன்று மீண்டும் அந்தக் கருட பகவான் வந்தாரு!

தாய்: சனியன்! நேற்று கோழிக்குஞ்சை தின்ன ருசியில் இன்று வந்திருக்கு! சரி! அப்புறம் என்ன நடந்தது?

மகன்: மீண்டும் கோழிக்குஞ்சை தூக்கப் போனப்ப, நீங்க சொல்லியபடி கல்லெடுத்து ஒரே அடியா அடிச்சுட்டேன்.

தாய்: அப்புறம் என்ன ஆச்சு?

மகன்: கருட பகவான் இதோ செத்துக் கிடக்காரும்மா!

தாய்: !............?..............!..........?

போர்க் கருவிகட்காக ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் (அறுபது ஆயிரம் கோடி) யு.எஸ். டாலர்கள் செலவு செய்யப்படுகின்றன. இதைக் கொண்டு பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக் கும் தலா 112 டாலர்கள் செலவு செய்யலாம். குடிசைத் தொழில் உற்பத்தியினால் வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் உள்ள தனி மனித ஆண்டு  வருவாயைவிட இந்தத் தொகை அதிக மானது என்று அய்க்கிய நாடுகளின் தலைமைக் காரியதரிசி ஜாவீர் பெர்ஜ்டீ கியூலர். அண்மையில் அய்.நா பொதுச் சபையில் நடந்த படை பலக் குறைப்பு 2ஆவது கூட்டத்தில் கூறியுள்ளார்.

பெரியம்மையை ஒழிக்க உலக சுகாதார நிறுவனத்துக்கு 100 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே செலவானது. ஆனால் இதை விட அதிகமான தொகையை, மிகவும் நவீன பாணியில் உருவாகும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஒரு ஏவுகணைக்காகச் செலவு செய்யப்படுகிறது என்று மற்ற துறைகளுடன் மேலும் ஒப்பிட்டுக் கூறினார்.

விவசாயம்

உலக இராணுவத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆகக் கூடிய செலவு தொகையில் அரை சதவிகித பணத்தைக் கொண்டு, குறைந்த வருமானமும், உணவுப் பற்றாக்குறையும் உள்ள நாடுகளின் விவசாய வளர்ச்சிக்குச் செலவு செய்தால் இந்த பத்தாண்டுக்குள் உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடையச் செய்துவிடலாம்.

குழந்தை மரணம்

ஒரு வருடத்தில் அல்ல; ஒரு மாதத்திலும் அல்ல; ஒவ்வொரு நாளும் 40,000 குழந்தைகள், வளர்ந்து வரும் நாடுகளில் செத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நாம் இந்த உலகத்தில் ஆயுதப் போட்டிக்காக ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லிய னுக்கும் அதிகமான டாலர்களை செலவு செய்து வருகிறோம்.

கல்வி

புதுமையான பாணியில் தயாரிக்கப்படும். குண்டுகள் மிகவும் போர்த்திறமை பெற்றவை. இரண்டு குண்டுகளின் விலை மட்டும் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்தத் தொகை யை கொண்டு உலகம் முழுவதும் உள்ள தற்குறி மக்களுக்கு எழுதவும், படிக்கவும் செய்விக்க முடியும்

ஆராய்ச்சி

உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளில் 5,00,000 பேர், இன்னும் கொடுமையான முறைகளில், செயற்கையான வழிகளில் மக்களைக் கொல்ல, எப்படியெல்லாம் ஆயுதங்களை உருவாக்கலாம் என்பதற்காக, தங்கள் அறிவு வளம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகின்றனர்.

பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் அய்க்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கேட்ட கேள்விக்கணைதான் இது;
இந்த முட்டாள்தனத்துக்கு முடிவே இல்லையா?

குறிப்பு: 1 மில்லியன் - 10 இலட்சம்

1 பில்லியன் - 10,000 மில்லியன்

வேர்ல்ட் ஹெல்த், ஜனவரி, 1983 இதழில் இருந்து தமிழாக்கம் செய்தவர்:
-அ.ப. நடராசன், உடுமலை.

பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விடும் என்று கருதும் பழக்கம் படித்தவர், படியாதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள்

சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், விக்டோரியா - நீண்டகாலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத், காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல் மார்க்ஸ் - புதியசமதர்ம சமுதாயக் கருத்தை தந்த கம்யூனிசத் தந்தை, டார்வின் - பரிணாம வாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோ தத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக் - பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி. - குமுதம், தகவல்: சம்பத்ராஜ், பேட்டவாய்த்தலை

உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய்.

உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ,  ரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

திருவாரூரில் ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது உருத்ர கோட்டீசுவரர் ஆலயம்.

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் - வாடையும் சகிக்க முடியாததாக இருக்கிறது என்றும் - குடியிருப்புகள் பெருகி விட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப் புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் - நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இப்பகுதியில் உள்ள உருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம்.

எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும் - உதவாத அய்தீகத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?

- சி.நா. திருமலைசாமி, சின்னநெகமம்
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 1983.

அண்மைச் செயல்பாடுகள்