Banner

பகுத்தறிவு

உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

தந்தை பெரியார், 4.10.1931 பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அநுபவம் என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொது உடைமை ஏற்பட வசதி உண்டாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும், அதிக உரிமை இருக்கிறவனிடந்தான் போய் சேர்ந்துக் கொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

- தந்தை பெரியார், 25.3.1944

திருச்செங்குன்றூர் - திருவாங்கூர் பகுதி கொல்லம் துறைமுக நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கல் தூரத்தில் உள்ள ஊர். கேரள மாநிலத்தில் உள்ள இந்த ஊர் தற்போது செங்கண்ணூர் என்று கூறி வருகின்றனர்.  பழைய பெயர் திருச்செங்குன்றூர் - புதிய பெயர் செங்கண்ணூர்.

விறல்மிண்ட நாயனார்: அந்தத் திருச்செங்குன்றூரில் உழவுத் தொழில் செய்யும் வேளாண் மரபில் விறல்மிண்டர் என்பவர் இருந்தார். இவர் மேனியில் விபூதியும் - கையில் கண்டிகையும் பூண்டு, நதியும் - மதியும் - பாம்பும் புனைந்த சிவனாரின் பக்தனாய் அலைந்தார். சிவனின் மீது எவ்வளவுப் பற்று இருந்ததோ - அதை விட சிவனடியார்கள் மீது இவர் அளவு கடந்த மதிப்பும் - பேரன்பும் கொண்டிருந்தார். அடியார்களைப் பற்றி யாராவது தரக் குறைவாகப் பேசிடக் கேட்டால் அக்கணமே பாய்ந்து அவர்களை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். பெயருக்கு ஏற்றாற் போல் விறல் - வீரம் உடையவராயும் - அடியவராயும் திகழ்ந்தார்.

இப்படி சிவத்தலங்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள சிவத்தொண்டர்களைத் தொழுவதும் - திருச்சடையானை சேவிப்பதும் தொழிலாய் இருந்த விறல்மிண்ட நாயனார் சேர நாட்டிலிருந்து திருவாரூர் தியாகேசப் பெருமான் கோவிலுக்கு வந்தார்.  கோவில் மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களையெல்லாம் பார்த்து காலில் விழுந்து வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய் திகழ்ந்தார். அந்த நேரத்தில் அங்கே கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் அங்கே குழுமியிருந்த சிவனடியார்களைக் கண்டுகொள்ளாமல் வேறு பக்கமாக ஒதுங்கியபடியே, உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார்.

அடியார்களை மதிக்காதவன்: இறைவனை வழிபடுவது எளிது, அடியாரை வழிபடுவது அரிது அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும் அன்பும் இருக்க வேண்டும். அத்தன்மை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இல்லையே முதலில் வணங்கத் தக்க தேவாதி தேவர்களும் தொழத்தக்க சிவனடியார்கள் இங்கு இருப்பதை மறந்து விட்டு, அங்கு இறைவனைத் தரிசிக்கப் போகிறாரே சுந்தரர் அதனால் என்ன பயன் கிடைக்கும்?

வன்தொண்டனாகிய சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களுக்குப் புறம்பானவன்தான் அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கக் கடவுளும் அடியார்களுக்குப் புறம்பானவனே என்று விறல்மிண்ட நாயனார் கோவில் வளாகத்திலேயே சிவனடியார்கள் முன்னிலையில் சுந்தரரைத் திட்டித் தீர்த்தார்.

வெகுமக்கள் விரோதம்: பிறகு தியாகேசப் பெருமானை வணங்கி நின்ற சுந்தரர் அடியார்களை மதிக்கும் பணியை எனக்கருள்வாயாக என்று இறைவனிடம் வேண்டினாராம். இதுவரையில் உயர் ஜாதித் திமிரிலேயே சுந்தரர் தன்னை மேலானவராகக் கருதிச் செயல்பட்டிருக்கிறார் இப்படிப்பட்ட சுந்தரனுக்கு இறைவன் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்து கொடுத்தாராம் - அதிலிருந்து திருத்தொண்டத் தொகை எழுதி முடித்தார் என்று கூறப்படுகிறது. தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் என்று பார்ப்பனரை மெச்சிப் பாடிய பிறகுதான் நம்மவர்களைப் பாட கடவுளும் - சுந்தரனும் முயன்றிருக்கிறார்கள்! வெகுமக்கள் விரோதம் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அடியவர்களைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது!

பொது நீதி:  வாயில் நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது. பிறவியில் பேதம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது! அதைப் போலத்தான் பார்ப்பான் நம்மை பாராட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது என்று நாம் உணர வேண்டும்  என்றார் தந்தை பெரியார்.

- தடயம் - புலவர் மா.வீரஅரசு

பெரியார் பகுத்தறிவு நூலகம்  மற்றும் ஆய்வு மய்யம்
பெரியார் திடல், சென்னை - 600 007 புதிய வரவுகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு வைகோ அவர்களின் தனிச் செயலாளர் திரு. அருணகிரி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பின்வரும் நூல்கள் மற்றும் நாள் குறிப்புகளை வழங்கி னார்கள். ஆசிரியர் அய்யா அவர்கள் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அப்படியே வழங்கினார்கள்.

நூல்கள் விவரம்

1.நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ

2. மூன்று தமிழர்கள் உயிர்காக்க - வைகோ

3. கல்கியின் பொன்னியின் செல்வன் நூல் திறனாய்வு - வைகோ

4. தலைவன் - ம.தி.மு.க. வெளியீடு

5. வாங்க.. பறக்கலாம் - அருணகிரி

6. அந்த மானில் அருணகிரி - அருணகிரி

7. உலக வலம் அருணகிரி

8. ஆல்பஸ் மலையில் அருணகிரி - அருணகிரி

9. மறுமலர்ச்சி தி.மு.க. நாள்குறிப்பு 2012 - மதிமுக வெளியீடு  மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக  நூலகத்திற்கு வரப் பெற்றோம். மிக்க நன்றி.

--  நூலகர்

ஒரு திருடனைப் பற்றியும் அவன் செய்த வித்தியாசமான திருட்டைப் பற்றியும் ஒரு ருசிகரமான கேஸ் குஜராத்தைச் சேர்ந்த போலீஸ் கையில் சிக்கியிருக்கிறது. சூரத் நகரிலிருக்கும் ப்ரோ இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தின் முத்திரை யிடப்பட்ட 20 லட்சம் ரூபாய் செக் ஒன்று காணாமல் போய் விட்டது; அல்லது திருட்டுப் போய் விட்டது.

அதையடுத்து வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்காகத் தேவையான ஒரு போலி முத்திரை அல்லது சீல் தயாரிக்கப்பட்டு திருட்டுக் கையெழுத் துடன் ரூ.20 லட்சம் பணமும் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இந்தக் கைங்கரியத்தைச் செய்த ஆசாமி அதே வங்கியின் ஊழியரான ராஜேஷ் குல்மி என்பவர்தான். அவர் ராஜஸ்தானிலிருந்து வேலை தேடி சூரத்துக்கு வந்தவர். பொய்ச் செக்கு எழுதி 20 லட்சம் ரூபாயைக் கையி லெடுத்துக் கொண்டு, இவர் நேரே ராஜஸ்தானிலிருக்கும் தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். இந்த நிகழ்ச்சி எத்தனையோ முறை மென்று துப்பிய நிகழ்ச்சி என்று தோன்றத்தான் செய்யும் நமக்கு! ஆனால் இதற்குப் பிறகுதான் இருக்கிறது டுவிஸ்ட்!

20 லட்சம் ரூபாயைக் களவாடிச் சென்ற ராஜேஷுக்கு தான் எங்கே யாவது போலீசில் மாட்டிக் கொள் வோமோ என்ற பயம் இருக்கத்தானி ருந்தது. எனவே அவர் தன் பாதுகாப் பிற்காக, தன் ஊருக்கு எல்லையிலிருந்த ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்று, 2 லட்சம் ரூபாய் நோட்டு களை அங்கேயிருந்த உண்டியலில் போட்டு, கடவுளே! ப்ளீஸ்! என்னை எப்படியாவது காப்பாத்த வேணும்! என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர் கடவுளுக்குப் ப்ரொட்டெக்ஷன் மனி அதாவது பாதுகாப்பு ஊதியம் கொடுத்து விட்டார். இப்படிக் கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பதில் அவருக்குத் துளியேனும் மனசாட்சி உறுத்தவில்லை. வெட்கமும் தோன்ற வில்லை.

இந்தக் கேசின் விவரத்தைக் கேட்ட ஒரு மூத்த க்ரைம் ரிப்போர்ட்டர் அல்லது பத்திரிகை நிருபர் ஒருவர். தமாஷாக ஒரு கமெண்ட் அடித்தார். 2 லட்சம் ரூபாயைக் கடவுளுக்குக் கொடுத்ததற்குப் பதிலாக போலீசுக்குக் கொடுத்திருந்தால் கேஸே இல்லாமல் போயிருக்கும்! சரியான முட்டாள் ஆசாமி! என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். இந்தக் கேசின் முடிவு என்னவென்றால் போலீஸ் ராஜேஷைக் கைது செய்து அவரிடம் மிச்சமிருந்த 18 லட்சம் ரூபாயைக் கைப்பற்றியது. கோவில் உண்டிப் பெட்டியிலிருக்கும் பாக்கி 2 லட்சம் ரூபாயையும் மீட்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. ஏனெனில், உண்டியலில் போடப்பட்ட அந்தப் பணம், போலீசைப் பொறுத்த வரைக்கும் திருட்டுச் சொத்து அல்லவா?

ராஜேஷ் இப்போது சிறையில் கையைப் பிசைந்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். பாவம்! கடவுள் அவருக்குத் துரோகம் செய்து விட்டார்.

குறிப்பு: கடவுள் பக்தி உள்ளவன் ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது பார்த்தீர்களா!லு

பாக்யா டிச.30.2011 - ஜன 5 - 2012
தகவல்: கு. பஞ்சாட்சரம், மாவட்டச் செயலாளர்
திருவண்ணாமலை மாவட்டம்

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

அண்மைச் செயல்பாடுகள்