வெள்ளி, 05 ஏப்ரல் 2013 16:32

போர்க் கருவிகட்காக ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் (அறுபது ஆயிரம் கோடி) யு.எஸ். டாலர்கள் செலவு செய்யப்படுகின்றன. இதைக் கொண்டு பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக் கும் தலா 112 டாலர்கள் செலவு செய்யலாம். குடிசைத் தொழில் உற்பத்தியினால் வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் உள்ள தனி மனித ஆண்டு வருவாயைவிட இந்தத் தொகை அதிக மானது என்று அய்க்கிய நாடுகளின் தலைமைக் காரியதரிசி ஜாவீர் பெர்ஜ்டீ கியூலர். அண்மையில் அய்.நா பொதுச் சபையில் நடந்த படை பலக் குறைப்பு 2ஆவது கூட்டத்தில் கூறியுள்ளார்.
பெரியம்மையை ஒழிக்க உலக சுகாதார நிறுவனத்துக்கு 100 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே செலவானது. ஆனால் இதை விட அதிகமான தொகையை, மிகவும் நவீன பாணியில் உருவாகும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஒரு ஏவுகணைக்காகச் செலவு செய்யப்படுகிறது என்று மற்ற துறைகளுடன் மேலும் ஒப்பிட்டுக் கூறினார்.
விவசாயம்
உலக இராணுவத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆகக் கூடிய செலவு தொகையில் அரை சதவிகித பணத்தைக் கொண்டு, குறைந்த வருமானமும், உணவுப் பற்றாக்குறையும் உள்ள நாடுகளின் விவசாய வளர்ச்சிக்குச் செலவு செய்தால் இந்த பத்தாண்டுக்குள் உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடையச் செய்துவிடலாம்.
குழந்தை மரணம்
ஒரு வருடத்தில் அல்ல; ஒரு மாதத்திலும் அல்ல; ஒவ்வொரு நாளும் 40,000 குழந்தைகள், வளர்ந்து வரும் நாடுகளில் செத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நாம் இந்த உலகத்தில் ஆயுதப் போட்டிக்காக ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லிய னுக்கும் அதிகமான டாலர்களை செலவு செய்து வருகிறோம்.
கல்வி
புதுமையான பாணியில் தயாரிக்கப்படும். குண்டுகள் மிகவும் போர்த்திறமை பெற்றவை. இரண்டு குண்டுகளின் விலை மட்டும் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்தத் தொகை யை கொண்டு உலகம் முழுவதும் உள்ள தற்குறி மக்களுக்கு எழுதவும், படிக்கவும் செய்விக்க முடியும்
ஆராய்ச்சி
உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளில் 5,00,000 பேர், இன்னும் கொடுமையான முறைகளில், செயற்கையான வழிகளில் மக்களைக் கொல்ல, எப்படியெல்லாம் ஆயுதங்களை உருவாக்கலாம் என்பதற்காக, தங்கள் அறிவு வளம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகின்றனர்.
பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் அய்க்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கேட்ட கேள்விக்கணைதான் இது;
இந்த முட்டாள்தனத்துக்கு முடிவே இல்லையா?
குறிப்பு: 1 மில்லியன் - 10 இலட்சம்
1 பில்லியன் - 10,000 மில்லியன்
வேர்ல்ட் ஹெல்த், ஜனவரி, 1983 இதழில் இருந்து தமிழாக்கம் செய்தவர்:
-அ.ப. நடராசன், உடுமலை.